உழைப்பாளர் தினத்தில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 'சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி' பாடலைப் பகிர்ந்துகொள்கின்றேன் - https://www.youtube.com/watch?v=TyYEYFTuec0
பாமர மக்களின் பேச்சுத்தமிழில் உயிரோட்டத்துடன் எழுதப்பட்டுள்ள கவிதை. எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் இசையில், பானுமதி , டி.எம்.எஸ் குரலில் , எம்.ஜி.ஆர் & பானுமதி நடிப்பில் ஒலிக்கும் பாடல். கேள்வியும், பதிலுமாக ஒலிக்கும் பாடலின் கருத்து உலகில் உழைப்பாளர் நிலையினை எடுத்துக் கூறுவதுடன் நின்று விடாது அவர்களுக்கு எதிர்காலத்தில் மிகுந்த நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது. அதுவே இப்பாடலின் சிறப்பு.
அவள் கூறுகின்றாள் 'காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்' என்கின்றான். அதற்குப் பதிலளிக்கும் அவனோ 'இப்போ காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னேவ் என்று நம்பிக்கையூட்டுகின்றான். அத்துடன் மேலும்
'மண்ணைப் பொளந்து சொரங்கம் வெச்சு ,
பொன்னை எடுக்க கனிகள் வெட்டி
மதிலு வெச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
மதிலு வெச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
வழி காட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும்
ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்
கிட்ட நெருங்குது நேரம் ' என்றும் கூறுவான்.
பதிலுக்கு அவளோ
'மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே பசி
வந்திடக் காரணம் என்ன மச்சான்?' என்று கேட்கின்றாள். அதற்கு அவனோ
'அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி' என்று தெளிவாகப் பதிலுரைக்கின்றான்.
பதிலுக்கு அவள்
'பஞ்சப் பரம்பரை வாழ்வதற்கு இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான்?" என்று மீண்டும் கேட்கின்றாள்.
அதற்கு அவனோ
'தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி' என்கின்றான்.
இவ்விதமாக அவனுக்கும் அவளுக்குமிடையிலான உரையாடல் மூலம் தொழிலாளர் நிலையினை எடுத்துக்கூறி, அதற்கான காரணங்களை எளிமையாக எடுத்துக்கூறுவதுடன் நின்று விடாது தொழிலாளர்களின் நிலை மாறும் என்று நம்பிக்கையூட்டுகின்றார் கவிஞர். பட்டுக்கோட்டையாரின் மிகச்சிறந்த பாடல்களிலொன்று. பாடலின் இறுதி வரிகளான
'நானே போடப்போறேன் சட்டம் பொதுவில்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்'
என்னும் வரிகள் இப்பாடல் இடம் பெற்றுள்ள 'நாடோடி மன்னன்' திரைப்பட நாயகன் எம்ஜிஆரின் நிஜ வாழ்க்கையில் தீர்க்கதரிசனம் மிக்க வரிகளாக அமைந்து விட்டன என்பது வரலாறு.
https://www.youtube.com/watch?v=TyYEYFTuec0
சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
சும்மா கெடந்த நெலத்தக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரைய ஒசத்திக் கட்டி
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டு
தகந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு.
வரப்பும் உள்ளே மறைஞ்சிருக்கு.
நெல்லு வெளைஞ்சிருக்கு வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு அட
காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம்.
கையுங் காலுந்தானே மிச்சம்.
காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம்.
கையுங் காலுந்தானே மிச்சம்.
இப்போ காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு
காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே.
காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு
காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே.
மண்ணைப் பொளந்து சொரங்கம் வெச்சு
பொன்னை எடுக்க கனிகள் வெட்டி
மண்ணைப் பொளந்து சொரங்கம் வெச்சு
பொன்னை எடுக்க கனிகள் வெட்டி
மதிலு வெச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
மதிலு வெச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
வழி காட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் ரொம்ப
கிட்ட நெருங்குது நேரம் கிட்ட நெருங்குது நேரம்.
அவர் பட்ட துயரினிமாறும் ரொம்ப
கிட்ட நெருங்குது நேரம் கிட்ட நெருங்குது நேரம்.
அட காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம்.
கையுங் காலுந்தானே மிச்சம்.
காடு வெளையட்டும் பொண்ணே நமக்கு
காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே.
மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே பசி
வந்திடக் காரணம் என்ன மச்சான்?
அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையட.
பஞ்சப் பரம்பரை வாழ்வதற்கு இனி
பண்ண வேண்டியது என்ன மச்சான?
தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது.
சிந்திச்சு முன்னேற வேணுமடி.
வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும்
நீடிக்கச் செய்வது மோசமன்றோ?
இருள் முடிக் கிடந்த மனமும் வெளுத்தது.
சேரிக்கும் இன்பம் திரும்புமடி.
இனி சேரிக்கும் இன்பம் திரும்புமடி.
அட காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்கு
கையுங் காலுந்தானே மிச்சம்.
கையுங் காலுந்தானே மிச்சம்.
நானே போடப்போறேன் சட்டம் பொதுவில்
நன்மை புரிந்திடும் திட்டம்.
நாடு நலம் பெறும் திட்டம்.