அறிவியல் சார்ந்து உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, டைட்டானிக் விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆவி இப்பொழுதும் அப்பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளைப் பழிவாங்குவதாக சிலர் நம்புவதையும், அப்படியான சிந்தனைகள் தவறானவை என்பதை எப்படி அவர்களுக்குப் புரியவைப்பது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இதற்குக் காரணம் சென்ற வாரம் டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்வதற்காக சென்ற ஐவர் அடங்கிய குழு ஒன்று அவர்கள் சென்ற சிறிய நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் சிக்கியதால் மரணமடைந்து விட்டார்கள்.
சமீபத்தில் நடந்த ஒன்றுகூடல் ஒன்றின்போது, சிலருடன் உரையாடிக் கொண்டிருக்கையில், பல விடயங்களையும் பேசும் போது, இருவர் இந்தக் கருத்தை முன்வைத்து வாதித்தார்கள். தங்கள் உரையாடலுக்குச் சாதகமாக இப்பகுதியில் 1985 ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்டவர்களையும் சாட்சியாகக் கொண்டு வந்தார்கள். அவர்களில் முதியவர் ஒருவர், இது போன்ற மூடநம்பிக்கைகளால் கனடாவில் இருந்து வடஅத்திலாண்டிக் சமுத்திரத்தைக் கடந்து அந்தப் பக்கம் போகமாட்டேன் என்று முடிவெடுத்திருப்பதாகச் சொன்னதும் எனக்கு நினைவில் நிற்கிறது.
டைட்டானிக் உல்லாசக் கப்பல் பற்றிப் பலரும் அறிந்திருப்பார்கள். சினிமாப் படங்கள்கூட இந்தப் பெயரில் வெளிவந்தன. ஜேம்ஸ் கமரூனும் 1997 ஆம் ஆண்டு டைட்டானிக் என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்திருந்தார். படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, அவர் பலதடவை சிறிய நீர்மூழ்கியில் சென்று டைட்டானிக் மூழ்கிய அந்த இடத்தை நேரடியாகப் பார்த்திருக்கின்றார். டைட்டானிக் கப்பல் புதிதாகக் கட்டப்பட்டு, விபத்தில் சிக்காது என்று உறுதி அளிக்கப்பட்டதால் பல செல்வந்தர்கள் இந்தக் கப்பலின் முதற்பயணத்தில் பங்கு பற்றினார்கள். ஆனால் கனடாவின் நியூபவுண்லாந்தில் இருந்து சுமார் 435 மைல்கள் தெற்கே வட அத்திலான்டிக் கரையில் பனிப்பாறையில் மோதியதால் கப்பல் 13,000 அடி ஆழத்தில் 1912 ஆம் ஆண்டு மூழ்கிப் போனது. இந்த ஆழத்தில் தண்ணீரின் அழுத்தம் 6இ000 pளi ஆக இருந்தது. கப்பல் ஒருபோதும் மூழ்காது என்று கப்பல் கட்டியவர்கள் உறுதியளித்ததால், உயிர் தப்புவதற்கு வேண்டிய போதிய பாதுகாப்பு சாதனங்களும் கப்பலில் இருக்கவில்லை.
சென்ற ஞாயிற்றுக்கிழமை யூன் மாதம் 18 ஆம் திகதி டைட்டானிக் தேடலுக்காகச் சென்று, விபத்தில் சிக்கிய ‘கிராப் ஓஷன்கேற் ரைற்ரன்’ என்ற இந்த சிறிய நீர்மூழ்கிக் கப்பல் புறப்பட்டுச் சென்றபின் சுமார் இரண்டு மணிநேரங்களில் தொடர்பற்றுக் காணாமல் போயிருந்தது. ஒரு மினிவானளவு உள்ள இந்த சிறிய நீர்மூழ்கியில் ஆகக்கூடியது ஐவர்மட்டுமே பயணிக்கக்கூடியது. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆழ்கடல் சுழியோடியான போல் ஹென்றி நர்ஜோலே, பிரித்தானிய கோடீஸ்வரரான ஹமிஸ் ஹார்டிங், மற்றும் பிரித்தானியாவில் வசிக்கும் பாகிஸ்தான் செல்வந்தர்களான சாகடா டாவூட், அவரது மகனான 19 வயதான சுல்மான், மற்றும் நீர்மூழ்கிக்கப்பல் ஓட்டியான ஸ்ரொக்ரொன் ரஸ் ஆகியோரே இதில் பயணித்தனர்.
சென்ற வியாழக்கிழமை, 22 ஆம் திகதி விபத்தில் சிக்கிய நீர்மூழ்கியின் உடைந்த பாகங்களைத் தேடுதல் நடத்தியவர்கள் ஆழ்கடலில் கண்டு பிடித்தார்கள். டைட்டானிக் மூழ்கிய இடத்தில் இருந்து சுமார் 1600 அடி தூரத்தில் இதன் உடைந்த பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. 40 மணி நேரத்திற்கான உயிர்வளி மட்டுமே இதில் எஞ்சி இருந்ததாகத் தெரிகின்றது. பெரிய நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்ந்து ஒரு மாதம்வரை கடலுக்கு அடியில் நடமாடக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும், ஆனால் இதுபோன்ற சிறிய நீர்மூழ்கிகள் பத்துப் பன்னிரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் ஆழ்கடலில் தொடர்ந்து நிற்க முடியாது. இந்த விபத்திற்குக் காரணம் 'பேரழிவுமிக்க வெடிப்பு' (catastrophic implosion) என்று அறிவிக்கப் பட்டிருக்கின்றது. இத்தகைய நீர்மூழ்கியில் சின்னதாக ஒரு குறைபாடு இருந்தாலும் நீரின் அழுத்தம் காரணமாக ஆழ்கடலில் வெடித்துச் சிதறிப் போகலாம் என்று இந்த விபத்துப் பற்றி நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
ஓஷன்கேற் என்ற இந்த நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் இருந்து ஆய்வு நோக்கங்களுக்காக இதுவரை 60 பயணிகளை இந்த இடத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றது. ‘போலார் பிறின்ஸ்’ என்ற தாய்க் கப்பல்தான் ரைற்ரன் நீழ்மூழ்கியை வழிநடத்தியது. இக்கப்பலுடனான தொடர்புதான் துண்டிக்கப்பட்டது. இந்த துயர சம்பவத்தால், சென்யோன்ஸ் துறைமுகத்திற்கு இந்தத் தாய்க்கப்பல் இன்று திரும்பி வந்திருந்தது.
அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானிய நாட்டுத் தேடுதல் கப்பல்களுடன் கனடாவின் மூன்று கப்பல்களும் தேடுதலில் ஈடுபட்டன. இந்தத் தேடுதலில் 9 கப்பல்கள் நேரடியாக ஈடுபட்டிருந்தன. இதைவிட அமெரிக்க விமானங்களோடு கனடாவின் ரோயல் கனடியன் விமானப் படையைச் சேர்ந்த ஹேர்குலீஸ் சி-130 விமானமும், ஆழ்கடல் பொருட்களைக் கண்டு பிடிக்கும் அரோரா சிபி-140 விமானமும் தேடுதல் நடத்தின. பல நாடுகள் இணைந்து நடத்திய இந்தத் தேடுதலுக்குப் பல கோடி டொலர்கள் செலவாகின. மூழ்கிப்போன நீர்மூழ்கிக் கப்பல் பரீட்சார்த்தமாக பாவனைக்கு விடப்பட்டதே தவிர, பயணிகளின் பாவனைக்கு உரியதாகச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது இப்போதுதான் தெரிய வந்திருக்கின்றது.
சமீபத்தில் இதுபோன்ற நீர்மூழ்கி கப்பல் விபத்து ஒன்று 2020 ஆம் ஆண்டு யூலை மாதம் தென்கொரியாவில் நடந்தது. 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தோனேசியாவின் நீர்மூழ்கி ஒன்று ஆழ்கடலில் 2750 அடி ஆழத்தில் மூழ்கியதால் 53 கடற்படையினர் மரணித்தனர். 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்க நீர்மூழ்கி ஒன்று தென்சீனக்கடலில் விபத்துக்கு உள்ளானது. அதிஸ்டவசமாக இதில் யாரும் மரணிக்கவில்லை. 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஸ்யாவின் அணுசக்தியில் இயங்கிய நீர்மூழ்கி ஒன்று விபத்தில் சிக்கியபோது, 118 கடற்படையினர் மரணித்தது நினைவிருக்கலாம். இந்த சம்பவத்தைக் கருப்பொருளாகக் கொண்டு நான் எழுதிய ‘நீர்மூழ்கி நீரில்மூழ்கி’ என்ற குறுநாவலுக்குத்தான் ஆனந்தவிகடன் பவளவிழா போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. விண்வெளிப் பயணங்கள் போல ஆழ்கடல் பயணங்களும் ஆபத்து நிறைந்ததுதான்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.