எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அறுபதுகளில் எழுதிய கதைகள் 'அக்கா' என்னும் தொகுப்பாகக் கலாநிதி க.கைலாசபதியின் அணிந்துரையுடன் வெளியானதைப் பலரும் அறிந்திருப்பார்கள். அதன் பின்னட்டையில் அவரைப்பற்றிய குறிப்பில் அவரது சிறுகதை கல்கியின் ஈழத்துச் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்றதென்று குறிப்பிடப்பட்டிருந்தது. நூலுக்கான தனதுரையில் அ.முத்துலிங்கம் அவர்கள் 'அனுலா' கல்கியில் வெளியான சிறுகதையென்று குறிப்பிட்டிருந்தார். அதுதான் கல்கியில் பரிசு பெற்ற கதையாகவிருக்க வேண்டுமென்று எண்ணினேன். அண்மையில் இணையக் காப்பகத்திலிருந்த பழைய கல்கி இதழ்களில் இதற்கான விடை கிடைத்தது.
15.1.1961 கல்கி இதழில் அது நடாத்திய ஈழத்துச் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற கதைகளின் விபரங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் முதற் பரிசான 'நந்தாவதி'க்கு எழுத்தாளர் க.நவம் ரூபா 200 பெற்றிருந்தார். இரண்டாவது பரிசுக்குரிய கதைகளாக மூன்று கதைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் ரூபா 100 பெற்றிருந்தன. அவற்றின் விபரங்கள் வருமாறு;
அனுலா - அ.முத்துலிங்கம்
தேடி வந்த கண்கள் - ஆர்.சிவலிங்கம் (உதயணன்)
உரிமை எங்கே? - திருச்செந்தூரன்
- அ.முத்துலிங்கத்தின் இளமைத்தோற்றம். -
'அனுலா' ஒரு துயரத்தில் முடிந்த காதல் கதை. சிங்களப் பகுதியில் தபால் நிலையத்தில் வேலை செய்யும் தமிழ் இளைஞன் ஒருவன் அங்குள்ள சிங்களக் குடும்பமொன்றின் வீட்டில் அறையெடுத்துத் தங்கியிருக்கின்றான். படங்களுக்குச் சாயம் பூசி விற்கும் சில்வா என்பவரின் வீடு அது. அவரது மகள் அனுலா. அனுலா அவன் மீது அன்பைச் சொரிகின்றாள். அவனோ சிறிது கர்வி. அவள் நெருங்கிவர வர அவன் அவளைச் சிறிது உதாசீனம் செய்கின்றான். அவனும் அவளை விரும்புகின்றான். ஆனால் அவனது அன்பை விட அவன் மீதான அவளது அன்பு அதிகம் என்பதில் அவனுக்கு ஒரு கர்வம். அதன் காரணமாகவே அவள் எதிர்பார்க்கும் அளவுக்கு அவனால் அவள் மேல் அன்பைச் சொரிய முடியவில்லை. இதற்கிடையில் அவனுக்கு வேலை மாற்றல் வரவே காதலர்கள் பிரிய வேண்டி வருகிறது. பிரிவு அவனுக்குத் தான் அவள் மேல் கொண்டுள்ள காதலின் தீவிரத்தை, ஆழத்தை உணர வைக்கின்றது. மீண்டும் சந்திக்க வருகின்றான். வந்தவன் ஒதுங்கிச் செல்லும் அனுலாவின் நடத்தை கண்டு திடுக்கிடுகின்றான். அதற்குக் காரணம் அவளது தந்தை சில்வா அவளை பியதாசா என்பவனுக்கு மணம் முடிக்க முடிவு செய்திருப்பதுதான். இவ்விதமாகச் செல்கிறது அனுலா என்னும் சிறுகதை.
சிறுகதை வெளியான கல்கி இதழை வாசிக்க - https://ia902303.us.archive.org/22/items/kalki1961-01-22/kalki1961-01-22.pdf
இணையக் காப்பகத்திலுள்ள கல்கியின் பக்கங்களில் எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் பெயரைச் சிறுகதை வெளியான பக்கங்களில் காண முடியவில்லை. பெயர் பக்கத்தின் அடிப்புறத்தில் இருந்திருக்க வேண்டும். இதழைப் பிடிஃப் ஆக்கிப் பதிவிட்டவர் தவறுதலாகப் பெயர் உள்ள பகுதியை வெட்டியிருக்க வேண்டுமென்று தெரிகின்றது.