அண்மையில் நடிகர் சரத்பாபுவின் மறைவினையடுத்து நடிகை ரமாபிரபா பற்றிய செய்திகள் இணையத்தை நிறைத்துவிடத் தொடங்கி விட்டன. காரணம் - அவர் சரத்பாபுவின் முதல் மனைவியாக வாழ்ந்தவர். அதன் பின் திரைப்பட உலகைவிட்டு ஒதுங்கி வாழ்ந்து வந்த ரமாபிரபாவை அண்மைக்காலமாக அவரது முதுமைப் பிராயத்தில் தெலுங்கு சினிமா மீண்டும் திரையுலகுக்கு அழைத்து வந்துவிட்ட தகவல்களயும் அறிய முடிகின்றது. சரத்பாபுவின் கடைசிப்படமான 'வசந்த முல்லை'யிலும் இருவரும் நடித்திருப்பது காலத்தின் கோலம்.
ரமாபிரபாவின் படங்களை அதிகம் நான் பார்த்ததில்லை. ஆனால் பார்த்த படங்களில் இரண்டு மனத்தில் பசுமையாகப் பதிந்துள்ளன. ஒன்று சாந்தி நிலையம். அதில் ஜெமினியின் பெறா மகள்களில் மூத்த பெண் கீதாவாக நடித்திருப்பார். அடுத்தது ஶ்ரீதரின் 'உத்தரவின்றி உள்ளே வா' திரைப்படத்தில் சித்த சுவாதீனமற்ற பெண் ஆண்டாள் ஆக நடித்திருப்பார். நாகேஷை எந்நேரமும் 'நாதா நாதா' என்றழைத்துத் துரத்தித் திரிவார். அப்படி அழைக்கும்போதெல்லாம் நாகேஷ் விழுந்தடித்து ஓடுவார்.
அத்திரைப்படத்தில் அவர் பாடி நடிக்கும் 'தேனாற்றங் கரையினிலே' பாடலை மறக்கவே முடியாது. நள்ளிரவில் வெண்ணிறச் சேலையுடன் பேய்போல் வந்து அனைவரையும் பயப்படுத்துவார். அந்த வயதில் இரவுக்காட்சியில் நாமும் திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். மறக்க முடியாத பாடற் காட்சி. ரமாபிரபா என்றால் முதலில் நினைவுக்கு வருவது அந்தப்பாடற் காட்சித்தான்.
திரையுலகில், தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சவால்கள், துயர்மிகு சம்பவங்களால் தனிமையில் தன்னூரில் வாழ்ந்து கொண்டிருந்த இவருக்கு மாதா மாதம் ஒருவர் மணியோர்டரில் பெயர் குறிப்பிடாது பல வருடங்களாகப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தாராம். இவருக்கும் அவர் யாரென்பது தெரியவில்லை. பின்னர் மீண்டும் முதுமையில் இவர் திரையுலகுக்கு வந்த பொழுதுதான் தீவிரத் தேடலின் பின் அவ்விதம் இவருக்குப் பணம் அனுப்பிக்கொண்டிருந்தவர் நடிகர் நாகார்ஜுனன் என்பது தெரிய வந்ததாம். அவரது தந்தையாரான நாகேஸ்வரராவ் ரமாபிரபாவைத் தன் சொந்தத்தங்கைபோல் மதித்துப் பழகி வந்தாராம். அவரது மறைவின்போது அஞ்சலி செலுத்த வந்த ரமாபிரபாவை அவமானப்படுத்தி அனுப்பியிருக்கின்றார்கள் நாகேஸ்வரராவ் குடும்பத்தினர். அது கண்டு மனம் வருந்திய நாகார்ஜுனன் அப்போது ரமாபிரபாவுக்கு உதவி செய்யும் நிலையிலில்ல. அதுதான் தான் நல்லதொரு நிலைக்கு வந்ததும் பணம் அனுப்பி உதவி வந்திருக்கின்றார். இது இணையத்தில் அண்மையில் நானறிந்த தகவல்.
எம்மையெல்லாம் எம் பால்ய பருவத்தில் கட்டிப்போட்ட பாடலானா 'தேனாற்றங் கரையினிலே' பாடலிது . புது வின்சரில் பார்த்து இரசித்த பாடல் . எல்.ஆர்.ஈஸ்வரி குரலில், எம்.எஸ்.வி இசையில், கவியரசரின் எழுத்தில் ஒலிக்கும் பாடல்.
https://www.youtube.com/watch?v=D64SIb3VSP8