என்னால் மறக்க முடியாத கல்லூரி 'அராலி இந்துக் கல்லூரி' . நான் அங்கு படித்ததில்லை, ஆனாலும் என் ஆழ்மனத்தில் அதற்கோரிடமுண்டு. காரணம் இங்குதான் என் அன்னையார் 'நவரத்தினம் டீச்சர்' (திருமதி மகேஸ்வரி நவரத்தினம்) 1972இலிருந்து எண்பதுகளில் ஓய்வு பெறும் வரையில் ஆசிரியையாகக் கற்பித்தவர். அதற்கு முன்னர் அவர் யாழ் இந்துக்கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, வவுனியா மகாவித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியையாகப் பணி புரிந்தவர். இங்குதான் என் தங்கைமார் இருவர், தம்பி ஆகியோர் படித்தனர். இவையே முக்கிய காரணங்கள். இங்கு நான் படிக்காவிட்டாலும் எந்நேரமும் இக்கல்லூரியைப்பற்றி வீட்டில் கதைத்துக்கொண்டிருப்பார்கள். அவற்றிலிருந்து இக்கல்லூரி பற்றி, ஆசிரியர்கள் பற்றியெல்லாம் அறிந்துகொண்டேன். கடந்த வெள்ளிக்கிழமை 7.7.2023 அன்று அராலி இந்துக் கல்லூரி தனது நூற்றாண்டைக் கொண்டாடியது. வாழ்த்துகள். அதன்பொருட்டு கல்லூரி வெளியிட்ட சிறப்பு மலரில் அராலி இந்துக்கல்லூரி பற்றிய எனது நனவிடைதோய்தற் குறிப்புமுள்ளது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
அராலி இந்துக் கல்லூரிக்கு இணையத்தளமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் சிறப்பு மலரினை வாசிப்பதற்குரிய வசதியுமுள்ளது. அங்கும் இக்குறிப்பினை வாசிக்கலாம். கல்லூரிக்கான இணையத்தள முகவரி - https://www.aralyhindu.com
விழா மலரில் 1970 -இன்று வரையில் அராலி இந்துக் கல்லூரியில் படிப்பித்த, படிப்பித்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்களின் பெயர்களை ஆவணப்படுத்தாதது ஏமாற்றத்தையளித்தது. அவர்களின் பெயர்ப்பட்டியலையும் நிச்சயம் இணைத்திருக்க வேண்டும். மலரில் தவறவிட்டதை அராலி இந்துக் கல்லூரியின் இணையத்தளத்தில் ஆவணப்படுத்தலாம்.
நூற்றாண்டு விழா மலரில் இடம் பெற்றுள்ள எனது நனவிடைதோய்தற் குறிப்பிது. இது நான் மலருக்கு அனுப்பிய கட்டுரையின் முழு வடிவம். மலரில் சில பகுதிகள் இடம் பெறத்தவறிவிட்டன.
மறக்க முடியாத அராலி இந்துக் கல்லூரி!
இந்தப் பள்ளிக்கூடத்தில் நான் படிக்கவில்லை. ஆனால் இந்தப் பள்ளிக்கூடம் என் வாழ்வின் ஒரு காலகட்டத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது. குறிப்பாக என் பதின்மவயதுப் பருவத்துடன் என்று கூறலாம். அதற்குக் காரணம் என் அம்மா. அம்மா ஓர் ஆசிரியை. திருமதி நவரத்தினம் டீச்சர் (திருமதி மகேஸ்வரி நவரத்தினம்) என்றால் எழுபதுகளில், எண்பதுகளில் அராலி இந்துக் கல்லூரியில் படித்தவர்களுக்கு நன்கு விளங்கும். தெரியும். அங்குதான் அவர் 1972இலிருந்து ஓய்வு பெறும் வரையில் படிப்பித்தார். அங்குதான் என் தங்கைமார் இருவர் மைதிலி , தேவகி மற்றும் சகோதரன் பாலமுரளி ஆகியோர் படித்தனர். அவர்களைப்பொறுத்தவரையில் அவர்களது பால்ய பருவம் அங்குதான் கழிந்தது. அவர்களுக்கும் அப்பருவத்து அழியாத கோல நினைவுகளைத் தரும் பாடசாலையாக அப்பாடசாலையும், ஊராக அராலி வடக்கும் நிச்சயமிருக்கும்.
அராலி இந்துக்கல்லூரியைப்பற்றிச் சிறிது நனவிடை தோய்ந்து பார்க்கின்றேன். இங்கு அம்மாவுடன் படிப்பித்த சக ஆசிரியர்கள் பற்றி அதிகம் அறிந்திருக்கின்றேன். ஒரு சிலருடன் வழியில் சந்திக்கையில் கதைத்துப் பழகியுமிருக்கின்றேன். மேலும் சிலரைப்பற்றி என் சகோதரர்கள் வாயிலாக அறிந்துமிருக்கின்றேன். அதனால் அவர்கள்தம் பெயர்கள் இன்னும் என் நினைவுகளில் ஆழப்பதிந்து கிடக்கின்றன. இவ்விதமாக நானறிந்த, என் நினைவில் நிற்கும் சில பெயர்கள் வருமாறு: செல்லையா டீச்சர், சந்திரா டீச்சர், பவானி டீச்சர், செல்வராசா மாஸ்ட்ர், அப்பச்சி மகாலிங்கம், சதாசிவம் மாஸ்டர், நெல்லைநாதன் மாஸ்டர், தர்மலிங்கம் மாஸ்டர். இவரகள் இன்னும் நினைவில் ஆழப்பதிந்து நிற்கின்றார்கள். இவர்களில் சிலருடன் நான் பழகவேயில்லை. இருந்தாலும் என் சகோதரர்கள் அவர்களைப்பற்றிய கூறிய அவர்கள் தம் உணர்வுகளின் அடிப்படையில் நினைவில் நிற்கின்றார்கள்.
எழுத்தாளர் அப்பச்சி மகாலிங்கம்
எழுத்தாளர் அப்பச்சி மகாலிங்கம் அவர்களைப்பற்றி அராலி இந்துக்கல்லூரி நிச்சயம் பெருமைப்படலாம் . இவர் அராலி இந்துக்கல்லூரி ஆசிரியராகவிருந்தபோது இவரிடம் கல்வி கற்றவர் என் சகோதரன் பாலமுரளி. தற்போது கடல்புத்திரன் என்னும் பெயரில் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருபவர். இவரது 'வெகுண்ட உள்ளங்கள்' நாவல் எண்பதுகள் , தமிழரின் ஆயுதபோராட்டம் தொடங்கியிருந்த காலத்திலிருந்த அராலியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதொரு நாவல். 'வேலிகள்'நாவலும் அராலியைக் கதைக்களனாகக் கொண்டதே. இவர் எப்பொழுதும் அப்பச்சி மகாலிங்கத்தைப்பெருமையுடன், அன்புடன் நினைவு கூர்வார். தனது கட்டுரையொன்றினை வாசித்து விட்டு நன்றாக எழுதுகிறாய். தொடர்ந்து எழுது என்று ஊக்குவித்தவர் என்பார். தனது 'வேலிகள்' கதைத்தொப்பில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:
"இந்த என் எழுத்து முயற்சிக்கும் சிறிய வரலாறு இருக்கிறது. முதலில் 6-9 வகுப்பு வரையில் எனக்கு தமிழ்ப்பாடம் கற்பித்த அப்பச்சி மகாலிங்கம் ஆசியரை குறிப்பிட்டேயாக வேண்டும். நான் எழுதுகிற கட்டுரைகளில் எழுத்துப்பிழைகள் இருந்தபோதும், அவற்றை பொறுமையுடன் படித்து எடுத்த விசயங்களையும், சம்பவங்களையும் பாராட்டியே வந்தார். ‘அ’ னாவையும் ‘சு’ னாவையும் கவனித்து எழுது. வித்தியாசமில்லாமல் எழுதுகிறாய் கவனமாகவிரு உன்னால் கொஞ்சமாவது எழுத முடியும் என்பார்".
அப்பச்சி மகாலிங்கம் அவர்களை நான் நேரில சந்தித்தில்லை. ஆனால் அவரது பத்திரிகைகளில் வெளியான எழுத்துகளூடு அறிந்தவன். கடற்றொழிலாளர்களை மையமாக வைத்து அவரது கதைகள் பல இருந்தன. அவரது நாவலொன்றும் வீரகேசரி பிரசுரமாகவும் வெளியானது. அவரது சிறுகதைகளில் 'கடல் அட்டைகள்' பற்றிய சிறுகதையொன்றைக் கடல்புத்திரன் அடிக்கடி சிலாகிப்பதை அவதானித்திருக்கின்றேன். ஈழநாடு பத்திரிகை நிறுவனம் தனது பத்தாவதாண்டு நிறைவையொட்டி நடத்திய இலக்கியப்போட்டிகளிலொன்றான சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற கதைகளில் ஒன்று அப்பச்சி மகாலிங்கத்தின் 'ஆறுதல் பரிசு'. இச்சிறுகதை பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பான 'கங்கு மட்டை'யிலும் இடம் பெற்றுள்ளது. நவாலிப்பகுதியில் வசித்து வந்தவர்.
அப்பச்சி மகாலிங்கம் அவர்களின் மகனான மகாலிங்கம் கெளரீஸ்வரன் என் முகநூல் நண்பர்களிலொருவர். அவர் அப்பச்சி மகாலிங்கம் பற்றி எனக்குத் தந்திருந்த தகவலினையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அதன் மூலம் அவரைப்பற்றி அவரது மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும்:
"மகாலிங்கம், அப்பச்சி யாழ்ப்பாணம், நவாலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்பச்சி; தாய் சிவக்கொழுந்து. இவர் நவாலி அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் மூதூர் பாடசாலையிலும் மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையிலும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். இவர் மாணவனாக இருக்கும் போதே வீரகேசரி மாணவர் பகுதியில் சில குட்டிக் கதைகளை எழுதியதுடன் இளஞாயிறு சஞ்சிகையில் ஆசிரியர் பொறுப்பை ஏற்று வரதன் என்ற புனைபெயரில் பல ஆக்கங்களை எழுதி வந்தார். விடத்தல் தீவு சிரேஷ்ட பாடசாலை, முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி, காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, அராலி இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகக் கடமையாற்றி வந்த இவர், பாலசுப்பிரமணிய வித்தியாசாலையில் 01.01.1991 இல் ஓய்வு பெறும் வரை தலைமை ஆசிரியராகக் கடமையாற்றி வந்தார். இவர் பல சிறுகதைகளையும் வானொலி நாடகங்களையும் மேடை நாடகங்களையும் படைத்துள்ளார். இவர் அந்திரான் முருகமூர்த்தி கோவில் நிருவாக சபையில் முக்கிய பொறுப்புக்களில் இருந்துள்ளார்."
செல்வராசா மாஸ்ட்ர்
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படுவார். கறுத்த 'லோங்ஸ்'ஸும், வெள்ளை சேர்ட்டுமாகா இவர் சைக்கிளில் செல்வதை அடிக்கடி கண்டிருக்கின்றேன். உயர்ந்த தோற்றம். என்னை வழியில் கண்டால் சிரித்துத் தலையாட்டிச் செல்வார். பஸ்ஸுக்காகக் காத்திருக்கையில் நிற்கும்போது கண்டால் சிறிது நேரம் நின்று விசாரித்து, கதைத்துவிட்டுச் செல்வார். என் தங்கைமார், சகோதரன் ஆகியோர் இவரிடம் கணிதம் படித்தவர்கள். இவர் சிறந்த கணித ஆசிரியரென்று அடிக்கடி கூறுவார்கள். அம்மா மீது மிகுந்த அன்பும், மதிப்பும் கொண்டவர்.அம்மாவும் இவர் மீது அதே மாதிரி அன்பும், மதிப்பும் கொண்டிருந்தார்.
சதாசிவம் மாஸ்டர்
இவர் வட்டுக்கோட்டைப் பக்கமிருந்து வருபவரென்று நினைவு. இவரது மகனொருவர் என்னுடன் யாழ் இந்துக் கல்லூரியில் சிறிது காலம் படித்ததாக நினைவு. பெயர் உடனடியாக நினைவுக்கு வரவில்லை. சிவகுமார் என்னும் பெயராக இருக்கக் கூடும். அதனால் சதாசிவம் மாஸ்டரும் நினைவுக்கு வருகின்றார்.
நெல்லைநாதன் மாஸ்டர்
இவருடனும் அதிகம் பழகியதில்லை. ஆனால் வழியில் கண்டால் டீச்சரின் மகனென்று சிரித்துத் தலையாட்டிச் செல்வார். வெள்ளை வேட்டி, நாஷனலுடன் , வட்டமான , செந்தழிப்பு மிக்க முகவாகு மிக்கவராக இவர் சைக்கிளில் செல்லும் தோற்றம் இன்னுமென் மனத்தில் பதிந்துள்ளது.
செல்லையா டீச்சர்
தற்போது முதிய நிலையில் 'டொரோண்டோ', கனடாவில் வசிக்கின்றார். பேராசிரியர் பாலன் செல்லையாவின் மனைவி. அம்மாவின் நல்ல சிநேகிதிகளிலொருவராக விளங்கியவர். அதனால் அடிக்கடி இவரைப்பற்றி வீட்டில் கதைப்பார்கள். அதன் மூலம் அறிந்துகொண்டேன்.
தர்மலிங்கம் மாஸ்டர்
உயர்ந்த தோற்றம். வெள்ளை வேட்டியும், சேர்ட்டுமாகக் கண்டிருக்கின்றேன். இவர் மலையகப்பகுதி அல்லது யாழ்ப்பாணத்துக்கு வெளியிலிருந்து வந்தவரென்று நினைவு. வீதியில் என்னைக் காணும்போதெல்லாம் டீச்சரின் மகனென்று சிரித்துத் தலையாட்டி, சில வேளைகளில் கதைத்துவிட்டும் செல்வார். சிரித்த முகத்துடன் எந்நேரமும் இவரைக் கண்டிருக்கின்றேன். இவர் ஒரு நல்ல நாடக நடிகர் என்றும் அறிந்திருக்கின்றேன்.
அம்மாவின் மாணவர்கள்
அப்பா இறந்தது 1977இல். அப்போது அம்மாவின் மாணவர்களான கிச்சான், சின்னப்பர் ஆகியோர் வந்திருந்து மிகவும் துணையாக, உதவியாக இருந்தார்கள். மறக்க முடியாது. அப்போதுதான் அவர்களை நானறிந்தேன்.
இவர்களைப்பற்றி இங்கு நான் முக்கியமாக எடுத்துரைத்ததற்குக் காரணங்கள் உள. அராலி இந்துக் கல்லூரி என்றதும் இவர்கள் அனைவரும் என் நினைவுகளில் தோன்றுவார்கள். அதனால் அராலி இந்துக் கல்லூரியை நினைவுபடுத்தும் ஆளுமைகள் இவர்கள். இன்னுமொரு காரணம் இவர்களைப் பற்றியெல்லாம் இன்றுள்ள தலைமுறை அறிந்துகொள்ளட்டுமென்பது. அடுத்த காரணம் அன்று இவர்களை அறிந்திருந்த பலருக்கும் நினைவூட்டுவதென்பது.
இச்சமயத்தில் இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். எனது சகோதரி முனைவர் மைதிலி ரவீந்திரன் தற்போது இங்கிலாந்தில் வசிக்கின்றார். இராசாயனத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். பிரபல மருந்து நிறுவனங்கள் பலவற்றில் உயர் பதவிகள் வகித்தவர். தற்போது மருந்துகளைப் பாவனைக்கு விட முன்னர் அவற்றை பரிசோதித்து, அனுமதிக்கும் அத்துறையில் அறிவியல் அறிஞராகப் பணியாற்றுகின்றார். அடுத்தவர் மருத்துவர் தேவகி சிவானந். இவர்கள் இன்றுள்ள நிலைக்கும் அடித்தளமிட்ட பாடசாலை அராலி இந்துக் கல்லூரி. எப்பொழுதும் இவர்கள் அராலி இந்துக் கல்லூரியை அன்புடன், மதிப்புடன் நினைவு கூர்பவர்கள். என் சகோதரன் பாலமுரளி (எழுத்தாளர் கடல்புத்திரன்) எழுத்தாளனாக உருப்பெறுவதற்கு முக்கிய காரணங்களிலொன்று அராலி இந்துக் கல்லூரி.
அராலி இந்துக் கல்லூரி பற்றிய எனது நனவிடைதோய்தல் எனக்கு அராலி இந்துக் கல்லூரி பற்றி மட்டுமல்ல, அங்கு படிப்பித்த ஆசிரியர்கள் பற்றி, அம்மா அங்கு படிப்பித்த காலம் பற்றி, என் சகோதரர்கள் அங்கு படித்த காலம் பற்றியெனப் பல்வேறு நினைவுகளைச் சிறகடிக்க வைத்து விட்டது. அவை என் வாழ்வின் அழியாத கோலங்கள் எனில் மிகையல்ல.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.