‘உலகு கிளர்ந்தென்ன உருகெழு வங்கம்’ என்று மருதன் இளநாகனாரின் பாடல் (பாலைத்திணையில்) ஒன்று இருக்கிறது. ஒட்டுமொத்த உலகும் கிளர்ந்து எழுந்து ஒரு கப்பலில் ஏறிக் கொண்டது போன்றதொரு சித்திரம். விவிலியத்தில் வரும் நோவாவின் கப்பல் போல. உண்மையில் அப்படியொன்று சாத்தியமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் பார்க்கும் விஷயங்கள், சம்பவங்களை எல்லாவற்றையும் எழுத்தில் ஏற்றி பெரும் படைப்புலகை நிர்மாணிக்கும் சக்தி படைப்பாளிக்கு உண்டு. அதை பாய்விரித்தோடும் கப்பல் போல வாசக பரப்பிடையே தொடர்ந்து எழுதிச் செல்லும் திறன் ஓர் எழுத்தாளனுக்கான வசீகரம். வெறும் குறுகுறுப்போடு கடந்து போகும் வாசிப்பு சுவாரசியத்திற்காக எழுதப்படாமல், ஒரு தொடர்ச்சியின் சுவடுகளை பதிவு செய்யும் அக்கறையோடு எழுதப்படுவதுதான் பாவண்ணனின் எழுத்துலகம். ஒரு காலத்தின் தொடர்ச்சியை, ஒரு கலாச்சாரத்தின் தொடர்ச்சியை, ஒரு தலைமுறையின் தொடர்ச்சியை, மொழியின் தொடர்ச்சியை ஆரவாரமில்லாத நடையில் பதிந்து கொண்டு போகிறார் பாவண்ணன். ஐந்தாறு வருடங்கள் முன்னர் சிங்கப்பூரிலோ வேறெங்கோ ஒரு தமிழர் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தது. அப்போது ஒரு பத்திரிகை ஆசிரியர் ‘இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சார்பா பாவண்ணன் இடம்பெற்றிருக்க வேண்டும். அவரொரு மொழித் தூதுவர்’ என்று தனிப்பேச்சில் குறிப்பிட்டார். முற்றிலும் உண்மை. பாவண்ணன் என்னும் பாஸ்கர், இளவயதில் பணிநிமித்தமாக கர்நாடகத்திற்கு புலம்பெயர வேண்டியிருந்தது. அதன் பிறகு கன்னடம் கற்றுக்கொண்டு, பெருமுயற்ச்சியுடன் பல கன்னட ஆக்கங்களை, நாவல்களை, தலித் எழுத்துகளை, நவீன இலக்கிய முயற்சிகளை, கவிதைத் தொகுதிகளை, தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார். கிரீஷ் கர்னாட் மற்றும் ஹெச் எஸ் சிவப்பிரகாஷ் போன்றோரின் பல நாடகங்களும் தமிழில் வாசிக்கக் கிடைத்தற்கு பாவண்ணன் முக்கியக் காரணம்.
வசிக்குமிடத்து மொழியின் இலக்கிய பரப்பை இவ்வளவு விரிவாக தாய்மொழிக்கு கொண்டு வருவது மூலம் அவர் இரண்டு மொழிகளுக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது. அதற்கு மகுடம் வைத்தது போல பைரப்பாவின் ‘பருவம்’ நாவலின் மொழிபெயர்ப்பிற்கு சாகித்ய அகதெமி விருது அமைந்தது. இந்தக் காலக்கட்டத்தில் அவர் தமிழிலும் தீவிரமாக புனைவுகள் மற்றும் கட்டுரைகள் எழுதிக் கொண்டேதான் இருந்திருக்கிறார். எழுதுவது தவிர வேறெந்த விளம்பரமும் இல்லாமல் இருக்கிறார். தன்னுடைய ‘சுவரொட்டிகளின் நகரம்’ என்ற கவிதையில், பொருளற்ற வார்த்தைகளும் கூச்சந்தரும் குழைவுகளும் எப்படி ஒரு நகரத்தின் தன்மையையே மாற்றி விடுகின்றன என்று கூறியிருப்பார். தன்னைச் சுற்றிலும் இருக்கும் நகரம் முழுவதுமாக ஒரு சுவரொட்டியாக மாறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் துயரம் அக்கவிதையில் தெரியும்.
அந்தப் பொருளற்ற வார்த்தைகள்
அந்தக் கூச்சந்தரும் குழைவுகள்
அந்தப் பச்சையான முகஸ்துதிகள்
நாக்குத் தொங்க வாலாட்டிக் குழையும்
நாய்போல நிற்கிறது ஒவ்வொரு எழுத்தும்
மெல்ல மெல்ல இந்கரமே
ஒரு சுவரொட்டி போல மாறிக் கொண்டிருக்கிறது
அதையே சற்று விரித்து, ‘சுவரொட்டி சொக்கலிங்கமாக’ விகடனில் சிறுகதையாக எழுதியிருந்தார். கண்ணைக்கு குத்தும் பொருளற்ற சுவரொட்டிகளிடையே, சமூகத்திற்கு சேதி சொல்லும் பெரியப்பா சொக்கலிங்கத்தையும் பாவண்ணனின் படைப்புக் கண்கள் தவறவிடவில்லை. ஒரே செயலின் இருப்பக்கத்தையும் அவரால் தன் எழுத்தில் கொண்டு வர முடிகிறது. ‘சுவரொட்டி’ சிறுகதையில் ஓரிடத்தில் சொக்கலிங்கம் தன்னையே ஒரு நடமாடும் சுவரொட்டியாக மாற்றிக் கொண்டு கடற்கரையில் பாலிதீன் பைகள் விற்பதை தடுக்க பாடுபடுவார். அந்த சாத்வீகமான போராட்டத்தை, கடற்கரை கடை முதலாளிகள்க் கூட்டம் முதலில் கேலியாலும், பிறகு புறக்கணிப்பாலும், அதன் பிறகு வன்முறையாலும் எதிர்கொண்டு, பிறகு தோற்றுப்போவார்கள். ஒரு எதிர்பாரா தருணத்தில் இறந்துவிட்ட சுவரொட்டி சொக்கலிங்கத்தை, மின்மயானத்திற்கு கொண்டு சென்று, தானே கொள்ளிவைத்துவிட்டு வீடு திரும்புவார் கதைசொல்லி. திரும்பும் வழியில், நகரெங்கிலும் காணும் போஸ்டர்களில் எல்லாம் கதைசொல்லிக்கு,, சொக்கலிங்கத்தின் முகம்தான் பிரகாசமாகத் தெரியும். இத்தேசத்தில் காந்திய சிந்தனை என்று மங்காது தொடர்ச்சியாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்பதை பதிவு செய்யும் படைப்பு அது.
காந்தியின் தாக்கத்தை பாவண்ணனின் எழுத்தில் பல இடங்களில் பார்க்கலாம். ‘பாய்மரக் கப்பலில்’ முத்துசாமி கவுண்டனின் அண்ணன் மகன் காந்தியவாதியாக உருவெடுக்கிறார். இத்தனைக்கும் அதே முத்துசாமிக் கவுண்டனின் சகோதரன் ஒரு நொடி உணர்ச்சி வேகத்தில் உற்றாரைக் கொன்று போட்டு ஜெயிலுக்கு போவதாகவும் ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்கும். இரண்டு முனைகளுக்கும் இடையேதான் இந்த நிலத்தின் காதைகள் பலதும் எழுதப்பட்டிருக்கின்றன. அந்தக் கோர சம்பவத்தில் மனைவி வனமயிலை இழந்ததும் நாவாம்ப்பாளை ‘நடுவீட்டுத்தாலி’யுடன் மறுமணம் கொள்கிறார் முத்துசாமி. புரோகிதன் கவுண்டன் வந்து திருமணம் நடத்தி வைக்கும் புதுச்சேரி கவுண்டர் சமூக வழக்குகளை ஆங்காங்கே தெரிந்து கொள்ள வாய்க்கிறது. பிரான்சின் காலனியாதிக்க எச்சத்தினால் ஆட்பட்டு ஃப்ரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து பாரிஸுக்குப் போகும் முனுசாமியும், இந்த ஊரிலேயே ஆன்மிகத்தில் தொலைந்ந்து போகும் ரங்கசாமியும் புதுச்சேரி நிலத்தின் வரலாற்றை சற்று கோடிட்டு காட்டுகின்றார்கள்.
கதையின் தொடக்கத்தில், கோர்க்காட்டு அமாசைக் கிழவரும், முத்துசாமிக் கிழவரும் கடந்த காலத்தை பற்றி மிகவும் ஆதுரமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். கதை முடியும்போது கிழவர் தத்துப்பேரனான பிச்சாண்டியுடன் சேர்ந்து நிலத்தின் மீதான தன் நம்பிக்கயை மீட்டெடுக்கிறார். நான்கு தலைமுறைகளுக்கு இடையேயான சமூக வரலாற்றை முன்-பின்னாக சொல்லிச் செல்கிறது. ஒரு புராண காலத்து வீரனாக வாழ்ந்து, நாடி ஒடுங்கி விழுந்துவிட்ட முத்துசாமிக்கு அந்த நிலத்தின் மீதான நேசம்தான் உயிரை ஒட்ட வைத்து கொண்டிருக்கிறது. முதலில் ரெட்டிகளால் நிலம் பிடுங்கப்படும்போதும், பிறகு பார்த்தசாரதி ஐயரிடம் குத்தகைக்காக கிடந்து தவிக்கும்போதும் அதே நிலத்தின் மீதான் காதல்தான் முத்துசாமியை நிலை நிறுத்துகிறது. திருக்குறளில் ‘இடனறிதல்’ அதிகாரத்தில் ஒரு குறள் வரும். கடலோடும் நாவாயும், நிலத்தில் ஓடும் நெடுந்தேர்ப் பற்றியும் ஒப்பிட்டுச் சொல்லும் குறள் அது. முத்துசாமி நிலம் மீதான பயணம், பாய்மரக்கப்பல் போல மொழி ஆதிக்கம், சாதி ஆதிக்கம், அரசியல் ஆதிக்கம் என்று அலைக்கழிக்கப்பட்டு சென்று கொண்டிருந்தது என்று வாசிக்கும்போது அந்தக் குறள்தான் நினைவிற்கு வந்தது. இடமறிந்து செயலாற்ற வேண்டும் என்னும் வள்ளுவ கூற்றை சற்று மாற்றி, இடம் மாற்றி செயலாற்றுவதன் மூலம்தான் ஒருவன் வரலாற்றில் நிலைப்பெற முடியும் எனக்கூறும் நாவல் பாய்மரக்கப்பல்.
தொடர் இயக்கம் வழியே மட்டும் ஒரு படைப்பாளி வாழ்ந்து கொண்டிருக்க முடியும். அது சாமானியப்பட்டதல்ல. ஒவ்வொரு முறையும் பரீட்சிக்கப்படும் எழுத்தை கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். தன்னைச் சுற்றியிருக்கும் புறவுலகின் பாதிப்புகளுக்கு தன்னைத் தொடர்ந்து ஒப்புக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருவரால்தான், அதை அழகுணர்ச்சியோடும் சமூக அக்கறையோடும் மீட்டெடுத்து நமக்கு அளிக்க முடியும். பாவண்ணனின் சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் ‘கிணற்றுக்குள் விழுந்து கிடக்கும் மரப்பாச்சி பொம்மைகள் போல நினைவுகள் அவருள்ளே ஊறிக் கொண்டேயிருக்கின்றன’.
வளவனூரில் இருக்கும் ஏரிப் பற்றி ஒரு கட்டுரையில் விரிவாக பதிகிறார். தென்பெண்ணை ஆறு நிரம்பியதும் வளவனூர் ஏரிக்கு நீர் வரத்தொடங்கி விடுகிறது. ஒருமுறை நிரம்பினால் ஆறு மாதஙளுக்கு நீர் ததும்பியபடி இருக்கும். சிறுவர்களின் கணக்கில் காலாண்டு தேர்வுக்கு நிரம்பத் தொடங்கும் ஏரி முழு ஆண்டுத் தேர்வு சமயம் வரை நிரம்பியபடித்தான் இருக்கும். ஏரியில் புரளும் புதுவெள்ளத்தோடு போட்டிப் போடும் சிறுவர்கள் பற்றிய விவரணைகள் நம்மை அக்காலத்திற்கே இட்டுச் செல்கின்றன. மதுரை பசுமலைக் கண்மாயில் நண்பர்களுடன் நான் போட்ட குதியாட்டங்களூம், கலைநகர் பக்கம் பட்டிமேட்டில் விவசாயக் கிணற்றில் குதித்தோடிய அனுபவங்களையும் ஒப்புநோக்கி பார்த்து மகிழ்ந்த வண்ணம் வாசித்துக் கொண்டு வந்தேன். நடுவே அவருடைய பள்ளித்தோழி சரஸ்வதி ‘நீ குளிக்கப் போகலியா? உனக்கு நீச்சல் தெரியாதா? உனக்கு நான் நீச்சல் கத்துக் கொடுக்கவா?’ என்றெல்லாம் விடாமல் கேட்டுக் கொண்டிருக்கிறாள். இவருக்கு விருப்பம் இல்லாததால், ஏமாற்றத்தால் சுணங்கிப் போய், திரும்பிப் போய்விடும் சரஸ்வதியுடன் இவருடைய நீச்சல் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் போய்விடுகிறது. சரஸ்வதியிடம் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தால் பாவண்ணனிடமிருந்து இன்னொரு நாவல் கிடைத்திருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக அவருடைய நண்பன் பழநியின் தம்பி சேகர் அந்த ஏரியில் மூழ்கிப் இறந்து போய்விட அந்த ஏரியின் அமைதி அமானுஷ்யமாக மாறுகிறது.
‘துங்கபத்திரை கட்டுரைகளில்’ அதே ஏரி வறண்டு போய் கிடக்கும் அவலத்தையும் பதிவு செய்கிறார். அவரைச் சுற்றி இருக்கும் நிலங்களும், நீர் நிலைகளும், நதிகளும் தங்களுக்குள் ஒருபகுதியாக அவரைக் கொண்டிருக்கிறது என்பது இப்படியான தொடர் பதிவுகளில் தெரிகிறது. வற்றிப்போயிருக்கும் ஏரியைப் பற்றி குறிப்பிட்ட ‘வாழ்க்கை எனும் சுமை’ கட்டுரை பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றி விரிவாகப் பேசுகிறது. இதே புள்ளியைத் தொட்டு ‘தீராநதி’ பேட்டியில் ‘சீதையின் துயரம்தானே ராமாயணம், கண்ணகியின் துயரம்தானே சிலப்பதிகாரம், குந்தி, திரோபதை, சுபத்திரை என்ற மூன்று தலைமுறைப் பெண்களின் துயரம்தானே மகாபாரதம்’ என்று குறிப்பிடுகிறார். இந்த பரிவான பார்வையை அவருடைய படைப்பெங்கும் தொடர்ந்து காண முடிகிறது. ‘வாழ்க்கையில் ஒரு நாள்’ எனும் சிறுகதையில் சண்முகவேலன் தொடர்ந்து கொந்தளிக்கும் மனநிலையுடனே இருக்கிறான். அவனுக்கு வாய்த்திருக்கும் தனித்துவ குரல்வளமும், அதன் குழைவும் அதன் வனப்பும் பற்றி பலரும் சிலாகிக்க எப்படியாவது சினிமாவில் சேர்ந்து புகழ் பெற்றுவிட வேண்டும் எனும் தணியாத ஆர்வம். அதற்கான தொடர் முயற்சிகள் தோல்வியில் முடியும்போதெல்லாம் அவனுக்கு ஆற்றாமை மேலோங்குகிறது. அவனுக்கு வரமாக வாய்த்த குரல்வளமே அவனுனை கொந்தளிப்பிலும், ஆற்றாமையிலும் ஆழ்த்தி விடுகின்றன. இந்த முடிவில்லாத சுழலிலிருந்து சண்முகவேலன் விடுதலை பெறும் இடம், வாசிக்கும் நம்மையும் ஆட்கொண்டு விடுதலை பெற்றுத்தருகிறது.
கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து வருட தொடர் இயங்குதலுக்கு அப்புறமும் பாவண்ணனின் படைப்புகள் பற்றி கவனம் தந்து பேசும் தரப்புகள் அதிகமில்லை. ஆனால் அவர் அப்படி தன்னை தேங்கச் செய்துகொள்ளாமல் அடுத்த தலைமுறையின் செயல்பாட்டையும் கூர்ந்து கவனித்தபடிதான் இருக்கிறார். அவர் எழுதத் தொடங்கியபோது பிறந்தேயிராத சில புதியவர்களை அவர்களின் ஆரம்ப நிலையிலேயே கவனித்து ஊக்கப்படுத்தும் விழைவைக் கொண்டவராக இருக்கிறார். ‘திண்ணை’ இணையதளத்தில், ‘எனக்குப் பிடித்த கதைகள்’ என்னும் தலைப்பில் இரண்டாண்டுகள் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தார். தமிழ் இலக்கியம் படிக்க வரும் புதிய வாசகனுக்கு ஒரு வாசலாக அந்த கட்டுரைத் தொகுப்பு இருக்க வேண்டும் என விருப்பப்பட்டு எழுதினார். சமீபத்தில் எழுத்தாளர் ‘சார்வாகன்’ மறைந்தபோது அவரைப் பற்றிய மிகச்சில பதிவுகளில் முக்கியமானதாக பாவண்ணனின் கட்டுரைதான் அமைந்திருந்தது. புதியவர்களுக்கான அறிமுகமும், பழையவர்களுக்கான அடையாளமுமாக இந்த இலக்கிய தொடர்ச்சியை நிகழ்த்திக் கொண்டிருப்பவர் பாவண்ணன்.
அரசியல் சாய்வுகள் இல்லாத சர்ச்சைகளுக்கு வழிகோலாததொரு நிச்சலனமான எழுத்து இங்கு அவ்வளவாக ஆர்வம் ஏற்படுத்துவதில்லை. எந்த துறைகளிலும் இப்படியானதொரு தொடர் உழைப்பு பிறரிடம் ஒரு மரியாதையாவது ஏற்படுத்தும். ஆனால் தமிழில் தொடர்ந்து எழுதுகிறவர்களின் நிலை வேறு. இன்றைய பரந்து விரிந்த சமூக வலைத்தளத்தில், சினிமா பங்களிப்பு, அரசியல் நிலைப்பாடு, செல்வாக்குத் திறன் போன்ற காரணிகளால் மட்டுமே எழுத்து எடைபோடப்படுகிறது. தீவிர வாசிப்பற்ற, இலக்கிய உலகின் போக்குகளைப் பற்றி அடிப்படைப் புரிதல் இல்லாத, திருகல் பார்வையுடன் ஆவலாதி கூட்டும் குழு அரசியல்களால் நிறைந்திருக்கும் சூழலில், ஓரளவுக்கு நல் வாசிப்பைப் தங்கள் உள்ளே அடைகாத்து வரும் சில நல்ல நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போன்ற பல சிறப்பிதழ் முயற்சிகள் மூத்த படைப்பாளிகளையும், அவர்களை போற்றும் அடுத்த தலைமுறைக்கும் ஊக்கமாக அமைய வேண்டும்.
பாவண்ணனின் பாய்மரக்கப்பல், கலப்படமில்லாத படைப்பூக்கம் என்னும் காற்றை சக்தியாகக் கொண்டு, என்றென்றும் கடலோடிக் கொண்டிருக்க வாழ்த்துகள்.
நன்றி: https://padhaakai.com/2016/01/17/paavannan-sridhar-continuance/
பாவண்ணனின் படைப்புகள்
சிறுகதைகள்
வேர்கள் தொலைவில் இருக்கின்றன (1987, காவ்யா பதிப்பகம்)
பாவண்ணன் கதைகள் (1990, அன்னம் பதிப்பகம்)
வெளிச்சம் (1990, மீனாட்சி பதிப்பகம்)
வெளியேற்றம் (1991, காவ்யா பதிப்பகம்)
நேற்று வாழ்ந்தவர்கள் (1992, காவ்யா பதிப்பகம்)
வலை (1996, தாகம் பதிப்பகம்)
அடுக்கு மாளிகை (1998, காவ்யா பதிப்பகம்)
நெல்லித் தோப்பு (1998, ஸ்நேகா பதிப்பகம்)
ஏழுலட்சம் வரிகள் (2001, காவ்யா பதிப்பகம்)
ஏவாளின் இரண்டாவது முடிவு (2002, தமிழினி பதிப்பகம்)
கடலோர வீடு (2004, காவ்யா பதிப்பகம்)
வெளியேற்றப்பட்ட குதிரை (2006, அகரம் பதிப்பகம்)
இரண்டு மரங்கள் (2008, புதுமைபித்தன் பதிப்பகம்)
பொம்மைக்காரி (2011, சந்தியா பதிப்பகம்)
பச்சைக்கிளிகள் (2014 சந்தியா பதிப்பகம்)
பாக்குத்தோட்டம் ( 2014, உயிர்மை பதிப்பகம் )
கண்காணிப்புக் கோபுரம் (2016, சந்தியா பதிப்பகம்)
பிரயாணம் ( தேர்ந்தெடுத்த சிறுகதைகள்- 2016, காலச்சுவடு பதிப்பகம்)
ஆனந்த நிலையம் (2020, சந்தியா பதிப்பகம் )
கனவு மலர்ந்தது (2020, சந்தியா பதிப்பகம் )
நாவல்கள்
வாழ்க்கை ஒரு விசாரணை (1987 புத்தகப்பூங்கா, 2014 என்.சி.பி.எச். பதிப்பகம்)
சிதறல்கள் (1990 தாகம் பதிப்பகம், 2014 என்.சி.பி.எச். பதிப்பகம் )
பாய்மரக்கப்பல் (1995, 2014 காவ்யா பதிப்பகம்)
குறுநாவல்கள்
இது வாழ்க்கையில்லை (1989, சரவணபாலு பதிப்பகம்)
ஒரு மனிதரும் சில வருஷங்களும் (1989, 2005, 2018 அகரம் பதிப்பகம்)
கவிதைகள்
குழந்தையைப் பின்தொடரும் காலம் (1997, விடியல் பதிப்பகம்)
கனவில் வந்த சிறுமி (2006, அகரம் பதிப்பகம்)
புன்னகையின் வெளிச்சம் (2007, சந்தியா பதிப்பகம்)
கட்டுரைகள்
எட்டுத்திசையெங்கும் தேடி (2002 அகரம் பதிப்பகம்)
எனக்குப் பிடித்த கதைகள் (2003 காலச்சுவடு பதிப்பகம்)
ஆழத்தை அறியும் பயணம் (2004 காலச்சுவடு பதிப்பகம்)
தீராத பசிகொண்ட விலங்கு (2004 சந்தியா பதிப்பகம்)
வழிப்போக்கன் கண்ட வானம் (2005 அகரம் பதிப்பகம்)
எழுத்தென்னும் நிழலடியில் (2004 சந்தியா பதிப்பகம்)
மலரும் மணமும் தேடி (2005 சந்தியா பதிப்பகம்)
இருபத்திரண்டு அட்டைப்பெட்டிகள் (2006 சந்தியா பதிப்பகம்)
நதியின் கரையில் (2007 எனி இந்தியன் பதிப்பகம், 2018, சந்தியா பதிப்பகம்)
துங்கபத்திரை (2008 எனி இந்தியன் பதிப்பகம், 2017, சந்தியா பதிப்பகம்)
ஒரு துண்டு நிலம் (2008 அகரம் பதிப்பகம்)
உரையாடும் சித்திரங்கள் (2008 புதுமைபித்தன் பதிப்பகம்)
வாழ்வென்னும் வற்றாத நதி (2008 அகரம் பதிப்பகம்)
ஒட்டகம் கேட்ட இசை (2010 காலச்சுவடு பதிப்பகம்)
அருகில் ஒளிரும் சுடர் (2010 அகரம் பதிப்பகம்)
மனம் வரைந்த ஓவியம் (2011 அகரம் பதிப்பகம்)
புதையலைத் தேடி (2012 சந்தியா பதிப்பகம்)
கனவுகளும் கண்ணீரும் (2014, என்.சி.பி.எச். வெளியீடு)
படகோட்டியின் பயணம் (2017, என்.சி.பி.எச். வெளியீடு)
வெங்கட் சாமிநாதன்: சில பொழுதுகள் சில நினைவுகள் (2017, சந்தியா பதிப்பகம்)
கதவு திறந்தே இருக்கிறது (2018, பாரதி புத்தகாலயம்)
சிட்டுக்குருவியின் வானம் (2018 சந்தியா பதிப்பகம்)
சத்தியத்தின் ஆட்சி - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2019, சந்தியா பதிப்பகம்)
ஒரு சொல்லின் வழியாக (2019, என்.சி.பி.எச். வெளியீடு)
எல்லாம் செயல்கூடும் - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2020, சந்தியா பதிப்பகம் )
வற்றாத நினைவுகள் (2021, என்.சி.பி.எச். வெளியீடு)
நான் கண்ட பெங்களூரு (2021, சந்தியா பதிப்பகம்)
ஒன்பது குன்று (2021, சிறுவாணி வாசகர் மையம்)
என் வாழ்வில் புத்தகங்கள் (2021, சந்தியா பதிப்பகம் )
மண்ணில் பொழிந்த மாமழை - காந்திய ஆளுமைகளின் கதைகள் (2021, சந்தியா பதிப்பகம்)
சென்றுகொண்டே இருக்கிறேன் - பாவண்ணன் நேர்காணல்கள் (2022, சந்தியா பதிப்பகம்)
தங்கப்பா - இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசை நூல் (2022, சாகித்திய அகாதெமி )
விட்டல்ராவும் நானும் உரையாடிக்கொண்டிருந்தோம் (2022, சந்தியா பதிப்பகம் )
எப்பிறப்பில் காண்போம் இனி (2022, சந்தியா பதிப்பகம் )
குழந்தை இலக்கியம்
பொம்மைக்கு ஓர் இடம் வேண்டும் - பாடல்கள் (1992, கலைஞன் பதிப்பகம்)
பச்சைக்கிளியே பறந்துவா - பாடல்கள் (2009, அகரம் பதிப்பகம்)
யானை சவாரி - பாடல்கள் (2014, பாரதி புத்தகாலயம்)
மீசைக்காரப் பூனை- பாடல்கள் (2016, பாரதி புத்தகாலயம்)
எட்டு மாம்பழங்கள் - பாடல்கள் (2017, பாரதி புத்தகாலயம்)
நான்கு கனவுகள் - சிறுகதைகள் (2018, நெஸ்லிங் புக்ஸ் பப்ளிஷிங்)
கன்றுக்குட்டி - பாடல்கள் (2019, பாரதி புத்தகாலயம்)
கொண்டைக்குருவி – பாடல்கள் (2021, பாரதி புத்தகாலயம்)
பொம்மைகள் -சிறார் கதைகள் (2022, தன்னறம் பதிப்பகம்)
மொழியாக்கப் படைப்புகள்
ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த புத்தகங்கள்
நீர்யானை முடியுடன் இருந்தபோது (1998, ஆப்பிரிக்க வனவிலங்களைப்பற்றிய கதைகள், என்பிடி)
காட்டின் கதைகள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
வியப்பூட்டும் பாலூட்டிகள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
மரங்கள் (2003, சுற்றுப்புறச்சூழல் கல்வி மையம், பெங்களூரு)
கஸ்தூர்பா: ஒரு நினைவுத்தொகுப்பு (2019, சந்தியா பதிப்பகம் )
கன்னடத்திலிருந்து மொழிபெயர்த்த புத்தகங்கள்
கன்னட நவீனக் கவிதைகள் (1992, கனவு)
பலிபீடம் (1992, நாடகம், நாடகவெளி, காவ்யா பதிப்பகம்)
நாகமண்டலம் (1993, நாடகம், நாடகவெளி, காவ்யா பதிப்பகம்)
மதுரைக்காண்டம் (1994, நாடகம், காவ்யா பதிப்பகம்)
வினைவிதைத்தவன் வினை அறுப்பான் (1995, நாவல், என்பிடி)
புதைந்த காற்று (1996, தலித் எழுத்துகளின் தொகைநூல், விடியல் பதிப்பகம்)
ஊரும் சேரியும் (1996 தலித் சுயசரிதை, விடியல் பதிப்பகம், 2015 காலச்சுவடு பதிப்பகம்)
கல்கரையும் நேரம் (1998, லங்கேஷ் சிறுகதைகள், சாகித்திய அகாதெமி)
கவர்மென்ட் பிராமணன் (1998 தலித் சுயசரிதை, விடியல் பதிப்பகம், 2015 காலச்சுவடு பதிப்பகம்)
பசித்தவர்கள் (1999, நாவல், என்பிடி)
வடகன்னட நாட்டுப்புறக்கதைகள் (2001, சாகித்திய அகாதெமி)
அக்னியும் மழையும் (2002, நாடகம், காவ்யா பதிப்பகம்)
பருவம் (2002, நாவல், சாகித்திய அகாதெமி)
ஆயிரம் மரங்கள் ஆயிரம் பாடல்கள் (2004, நவீன கன்னட இலக்கிய எழுத்துகள் தொகைநூல், அகரம் பதிப்பகம்)
நூறு சுற்றுக்கோட்டை (2004, நவீன கன்னட சிறுகதைகள் தொகைநூல்)
ஓம் நமோ (2008, நாவல், சாகித்திய அகாதெமி)
அக்னியும் மழையும் (2011, ஆறு நாடகங்களின் தொகைநூல், காலச்சுவடு பதிப்பகம்)
தேர் (2010, நாவல், சாகித்திய அகாதெமி)
வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் (2013, கட்டுரை, காலச்சுவடு பதிப்பகம்)
வாழ்வின் தடங்கள் (தன்வரலாறு, 2017, காலச்சுவடு பதிப்பகம்)
சிதைந்த பிம்பம் (நாடகம், 2018, காலச்சுவடு பதிப்பகம்)
அஞ்சும் மல்லிகை (நாடகம், 2018, காலச்சுவடு பதிப்பகம்)
திருமண ஆல்பம் (நாடகம், 2019, காலச்சுவடு பதிப்பகம்)
அனலில் வேகும் நகரம் (நாடகம், 2019, காலச்சுவடு பதிப்பகம் )
* நன்றி: தமிழ் விக்கி