1
“ஏய் மிச்சி, அந்தக் கோட்டு எங்கே?
ஏத்தனவாட்டி சொல்றது?
ஆ… இந்தக் ‘கொறடுலெ’ வைனு..”
என்றவாறு பல்லை நறநறவென கடித்தான் மல்லன்.
அவனது இந்தப் புது நடத்தை வித்தியாசமாய்ப்பட்டது. இதய அறுவைசிகிச்சைக்குப் பிறகு பெரும்பாலும் மகள்வீடே கதியென்று ஆனநிலையில் அவர் வேறு வழியின்றி அந்தச் சூழலைச் சகித்துக் கொண்டிருந்தார்.
தனது ஒரே மகளை நெருங்கிய சொந்தத்திற்குதான் அளித்திருந்தார். ஆயிரமிருந்தாலும் அது மருமகன்வீடு. அங்கிருக்கும் போதெல்லாம் அவனின் நடத்தை பெருங்கவனம் போர்த்தியிருக்கும். அதிலும், குறிப்பாக வார்த்தையில். அவர் ‘கவுடராக’ இருந்தபோது எத்தனையோ தீர்ப்புகளைக் கூறிய அவரின் வாய் இன்று அடிக்கடி பல்லைக்கடித்து தன் வார்த்தைகளை அடக்கம் செய்துக்கொண்டிருந்தது.
“ஏய்…. இவளே.. பொறப்பட்டாச்சா…
மறக்காமா எல்லாத்தையு எடுத்துக்கோ…
அந்தக் கிழிந்த தலைப்பாகையை மறந்துடாதே…
ஏய்.. ஏய்… அந்தக் கொடெய…”
அவனின் செக்கச்சிவந்த முகம் மேலும் சிவந்தது. நேற்றிரவெல்லாம் தூக்கம் தொலைத்து செவ்வரியோடிய கண்கள் அங்குமிங்கும் அலைந்தன. மேல்வயிற்றின் இடப்பக்கம் விலாவிற்குக்கீழ் சற்று வீங்கியிருந்தது. அதை இடதுகையில் பொத்திக்கொண்டே பெருமூச்செறிந்தார்.
மிச்சியும் தன் கணவனின் இந்த விசித்திரமான செய்கையைக் கோபம் கலந்த பிரம்மிப்புடன் எதிர்நோக்கினாள். அவளும் தன் மகள் மாசியும் வைத்தக்கண் வாங்காமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“அப்பா, என்ன அவசரம்…
எங்கே, இப்படி கைகால் பொறாமே கௌம்புரீங்க…
அதுவு, அவரு இல்லாதப்போ..
நாளைக்கு அவரு வந்ததும் ஒரு வார்த்த சொல்லிட்டுப் போலாமில்லே…
அம்மா சொல்லுங்கம்மா…
கொளந்தெகள வச்சிட்டு நா எப்படி தனியா…”
“ஏய்… மாசி அவசர ஜோலி… ஒடனே போயாகுனும்…
அத்தைய தொணெக்கு கூப்டுக்கோ…”
“ ‘எதகே’, உங்களுக்கு அவரசம்னா நீங்க போங்களேன்…
நா இவளோட இருக்கே..
கொழுந்தகள விட்டுட்டு எப்படி வர்றது..”
“ஆமாப்பா, அம்மாவயாவது விட்டுட்டுப் போங்க…”
“அடே… மொரண்டு பிடிக்காதிங்க…
அதுதா, நா போனுகும்னு சொல்றே இல்லெ…
மிச்சி, எனக்கு உங்கூட ஓரியாடுற தெம்பில்லே… மொதலெ அதுக்கு நேரமுமில்லே…
11 மணி பஸ்சு வந்துடும்….
அதவிட்டா ‘அரவேனு கம்பெ’ வரைக்கி நடக்கமுடியாது.. சீக்கிரோ…”
அவர்களுக்குக் கண்ணீர் திரண்டிருந்தது. இதுவரை அப்பா இதுபோல் அழவைத்ததில்லை. அவர்களுக்கு அவரின் செய்கை ஒன்றும் புரியவில்லை.
தன் கைத்தடியை அழுத்தமாக ஊன்றி ஊன்றி வேகமாகத் திரும்பி பார்க்காமல் கிளம்பினான். சிமெண்ட் பூசப்பட்ட முற்றத்து தரையில் பட்டெழும் அவரின் கைத்தடியின் சப்தம் மல்லனின் ஆத்திரத்தை அளந்துகொண்டிருந்தது.
“மிட்டுக்கு, அப்பாக்கு இன்னிக்கு என்னமோ… பைத்தியம் புடிச்சிருக்கும்னு நெனக்குறே..
அமவசெ நெருங்கி வந்தாலே இவனுடைய அவதாரம் தாங்க முடியாது… அமாவாசையிலே பொறந்தவரு வர வர ஒரு சில நேரத்துல அவரு அப்படித்தான்…
சரி விடு, கவனமா இரு… நா போயிட்டுச் சீக்கிரமா வந்துடரே..”
என்றவாறு தலைப்பட்டினை வேகமாகக் கட்டினாள் மிச்சி. இடையில் சுற்றிய இரட்டுத் துணியைச் சரிசெய்தாள்.
“பெரிய ஜோலி.. வெட்டி முரிக்கிற ஜோலி…
பொழுதன்னிக்கி திண்ணையிலே ஒக்காந்து நியாயம் பேசுறது தவிர வேறேன்ன ஜோலி..”
அவளின் வாய் சற்று சப்தமாகவே முணுமுணுத்தது. வேலையை முடித்துக் கொடுக்காது மகளை விட்டுவந்த விரக்தியில் தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது. கீழிறங்கும் பள்ளத்தில் சுற்றிச்செல்லும் புட்பாத் பாதையது. தன் கணவனின் தடியின் ஓசையைக் கூர்ந்தாள். கேட்கவில்லை.
அவள் நடையின் வேகத்தைக் கூட்டினாள். ‘ஆடுபெட்டு’ மலைச்சரிவில் பேருந்தின் மணி ஒலி. அந்தச் சரிவில் இறங்கி ரேஷன்கடை மேட்டினை ஏறிவிட்டால் அடுத்த நிறுத்தம் இதுதான். தன் நடையை ஓட்டமாக மாற்றினாள்.
‘ஜக்கலோரை’ பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலிருந்த கல்லில் மல்லன் அமர்ந்திருந்தான். அவனின் முகம் மேலும் சிவந்திருந்தது. உச்சிவெயில் அவனுக்கு மென்மேலும் சிவப்பினைப் பூசிக்கொண்டிருந்தது. கட்சிதமாய்க் கட்டிய அவனின் தலைப்பாகையின் இடுக்கின்வழி கன்னத்தில் வியர்வை வழிந்தது. அவனது கண்கள் தனக்கு எதிரே அமைந்திருந்த திடலில், ‘பிக்கெ’ மரத்திற்குக் கீழே வீற்றிருக்கும் மூன்று வழிபாட்டுக் கற்களை வெறித்திருந்தது.
அவரின் பார்வை கூர, கூர கைத்தடியைப் பற்றிருந்த அவனின் கைப்பிடி இறுகியது. கண்ணிமை வெளுத்துப்போன அவரின் பூனைக் கண்களில் லோசகக் கண்ணீர் பனித்தது. மார்கழி வெயிலில் வறளும் தன் உதட்டினை நாவால வருட வருட கரித்த உப்பு அந்தத் திடலின் மரணசாசனத்தை மௌனமாய் ஓதிக்கொண்டிருந்தது.
தன் மகளின் மானம் காக்க, மகள்மறுத்து அத்திடலில் கயிற்றில் தொங்கி உயிர்விட்ட அந்தத் தந்தைமார் மூவரின் நினைவு அவனுக்குள் விம்மிக்கொண்டிருந்தது.
காதை அடைக்கும் மணியொலியோடு ரேஷன்கடை ஏற்றத்தில் வந்துகொண்டிருந்த பேருந்து அந்த நிறுத்தத்தில் நின்று உறுமியது. அப்போதும் பிரம்மை கலையாத அவரை மிச்சி தோள்குலுக்கி தெளிவிக்க, குறுகலான ‘ஜக்கெலோரே’ சாலையில் இடைவிடாது மணியெழுப்பியப்படி பேருந்து இறங்கியது.
“ஐயா சீட்டு… ஐயா.. டிக்கெட்..” என்று சலித்து முறைத்தவறே கேட்டுநின்ற கலர்ச்சட்டை அணிந்த நடத்துனரின் கையில் தொங்கிய விசில் மகள்மறுத்து தொங்கிய அம்மூவரின் நினைவை மேலும் திண்மையாக்கியது. மீண்டும் அதே பிரம்மை.
கோபத்தில் மிச்சி விலகி அமர்ந்தும் ஒன்றும் பயனில்லை. என்றைக்கும்போல கோபத்தில் முதலில் விலகி, நிமிட நேரத்தில் நெருங்கி அமர்ந்து, உரசி புன்னகைக்கும் மல்லனின் சமாதானம் அன்று கைக்கூடவில்லை. என்றைக்குமில்லாத மல்லனின் இந்த விசித்திரப்போக்கு மிச்சிக்குச் சற்றும் விளங்கவில்லை.
2
“டானிக்டன்… டானிக்டன்… டானிக்டன் கேட்டவங்கெல்லா ரெடியா இருங்க..”
என்ற நடத்துனரின் அறிவிப்பு அவரின் பிரம்மையை ஓரளவு தெளிவித்தது. தன் கைத்தடியைச் சரிசெய்துக்கொண்டு இறங்கத் தயாரானார். அவரின் மனம் ஏற்கனவே இறங்கி பி.எஸ் பேக்கரியில் நின்றுக்கொண்டிருந்தது.
அவரின் கால்கள் பொறுக்கவில்லை. மார்க்கெட் நிறுத்தம் வருவதற்கு முன்னமே எழுந்து நின்றுக்கொண்டார். எதிரே வேகமாக வந்த லாரியொன்றிற்கு வழிதர வேகத்தைக் கட்டுப்படுத்தி சடாரென ப்ரேக்கை அழுத்தி ஓட்டுநர் பேருந்தை ஒதுக்க, தடுமாறி விழப்போன மல்லன் கைத்தடியை விட்டுவிட்டு அருகில் இருந்த கம்பியைக் கட்டிக்கொண்டு, சற்று சரிந்த நிலையில் ஓரளவு சமாளித்து தப்பித்துக் கொண்டார்.
“ஏய்… ஐயா.. என்ன அவசரம்..
விழுந்திருந்த என்னாகுறது…
பெரியவங்க நீங்களே இப்படிப்பன்ன என்ன அர்த்தம்…”
கீழே விழுந்த கைத்தடியை எடுத்து அவருக்குத் தந்தபடி கூறிய நடத்துனரின் அறிவுரையை அவரின் காது துளியும் வாங்கவில்லை. அறிவுரையை வாங்கும் சித்தியும் புத்தியும் அவ்வமயம் அவருக்கு இல்லை. அவரின் கைகள் லேசாக நடுங்கின. முகத்தின் சிவத்தல் குறைந்தபாடில்லை.
இறங்குவதற்காகப் படியை நோக்கி வேகத்தைக் கூட்டினார். படிக்கட்டில் நின்றிருந்த இளசுகள் இறங்கும்வரை பொறாது தள்ளிக்கொண்டு முந்தினார். மிச்சியைப் பற்றிய எண்ணம் சிறிதுமின்றி வேகவேகமாக குன்னூர் பேருந்து நிறுத்தம் நோக்கி விரைந்தார்.
“ஹெத்தே… ஐயா அவ்ளோ அவசரமா எங்கே போறாரு…
ஏதேனும் முக்கியமான ஜோலியா…
யாருக்காவது எதாவது ஆச்சா… எல்லாரு சொகம்தானே…”
என்று மிச்சியை நோக்கி எழுந்த வினாக்களுக்குப் பதிலேதும் கூறாமல், தன் வலது கையை உயர்த்தி தெரியவில்லை என்பதுபோல சைகை காட்டிவிட்டு வேகமாக இறங்கினாள்.
“என்னிக்குமில்லாமே விட்டுட்டுப் போறார்…
இது என்ன புதுப்பழக்கம்…
அப்படி நா என்னத்த கேட்டுட்டே…”
என்று அவளின் மனதில் எழுந்த ஆற்றாமை அனைத்தும் விசும்பலாய் வெகுண்டது. அவள் பேருந்து நிலையத்தைக் கடக்கும் முன்னமே ஜி.ஆர்.வி பேக்கரி முன்பு மல்லன் நின்றிருந்தார்.
“ஏய்… மிச்சு இதா இந்தப் பணத்தப் புடி…
நீ மொதலெ போயிடு… நா பின்னாடியே வந்துடறே…
முன்னறைய சாணம்போhட்டு மெழுகி வை…
அந்த ‘மொறெ தைகெ’ தட்ட நல்லா கழுவி வை…
‘உல்லா மஜிகெ’ செடி நம்ம வீட்டு முன்னாடியே இருக்கு..
அதவச்சி நல்லா தேச்சி கழுவிடு.. மறந்துடாதே…”
குன்னூர் பேருந்து கிளம்பிட தயாரானது. மிச்சியைக் கையைப்பிடித்து வேகமாக அழைத்துச்சென்று அப்பேருந்தில் ஏற்றி விட்டார்.
இவருக்கு இன்று ஏன் இவ்வளவு அவசரம்? அவருக்கு என்னவானது? ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? என்று குழம்பிக் கொண்டிருந்த மிச்சிக்கு அவர் கூறிய “தைகெ” என்ற வார்த்தை சித்தத்தைக் குடைந்து கொண்டிருந்தது.
அந்தத் தைகெயைக் கடைசியாக எடுத்த நாளினை அவள் எண்ணிப்பார்த்தாள். அதுவொரு உப்புத் திருவிழா. சடங்கு முடிந்து ‘தவட்டெ’ மற்றும் ‘உப்பெ’ செடிகளுடன் மல்லன் வீட்டிற்குள்வர, கையில் உப்புக்கூடை, செம்பு, கத்தி என்று ஆளுக்கொன்றினை ஏந்திக்கொண்டு அவரின் தம்பிமார் நால்வரும் அவனைச் சூழ்ந்துவந்தனர். ஊரே பார்த்து பொறமைப்படும் சகோதரப்பாசம்.
சிறு வயதிலே தந்தையை இழுந்த அவர்களுக்குத் தம் தாய் கெப்பியால் பொத்திக் காக்கப்பட்ட சகோதரப்பாசம். தவட்டெ பழத்தின் மேல்முனையிலுள்ள ஐந்து இதழ்களை, அதை உண்ணும்பொதெல்லாம் ‘அதுபோலவே நீங்கள் ஐவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென’ சுட்டிக்காட்டி வளர்த்த சகோதரப்பாசம்.
அன்று முறையெல்லாம் முடிந்தபிறகு சாமையைக்கொண்டு உப்பிடாமல் மல்லன் ஆக்கிய சோற்றினை அந்தத் தட்டில் இட்டு, சகோதரர்கள் ஐவரும் ஒன்றாக உண்ண, அடுத்தடுத்துவந்த வாரிசுகளுக்கும் மல்லன் அந்தத் தைகெயிலிருந்து சிறு சிறு கவளங்களைப் பிடித்துத்தர கண்படும் அந்த அன்பிற்கு வெகுவிரைவிலேயே கண்பட்டது.
சடங்குநாளில் மட்டுமின்றி மற்றநாட்களிலும் இந்தத் தைகெயில் உணவிட்டு, பேரக்குழந்தைகளைச் சுற்றி அமரவைத்து, அனைவருக்கும் ஊட்டியும், கவளமாக்கி அளித்தும் மல்லன் நிறைவு காண்பதுண்டு. பிள்ளைகளுக்கெல்லாம் ஊட்டியபிறகே அவன் வாய் கவளம் கொள்ளும். அந்தக் காலம் தொலைந்தல்ல தொலைக்கப்பட்டுப் பத்து வருடங்களானது. அண்ணனின் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாத தம்பிகள் நடுவீதியில் ஏசி, காறி உமிழும் நிலையும் வந்தது.
3
“அண்ணா, அவளுக்கு எவ்வளவு திமிரு..
பரவாலே வயசானவான்னு நெனச்சி விட்ட, ரெம்பதா பண்ணுறா..
நம்ம பூமிய நா எவனுக்கோ வித்தா அவளுக்கென்ன..
வழிவிடமாட்டேங்குறா…
கடைசி வரைக்கு சோறுபோட்டு, ஒண்ட எடுமு கொடுத்தோம்பாரு அந்தக் கெரகந்தா…
எல்லா நம்ம அம்மாவ சொல்லனு..
நாய கொஞ்சுனா வாயதா நக்கும்.”
என்று குமுறிக்கொண்டிருந்த தன் கடைதம்பியின் கடைவார்த்தை மல்லனை வெகுவாய் சீண்டியது. அடுத்த நொடியே ஓங்கி அவனை அறைந்தார். “ஐயோ” என்று தடுமாறி கீழே விழுந்தவனைச் சினம் அடங்காது தன் கைத்தடியால் ஓங்கி அடித்தார். சினம் அவரது கண்களில் வெகுண்டெழுந்தது. அந்தக் கடைசி வார்த்தை அவனது ஆழ்மனதின் சினத்தைத் துருத்திக் கொண்டிருந்தது. சுற்றியிருந்தவர்கள் தடுத்தும் மல்லனுக்கு நிதானம் திரும்பவில்லை. அவன் தன்னிலையேய்தியபோது,
“எவளோ ஒருத்திக்காக இப்புடி அடிக்குறா…
சொந்தத் தம்பினுகூட பாக்காம…
தூ.. இவனெல்லா ஒரு அண்ணனா..
இந்த இலச்சணத்துல ஊர்க்கடவுடர் வேறே..
டேய்… உன்ன நம்பி வந்தோம் பாருடா..
இனிமே உன் வீட்ட மிதிச்சேனா எங்க பேர மாத்திக்கோ…
எல்லோரு பாருங்க, இதுபோல எந்த வீட்டிலேயாவது நடக்குமா..”
மல்லனின் கைத்தடி நெற்றில் பட்டு, புடைத்த வீக்கத்தைத் தடவியவாறே, கண்களில் கண்ணீர் ததும்ப அவன் வெகுண்டுகூறிய வார்த்தைகள், தன் கணவனைச் சாடுகிறான் என்பதையும்தாண்டி மிச்சிக்கும் கண்ணீர் சுரக்கச் செய்தது. அது வளர்த்தப் பாசம்.
கையின் வரிசையான நான்கு விரல்கள் ஒரே நேரத்தில் துண்டாகி வீழ்ந்ததுபோல நொடியில் வீழ்ந்தன. அது சகோதரப்பாசம் என்ற நியாயம் அவருக்கும் புரியாமலில்லை. ஆனால், புரிந்துகொள்ள வேண்டிய நியாயங்களுக்குமுன்பு இந்த நியாயம் பெரியதில்லையே.
அவனின் கண்மறைத்த சினத்திற்கான காரணத்தை தன் கண்முன்னே கொண்டுவந்து சீர்தூக்கிப் பார்த்தான். அந்தச் சினத்தில் சிறிதும் தவறில்லை. அது அன்னையின் நிழலாக இருந்து காத்த அவளுக்கு, அவளின் தியாகத்திற்கு அளித்த நிலம். அதை தாண்டியுள்ள நிலத்தை விற்பதற்கு, வாகனவசதிக்காக வழிவிடுவது அவளின் விருப்பம்.
அதிலும், ஊரிற்கே உயிர் ஊற்றாய் விளங்கும் ‘பிக்கெ தாடா’ ஊற்றுநீர் ஊற்றெடுக்கும் இடமது. அதை அவள் எப்படி விடுவாள்? அவள்தான் அதை காக்க சரியானவள் என்று அம்மா தெரிந்தேதான் அவளுக்கு அளித்தாளோ?
பனிக்காற்றுப்பட்டு வெடித்த அவரின் உதட்டினை முன்னோக்கி விரித்துக் குவித்தார். எல்லையில்லாத உணர்வுநிலையில் அவர் கொள்ளும் தனித்த மெய்ப்பாடு அது. உதட்டின் வெடிப்பு விரிந்து இரத்தம் கசிந்தது. அந்த இரத்தத்தில் தாய்ப்பாலின் கவுச்சி.
அம்மா பலமுறை சொன்னதுண்டு. அவனைப்பெற்று ஜன்னி கண்டபோது தன் முலை பகிர்ந்தவள் அவளென்று. தந்தையின்றி ஐவரை வளர்க்க அம்மா அரும்பாடுபட்டபோது, தன் கடைசி தம்பியை எடுத்து வளர்த்தவள். அந்தக் கடைக்குட்டிதான் அவள் மார்பில் முட்டுகிறது.
பால்குடித்த மார்பு. ரோஷம் கெட்டிருந்தால் அபத்தம். முதலில் அவளுக்குச் சோறிட்டபின்பே தான் உண்ணும் தனது அம்மா அடிக்கடி சொல்வாள் “பெற்றவளைவிட எடுத்து வளர்த்தவளே மேம்பட்டவள்” என்று. வளர்த்தக் கடன் சினங்கொண்டு வென்றிருந்திருந்தது.
கடமையையும் உறவையும் சீர்தூக்கி நியாயம் பிடிப்பது கண்டத்தில் நின்ற ஆலாலம் போல. கடைந்தவனே விழுங்கியாக வேண்டும். விடம் இறங்காது கண்டத்தைப் பற்றிக்கொண்ட அன்பின் கரங்கள் இறங்காத அந்த விடத்தின் வீரியத்தைத் தக்கவைத்திருக்கும். நான்கு அரவங்கள் பாம்புகள் சூழ்ந்த சிவந்த கண்டனாய் மல்லன் மாறிபோனான். பத்தாண்டுகள் கழிந்து இன்றுகூட அப்படித்தான்.
சகோதரச் சொந்தங்கள் யாவரும் வீட்டைக்கூட எட்டிப்பார்க்காத நிலையில், எதற்காக இன்று ‘தைகெ’? அதை சுத்தம் செய்தால் உறவுகளுடன் உணவுண்ணாமல் இருக்கக்கூடாதே. வீட்டில் பேரன் பெயர்த்திக்கூட இல்லையே? இந்த மனிதனுக்குப் புத்திக்கெட்டுவிட்டதா. மிச்சியின் எண்ணச்சூழல் விண்ணுக்கும் மண்ணுக்கும் எக்காளமிட்டுக் கொண்டிருந்தது.
ஊர் வந்திருந்தது. “ ‘நட்டக்கல்லு… நட்டக்கல்லு… எறங்கரவங்க இருக்கீங்களா?..” குழப்பத்துடனேயே இறங்கினாள் அவள். இறங்கியதும் சாலையையொட்டிய பாறையிடுக்கில் செழித்து வளர்ந்திருந்த, வெண்கலப் பாத்திரங்களை நன்குக் கழுவ பயன்படும் ‘உல்லா மஜிகெ’ செடியை தன் வலது கரத்தால் கிள்ளி எடுத்துக்கொண்டாள்.
4
பார்த்து பார்த்து நிதானமாக சாலையைக் கடக்கும் இயல்புடைய மல்லனுக்கு அன்று கால் பொறுக்கவில்லை. எதிர்வரும் வாகனம்குறித்த பிரஞ்சை சற்றுமின்றி கைத்தடியை ஊன்றிக்கொண்டு முடிந்தளவு வேகமாக சாலையைக் கடந்தார்.
நெருங்கிய பிக்கப் வண்டியொன்று அவரை இடிப்பதை போலவந்து மயிரிழையில் வளைந்து கடந்தது. கையை வெளியே நீட்டி மல்லனைத் திட்டிய ஓட்டுனரின் வார்த்தையைச் சற்றும் சட்டைசெய்யாமல் பி.எஸ் பேக்கரியை நோக்கி விரைந்தார்.
அக்ஷயா ஓட்டலுக்கு அருகில் இருந்த ரிபா காம்ப்ளெக்சின் தரைத்தளத்தில் அமைந்திருந்த மணி மளிகைகடையின் உரிமையாளர் மணி,
“ஐயா.. ஓ மல்லய்யோ.. பேப்பர மறந்துடாதிங்க..
நாலுநாள் பேப்பரையு எடுத்து வச்சிருக்கே”
என்று உரக்கக்கூற, அதற்கு மறுமொழியாக கையை மட்டும் உயர்த்திக் காட்டிவிட்டு நகர்ந்தார். இரண்டு கடைகள் தள்ளி இருந்த பாலஜி மருந்துகடையின்முன் சில நொடிகள் நின்று எதையோ யோசித்தார். நடுநெஞ்சில் கைவைத்து அழுத்தித் தேய்த்தார். கடையின் முதலாளி பாலாஜியும் உள்ளே இருந்தான். மல்லனைக் கண்டதும் கையை உயர்;த்திக்காட்டி தன் மகிழ்ச்சியை அவன் தெரிவித்தான்.
அந்த மருந்துகடையில் யார் இருந்தாலும் பாலாஜியிடம் மருந்து வாங்கினால்தான் மல்லனுக்குத் திருப்தி. பாலாஜி இல்லாத நாட்களில் அவர் மருந்தே வாங்காமல் திரும்பியதுண்டு. இன்முகத்தோடு வரவேற்று, ஆராய்ந்து மருந்தளிக்கும் பாலாஜியை நம்பிக்கைக்குரியவராக அவர்மனம் ஏற்றிருந்தது.
ஒருவாரமாக நீடித்துக் கொண்டிருக்கும் நெஞ்சு எரிச்சலுக்கு மருந்து வாங்கிவிடலாமா என்ற யோசனை அவருக்குத் தொடர்ந்தது. எதையோ நினைத்தவாறு மறுமொழியாக பாலாஜிக்கு தன் கைத்தடிiயுடன் கையை உயர்த்திக் காட்டிவிட்டு நகர்ந்தார். பி.எஸ் பேக்கரியின் உரிமையாளர் ஜோகி அவரை வரவேற்றார்.
“ஏய்.. மாம்.. என்ன ஒருவாராமா ஆள காணும்..
மகள் வீட்டுக்கு போயிட்ட எங்களையெல்லா மறந்திடுவீங்களோ…”
என்று ஜோகிகூற, மல்லனோ நைச்சன்யமாக சிரித்தவாறே,
“ஏய் ஜோகி… நீ கொஞ்ச சும்மா இருக்கியா..
கிண்டலடிக்க ஜாமமில்லே..
ஒரு உப்பு ரொட்டி, ஐந்து பன்னு, ஐந்து தேங்காபன்னு, அரைகிலோ சின்ன வரிக்கி..
இதேபோல ஐந்து பார்சல் பன்னு…
அதிலெ ஒன்னுலே மட்டும் பத்து கோக்கனட் பால சேத்துக் கட்டு…
சீக்கிரமா.. குன்னூர் பஸ்ஸ எடுத்திடபோரா…”
அவர் சொல்ல சொல்ல ஏற்கனவே கட்டிவைத்திருந்த வரிக்கி உள்ளிட்ட சிலவற்றை பைகளில் கட்டினார் ஜோகி.
இந்தக் குன்னூர் பஸ்ஸை விட்டுவிட்டால் அடுத்த பஸ் அரை மணிநேரம் கழித்துதான். அதிலும் இது சாப்பாட்டு நேரம். நிறுத்தி ஐந்து நிமிடத்தில் எடுக்கவேண்டிய பேருந்தை, உணவு நேரத்தைச் சாக்காகவைத்து அரை மணிநேரம் கழித்து எடுப்பதுண்டு.
ஒரு சிகரெட்டிற்கு இரண்டு சிகரெட்டுகளை உண்டதற்குத் தோதாக இழுத்து, கதைபேசி, அரட்டை அடித்து, வயிறு சற்று காலியாகும்வரை காத்திருந்து ஒரு டீ சாப்பிட்டுவிட்டுதான் பேருந்தை எடுப்பதுண்டு.
இந்தப் பொதுபுத்தி மலைப்பகுதிகளில் தராளமானதுண்டு. தகவமைப்பிலேயே சகிப்பில் உழன்ற மலைமக்கள் இதற்குப் பொறுமை கொள்வதுண்டு.
மல்லனின் கால்கள் பறபறத்தன. அவனின் அவசரம் ஜோகிக்கும் புரிந்தது. கதவைத்திறந்து பேருந்தில் ஏறும் ஓட்டுனரைக் கண்டதும் மல்லனுக்கு மேலும் பதற்றம் கூடியது.
“ஏய்… ‘தம்மா’… கொஞ்சமிரு.. இதோ ஐயா வந்துருவாரு..”
என்று ஓட்டுனரை விளித்து கூறினான் ஜோகி. அவன் முறைத்துப் பார்த்தவாறே வண்டியை ஸ்டார்ட்ட செய்துவிட்டு காத்திருந்தான்.
தான் வாங்கிய பொருட்களை வைப்பதற்குத் தோதாக கடைசி இருக்கையின் நடுவில் அமர்ந்தார் மல்லன். அது அவரின் வாடிக்கையான இடம்.
நட்டக்கல் நிறுத்தத்தில் பேருந்து நின்றது. கைக்கு அடங்காத பைகளை ஏந்திக்கொண்டு அவர் இறங்கி நடந்தார். அவர் இந்தவழியாக வந்து பல ஆண்டுகளானதுண்டு. எனவே இந்தப் பாதை அவருக்குப் புதிதாய்ப் பட்டது.
ஊரின் முகப்பிலேயே தன் தம்பிகளின் வீடு. அவர்கள் நால்வருக்கும் வரிசையாக, ஒரே விதத்தில் அவர் கட்டித்தந்தது. தனி தனி முற்றத்தோடு தனியாகக் கட்டலாம் என்ற அன்னையின் ஆலோசனையை மறுத்து, சுவற்றைப் பகிர்ந்து வீடு கட்டினால்தான் அன்பு, உறவு நிலைக்குமென்று ‘கெக்கட்டி’ காள மேஸ்திரியை அழைத்து அந்த வீடுகளை அவர் கட்டியிருந்தார்.
தம்பிகள் முரண்பட்டதிலிருந்து ‘நட்டக்கல்லுக்கு’ அடுத்த நிறுத்தமான ‘அட்டோடை’ நிறுத்தத்தில் இறங்கி, பி.எம்.எஸ் பள்ளியின் வழியாக ஊரிற்குள் புழங்கிக்கொண்டிருந்தார். முரண்பட்ட தொடக்கத்தில் வழியில் நடந்துவரும் அவரைக்கண்டு, அன்பால் ஓடிவந்த பிள்ளைகளை, அவரிடம் சென்றதிற்காக அடித்து அரற்றிய தன் உடன்பிறப்புகளின் கொடுமையைத் தாளாது அந்த வழியை அவர் துறந்திருந்தார்.
ஊரின் முகப்பிலுள்ள புல்மேட்டினை அடைந்தார். தீடிரென்று தம்பிகளின் இல்லத் தெருவில் நுழைந்தார். நெடுநாள் கழித்து இந்த வழியாக வந்தவரை பெருவியப்போடுக் கண்டும் கணாமலும் முற்றத்தில் அவரை உணக்கிக் கொண்டிருந்த இரண்டாம் தம்பியின் மனைவிக்கு அவரைக் கண்டதும் அதிர்ச்சி தாளவில்லை.
‘கல்லே கரைந்தாலும் மல்லன் கரையமாட்டான்’ என்று மல்லனின் ரோஷத்தைப்பற்றி பலமுறை தம்பட்டம் அடித்தவள் அவள். மல்லனைப் பொதுவெளியில் பலமுறை துற்றியவளும்கூட.
கண்டதும் “மம்மா” என்றபடி எழுந்து நின்று, அவரிடம் ஆசிவாங்க தலைகுனிந்தாள். குற்றவுணர்வு அவளிடம் பெருமூச்சாய் விம்பிப் புடைத்தது. தலையைத் தொட்டு “பதக்.. பதக்..” என்று ஆசி வழங்கினார்.
இதோ வருகிறேன் என்றவர் முதல் வீடாய் அமைந்த தன் கடைசி தம்பியின் வீட்டிற்குள் நுழைந்தார். “டேய் பெள்ளா..” என்றவாறு அவ்வீட்டின் கடைசி வாரிசினை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார். அவனுக்குப் ‘பெள்ளன்’ எனும் தன் தாத்தாவின் பெயரினை அவர்தான் இட்டிருந்தார்.
தன் அண்ணனைக் கண்டதும் உண்டுக்கொண்டிருந்தவன் எழுந்து நின்றான். ‘நீ செத்தாலும் நா உம் மொகத்த பாக்கமாட்டே.. ஒருவேளே நா செத்தாலும் எம் மொகத்த பாக்க வந்துடாதே’ என்று அவரோடு இறுதியாக பேசிய வர்த்தைகள் அவனின் தொண்டைக்குழியை அடைத்தன. புரையேறி இருமினான்.
“ஏய்.. பாத்து,… பாத்து.. மொதுவா..
பசங்க இல்லையா”
“ஸ்கூலுக்கு போயிருக்காங்க மாமா..”
“ஓ… இன்னிக்கு ஸ்கூலில்லே.. மறந்துட்டே..”
வண்டிப் பாதையின்றி இன்றும் விற்கப்படாத அந்தப்பூமி புதர்மண்டிக் கிடந்தது. அதற்கு இன்றும் தடையாக இருக்கும் தன் அண்ணனின்மீது அப்புதரையும் தாண்டி அவனுக்கு வெறுப்பு மண்டிக்கிடந்தது.
ஒருமுறை பிள்ளைகளுக்குப் பீஸ் கட்டவேண்டுமென்று சொல்லி அனுப்பியும்கூட, அந்த வழிக்குக் கையொப்பம் இடாமல் மறுத்தான் மல்லன். பீஸ் கட்டசொல்லி அவன் கொடுத்தனுப்பிய பணத்தையும் ‘எனக்கென்ன பிச்சே போடுறானா’ என்று மல்லனின் முற்றத்தில் விசிறி எரிந்த நினைவும் அவனுக்கு வெறுப்பைக் கசிந்து கொண்டிருந்தது.
‘இப்போ மட்டும் எதுக்கு வந்திங்க.. வெளியே போங்கா..’ என்று சொல்லெடுக்க அவனின் புத்தியில் சிறு வஞ்சம் குடைந்தது. ‘ச்சே.. இது யார்வீடு.. இதன் ஒவ்வொரு செங்கல்லிலும் அவரின் கைரேகை உண்டு.. அவரை வெளியே போகச்சொல்ல நான் யார்? யாருக்குதான் உரிமையுண்டு..’ மனதின் மௌனப் போராட்டம் தொடர்ந்தது. அது புறத்திலும் ஆதிக்கம் செலுத்தியது.
வெண்கலக் கோப்பையில் தரப்பட்ட, சற்று சூடாக்கிய மோரினை ஒருசில மடக்கில் குடித்தார் மல்லன். அறுவை சிகிச்சைப்பிறகு சளிபிடிக்காமல் இருக்க, மோரினைச் சற்று சூடாக்கி குடிக்கும் அவரின் வழக்கம் அவர்களுக்கும் தெரிந்திருந்தது. மோர் படிந்த தன் வெண்மீசையைக் கைiயால் முறுக்கித் துடைத்துச் செருமினார்.
“மாமா குடிக்க தண்ணீர் தரவா…”
“இல்லே.. போதும்..
இன்னிக்கு ராத்திரிக்குச் சாப்பிட எல்லோரும் நம்ம வீட்டுக்கு வந்துடுங்க”
என்றான். சுற்றி நின்ற மூவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே அவர் விடுத்த அழைப்பின் குரலும், அழைத்த முகமும் இதுவரை அவர்கள் காணதவொன்று. விளையாடிக் களைத்து உறங்கியவனை எழுப்பி, அவன் தூங்கிவழிய, வயிற்றைக் காலியாக விடக்கூடாது என்பதற்காக சோறூட்டிய, தன் பால்யத்தில் தூக்கம் வழியும் கண்கொண்டு தான் பார்த்த அண்ணனின் அதேமுகம். இன்று தெளிந்த பார்வைக்கு.
பெருங்கனிவில் மேலும் சிவந்துகொண்டிருந்த அவரின் முகத்தை அம்மூவரால் எதிர்கொள்ளவியலாது தலைகுனிந்தனர்.
வாங்கிவந்த தின்பண்டங்களை நால்வரின் வீட்டிற்கும் கொண்டுசென்று கொடுத்தார். எல்லோரின் இல்லத்திலும் மோருண்டார். நால்வரையும் உணவிற்கு அழைத்துவிட்டு இல்லம் திரும்பினார்.
திருவிழாவிற்குக் காத்திருந்ததுபோல ஊரே அந்நாளிற்காய் காத்திருந்தது. ஊரோடு சேர்ந்து மிச்சியும் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். இனி சரியே ஆகாது என்று திண்ணமாக கருதியவொன்று இன்று சரியாகி, சங்கீதமாகி நீண்டுக்கொண்டிருந்தது.
ஊராரின் முகமெல்லாம் பொலிந்திருக்க, அந்தப் பொலிவையெல்லாம் ஒருங்கே ஏற்றுக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் மல்லன். திண்ணையில் உலர்த்த வைக்கப்பட்டிருந்த ‘தைகெ’ அவனைப்பார்த்து புன்னகைத்தது. தன்மீது கோபம் கலைந்து அந்தத் தையெயைவிட மிச்சிப் பொலிந்து கொண்டிருந்தாள்.
5
சரியாக மாலை ஆறு மணிக்கு விளக்கேற்றினாள் மிச்சி. சாமையையிட்டு ஆக்கிய ‘குச்சக்கூ’ உணவினையும், ‘எம்மெ அவரைக்’ குழம்பினையும் அவள் பொழுது மங்கும்போதே ஆக்கியிருந்தாள்.
நடு அறையின் மையத்தில் ‘தைகெ’ வைக்கப்பட்டிருந்தது. அருகே முறைபடி உணவுக் கலன்கள் அணிவகுத்தன. அந்தி சூழ்ந்தது. அவர்களைக் காணவில்லை. அவர்கள் வருவார்களா எனும் ஐயம் எழுந்தது.
மிச்சியின் முகத்தைப் பார்த்தான் மல்லன். அவளின் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது. மல்லனின் பார்வையின் நோக்கம் அவளுக்கு நன்கு புரிந்திருந்தது.
“அவங்க வராட்டி போறாங்க”
என்று முனுமுனுத்தாள்.
“இதோ நா போயி ஒரு எட்டு பாத்துட்டு வந்துடறே”
என்று கதவிடுக்கில் வைத்திருந்த கைத்தடியை எடுத்தான். மிச்சிக்கு அவரின் செயல் பெரும் வியப்பினைத் தந்திருந்தது. தன்னுடனான வாழ்வில் இதுவரை அப்படியில்லாத அவர் இன்று அப்படி. ஒருமுறை தன் தந்தையை முறைபடி அழைத்தும் வரவில்லை என்பதற்காக அவர் இறக்கும்வரை வீட்டினை மிதிக்காத இவரா இன்று இப்படி.... மிச்சியின் குழப்பம் நீடியது.
“ஏய் நில்லுங்க.. உங்களுக்கு ரோஷமில்லையா”
என்று வாய்விட்டுக் கேட்கத் துணிந்தாள்.
தெருவிளக்கின் வெளிச்சம் இருந்தாலும், சற்று மங்கிய தன் கண்களை இடுக்கி இடுக்கி விலக்கித் தெளிவித்து மெதுவாக தன் தமையன்களின் இல்லத்தை நோக்கி, தடுமாறி நடந்து சென்றார்;.
தம்மை நோக்கிவரும் அவரை தூரத்தில் கண்டதும் அண்ணனின் வீட்டிற்குச் செல்வது குறித்து வெளியில் கூடிபேசிக் கொண்டிருந்த தம்பிகளுக்கு வியப்புத் தாளவில்லை.
குழப்பத்தில் பிள்ளைகளோடுத் திண்ணையில் அமர்ந்திருந்த அவர்களின் மனைவிமார்கள்
“ஏய் சீக்கிரம்... அவரு வந்திடபோராரு…
அது மரியாதேயில்லே…”
என்றவாறு குழந்தைகளை அழைத்துக்கொண்டு முன்னகர்ந்தனர்.
தன் கணவன்மார்களின் முடிவெடுக்கும் திறன்குறித்து அவர்களுக்கு நன்குதெரியும். மற்றவர்கள் தோட்டத்தில் களையெடுக்கும் போதுதான் தன்நிலத்தில் விதைப்பதுக் குறித்து யோசிப்பவர்கள்.
தாத்தாவைக் கண்டவுடன் முதலில் கட்டியணைக்கும் போட்டியில் பௌ;ளனே வென்றிருந்தான். பேரன்கள் முதல் வரிசையிலும் அடுத்து தம்பிகளும் தைகெயைச் சுற்றி அமர்ந்திருந்தனர்.
தன் மேற்போர்வையான சீலையை வலது கையின் கக்கத்தின்வழியே எடுத்து நன்கு போர்த்தினார் மல்லன். தண்ணீரால் கைகழுவி கடைவரிசையிலிருந்து ‘தைகெயிலுள்ள’ உணவினைக் கவளமாக்கி அவர்களின் கையில் அளித்தான். அந்திச் சூரியனை நிகர்க்க அவனின் முகம் சிவந்திருந்தது.
பத்தாது, நான்காவது முறையாகவும் உலை வைக்க வேண்டும். என்று அவன் கணித்ததைப் பேலவே மூன்றுச்சட்டி சோறு தீர்ந்து நான்காவது சட்டிச் சோறு சென்றுக் கொண்டிருந்தது.
கடந்தமாதம் மல்லன் கடைந்த நெய்யில் நின்றெரிந்த விளக்கொளி தன் நிறைவைக் கூட்டிப் பொலிந்தது. மல்லனின் கண்கள் ஆனந்தத்தில் பனித்தன.
“ஐயா இன்னும் முடியாதப்போ… போது.. போது…” என்ற பேரன்களின் நிறைவையும், “அண்ணா, இனி போதும்.. ‘ஹெச்சு’” என்ற தம்பிமாரின் நிறைவையும் ஒருங்கே கேட்ட நிறைவில் மல்லன் மென்மேலும் பொலிந்தான்.
ஆனந்தக்கண்ணீர் கலந்து, சப்பி விரிந்து, வெடித்த இதழ்களில் இரத்தம் கசிந்தது. அனைவரையும் வழியனுப்பினான். மல்லனோடு உறங்க அடம்பிடித்த பெள்ளனையும் நாளை தேர்வுகருதி ஏமாற்றி அனுப்பினான். பெரும் நிறைவோடு திண்iணையில் அமார்ந்துகொண்டு நிலவைப்பார்த்தான். மீண்டும் உலைவைத்து வடித்த சோற்றை உண்ணாது வெறும் மோரினை மட்டும் பருகினான். அதுவரை உறவின் களிப்பில் மறந்திருந்த நெஞ்செரிச்சல் வலுவாக எட்டிப்பார்த்தது. ‘நெஞ்செரிச்சல் மாத்திரை வாங்கியிருக்கலாமோ’ என்று சற்று வருந்தினான்.
தன் தாத்தன் பெள்ளன் இறக்கும்போது அவருக்கு வயது 107. அதுவரையிலும் தன் வேலையைத் தானே பார்த்துக்கொள்ளும் திடகாத்திரக்காரர். அவர் தனக்கு கடைசியாக ‘தைகெ’ உணவினை அளித்த நினைவு மேலிட்டது. அந்த அடர்பனிக் காலத்தில் அன்றிரவு அவருக்கு வியர்த்துக்கொண்டு வந்தது. பேர்வையை விலக்கியவர் தன்னை அழைத்து எரியும் தன் நெஞ்சினைத் தடவச் சொன்ன அனுபவம் கட்டியாக அணைந்தது.
மல்லனும் சற்று வீங்கிய தன் நடுநெஞ்சினை அழுத்தமாகத் தடவினார். வாடிக்கையாக கனமான மூன்று போர்வைகளின்றி உறங்காத அவர், மிச்சி உறங்கியதை உறுதிப்படுத்தியதும், அவள் தனக்குப் போர்த்திய அப்போர்வைகளை விலக்கி, மெல்லிய ஒற்றைப் போர்வையை மட்டும் போர்த்திக்கொண்டார்.
நேற்றைப்போல வியர்க்கவில்லை. அன்று தன் பக்கத்தில் வியர்வை ஒழுக, வியர்த்து தலைநனைந்து பெருமூச்செறிந்த தன் தாத்தா பௌ;ளன்,
“மல்லு, இன்னும் அவ்ளோதான்.. நெஞ்செரிஞ்சு, இந்த நஞ்சுத் தண்ணி வயித்திலிருந்து நெஞ்சுலே ஏறிட்டா அவ்ளோதா..”
என்று தன் கையைப் பிடித்து நெஞ்சிலேறிய நஞ்சுநீரால் புடைத்த தன் மார்பினைத் தொட்டுக்காட்டி, வாழ்வின் நிறைவை வார்த்த அவரின் விகார சிரிப்பின் நிறையொலியின் கூர்பற்கள் நேற்றே மல்லனை மெல்லத் தொடங்கியிருந்தது. நேற்று அதிகாலையிலேயே ஏறத்தாழ நஞ்சுநீர் மல்லனின் மார்பைத் தொட்டிருந்தது.
“எந்த நிலையிலும் தைகெய மறந்துடாதே..
அதுலே சாப்பிடாட்டியு நீரையாவது ஊத்தி நனெச்சுக் கொட்டிடு”
என்ற குருதி கசியும் இருமலோடுப் பிணைந்த தன் தாத்தாவின் கடைசி வார்த்தைகள் கடந்த பத்து ஆண்டுகளாக அவனுக்கு ஆறாத ரணம்.
‘உறங்காமல் உறக்கத்தைப் பிடித்து வைக்கலாம். ஆனால் உயிரை?..
என் மூதாதையர்களே என்னை விட்டுவிடாதீர்;கள்…
ச்சே… அதிலும், மாப்பிள்ளை வீட்டில் உயிரைவிட நேர்வது எவ்வளவு கேவலம்..
நான்குபேரோடு உடன் பிறந்துவிட்டு…’
என்று நேற்று உயிரைப் பிடித்திருந்த அல்ல, உயிரைப் பிடித்து வைத்திருந்த கணங்கள் அவரை நெருடின.
‘மிச்சிக்கு என்ன குறை..
அவள் ஊரின் அன்பை அளப்பவள்..
ஊரே அவளை மடிசாய்க்கும்..’
அவரின் நெடுவாழ்வின் மொத்த அனுபவப் பிரளயம் அவருக்குள் அலைந்தது. மூளையையும் மனதையும் குடைந்தது. தன் கடமையை நிறைக்கும்வரை பிடித்துவைத்திருந்த அவரின் உயிர் லோசானது.
தன் முதல் தம்பி சிவப்பும் கருப்பும் கலந்த ‘கெறெயினைக்’ கொண்ட, மேல்முனைக்குச் சற்றுகீழ் கந்தலான தனது ‘குத்தன்ன சீலெயை’ அணிந்து ‘தைகெயில்’ அமார்ந்திருக்கும் காட்சி அவனது கண்களில் நிறைந்தது. மூச்சு முட்டியது. அன்று தன் தாத்தாவிற்கு எழுந்த அதே மூச்சொலி.
வெடித்துக் கருத்த உதட்டினை அதிர்த்து, அவ்வொலியோடு தன் தாத்தனுக்கு உயிர் வெளியேறிய அந்த கணமே அவன் நினைவெங்கும் ஆட்கொண்டிருந்தது. தன் தாத்தனைப்போல எழுந்தமர எண்ணினான். ஆனால், அந்தக் கணம் கடந்திருந்தது. அடுத்தது உயிர்பிரியும் அந்தக் கடைசி ஒலிதான். அந்தக் கணம்தான்.
தொண்டையில் துடித்து தாத்தாவிற்கு நிகழ்ந்ததுபோல இரத்தத்தோடு, இல்லையெனில் அம்மாவிற்கு நிகழ்ந்ததுபோல இரத்தமின்றி, ஏன் வளர்த்தவளுக்கு ஆனதைப்போல குடித்த மேரோடும்கூட இருக்கலாம்.
“எதகே…. எதகே..” மாசியின் அழைப்பொலி. அவனோ, மகளின் மானம்காக்க தூக்கில் தொங்கிய அந்த ‘ஜக்கலோரையின்’ திடலுக்கு இளைப்பாறச் சென்றுக்கொண்டிருந்தான்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.