மேலைநாட்டவரான மாக்ஸ்முல்லரின் இந்துக்கற்கைகள் தொடர்பான பங்களிப்புகள்! - ந.சதுர்ஜியா, கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, இலங்கை -
இந்து கலாசார, நாகரிக, சமயவழிபாட்டு முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளின் உச்சகட்ட காலமாக 19ம் நூற்றாண்டினைக் குறிப்பிடலாம். இக் காலக்கட்டத்தில் மேற்கத்தைய அறிஞர்கள் பலர் கீழைத்தேய கலாசார, சமூக, சமய, இலக்கியங்கள் பற்றி அறிய பேரார்வம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இதன் காரணமாக தமது ஈடுபாடுகளையும் பங்களிப்பினையும் ஆற்றினர். இதற்காக மேலைநாட்டினர் இந்தியாவின் மொழியான சமஸ்கிருத மொழியினை கற்க தொடங்கினார்கள். அவர்கள் அவ் மொழியினை கற்றது மட்டும் அல்லமால் இந்துப்பண்பாட்டு அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் இலக்கியங்களை வெளியிட்டமை, மொழிபெயர்ப்பு பணியினை செய்தமை மற்றம் தொல்பொருள் ஆராய்ச்சி என்பனவற்றினையும் மேற்கொண்டனர்.
மேலைநாட்டினர் வேதங்கள், புராணங்கள், தர்மசாஸ்திரங்கள் உள்ளிட்ட இந்து சமய இலக்கியமூலங்களை அச்சுருவாக்கினார், ஆங்கீலமொழியில் மொழிபெயர்த்தனர், விரிவுரைகள் செய்யப்பட்டன, ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டன, அகாரதிகள் உருவாக்கினார் மற்றும் தொல்லியல் ஆய்வுகள், ஒப்பியல் ஆய்வுகள், சமய ஆய்வுகள் நடந்தேறின. இதற்கு துணை செய்தவர்களில் சேர் வில்லியம்ஸ் ஜோன்ஸ், மாக்ஸ்முல்லர், கீத், மொனியர் வில்லியம்ஸ், எச்.ரி.கோல்புறூக், எச்.எச்.வில்சன், வின்ரநிட்ஸ், சேர் ஜோன்வூட்றொவ் போன்ற மேலைத்தேச இந்தியவியல் ஆய்வாளர்களின் வகிபாங்கு அளப்பெரியது ஆகும். இவ் ஆய்வாளர்களில் முதன்மையானவரும் சுவாமி விவேகானந்தரால் வேத ரிஷிகளுக்கு ஒப்பானவர் என்று போற்றப்பட்ட சிறப்புக்குரியவருமான ஜேர்மன் நாட்டறிஞராகிய மாக்ஸ்முல்லரின் இந்துப் பண்பாடு தொடர்பான பங்களிப்புகள் பற்றி இக் கட்டுரையில் விரிவாக ஆராய்வோம்.
ஜேர்மனியில் கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள s Dessau என்ற சிறுநகரில் வில்லியம் முல்லர், அடல்ஹெய்ட் முல்லர் ஆகியோருக்கு 1823 ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் திகதி மக்ஸ்முல்லர் மகனாகப் பிறந்தார். இவர் இளவயதில் இருந்தே காவியங்களையும், இசைகளையும் கற்பதில் பெரிதும் ஆர்வம் உடையவாரக திகழ்ந்தார். இவர் தனது பாடசாலைக் கல்வியினைக் ஜிம்னானிஸம் உயர்பள்ளி மற்றும் நிகோலாய் உயர் கல்லூரி என்பவற்றில் கற்றார். இவர் தனது பல்கலைக்கழக அனுமதிக்காக கீழைத்தேச மொழிகளில் குறிப்பாக சம்ஸ்கிருத்தை ஆழமாக கற்றிருந்தார். இவர் தனது 18வது வயதில் ஜேர்மன் பல்கலைக்கழகமான லெய்ப்ஸிஸ் பல்கலைக்கழகத்தில் மொழிப்பிறப்பியல் தொடர்பான கற்கையினை மேற்கொள்வதற்கு தெரிவாகினார். தனது பட்டப்படிப்பின் போது தொல்சீர் மொழிகளான கிரேக்கம், இலத்தீன், அரபு, பாரசீக மொழி மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவாரக திழ்ந்த இவர் 1843ல் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தார். இவர் மிக இளவயதிலேயே ஹிதோபதேசத்தினை ஜேர்மனிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்.