- எழுநா இதழில் வெளியான கட்டுரை -
பகுதி 1 : பண்டைத் தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்
பண்டைய தமிழர்கள் தரைவழியாகவும் கடல்வழியாகவும் பாரதத்தின் ஏனைய நகரங்களுடன் மட்டுமல்ல கடல்கடந்தும் ஏனைய நாடுகளுடனெல்லாம் வணிகம் செய்து சிறப்புற்று விளங்கியதை வரலாறு கூறும். யவனர்கள், அரேபியர்களெல்லாம் கடல்கடந்து தமிழகம் வந்து வர்த்தகம் செய்ததை வரலாற்றறிஞர்களின் பிரயாணக் குறிப்புகள், பண்டையத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தகவல்கள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களெல்லாம் புலப்படுத்தும். கிழக்கிந்தியத் தீவுகள் கூட்டத்தை உள்ளடக்கிய சாவகம் (இன்றைய இந்தோனேஷியா), ஈழம், காழகம் (பர்மா) போன்ற நாடுகளுடனெல்லாம் தமிழர்களின் வர்த்தகம் கொடி கட்டிப் பறந்தது.
யவனர்கள், அரேபியர்களெல்லாம் தமிழகத்துடன் வியாபாரம் செய்து வந்தார்கள். இவர்களைப் பற்றி ‘பயனற வறியா யவனர் இருக்கையும் / கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள் / கலந்தினி துறையும் இலங்குநீர் வரைப்பும்’ எனவும், ‘மொழி பெயர் தேத்தோர் ஒழியா விளக்கம்’ எனவும் சிலம்பும், ‘மொழிபல பெருகிய பழிநீர் தேஎத்துப் / புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் / முட்டாச் சிறப்பிற் பட்டினம்’ எனப் பட்டினப்பாலையும் கூறும். கிரேக்கர்களும், ரோமர்களும் யவனர்களென சிறப்புப் பெயர் பெற்றிருந்தார்களென மயிலை சீனி. வேங்கடசாமி கூறுவார். வணிகத்தின் பொருட்டுத் தமிழகம் வந்த யவனர்கள் வணிகத்தில் மட்டுமின்றி வேறு சில தொழில்களைச் செய்ததையும் அறிய முடிகிறது. மதுரையின் கொற்கைத் துறைமுகம் தமிழ் வாணிபத்தில் சிறந்து விளங்கியது. கோட்டை மதில்களுடன் விளங்கிய மதுரையின் கோட்டை வாயில்களை யவன வீரர்கள் காத்து நின்றதை ‘கடிமதில் வாயில் காவலிற் சிறந்து / அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு’ எனச் சிலம்பும், ‘மந்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை / மெய்ப்பை புக்கு வெருவருந் தோற்றத்து / வலிபுணரி யாக்கை வன்கண் யவனர்’ என முல்லைப் பாட்டும் கூறும். இதுதவிர யவனர்கள் தச்சுத் தொழிலிலும் சிறந்து விளங்கியதை மணிமேகலையின் ‘யவனத் தச்சர்’ பற்றிக் கூறும் வரிகள் தெரிவிக்கும். புதுச்சேரிக்கு அண்மையில் அரிக்கமேடு என்னும் பகுதியில் நிகழ்ந்த அகழ்வாரய்ச்சிகள் யவனர்கள் கண்ணாடி மணிகளைச் செய்வதில் சிறந்து விளங்கியதை எடுத்துக் காட்டும்.
கி. மு. இரண்டாம் ஆண்டிலிருந்தே தமிழ் வாணிகர் இலங்கைக்குச் சென்று வாணிபம் செய்ததை அநுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட பிராமி எழுத்துக் கல்வெட்டு கூறும். தமிழர்களைப் பொறுத்தவரையில் பருவக்காற்றின் உதவியினால் நடுக்கடலில் விரைவாகப் பயணிக்கும் அறிவினைப் பண்டைய காலத்தில் யவனர்களுக்கு முன்னரே அறிந்திருந்ததாக தெரியவருகின்றது. இதன் காரணமாக யவனர்கள் கரையோரமாக நீண்டகாலக் கடற்பிரயாணம் செய்துதான் தமிழகத் துறைமுகங்களை வந்தடைந்தார்கள். கி. பி. முதல் நூற்றாண்டலவில்தான் அவர்கள் இவ்வறிவினைப் பெற்று நடுக்கடலினூடு பருவக்காற்றின் உதவிகொண்டு முதன்முதலாக முசிறித் துறைமுகத்திற்கு வந்ததாக அறிய முடிகிறது. தமிழர்களின் கடல் கடந்த வாணிபம் காரணமாகப் பண்டைய தமிழகத்தில் பல துறைமுகப்பட்டினங்கள் புகழ்பெற்று விளங்கின. தமிழகத்தின் கிழக்குக் கரையில் புகழ்பெற்று விளங்கிய பட்டினங்களாக வங்காளக் கடலில் கொல்லத்துறை, எயிற்பட்டினம் (சோபட்டினம்), அரிக்கமேடு, காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்), தொண்டி, மருங்கை (மருங்கூர்ப் பட்டினம்), கொற்கை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இத்துறைமுகப் பட்டினங்களெல்லாம் பிற்காலத்தில் மறைந்து விட்டன. இதே சமயம் தமிழகத்தின் தெற்குக் கரையில் கன்னியாகுமரியில் குமரி துறைமுகப் பட்டினமாகவும், புண்ணிய நகராகவும் புகழ்பெற்று விளங்கியது.
இவைதவிர பண்டைய தமிழகத்தின் மேற்குக் கரையில் அரபிக் கடலில் மங்களூர், நறவு, தொண்டி, முசிறி போன்ற துறைமுகப்பட்டினங்களும் சிறந்து விளங்கின.
மதுரை, பண்டைய தமிழகத்திலும் புகழ்பெற்று விளங்கிய முக்கியமான நகர். மதுரை இராஜதானியாக, ஆலய நகராகப் புகழ்பெற்று விளங்கியதை தமிழ் இலக்கிய நூல்கள் விளக்குகின்றன. நான்மாடக்கூடல், ஆலவாய் எனப் புகழ்பெற்று விளங்கிய மதுரை மூன்று பக்கங்களிலும் வைகையை அகழியாகவும், மதிலையொட்டி இன்னுமொரு அகழியையும் கொண்டு விளங்கியது. மதுரையைப் போல் அன்றும் இன்றும் புகழ்பெற்று விளங்கும் நகர் காஞ்சி. பண்டைய சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூர், சேரரின் தலைநகராக விளங்கிய வஞ்சி ஆகிய நகர்கள் காலப்போக்கில் தம் முக்கியத்துவத்தை இழந்து விட்டன.
இத்தகைய நகர்கள் பற்றி இனிச் சிறிது பார்ப்போம். அதற்கு முன் தென்னிந்திய ஆலய நகரங்களுக்கும், வட இந்திய ஆலய நகரங்களுக்குமிடையில் நிலவும் வேறுபாட்டினையும் அறிந்து கொள்வோம். வாஸ்துபுருஷக் கோட்பாடுகளைப் பொறுத்தவரை தென்னிந்தியக் கோட்பாடுகள் தத்துவார்த்தரீதியில் வட இந்தியக் கோட்பாடுகளிலிருந்து சிறிது விலகியிருப்பதை அறிய முடிகிறது.
தென்னிந்தியக் கோட்பாடுகளின்படி பிரதான ஆலயம் அமைந்துள்ள மையப்பகுதி ஆதி, அந்தமற்ற, உருவற்ற பிரம்மாவுக்குரியதாகவும், இதனைச் சுற்றி மதிலினைக் கொண்டதாகவும், இதனையடுத்து ஏனைய தெய்வங்களுக்குரிய பகுதியினைக் கொண்டதாகவும், அதற்கடுத்து மனிதர்களுக்குரியதாகவும், அடுத்து பேய்கள், பூதகணங்களுக்குரியதாகவும் அமைந்திருப்பதை அறிய முடியும். வட இந்திய வாஸ்து புருஷ மண்டலக் கோட்பாடுகள் படைப்பைப் பற்றிக் கூறினால் தென்னிந்தியக் கோட்பாடுகளோ படைக்கப்பட்ட பிரபஞ்சத்தில் நிலவும் ஒழுங்கைப் பற்றிக் கூறுவதை அறியமுடிகிறது. இன்றைய மதுரை மற்றும் ஸ்ரீரங்க நகர்களின் அமைப்பு இதனைத்தான் புலப்படுத்துகின்றது. இனிச் சிறிது விரிவாகப் பண்டைய தமிழர்களின் துறைமுக மற்றும் ஆலய, கோ நகர்களைப்பற்றிப் பார்ப்போம்.
மதுரை மாநகர்
தமிழர்களின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகர்களில் பிரதானமானது மதுரை. கி. மு. விலிருந்து, முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் எனப் பல காலகட்டங்களைக் கடந்து பின்னர் நாயக்கர் காலத்திலும் புகழ்பெற்று விளங்கி இன்றும் தமிழர்களின் புண்ணிய பூமியாக விளங்கும் நகரமிது. இன்றைய ஆலயநகரமான மதுரை , திருமலை நாயக்கரின் மதுரை. பாண்டியர்களின் காலகட்டங்களிலெல்லாம் தலைநகராக விளங்கிச் சிறந்த மதுரை பின்னர் நாயக்கர் காலகட்டத்தில் சிறிதுகாலம் திருசிரபுரத்தைத் தலைநகராகக் கொண்டு விளங்கியது. அதனை மாற்றி மீண்டும் மதுரையையே தலைநகராக்கி, புது மண்டபம், தெப்பக்குளம், அரண்மணைகளெனக் கலைச் செல்வங்களால் நிறைத்தவர் திருமலை நாயக்கர். பண்டைய மதுரையின் அரண்மனை இன்றைய மதுரையில் காணப்படும் ‘அந்திக்கடைப் பொட்டலருகே’யுள்ள கடைவீதியிலிருக்கும் பழைய கோட்டைப் பகுதியாயிருக்கக் கூடுமெனக் கருதுவார் ‘பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும்’ நூலில் நா. பார்த்தசாரதி. மேற்படி நூலில் மதுரை நகரம் பற்றிய நல்லதொரு ஆய்வுக் கட்டுரையினை சங்கால நூல்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் எழுதியிருக்கின்றாரவர். பாண்டியரின் மதுரை எவ்வளவு தொன்மை வாய்ந்ததென்பதற்குப் பல சான்றுகளுள் கி. மு. 4 அல்லது 5 ஆம் ஆண்டளவில் வெளிவந்ததாகக் கருதப்படும் இராமாயணம், மகாபாரதம் போன்ற வடமொழி இதிகாசங்கள் பாண்டியரைப் பற்றிக் கூறுகின்றன. இலங்கையின் மகாவம்சமும் கி. மு. 478 இல் விசயன் பாண்டியகுமாரியொருத்தியை மணந்ததைக் கூறும். கி.மு.3 இல் வாழ்ந்த அசோகமன்னனின் கற்றூண் கட்டளைகளில் மூவேந்தர்கள் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். பல்வேறு காவியங்களும் இலக்கிய நூல்களும் மதுரையைச் சிறப்பித்துக் கூறுகின்றன. ‘மாட மதுரை’, ‘மதுரை மூதூர்’, ‘மணி மதுரை’, ‘வானவர் உறையும் மதுரை’, ‘மாண்புடை மரபின் மதுரை’, ‘ஓங்கு சீர் மதுரை’, ‘மண மதுரை’ எனப் பல்வேறு சொற்றொடர்களால் சிறப்பித்துக் கூறும் சிலப்பதிகாரம். ‘மதுரைப் பெருநன் மாநகர்’ என மணிவாசகர் பாடுவார் திருவாசகத்தில்.
‘மிக்குபுகழ் எய்திய பெரும்பெயர் மதுரை’ என மதுரைக் காஞ்சி பெருமிதமுறும். ‘தமிழ் கெழு கூடல்’ எனப் புறநானூறும், ‘பாடு தமிழ் வளர்த்த கூடல்’ என இன்னுமொரு தமிழ்ப் பாடலொன்றும் மதுரையின்மாண்பினை எடுத்துரைக்கும். திருளையாடற்புராணம் ‘.. மதி தபழு சுதை யிலகு புதுமைதரு நிதிதிகழு மதில்தழுவு மதுரை நகர்’ என்றும், ‘அலகில் வண்புகழுடைய மதுரை’ எனவும், ‘நகர்கட் கெல்லாம் பயனா நகர் பஞ்சவந்தன் மதுரை நகர்’ என்றும் புகழும். இவ்விதமாகச் சிறப்புற்று விளங்கியது பாண்டியர்களின் தலைநகராக அன்று விளங்கிய மதுரை மாநகர்.
சங்கத்தொகை நூல்களிலொன்றான பரிபாடல் மதுரை நகர் பற்றிப் பின்வருமாறு கூறும்:
‘மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்- பூவின்
இதழ்கத் தனைய தெருவம் இதழகத்
தரும் பொகுட் டணைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்
தாதுண் பறவை அனையர் பரிசில் வாழ்நர்
பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப
ஏம் இந்துயில் எழுதல் அல்லதை
வாழியும் வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது எம்பேருள் துயிலே’
மாயோனாகிய திருமாலின் உந்தியிலமைந்த தாமரை மலரையொத்து அமைந்திருந்ததாம் மதுரை. அத்துடன் அதன் தெருக்களெல்லாம் அம்மலரின் இதழ்களைப் போலவும், மன்னனின் அரண்மனை அம்மலரின் நடுவிலுள்ள பொகுட்டையும், நகரத் தமிழ் மாந்தர் அம்மலரின் தாதுக்களையும், அதனை பரிசில் பொருட்டு நாடிவரும் புலவர் பெருமக்கள் தாதுண்ண வரும் வண்டுகளையும் ஒத்து விளங்கியதாக மேற்படி பாடல் கூறும்.
மதுரையின் தோற்றம் பற்றித் திருவிளையாடற்புராணத்தில் பல புராணக் கதைகளுள். அதன்படி பண்டைய மதுரை மாநகர் இருந்த பகுதியில் முன்னர் கடம்ப வனத்துடன் கூடிய மணலூரென்னும் ஓரூர் இருந்ததாகவும், அதனைத் தலைநகராகக் கொண்டு குலசேகரப் பாண்டியனென்னும் மன்னன் ஆட்சிபுரிந்து வந்ததாகவும், அவன் கனவில் தோன்றிய சிவபெருமான் கடம்பவனத்தை அழித்து நகரமாக்கப் பணித்ததாகவும், அதன் பொருட்டு அம்மன்னன் அவ்வனத்திலுள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராடிப் பின்னர் காட்டை அழித்து நகரை உருவாக்கியதாகவும் அறிய முடிகிறது. நகரை உருவாக்கும் சமயம் சித்தர் வடிவில் வந்த சிவபெருமான் நகரமும், ஆலயமும், கோபுரமும் சிற்பநூல்களின் விதிப்படி, சிவாகமங்களின் வழிப்படி அமைய வலியுறுத்தி மறைந்ததாகவும், அதன்படி மதில்கள், மண்டபங்கள், கோபுரங்கள், அகழிகள் ஆகியவற்றுடன் மீனாட்சி அம்மன் ஆலயம் போன்றவை அமைக்கப்பட்டதாகவும் திருவிளையாடற் புராணம் கூறும். இவ்விதமாக அமைக்கப்பட்ட நகரானது அரசவீதிகள், அந்தணர் வீதிகள், வணிகர் தெருக்கள், வேளாளர் தெருக்கள், கடைவீதிகள், பலர் கூடிபேச அம்பலங்கள், மாடமாளிகளைகளை உள்ளடக்கிய பெருந்தெருக்கள், ஆனை மற்றும் குதிரைக் கூடங்கள், தேர்ச்சாலைகள், கல்விக் கூடங்கள், பொய்கைகள், பூங்காக்களெல்லாம் கொண்டு விளங்கியதையும், நகரின் வடகிழக்குத் திசையில் மன்னனின் அரன்மணையையும் கொண்டு விளங்கியதையும் மேற்படி திருவிளையாடற்புராணத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
நான்மாடக் கூடல், ஆலவாய் மற்றும் மதுரா நகரெனப் பல்வேறு பெயர்களில் மதுரை அழைக்கப்பட்டதற்குக் காரணங்களைத் திருவிளையாடற்புராணம் கூறும். சிவனின் சடைமுடியிலுள்ள சந்திரக்கலையின் மதுரமயான அமுதம், நகரைத் தூய்மையாக்கியதால் அந்நகருக்கு மதுரா நகரென்னும் பெயர் ஏற்பட்டதாம். இதுபோல் ஒருசமயம் வருணன் மதுரா நகரை அழிக்கும் பொருட்டு ஏழு மேகங்களையும் நகரை நோக்கி ஏவி விட்டபோது பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கேற்ப சிவபெருமானால் அந்தத்தாக்குதலையெதிர்த்து ஏவி விடப்பட்ட நான்கு மேகங்களும் நகரின் நான்கு எல்லைகளிலும் நான்கு மாடங்களாகி வருணனின் தாக்குதல்களை முறியடித்ததாகவும் அதனாலேயே நகர் நான்மாடக் கூடலென அழைக்கப்பட்டதாம். இவையே பின்னர் திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என அழைக்கப்பட்டதாக கலித்தொகையில் நச்சினார்க்கினியர் கூறுவார்.
இதுபோல் மதுரை ஆலவாய் என அழைக்கப்படுவதற்குமொரு கதையினைத் திருவிளையாடற்புராணம் கூறும். அதன்படி வங்கியசேகரனென்னுமொரு பாண்டியன் மக்கள் தொகை பெருகிய மதுரையை விரிவுபடுத்த முனைந்தான். அதற்காக அவன் சிவனிடம் தன் முன்னோர்கள் வரையறுத்த பழைய நகர எல்லைகளைத் தெரியப்படுத்துமாறு வேண்டினானாம். அதற்காகச் சித்தராக அவன் முன்னால் தோன்றிய சிவபெருமான் தன் கையிலிருந்த பாம்பினைப் பார்த்துப் பாண்டிய நாட்டின் எல்லையினையும் மதுரை நகரத்தையும் மன்னனுக்குக் காட்டுமாறும் பணித்தாராம். அப்பொழுது அந்த அரவம் தான் எல்லையினைக் காட்டியதும் அதுமுதல் நகரம் தன்பெயரால் அழைக்கப்பட வேண்டுமென வேண்டிக் கொண்டதாம். சித்தரான சிவனும் அதற்கிசைய அந்தப் பாம்பானது கீழ்த்திசையிலிருந்து தன் வாலை நீட்டி நகரைச் சுற்றிச் சென்று வாலைத் தன் வாயில் வைத்து எல்லைகளை உணர்த்தியதாம். அதன்படி மன்னனும் நகர மதில்களை எழுப்பினானாம். தெற்கில் திருப்பரங்குன்றமும், வடக்கே இடபக் குன்றமும், மேற்கில் திருவேடகமும், கிழக்கில் திருப்பூவண நகரும் எல்லைகளாக அமையும் வண்ணம் மதிலின் வாயில்களை அமைத்தானாம். இந்த மதிலே ஆலவாய் என அழைக்கப்பட்டதாம்.
அரவத்திற்குச் சித்தர் கொடுத்த வாக்கின்படி அதுமுதல் நகரும் ஆலவாய் நகரென அழைக்கப்பட்டதாம். இவையெல்லாம் மதுரை நகருக்கு மேற்படி பெயர்கள் வந்ததற்கான காரணங்களைப் பற்றித் திருவிளையாடற் புராணம் கூறும் தகவல்கள்.
இவை தவிர மதுரை மாநகர் பற்றிப் பல்வேறு தகவல்கள் சிலப்பதிகாரம், மதுரைக் காஞ்சி போன்ற இலக்கிய நூல்களில் மலிந்து காணப்படுகின்றன. அகழிகள் காவற்காட்டுடன் விளங்கின (‘அருமிளை உடுத்த அகழிசூழ்’ சிலம்பு- புறஞ்சேரி இறுத்த காதை; 183). நகர் அகநகர், புறநகரெனப் பிரிந்து கிடந்தது.
புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி,
வெள்ளநீர்ப் பண்ணையும், விரிநீர் ஏரியும்,
காய்குலைத் தெங்கும், வாழையும், கமுகும்,
வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை;
அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப்
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்து ‘ (புறஞ்சேரி இறுத்த காதை 190-195) எனக் கவுந்தியடிகளுடன் கோவலனும் கண்ணகியும் மதுரையின் புறநகரைச் சென்றடைந்ததைச் சிலம்பு வருணிக்கும். புறநகருக்கும், அகநகருக்குமிடையில் கட்டுவேலியுடன் கூடிய காவற்காட்டுடன் வளைந்து கிடந்தது மதுரையின் அகழி. யானைகள் செல்வதற்காக புறநகருக்கும் அகநகருக்குமிடையில் நிலத்தின் கீழ் அமைந்திருந்த சுருங்கைப் பாதையினூடு கோவலன் நகரினுள் சென்றதைச் சிலம்பு பின்வருமாறு வருணிக்கும்:
‘இளைசூழ் மிளையொடு வளவுடன் கிடந்த
இலங்குநீர்ப் பரப்பின் வலம்புணர் அகழியில்
பெருங்கரை யானை இனநிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கிற் போகிக் – (ஊர் காண் காதை; 60-65).
மேற்படி ‘கடிமதில் வாயிலைக் ‘ காவலிற் சிறந்த அடல்வாள் யவனர் காத்து நின்றனர் (ஊர் காண் காதை; 66-67). மேற்படி சிலம்பின் ஊர்காண் காதை மதுரை மாநகரின் அகநகரில் காணப்பட்ட பல்வேறு வகையான வீதிகளைப் பற்றியும் (செல்வர்கள் மற்றும் அரசர்களுக்குரிய வீதிகள், கணிகையர்கள் வாழும் வீதிகள், வேற்றரசுகளும் விரும்பும் செல்வச் சிறப்புடைய அங்காடி வீதிகள், இரத்தினக் கடைத்தெரு, பொற்கடைத் தெரு, துணிக்கடைத்தெரு:அறுவை வீதி, மிளகு மலிந்து கிடக்கும் கூல வீதி) எனப் பல்வேறுபட்ட வீதிகளைப் பற்றியும் கூறும். அத்துடன் அங்கு ‘நூலோர் சிறப்பின் முகில்தோய் மாட’ மாடங்களுடன் கூடிய மாட மாளிகைள் இருந்ததையும், சுடுமண்ணினால் வேயாது பொற்றகடுகளால் வேயப்பட்ட, ‘சுடுமண் ஏறா வடுநீடுங்கு சிறப்பு’ மிக்க மனைகளில் கணிகையர் வாழ்ந்ததையும் மேற்படி ஊர் காண் காதையிலிருந்து அறிய முடிகிறது. இவ்விதமாக ‘பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும், அந்தியும் (முச்சந்தி), சதுக்கமும் (நாற்சந்தி), ஆவண வீதியும் (கடைத்தெரு), மன்றமும், கவலையும் (பல தெருக்கள் ஓரிடத்தில் பிரியுமிடம்), மறுகும் (தெரு)’ எனப் பல்வேறு வகையான தெருக்களில் கோவலன் அலைந்து திரிந்ததாகக் கூறும் ‘ஊர் காண் காதை’யிலிருந்து அகநகரில் காணப்பட்ட பல்வேறு வகையான தெருக்களைப் பற்றிய தகவல்களைப் பெற முடிகிறது.
இவ்விதமாக விளங்கிய மதுரை நகரின் அகநகரில் காணப்பட்ட அகலத் தெருக்கள் பற்றியும், தேரணி வீதிகள் பற்றியும், தோரண வாயில்கள் பற்றியும் திருவிளையாடற் புராணத்தின் திருநகரச் சிறப்புப் பகுதியில் விபரிக்கப்பட்டுள்ளது.
மதுரைக் காஞ்சியிலும் மதுரை பற்றித் தகவல்கள் பல மலிந்து கிடக்கின்றன. மதில்மேல் பெரிய மலைமுகடுகள் போல் பொறிகளுடன் விளங்கிய மாடங்களிருந்ததையும், கோட்டை வாயில் வையை ஆற்றையொத்து உயிரோட்டமுடன் விளங்கியதையும் அது பின்வருமாறு விபரிக்கும்:
‘மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மலையி னிவந்த மாடமொடு
வையை யன்ன வழக்குடை வாயில்’ (மதுரைக் காஞ்சி 351-156).
மேலும் மதுரை நகரின் தெருக்களில் காணப்பட்ட வீடுகள் தென்றல் புகுந்து செல்லும் சாளரங்களையுள்ளடக்கி இருந்ததையும் அது ‘ வகைபெற எழுந்து வான மூழ்கிச் , செல்காற் றிசைக்கும் பல்புழை நல்லில், யாறு கிடந்தன்ன அகல்நெடுந் தெரு’ என்கிறது.
காவிரிப்பூம்பட்டினம்
மதுரை தவிர தமிழர் வரலாற்றில் தடம் பதித்த இன்னுமொரு முக்கியமான நகரம் காவிரிப்பூம்பட்டினம். சங்க காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய துறைமுகப் பட்டினமிது. சோழநாட்டின் காவிரியாறு கடலிலுடன் கலக்கின்ற புகார்முகத்தில் இருந்த காரணத்தினால் ‘புகார்’ என்றும், ‘பூம்புகார்’ என்று அழைக்கப்பட்ட இந்நகர் அக்காலகட்டத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத்திற்கும் பெயர்போன் துறைமுகநகர். மேலும் கடற்கரை நகரத்தைப் பட்டினமென அழைப்பது பழந்தமிழ் வழக்கு. காவிரியின் கழிமுகத்தில் உருவான நகரமென்பதால் ‘காவிரிப்பூம்பட்டினமென்றும்’ அழைக்கப்பட்டது. பழைய பெளத்த நூல்கள் இந்நகர் கவீரபட்டினமென அழைக்கப்பட்டதாக மயிலை சீனி. வேங்கடசாமி கருதுவார் (நூல்: ‘பழங்காலத் தமிழர் வணிகம்’; பக்கம் 81). ‘காகந்தி’ என்றும் இதற்கொரு பழைய பெயர் இருந்ததாகவும் அவர் கருதுவார். அக்காலகட்டத்தில் (கி.பி.2ஆம் நூற்றாண்டளவில்) வணிகர்கள் உரோமாபுரியிலிருந்தும் (யவனர்கள்), ‘சாவகத்திலிருந்தும்’( இன்றைய இந்தோனேசியா), வட இந்தியாவிலிருந்தும், ஈழத்திலிருந்தும் இங்கு வந்து வணிகம் செய்தார்கள். சோழ வணிகர்கள் இங்கிருந்து சாவகம், காழகம் (இன்றைய பர்மா), ஈழம் போன்ற நாடுகளுக்கு இத்துறைமுகத்திலிருந்து புறப்பட்டு வாணிகம் செய்தார்கள். ‘கமரா’ என்று ‘பெரிளுஸ்’ என்னும் கிரேக்க நூல் கூறுவது காவிரிப்பூம்பட்டினத்தின் சுருக்கமென்றும், கிரேக்க தொலமி குறிப்பிடும் ‘சபரிஸ்’ என்பது காவியின் திரிபென்றும் மயிலை சீனி.வேங்கடசாமி கருதுவார். மேலும் வேற்று நாடுகளிலிருந்தெல்லாம் மக்கள் புலம்பெயர்ந்து வந்து இப்புகார் நகரில் வாழ்ந்ததை சிலம்பின் ‘கடல் ஆடும் காதையில்’ வரும் ‘கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்’ என்னும் வரிகளும் மற்றும் ‘இந்திரவிழவு ஊர் எடுத்த காதையில்’ வரும் ‘கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள் கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும் புலப்படுத்துகின்றன. பட்டினப்பாலையும் மேற்படி புலம்பெயர்ந்து வந்து புகாரில் வாழ்ந்த மக்கள் பற்றி ‘மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப், புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும், முட்டாச் சிறப்பிற் பட்டினம்’ (பட்டினப்பாலை; 21-218) எனக் கூறும். சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையும் தன்பங்கிற்கு இம்மக்கள் பற்றிக் குறிப்பிடுகையில் ‘பரந்தொருங் கீண்டிய பாடை மாக்கள்’ என்று கூறும்.
கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் ‘பட்டினப்பாலை’யிலும், இளங்கோவின் ‘சிலப்பதிகாரத்திலும்’, மேலும் பல புறநானூற்றுச் செய்யுள்களிலும் புகார் பட்டினம் பற்றிய செய்திகள் மலிந்து கிடக்கின்றன. உதாரணமாக சிலப்பதிகாரத்தின் ‘இந்திரவிழவு எடுத்த காதை’, ‘கடல் ஆடு காதை’ போன்ற பகுதிகளில் புகார் பற்றியும், அந்நகர அமைப்பு பற்றியும், அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் தகவல்கள் மலிந்து காணப்படுகின்றன. இத்துறைமுகத்திற்கு வந்து குவிந்த பொருட்கள் பற்றிப் பட்டினப்பாலை பின்வருமாறு கூறும்:
“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும் ….
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்” (பட்டினப்பாலை 185-193).
மேற்படி செய்யுள் வரிகளில் பல உண்மைகள் தெரிய வருகின்றன. குதிரைகள் கடல்வழியாகக் கொண்டு வரப்பட்டன (‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவி). ‘காலின் வந்த’ என்பது காற்றின் உதவியினால் வந்த எனப் பொருள்படும். ‘காலின் வந்த கருங்குறி மூடை’ என்பது பருவக் காற்றின் உதவியினால் வந்த கப்பல்களில் கரிய மிளகு மூட்டைகள் கொண்டுவரப்பட்டன என்பதைக் குறிக்கும். ‘வடமலைப் பிறந்த பொன்னும் மணியும்’ என்னும் வரிகள் இமயமலைப் புறத்தில் கிடைத்த பொன்னும் மணியும் கங்கையாற்றின் முகத்துவாரத்தின் வழியாகக் கடல்மூலம் வந்ததையும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கத்திலிருந்து சந்தனமும் (‘குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்’) , அகிலும், தென்னாடான பாண்டிநாட்டுக் கடல்களிலிருந்து முத்துக்களும் (‘தென்கடல் முத்து’), கிழக்குக் கடல் வழியாக சாவகத்திலிருந்து பவழமும் (‘குணகடல் துகிர்’), கங்கைக்கரை ஊர்களிலிருந்து உள்ளூரிலிருந்து மற்றும் வெளியூர்களான ஈழம், காழகம் ஆகியவற்றிலிருந்து பல்வேறு பொருட்களும் (‘கங்கை வாரியும் காவிரிப் பயனும்.. ஈழத் துணவும் காழகத் தாக்கமும்’) இவ்விதம் உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகம் சிறந்து விளங்கும் நகராகப் புகார் விளங்கியதை அறிய முடிகிறது.
ஆனைப்பந்தியில் நிற்கும் ஆனைகள் அசைவதைப்போல் இத்துறைமுகத்தில் வந்து தங்கிய பாய்மரக் கப்பல்கள் கொடிகளுடன் அசைந்தனவாமெனப் பட்டினப்பாலை மேலும் கூறும்:
“வெளிலிளக்குங் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்றுறைத்
தூங்குநாவாய் துவன்றிருக்கை
முசைச்கூம்பி னசைக்கொடியும்” (பட்டினப்பாலை 172-175).
உறையூர் முதுகண்ணனின் சோழன் நலங்கிள்ளியைப் புகழ்ந்து பாடும் புறநானூற்றுச் செய்யுளில் வரும் ‘கூம்பொடு மீப்பாய் கலையாது மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்’ வரிகள் ஆழமாகவும் கலமாகவும் பல கப்பல்கள் தங்குவதற்கேற்ற வகையில் அமைந்திருந்த புகார் பற்றிக் கூறும்.
சிலப்பதிகாரத்தின் ‘இந்திரவிழவு எடுத்த காதையில்’ ஆசிரியர் இளங்கோ புகார் நகர் ‘மருவூர்ப் பாக்கம்’, ‘பட்டினப்பாக்கம்’, நாளங்காடி’ என மூன்று முக்கியமான பகுதிகளாக விளங்கியதையும், அப்பகுதியில் காணப்பட்ட மக்களின் தொழில்கள, வீதிப்பெயர்கள் பற்றியெல்லாம் விரிவாகவே எடுத்துரைப்பார். புகாரின் மருவூர்ப்பாக்கத்தைப் பற்றிக் கூறும் சிலம்பு அங்கு காணப்பட்ட மாளிகைகள் பற்றி, யவனர்களின் இருப்பிடங்கள் பற்றி, வணிகத்தின் பொருட்டுப் பல்வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்து வாழும் மக்களின் குடியிருப்புகள் பற்றி, விற்பதற்காக அங்கே குவிந்து கிடக்கும் பொருட்கள் பற்றி, பல்வேறு தொழிலாளர்கள், சிறு விற்பனையாளர்கள் செய்யும் தொழில்கள், விற்கும் பொருட்கள், மற்றும் அவர்கள் வாழும் வீதிகள் பற்றி, இசைக்கலைஞர்கள் பற்றி அவர்தம் இருப்பிடங்கள் பற்றியெல்லாம் விரிவான தகவல்களைச் சிலம்பு தரும்:
“வேயா மாடமும், வியன்கல இருக்கையும்,
மான்கண் காதலர் மாளிகை இடங்களும்,
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும், 10
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்,
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும், 15
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்,
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா 20
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்,
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்,
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர் 25
பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்,
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும் 30
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்
குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் 35
வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்,
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்” (இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 7-39).
இது போல் பட்டினப்பாக்கம் பற்றிய தகவல்களைப் பற்றியும் சிலம்பு விரிவாக விபரிக்கும்:
கோவியன் வீதியும், கொடித்தேர் வீதியும், 40
பீடிகைத் தெருவும், பெருங்குடி வாணிகர்
மாட மறுகும், மறையோர் இருக்கையும்,
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும், 45
திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்,
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர் 50
பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்,
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர் 55
இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும்,
பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும், (இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 40-58).
மேற்படி பட்டினப்பாக்கம் நாளங்காடிக்கு மேற்கே அமைந்திருந்தது. அரசனின் அரண்மனை, அரச வீதிகள், தேரோடும் வீதிகள், செல்வம்மிக்க வணிகர்களின் மாட மாளிகைகள், அவர்க்குரிய பெருந்தெருக்கள், அந்தணர்கள் வாழும் மனைகள் அமைந்த தெருக்கள், உழவர், மருத்துவர், காலக் கணிதர் தம் தொழிலுக்கேற்ப வாழும் தெருக்கள், முத்துக் கோர்ப்பவர் போன்றோர், மன்னர் முன் நின்று வணங்கும் சூதர்கள், இருந்து வணங்கும் மரகதர், நாழிகை கூறும் நாழிகைக் கணக்கர், கணிகையர், குற்றேவல் செய்யும் ஏவல் மகளிர், புகழ்பாடும் வைதாளிகர், தோல், துளை, உருக்குக் கருவிகள் வாசிப்போர், குதிரைப்பாகர், யானைப்பாகர் போன்ற பலவேறு மக்கள் வாழுந்தெருக்களை உள்ளடக்கி விளங்கியது பட்டினப்பாக்கம். இவ்விரு பகுதிகளையும் இரு பெரு வேந்தர்களின் போர்முனைகளாக விபரிக்கும் இளங்கோ, இவ்விரு பகுதிகளுக்கும் கடைத்தெருவான நாளங்காடியினை மேற்படி போர்முனைகளுக்கிடையிலுள்ள இடைநிலமாக விபரிப்பார். அத்துடன் சித்திரா பெளர்ணமியில் மன்னனின் நல்வாழ்வுக்காக அங்கிருந்த காவற்பூதத்திற்குப் மறக்குடி மகளிர் பலிகொடுத்ததையும் எடுத்துரைப்பார்:
இருபெரு வேந்தர் முனையிடம் போல
இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய 60
கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்
சித்திரைச் சித்திரத் திங்கள் சேர்ந்தென
வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க எனத் 65
தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப்
புழுக்கலும் நோலையும் விழுக்குஉடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து ஆடிப் 70
பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி
மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும்
மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர, 75 (இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 61-75).
மேலும் மருவூர்ப்பாக்கத்தின் சுற்றுப்புறங்களிலும், பட்டினப்பாக்கத்தின் அயலிலும் வீரம் மிக்க மறவர்கள் படைக்கலங்களுடன் விளங்கியதை “மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும் பட்டின மருங்கின் படைகெழு மாக்களும் ” ((இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 76 -77).
இது தவிர நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைநாட்டுப் பொருட்டு ஐவகையான மன்றங்களும் (வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், பூத சதுக்கம், நெடுங்கல் நின்ற மன்றம், பாவை மன்றம்’) பட்டினப்பாக்கத்தில் இருந்ததையும் சிலம்பு விபரிக்கும்.
“உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக்
கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக் 115
கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும்,
கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்
பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்று 120
வலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்,
வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்
நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்
அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்
கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோ ர் 125
சுழல வந்து தொழத்துயர் நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்,
தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்
அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர் 130
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்
கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்,
அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து 135
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்
பாவைநின்று அழுஉம் பாவை மன்றமும்,
மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்
ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ,” ((இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 114-140).
மேலும் காவிரிப்பூம்பட்டினத்தில் மலர்வனம், உய்யாவனம், சம்பாதி வனம், சுவேர வனம் மற்றும் உவ வனம் ஆகிய ஐவகை வனங்களும் இருந்ததாக மணிமேகலை கூறும். அத்துடன் நகரில் சிவன், திருமால், பலராமன், இந்திரன், முருகன், சூரியன், சந்திரன்,அருக தேவன் ஆகியோருக்குக் கோட்டங்கள் (கோயில்கள்) அமைந்திருந்ததை சிலம்பு பின்வருமாறு கூறும்:
“அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும் ” (கனாத்திரம் உரைத்த காதை; 9-13).
இதுதவிர நகரில் ஏழு புத்த விகாரங்களுமிருந்ததை மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியன கூறும் (சிலம்பு, ‘நாடு காண் காதை’; 14: ‘இந்திர விகாரம் ஏழுடன் போகி’; மணிமேகலை; ‘இந்திர விகாரம் என எழில் பெற்று’).
ஸ்தபதி வை.கணபதியின் ‘நகரமைப்புக் கலை’ ஆய்வுக் கட்டுரையினை ஆதாரமாக வைத்து நா. பார்த்தசாரதி தனது ‘பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும்’ நூலில் பின்வருமாறு குறிப்பிடுவார்: “மயமதம் கூறும் நகரமைப்புக் கலை இலக்கணப்படி மொத்தச் சுற்றளவில் 20 இல் ஒரு பாகம் ‘குடும்ப பூமி’ என்ற பெயரில் குடியிருப்புக்களுக்கும், பிற பகுதிகள் தோட்டங்கள், நீர் நிலைகள், இளமரக்காக்கள் ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பூம்புகார் நகரிலும் இவ்வமைப்பு இருந்திருப்பதைக் காண முடிகிறது” (பக்கம் 164). இது மேலும் விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயம்.
இவ்விதமாகப் புகழ்பெற்று விளங்கிய வாணிக நகரான பூம்புகார் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புயல் காற்றடித்து வெள்ளப் பெருக்கெடுத்து நீரில் மூழ்கி விட்டதை மணிமேகலை குறிப்பிடுமெனச் சுட்டிக் காட்டும் மயிலை சீனி. வேங்கடசாமி ‘ஆனால் இப்பட்டினம் அடியோடு முழுகிவிடவில்லை. வெள்ளம் வடிந்த பிறகு மீண்டும் இப்பட்டினம் நெடுங்காலம் பேர் பெற்றிருந்தது. கி.பி.10ஆம் நூற்றாண்டில் இருந்த பட்டினத்து அடிகள் காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்தவர்…. பிறகு இப்பெரிய பேர்போன் பட்டினம் சிறப்புக் குன்றி சிறிது சிறிதாகப் பெருமை குறைந்து இப்போது குக்கிராமமாக இருக்கிறது’ என்பார் (‘பழங்காலத் தமிழர் வணிகம்; பக்கம் 89).
இது தவிர பொருநை நதிக்கரையில் அமைந்திருந்த கொற்கை, தாமிரபரணிக் கரையில் அமைந்திருந்த காயல் மற்றும் மாமல்லபுரம் ஆகிய துறைமுக நகரங்களெல்லாம் காலப்போக்கில் மண் தூர்ந்து ஈழத்தின் மாந்தையைப் போல் தம் முக்கியத்துவத்தை இழந்தன.
மருங்கூர்ப் பட்டினம்
இவற்றைவிட இன்னுமொரு துறைமுகப் பட்டினத்தையும் கட்டாயம் இங்கு குறிப்பிட வேண்டும். அது பாண்டி நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த மருங்கூர்ப் பட்டினம். இது பற்றி மயிலை சீனி. வேங்கடசாமி தனது ‘பழங்காலத் தமிழர் வணிகம்’ நூலில் முக்கியத்துவம் தந்து குறிப்பிடுவார். நக்கீரர், மருதன் இளநாகனார் போன்றோரின் அகநானூற்றுச் செய்யுள்களில் இந்நகர் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. காவிரிப் பூம்பட்டினம் எவ்விதம் பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என விளங்கியதோ அவ்விதமே மருங்கூர் நகரும் ஊணூர், மருங்கூர் பட்டினமெனப் பிரிவுகளுடன் விளங்கியதைச் சுட்டிக் காட்டுவார் மயிலை சீனி.வேங்கடசாமி. மருங்கூர்ப் பட்டினம் தோட்டங்களையும், காயல்களையும் (உப்பங்கழிகளையும்), செல்வம் கொழிக்கும் கடைத்தெருக்களையும் கொண்டு விளங்கியதை பாண்டி நாட்டுப் புலவரான நக்கீரர் ‘விழுநிதி துஞ்சும் நீறுபெறு திருநகர், இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து, எல்லுமிழ் ஆணவம்’ (அகம்: 227:19-21) என்று குறிப்பிடுவார். காவிரிப்பூம்பட்டினத்தைப் போல் ஊணூரும் மதிலையும் அகழியையும் கொண்டு விளங்கியது (‘கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர்’ – அகம்; 227: 18). ஊணூரைச் சூழ்ந்து வயல்கள் இருந்ததை ‘முழங்கு, கடல் ஓதம் காலைச் சொட்கும் நெல்லின் ஊணூர்’ என்று மருதன் இளநாகனார் குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டுவார் மயிலையார் மேற்படி கட்டுரையில். மேலும் மதுரைக் காஞ்சி குறிப்பிடும் நெல்லூர் அல்லது சாலியூர் மருங்கூரும் ஊணூரும் சேர்ந்த ஊரையே குறிக்குமென்றும் கூறுவார் மயிலையார் மேற்படி கட்டுரையில். அத்துடன் தொலமி குறிப்பிடும் சாலூர் (Salour) என்பது இந்தச் சாலியூரேயென்றும் அவர் குறிப்பிடுவார் (மயிலை சீனி.வேங்கடசாமி; ‘பழங்காலத் தமிழர் வணிகம்’ பக்கம் 95-96). இவை தவிர காஞ்சி, உறையூர், வஞ்சி ஆகியன ஏனைய புகழ் மிக்க நகர்களாக விளங்கியவை. இவற்றில் காஞ்சி இன்றும் புகழ்பெற்று விளங்குமொரு நகர். உறையூர் புகார் நகருக்கு முன்னர் புகழ் பெற்று விளங்கிய பழம்பெரு நகர்.
தொடரும்.
நன்றி: https://ezhunaonline.com/article/urban-structure-of-ancient-tamils-and-influence-of-caste1/