ஆய்வு: நாட்டுப்புற இலக்கியங்களில் பெண்களின் சித்திரிப்பு! - பேரா. செ.நாகேஸ்வரி, இலொயோலா கல்லூரி, தமிழ்த்துறை, வேட்டவலம் -
முன்னுரை
நாட்டுப்புற மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், வரலாறு, அன்றைய நாட்டு நடப்பு ஆகியவற்றை உள்ளது உள்ளபடியே படம் பிடித்துக் காட்டும் இலக்கியம் நாட்டுப்புற இலக்கியம். மண்ணின் மைந்தர்கள் தம் மனக் கருவறையில் கருக்கொண்டு உருப்பெற்று உலாவரும் உள்ளத்தின் உண்மையான உணர்ச்சியின் வெளிப்பாடே நாட்டுப்புற இலக்கியங்கள். இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றால் நாட்டுப்புற இலக்கியம் சமுதாய வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடியெனில் மிகையாகாது. மனிதன் தோன்றிய போதே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றிவிட்டன எனக் கூறுவது சரியானதாகும். அத்தகைய நாட்டுப்புற இலக்கியத்தில் பெண்களை பற்றியக் கருத்தாக்கமும் சிந்தனைகளும் எத்தகைய நிலையில் சித்திரிக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வதே இவ்வாய்வின் நோக்காகும்.
நாட்டுப்புற இலக்கியம்
நாட்டுப்புறங்களில் பல்வேறு நிலைகளில் வாழும் மக்களின் வாழ்வையும், வாழ்வுக் கூறுகளையும் படம் பிடித்துக் காட்டுவது நாட்டுப்புற இலக்கியங்களாகும். இது ஏட்டில் எழுதாத, எழுத்திலே காணமுடியாமல் மக்கள் மனதிலே ஊறிக்கிடக்கும் எத்தனையோ எண்ணங்களையும், நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் படம் பிடித்துக் காட்டுவது நாட்டுப்புற இலக்கியம். அத்தகைய நாட்டு;ப்புற இலக்கியங்களைப் பல வகைமைகளில் பகுத்துக் காணமுடியும் அவையாவன,
1. நாட்டுப்புறப் பாடல்கள் (Folk songs)
2. நாட்டுப்புறக் கதைகள் (Folk tales)
3. நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் (Folk ballads)
4. பழமொழிகள் (Proverbs)
5. விடுகதைகள் (Riddles)
6. புராணங்கள் (Myths) 1
என்ற அமைப்பின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார் டாக்டர் சு. சக்திவேல். இதற்கு அரண் சேர்க்கும் வகையில் பல்வேறு அறிஞர்களும் இவ்வாறேப் பாகுபடுத்தியுள்ளனர் என்பதை அறியலாம்.