- 2.7.2023 ஈழநாடு வாரமலரில் வெளியான சிறுகதை. -
"இடிக்கும் கேளிர்! நுங்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று, மற்றில்ல,
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்,
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே"
- வெள்ளிவீதியார் ((குறுந்தொகை) -
1.
இருண்டு விட்டிருந்த டொராண்டோ மாநகரத்து இரவொன்றில் தன் அபார்ட்மென்டின் பலகணியில் வந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே விரிந்திருந்த விண்ணை நோக்கினான் கேசவன். நகரத்து இரவு வான் ஒரு சில நட்சத்திரங்களுடன் இருண்டிருந்தாலும், அன்று பெணர்ணமி நாளென்பதால் தண்ணொளியில் இரவு குளித்துக்கொண்டிருந்தது. அவனுக்குச் சிறு வயதிலிருந்தே நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானை இரசிப்பதென்றால் மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகளிலொன்று. இரவு வானின் விரிவும், நட்சத்திரக் கன்னியர்களின் கெக்களிப்பும் எப்பொழுதும் அவனுக்குப் பிரமிப்புடன் இருப்பு பற்றிய சிந்தனைகளையும் ஏற்படுத்தின. எவ்வளவு நேரமென்றாலும் அவனால் இரவு வானை இரசித்துக்கொண்டேயிருக்க முடியும்.
வனங்களும், குளங்கும் நிறைந்த வன்னி மண்ணில் வளர்ந்தவன் அவன். எத்தனை புள்ளினங்கள்! எத்தனை மிருகங்கள்! எத்தனை வகை வகையான விருட்சங்கள்! வன்னியில் அவனை மிகவும் கவர்ந்தவை செந்தாமை, வெண்டாமரைகள் பூத்துக்குலுங்கும் குளங்களும், புள்ளினங்களும் , பல்வகை மரங்களுமே. வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கிச் செல்லும் வீதியில் அமைந்திருந்தது குருமண்காடு. அங்குதான் அவன் வளர்ந்தான். குருமண்காடு வனப்பிரதேசமாகவிருந்த காலகட்டத்தில் அவனது வாழ்க்கை அங்கு கழிந்திருந்தது. அதனால் அவனுக்கு எப்பொழுதும் குருமண்காடும், அக்காலகட்ட நினைவுகளும் அழியாத கோலங்கள்.
இரவு வானும், சுடர்களும் அவனுக்கு மீண்டும் வன்னியில் கழிந்த பால்ய பருவ நினைவுகளில் நனவிடை தோய வைத்து விட்டன.
கேசவன் பெரிய குடிகாரன் அல்லன். ஆனால் மருந்து போல் ஒரு பெக் ரெமி பிரண்டியை விழுங்கிவிட்டு, ஏற்படும் மெல்லிய கணகணப்பில் இவ்விதமாக விரிந்திருக்கும் இரவு வானை இரசிப்பதில் அவனுக்கு எப்பொழுதுமே பெருவிருப்புண்டு. தண்ணொளி பரப்பும் முழுநிலாவைக் கண்டதும் அவனுக்கு பானுமதியின் நினைவும் கூட நினைவிலெழுந்து அவனை ஆட்டி வைக்கும். பானுமதியின் நினைவும் முழுநிலவின் தண்ணொளி தரும் இதமான உணர்வினைத்தரும்.
பானுமதி !அவனது இளம் வயதுத் தோழி. அவன் தன் பதின்ம வயதுகளில் பழகிய ஒரேயொரு பெண் அவள் மட்டும்தான். அவன் தன் பல்கலைக்கழகப் புகுமுகு வகுப்பில் கல்வி பயின்று கொண்டிருந்தபோது அவன் கணிதப்பாடத்துக்கு மட்டும் அதன் மீட்டல் வகுப்புக்காக டியூசன் எடுத்தான். அந்த மீட்டல் வகுப்பில் அவனுடன் படிக்க வந்த ஒரேயொரு பெண் அவள் மட்டுமே. அவளது வட்ட முகமும், காந்தக் கண்களும், இரட்டைப் பின்னல்களும், நெஞ்சை மயக்கும் புன்னகையும் அவனது பதின்ம வயதுகளில் அவனை ஆட்டிப்படைத்தன.
இப்பொழுது நினைத்தாலும் அவனது நினைவுகளில் யாழ்ப்பாணத்தின் அதிகாலைகள் நினைவிலெழுந்தன. அதிகாலை ஐந்து மணிக்கு டியூசன் வகுப்பு ஆரம்பமாகிவிடும். சுந்தரம் வாத்தியார் உயர்தரக் கணித்தத்தில் மிகச்சிறந்த டியூசன் ஆசிரியர்களிலொருவர். அவன் வகுப்புக்குச் செல்லும்போது புலர்ந்தும் புலராத மெல்லிருளில் யாழ்ப்பாணம் விழிக்கத்தொடங்கியிருக்கும். பெருமாள் கோயிலிருந்து ஒலிக்கும் மணியோசை காற்றில் மெல்லக் கலந்து வந்து காதுகளில் நுழையும்.
அவன் வகுப்புக்குச் சைக்கிளில் சென்று கொண்டிருக்கையில் பல சமயங்களில் அவளும் மார்பில் இரட்டைப்பின்னல்கள் புரள, சாந்துப்பொட்டு நெற்றியில் துலங்க, மார்புறப் புத்தகங்களை அணைத்தபடி, நிலம் பார்த்து நடந்து வந்துகொண்டிருப்பாள். சில சமயங்களில் அவள் நேரத்துடன் வகுப்புக்கு வந்திருப்பாள். அச்சமயங்களெல்லாம் பூட்டப்பட்டிருக்கும் வெளிக்கதவை அவள் வந்து திறந்து விடுவாள். அவ்விதம் திறந்து விடுகையில் அவனைப்பார்த்து ஒருகணம் புன்னகையைத் தவழ விட்டுவிட்டுச் செல்வாள். அவன் அதில் தன்னையிழந்து அன்று முழுவதும் அந்நினைவிலேயே மூழ்கிக் கிடப்பான்.
வகுப்பில் அவன் ஏதாவது வேடிக்கையாக வாத்தியருடன் பகடி விட்டால், எல்லோருடனும் சேர்ந்து அவளும் அழகாகச் சிரிப்பாள். அந்தச் சிரிப்புக்காகவே அவன் பல தடவைகள் வாத்தியாருடன் பகடி விடுவான்.
பதின்ம வயதுகளில் முதன் முறையாக அவனது வாழ்க்கையில் பெண்ணொருத்தியின் மீதான காதல் உணர்வுகளை அவன் உணர்ந்தது அவள் மூலமாகத்தான். இரவும் பகலும் அவனை அவள் மீதான காதல் உணர்வுகள் வாட்டின; வதக்கின. அக்காலகட்டத்தில் வெறி பிடித்து புத்தகங்களை வாசிக்கும் அவனுக்குப் பிடித்த சங்கப்பாடலொன்றிருந்தது. வெள்ளி வீதியார் எழுதிய பாடல். காதல் நோயை அற்புதமாக அவரைப்போல் வேறு யாரும் விபரித்திருக்கவில்லை என்று அவனுக்குப் பட்டது. கனலும் பாறையின் மேலுள்ள வெண்ணெய்யை உருகாமல் பாதுகாக்க வேண்டிய கைகளற்ற ஊமையொருவன் தன் கண்களால் வெண்ணெய்யை உருகாமல் பாதுகாக்க முடிவது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினமானது காதல் நோய். 'கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலக் கடினமானது காதல் நோய் என்று அக்கவிதையில் வெள்ளிவீதியார் விபரித்திருப்பார். அவ்விதமாகத்தான் அன்று அவனையும் அவள் மீதான காதல் உணர்வுகளும் ஆட்டிப்படைத்தன.
இரவுகளில் ஊர் உறங்கும் சமயங்களில் அவன் இந்திய வானொலியில் ஒலிக்கும் நெஞ்சில் நிறைந்தவற்றைக் கேட்கும் நேயர் விருப்பப் பாடல்களில் மூழ்கிக் கிடப்பான். சில சமயங்களில் அவனது உணர்வுகளை அறியாது ஆனந்தமாக உறங்கும் ஊர் மேல் அவனுக்குச் சிறிது ஆத்திரமாகவுமிருக்கும். சுழல் காற்றின் அசைவு அதிகமாகி நெஞ்சை வருத்தும் சமயங்களில் அவனது 'உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்' பற்றி அவன் அச்சமயங்களில் சிறிது ஆத்திரமும் அடைந்ததுண்டு.
மீண்டுமொரு முறை ஒரு மிடறை உள்ளே தள்ளினான். நினைவுகள் அழியாத கோலங்களாகத் தொடர்ந்தன.
அவள் மீதான அவனது காதல் உணர்வுகள் அவனை ஆட்டிப்படைத்தன. ஒரு நாள் அவற்றைப்பொறுக்கமுடியாமல் அவளுக்கொரு கடிதம் எழுதிக்கொடுத்தான். காதல் கடிதம். ஆரம்பத்தில் அவள் அதற்குப் பதிலளிக்காமல் அவனை அலைக்கழித்தாள். பின்னர் ஒரு மாதிரி அவனுக்குச் சாதகமாகப் பதிலளித்தாள்.
இந்தச் சமயத்தில் அவனுக்குப் பேராதனை பல்கலைகழகத்துக்கு பொறியியல்பீடத்துக்கு அனுமதி கிடைத்தது. படிப்பை முடித்து வேலையில் சேர்ந்தபொழுதுதான் இலங்கைப் பிரச்சினையை உபகண்டப் பிரச்சினையாக, உலகப்பிரச்சினையாக மாற்றிய 83 கறுப்பு ஜூலைக் கலவரம் வெடித்தது. கலவரத்துக்குள் சிக்கி ஊர் திரும்பியவனை அம்மா தன் கனடா அக்காவின் துணையுடன் உடனடியாகவே கனடா அனுப்பி விட்டார். இளைஞர்களை இலங்கைப்படையினர் வேட்டையாடிக்கொண்டிருந்த காலகட்டம். அவனால் பானுமதியுடன் கூடத் தொடர்பு கொள்ளமுடியாத சூழல். வெளிநாடு சென்றதும் தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் அதற்குள் எவ்வளவோ நடந்து முடிந்து போய்விட்டன. இடையில் கனடா வருவதற்குள் ஐரோப்பா, அமெரிக்கா என்று சட்டபூர்வமற்ற அகதியாக அலைந்து திரிந்து கனடா வந்தவனுக்குக் கனடாவிலும் உரிய சட்டபூர்வ அந்தஸ்து கிடைக்க நான்கு வருடங்களாகி விட்டன. இதற்கிடையில் பானுமதிக்குத் திருமணம் செய்து வெளிநாடு எங்கோ அனுப்பிவிட்டதாகக் கேள்விப்பட்டிருந்தான்.
நாட்டுச்சூழல் அவனது கனவுகளையெல்லாம் சிதைத்து விட்டது. நாட்டில் படித்துப்பட்டம் பெற்று, விரும்பியவளைத் திருமணம் செய்து நல்லதொரு வாழ்க்கை வாழவேண்டுமென்று விரும்பியிருந்தான். இன்று அவனை வாழ்க்கைச் சுழல் எங்கெங்கோ தூக்கி எறிந்து விட்டிருக்கின்றது. புதிய இடத்திலும் பட்டத்துக்குரிய வேலை கிடைக்கவில்லை. கனடா அனுபவம் கேட்டார்கள். கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டு வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கின்றது. தன் படிப்புக்குரிய அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் நேரம் கிடைக்காமல், உரிய வேலைகள் கிடைக்காமல் உணவகங்களில் வேலை, பாதுகாப்பு அதிகாரியென்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. இடையில் நாளொன்றில் இரண்டு வேலைகளுக்குக் குறையாமல் செய்து வீட்டாரை ஸ்பான்சர் செய்து கூப்பிட மேலும் மூன்று வருடங்கள் கழிந்து விட்டன. எட்டு வருடங்கள் எவ்வளவு விரைவாகச் சென்று விட்டன. இருந்த வரையில் அம்மாவும் அவனுக்குத் திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்டு முடியாமல் போய்ச் சேர்ந்து விட்டா.
இதற்கிடையில் தற்செயலாக அவன் மீண்டும் பானுமதியை டொராண்டோவில் சந்தித்தான். அவனைப்போல் அவளும் தீவிர வாசிப்பு மிக்க ஒருத்தி. டொரான்டோ நூலகக்கிளையொன்றில் சந்தித்தான். நடுத்தர வயதில் பூசி , மெழுகி அழகாகவிருந்தாள். அவன் இன்னும் திருமணம் ஏதும் செய்யாமல் இருந்தது அவளை சிறிது வருத்தியது. திருமணம் ஏன் செய்யக்கூடாது? விரைவில் செய்யும்படி வற்புறுத்திவிட்டுத்தான் சென்றாள். இருந்தாலும் அவன் மீது அவளுக்குச் சிறிது கோபமிருந்தது. எதற்காக அவன் அவளுடனான தொடர்புகளையெல்லாம் துண்டித்திருந்தான் என்று கேட்டாள். கலவரமும், அதைத்தொடர்ந்து அகதியாக அலைந்து திரிந்ததும் அவளுடன் தொடர்புகொள்ள முடியாதவாறு நாட்டுச் சூழலிருந்ததும்தான் காரணங்கள் என்று விளக்கினான். அவளும் நாட்டின் போர்ச்சூழல் காரணமாக அடிக்கடி இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்தாள். அதுவுமொரு காரணமென்றான். அவன் எப்படியாவது தன்னுடன் ,தொடர்புகொள்வானெறு அவளும் காத்திருந்தாள்.. ஆனால் எத்தனை வருடங்கள் காத்திருப்பது? கடைசியில் வீட்டார் நிர்ப்பந்தத்தினை மீறமுடியவில்லை.இன்று அவள் குடும்பம், குழந்தைகளென்று திருப்தியாகத்தான் வாழ்கின்றாள்.
அவனுக்கு ஆச்சரியமாகவிருந்தது. அவளை மீண்டும் சந்தித்ததும் அவள் தனக்குக் கிடைக்காமல் வெகுதூரம் சென்று விட்டாளென்றபோதும் அவள் தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஏமாற்ற உணர்வேதும் அவனுக்கு ஏற்படவில்லை. அவள் நன்றாக வாழ்கின்றாள் என்பது உண்மையிலேயே அவனுக்கு ஒருவிதத் திருப்தியைத்தான் தந்தது. அவள் எப்பொழுதும் அவ்விதமே நன்றாக வாழவேண்டுமென்றுதான் அவனது மனம் விரும்பியது. அவள்தான் அவனது நிலைகண்டு சிறிது வருந்தினாள். உண்மைக்காதல் எப்பொழுதுமே எங்கிருந்தாலும் வாழத்தான் வாழ்த்தும். அதே சமயம் அவளை மீண்டும் சந்தித்ததும் அவனுக்கு ஒரு வித நிம்மதியைத்தந்தது. அதுவரையில் அவள் பற்றிய தகவல்கள் எவையுமற்று அவள் எப்படியிருக்கிறாளோ? உயிருடன் இன்னும் இருக்கிறாளா? போர்ச்சூழலால் ஏதாவது பாதிப்புக்குள்ளாகினாளா? என்றெல்லாம் பல்வேறு கேள்விகளால் அடிபட்டுப்போயிருந்த மனத்துக்கு அவளது மீள்வருகையும், தற்போதைய நிலையும் ஆறுதலைத்தந்தன.
2.
இரவுகளில் இவ்விதமே பல்கணியில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி இரவு வானைப் பார்த்து வியப்பதிலும் , சிந்திப்பதிலும்தான் எவ்வளவு இனிமை! இவ்விதமான சமயங்களில் அவ்வப்போது அவனது அபிமானக் கவி பாரதியின் கவிதை வரிகளை, வசன கவிதை வரிகளை நினைவு கூர்வான். சமயம் கிடைத்தால் அவற்றை வாசிப்பான். பாரதியின் சொற்களின் புலமையும், தெளிவும், தெளிந்த அறிவும் எப்பொழுதும் அவனை வியக்க வைப்பன. காதலை, இயற்கையைக் இருப்பை, அகிலத்தையென்று அவன் பாடாத விடயங்கள் எவையுமுண்டோ! பாரதியின் கவிதைப்புத்தகமொன்று போதும் வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கு என்பது அவனது திடமான நம்பிக்கை. சோர்ந்திருக்குமுள்ளத்துக்குப் புத்துணர்ச்சியைத்தருவது அவனது எழுத்துகள். தேடல் மிக்க உள்ளங்களுக்கு மருந்தாக இருப்பவை அவனது சிந்தனைகள்.
விரிந்திருக்கும் வானத்தையும் ஆங்காங்கே தென்படும் நட்சத்திரங்களையும் காண்கையில் ஏற்படும் மகிழ்ச்சியுடன் கூடவே அவனுக்குச் சிறுவயதிலிருந்தே மிகவும் பிடித்த குழந்தைப்பாடலான 'ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்' நினைவுக்கு வந்தது.. அதில் அவனுக்கு மிகவும் பிடித்த வரி 'Up above the world so high'- அங்கே மேலே உலகம் மிக உயரத்திலுள்ளது. கவித்துவம் மிக்க அற்புதமான வரிகள். வானத்தைப்பார்த்தான். அங்கே எவ்வளவு தொலைவில் , உயரத்தில் உலகம் விரிந்து கிடக்கின்றது! அந்த வார்த்தையை எண்ணுகையில், சொல்கையில் நெஞ்சில் இன்பம் கொப்பளிக்கிறதே. அங்கே மேலே அந்த உலகத்தில் யாரெல்லாம் இருக்கிறார்களோ?
அவனது சிந்தனையில் தோன்றிய அங்கே இருக்கக் கூடிய உயிரினம் பற்றிய எண்ணங்களே எவ்வளவு இன்பத்தைத்தருகின்றன. எப்பொழுதுமே இவ்வரி அவனுக்கு எங்கோ இப்பிரபஞ்சத்திலெங்கோ இருக்கக் கூடிய உயிரினம் பற்றிய எண்ணங்களை அவனுக்கு எழுப்புவது வழக்கம். இப்போதும் அவ்விதமே அவ்வுயிர் பற்றிய சிந்தனைகள் எழுகின்றன. கண்களை மூடிக்கொண்டு சிந்தனையில் ஆழ்கின்றான்.
நண்பா!
உன்னை நான் பார்த்ததில்லை.
பார்க்கப் போவதுமில்லை.
உனக்கும் எனக்குமிடையிலோ
ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.
'காலத்தின் மாய' வேடங்கள்.
ஆயின் நான் மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
மனந்தளர்ந்திடவில்லை.
நிச்சயமாய் நானுனை நம்புகின்றேன்.
எங்கேனுமோரிடத்தில்
நீ நிச்சயம் வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
ஆம்!
வாழ்ந்துகொண்டு தானிருக்கின்றாய்.
3.
பானுமதி பற்றிய நினைவுகள் ஒன்றை அவனுக்குப் புரிய வைத்தன. வைக்கின்றன. வாழ்க்கை சமூக, அரசியல் சூழல்களால் சின்னாபின்னமாக்கப்படலாம். எங்கோ தூக்கியெறியப்படலாம் அவனைது வாழ்க்கையைப்போல. அது ஒரு நாள் அவனை இப்பூமிப்பந்தின் எங்கோ ஒரு மூலைக்கு அவனது வேரிலிருந்து அறுத்துத் தூக்கியெறிந்து விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்! கனவுகள், திட்டங்கள் எவ்விதம் சிதைக்கப்பட்டன. ஆனால் மானுடன் அவன் தளர்ந்தானா? தளரவில்லையே. இருப்பை எவ்விதமென்றாலும் எதிர்கொள்ளும் பக்குவத்தையுமல்லவா காலம் அவனுக்குத் தந்திருக்கின்றது.
அவன் இப்பொழுதெல்லாம் நடந்துவிட்ட எவற்றுக்காகவும் மனம் வருந்துவதில்லை. அவ்வனுபவங்கள் தந்த இருப்பு பற்றிய தெளிவும், அறிவும் அவனுக்கு இன்பமளித்தன. அவற்றுக்காகவே அவனது மனம் நடந்தவற்றையெல்லாம் இன்பத்துடன் ஏற்றுக்கொண்டு இருப்பில் நடைபோடத்தொடங்கிவிட்டது.
இவ்வளவுக்கும் மத்தியில் ஒன்று மட்டும் அவனுக்குத் தெளிவாகப்புரிந்தது. அது அவன் பானுமதிமேல் கொண்ட காதல். பதின்ம் வயதுகளில் எவ்விதம் அவன் அவள் மேல் உள்ளமிழந்து வாடி வதங்கினானோ அவ்விதமே இந்நடுத்தவர வயதிலும் அவனுள்ளம் பானுமதியையெண்ணித்துடிக்கிறது. வாடுகிறது. வதங்குகின்றது. ஆனால் இப்போது அவ்விதமான தவிப்புடன், துடிப்புடன் மனம் தெளிவாகவுமிருக்கிறது. அவளது வாழ்வு நன்றாக இருக்கவேண்டுமென்றும் கூடவே வாழ்த்துகின்றது. இருந்தும் அன்று எழுந்த காதல் உணர்வுகள் இன்னும் அதே வீரியத்துடன் பொங்கியெழுந்துகொண்டுதானுள்ளன. காதல் நோயால் பீடிக்கப்பட்ட நெஞ்சை அவனால் ஒருபோதுமே அந்நோயிலிருந்து மீட்டெடுக்கவே முடியவில்லை.
எங்கோ தொலைவில் இருக்கும் சாத்தியத்தியமுள்ள அந்த நண்பனை நோக்கி அவன் கூறினான்:
நண்பனே!
உன்னிடமொரு கேள்வி. உணர்வுகள்
உனக்குமுண்டா? காதலுணர்வுகள்
உனக்குமுண்டா?
கதிரவனின் வெம்மையினால் கனலும்
கற்பாறை வெண்ணெய்யைக் காப்பதற்கு
கைகளற்ற ஊமையனொருவன் தன்
கண்களால் முயன்றால் முடிவதுண்டா?
அதுபோல் நான் என் காதலை
அழிப்பதற்கு முடியவில்லையே.
உருகிய வெண்ணெய்யாக
நானும் முயற்சியும் தோல்வியுறுகிறதே.
நண்பா! உன்னால் அந்நோயை
நீக்க முடியுமா?முடிந்தால் உதவு!
இவ்வயதிலும் என்னால் அவள் மேலான உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லையே. ஏன்? எதற்கு? அவள் நல்வாழ்வை வேண்டும் மனத்தால் ஏன் அவளை மறக்க முடியவில்லை. நண்பா! உனக்குத் தெரிந்தால் கூறு!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.