அபத்தம் (இணைய இதழ்) வைகாசி 2023 இதழில் வெளியான கட்டுரை.
'வீழும் நீர்' என்றழைக்கப்படும் (Fallingwater) வீடு.
நவீனக் கட்டடக்கலையின் முக்கிய சிந்தனைகள் சிலவற்றினை சாதாரண வாசகருக்கும் அறியச்செய்வதே இக்கட்டுரையின் பிரதான நோக்கம். நவீனக் கட்டடக்கலையின் முக்கிய கோட்பாடுகளாக "லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function), ஃப்ராங்க் லாயிட் ரைட் அவர்களின் சேதனக் கட்டடக்கலை (Organic Architecture), கட்டடக்கலைஞர் லட்விக் மீஸ் வான் டெர் ரோவின் (Ludwig Mies Van der Rohe) ''குறைவில் நிறைய (Less is more) ' போன்ற கோட்பாடுகளையும் மற்றும் லெ கொபூசியேவின் (Le Corbusier) நவீனக்கட்டடக்கலைக் கருதுகோள்கள் போன்றவற்றையும் குறிப்பிடலாம். இவை நவீனக் கட்டடக்கலைக்கு வளம் சேர்த்த சிந்தனைகள். இவற்றைப்பற்றிய சுருக்கமான விளக்கங்களைத் தமிழில் தருவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.
லூயிஸ் சல்லிவன் (Louis Sullivan)
1. லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function)
ஒரு கட்டடத்தின் அல்லது பொருளொன்றின் வடிவமானது அக்கட்டடம் அல்லது அப்பொருள் எக்காரணத்துக்காகப் பாவிக்கப்படுகின்றதோ அக்காரணத்துக்கேற்ப பொருத்தமான வடிவமொன்றினைப்பெறும். அதாவது அக்கட்டடம் அல்லது அப்பொருளின் செயற்பயனுக்கேற்ப அவற்றின் வடிவமுமிருக்கும். இதனைத்தான் வடிவம் செயற்பயனைத்தொடர்தல் (Form follows function) என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது. இக்கருதுகோள் அல்லது சிந்தனை் அல்லது விதி இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் அல்லது தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் பொருளொன்றின் வடிவமைப்பில் முக்கியமானதொரு கருதுகோளாகும்.
இக்கோட்பாட்டின் காரணகர்த்தா புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவன் ( Louis Sullivan) ஆவார். ஆயினும் பொதுவாக இக்கோட்பாட்டின் காரணகர்த்தாவாகத் தவறாகச் சிற்பி ஹொரதியொ கிறீனோ , Horatio Greenough (1805 – 1852) , குறிப்பிடப்பட்டாலும் அது தவறானது. சிற்பி ஹொரதியொ கிறீனோவை இவ்விதம் குறிப்பிடுவதற்குக் காரணம் அவரது கட்டுரைகளின் தொகுதியொன்று 'வடிவமும், செயற்பயனும்: கலை மீதான ஹொரதியோ கிறீனோவின் குறிப்புகள்' (Form and Function: Remarks on Art by Horatio Greenough.) என்னும் பெயரில் வெளிவந்ததாகும். ஆயினும் வடிவமானது எப்பொழுதுமே செயற்பயனைத் தொடரும் என்னும் கூற்றினை முதன் முதலில் பாவித்தவராகக் கட்டடக்கலைஞர் லூயிஸ் சல்லிவனைத்தான் குறிப்பிட வேண்டும்.
தேரோ , எமர்சன், மெல்வில் போன்றோரின் பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட லூயிஸ் சல்லிவன் சிற்பி ஹொரதியோ கீறினோவுக்குப் பல வருடங்களுக்குப் பின் பிறந்தவர். அவர் 1896இல் எழுதிய 'கலைத்துவ அடிப்படையிலான உயர்ந்த ஆபிஸ் கட்டடம்' (The Tall Office Building Artistically Considered) என்னும் கட்டுரையில் இக்கருதுகோளினை முதன் முதலாகப் பாவித்திருக்கின்றார். இருந்தாலும் தனது இக்கருதுகோளுக்குக் காரணமானவராக அவர் கி.மு 80–70 காலகட்டத்தில் பிறந்து கி.மு 15 ஆண்டளவில் இறந்த புகழ்பெற்ற ரோமன் கட்டடக்கலைஞரான மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ (Marcus Vitruvius Pollio) என்பவரைப் பின்னொரு சமயம் குறிப்பிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மார்க்கஸ் வேர்ட்ருவியஸ் பொலியோ புகழ்பெற்ற 'கட்டடக்கலைபற்றி' என்னும் அர்த்தத்திலான De architectura என்னும் கட்டடக்கலை பற்றிப் பத்துத் தொகுதிகள் அடங்கிய நூலொன்றினை எழுதியிருக்கின்றார். கி.மு காலகட்டத்தில் எழுதப்பட்ட அந்நூலானது கட்டடக்கலை வரலாற்றில் மிகவும் முக்கியமானதோரு நூலாகக் கருதப்படுகின்றது. இந்நூலில் அவர் கட்டடமொன்றின் அமைப்பானது திடம், பயன் மற்றும் அழகு (firmitas, utilitas and venustas) ஆகிய மூன்று முக்கியமான பண்புகளை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
வெயின்ரைட் (The Wainwright Building ) கட்டடம்
கட்டடக்கலைஞரான லூயிஸ் சல்லிவன் 'வடிவமானது எப்பொழுதும் அதன் செயற்பயனைத் தொடரும்' (form ever follows function) என்ற கூற்றினைத்தான் தனது 'கலைத்துவ அடிப்படையிலான உயர்ந்த ஆபிஸ் கட்டடம்' என்னும் கட்டுரையில் பாவித்திருந்தாலும், அக்கூற்றே காலப்போக்கில் எளிமைப்படுத்தப்பட்டு 'வடிவம் அதன் செயற்பயனைத் தொடரும்' (form follows function) என்று பரிணாமடைந்து கட்டடக்கலை உலகில் நிலைத்து நின்று விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உருக்கினாலான உயர்ந்த கட்டடங்களுக்குரிய வடிவினை உருவாக்கியவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வழக்கிலிருந்த பாணிகளை மீறிப் புதிய பாணிகளைச் சூழல் வேண்டி நின்ற வேளையில் , கட்டடமொன்றின் வடிவமானது பழைய கோட்பாடுகளின் அடிப்படையில் (form follows precedent) தெரிவு செய்யப்பட-போவதில்லையென்றால் , கட்டடமொன்றின் வடிவமானது அக்கட்டடத்தின் நோக்கத்துக்கேற்ப , செயற்பயனுக்கேற்பத் (form follows function) தெரிவு செய்யப்பட வேண்டுமென்று லூயிஸ் சல்லிவன் கருதினார். 'செயின்ற்' (புனித) லூயிஸ், மிசூரியிலுள்ள லூயிஸ் சல்லிவன் வடிவமைத்த வெயின்ரைட் (The Wainwright Building ) கட்டடமானது அவரது 'வடிவம் செயற்பயனைத் தொடரும்' கருதுகோளினை வெளிப்படுத்தி நிற்கும் முக்கியமான கட்டடங்களிலொன்றாகும்.
* function என்னும் ஆங்கிலச்சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. ஒரு கட்டடமொன்றின் function என்னும்பொது அது செயற்படுகையில் அதன் பயன் என்னும் அர்த்தத்தைக் கொள்ளலாமென்பதன் அடிப்படையில் இங்கு 'செயற்பயன்' என்னும் சொல்லினைப் பாவித்துள்ளேன்.
'
2. சேதனக் கட்டடக்கலை (Organic Architecture).
ஃப்ராங் லாயிட் ரைட் ( Frank Lloyd Wright)
நவீனக் கட்டடக்கலையின் கோட்பாடுகளிலொன்று சேதனக் கட்டடக்கலை (Organic Architecture). இதன் மூலவர் புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான ஃப்ராங் லாயிட் ரைட் ( Frank Lloyd Wright) . இதனை , இச்சொல்லாட்சியினை், அவர் தனது சூழலுக்கு இயைந்த கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிக் குறிப்பிடுகையில் பாவித்ததன் மூலம் அறிமுகப்படுத்தினார். இதனை இவர் வடிவமானது அதன் செயற்பயனை அல்லது பாவனைப்பயனைத் தொடருமொன்று (form follows function) என்று நம்பிய கட்டடக்கலைஞரும் , ஃப்ராங் லாயிட் ரைட்டின் கட்டடக்கலைத்துறை வழிகாட்டியுமான கட்டடககலைஞர் லூயிஸ் சல்லிவனின் ( Louis Sullivan) கட்டக்கலைக் கருதுகோள்களின் வாயிலாக வந்தடைந்ததாக கட்டடக்கலை விமர்சகர்கள் கருதுவர். மேலும் சிலர் தோரோவின் மீ இறையியல் (Transcendentalism) சிந்தனையே இவரை அதிகம் பாதித்ததாகக் கருதுவர். ஃப்ராங் லாயிட் ரைட் வடிவமும், அதன் செயற்பயனும் ஒன்றென்று (form and function are one.) வாதிடுவார். வடிவம் அதன் செயற்பயனைத்தொடர்வது என்னும் கோட்பாடு அல்லது சிந்தனை நவீனக் கட்டடக்கலையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடோ அத்தகையதொரு கோட்பாடே ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக் கட்டடக்கலை என்னும் கோட்பாடும்.
சேதனக் கட்டடக்கலை என்றால் என்ன?
இதனை ஒரு கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிய நவீனத்துவச் சிந்தனையெனலாம். இச்சிந்தனையான கட்டடமொன்றினை உயிர்த்தொகுதியாக உருவகித்து உயிர் வடிவங்கள் எவ்விதம் அவை அவற்றுக்குரிய உயிர்கள் வாழும் இயற்கைச் சூழலுக்கேற்ப , சூழலுடன் இயைந்து உருவாகினவோ, சூழலுக்கு இணக்கமாக அமைந்துள்ளனவோ அவ்வாறே கட்டடமொன்றின் வடிவமும் (form) , அமைப்பும் (structure) அக்கட்டடம் அமையவுள்ள இயற்கைச்சூழலுக்கேற்பவிருப்பதுடன் , இணக்கமாகவுமிருக்க வேண்டும் என்று எடுத்தியம்புகின்றது. ஆக, சேதனக்கட்டடக்கலையானது கட்டடம் வடிவமைக்கப்படும் வெளியினை அதன் உட்புற, வெளிப்புறங்களுடன் கலந்துவிடும் வகையில் அவற்றுடன் ஒன்றிணைக்கின்றது. இவ்விதமாக உருவாக்கப்படும் கட்டடச்சூழலினை அக்கட்டடம் உருவாகும் இயற்கைச்சூழலிலிருந்து வேறுபடுத்த முற்படாது, அச்சூழலுடன் ஒன்றாகும் வண்ணம் கலந்திருக்க வழி சமைக்கின்றது. ஃப்ராங்ல் லாயிட ரைட் வடிவமைத்த பல கட்டடங்கள் குறிப்பாக அவரது சொந்த இல்லங்கள் (ஸ்பிரிங் கிறீன், விஸ்கான்சின், அரிசோனா போன்ற இடங்களில் அமைந்துள்ள) இவ்விதமான அவரது கட்டடக்கலைச்சிந்தனைபோக்கான சேதனக் கட்டடக்கலைச் சிந்தனையினைப் பிரதிபலிப்பவை. உண்மையில் ஃப்ராங் லாயிட ரைட் கட்டடக்கலைப்பாணிகளைப்பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. ஏனென்றால் அவர் ஒவ்வொரு கட்டடமும் அது அமைந்திருக்கும் இயற்கைச்சூழலிலிருந்து இயல்பாக உருவாக, வளர வேண்டுமென்று திடமாக நம்பினார்.
ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக்கட்டடக்கலை வடிவமைப்பை வெளிப்படுத்தும் கட்டடங்களில் மிகவும் புகழ்பெற்ற கட்டடமாக அவரது 'வீழும் நீர்' என்றழைக்கப்படும் (Fallingwater) வீட்டினைக் குறிப்பிடலாம். தென்மேற்குப் பென்சில்வேனியாவில், இயற்கைச்சூழலுக்கு மத்தியில் 1935இல் அமைக்கப்பட்டுள்ள வீடு அது. லிலியன் காவ்மானும் அவரது கணவரான எட்கர் காவ்மானுக்காகவும் அவர்கள் வார இறுதி நாள்களில் தங்குவதற்காக ஃப்ராங் லாயிட் ரைட்டினால் வடிமைக்கப்பட்ட அவ்வீடானது இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கட்டடடங்களிலொன்றாக, நவீனத்துவக் கட்டடக்கலையின் சிறந்த வெளிப்பாடாகக்கருதப்படுகின்றது. அத்துடன் ஃப்ராங் லாயிட் ரைட் வடிவமைத்த மிகச்சிறந்த கட்டமாகவும் கருதப்படுகின்றது. மலைப்பாங்கான காட்டுப் பகுதியில் நீர்வீழ்ச்சி பாயும் பாறைக்கு மேல், அவ்வியற்கைச்சுழலுடன் இயைந்து போகும் வகையில் இணக்கமாக அமைக்கப்பட்டுள்ள வீடு அது. 1963ஆம் ஆண்டிலிருந்து மேற்குப் பென்சில்வேனிய நகரினால் நூதனசாலையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தற்போது கட்டடக்கலையில் ஆர்வமுள்ள, கட்டடக்கலை கற்க விருப்பமுள்ள உயர்தரப்பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கோடைக்கால முகாம்கள் அங்கு வருடா வருடம் அங்கு நடைபெறுகின்றன. அதன் பொருட்டு அங்கு மேலும் பல இருப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
'வீழும் நீர்' என்றழைக்கப்படும் (Fallingwater) வீடு.
ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக்கட்டடக்கலை வடிவமைப்பை வெளிப்படுத்தும் கட்டடங்களில் மிகவும் புகழ்பெற்ற கட்டடமாக அவரது 'வீழும் நீர்' என்றழைக்கப்படும் (Falling water) வீட்டினைக் குறிப்பிடலாம்.
கட்டடக்கலை வரலாற்றில் நவீனக் கட்டடக்கலைக் கோட்பாடுகளிலொன்றான சேதனக்கட்டடக்கலை வடிவமைப்பை வெளிப்படுத்தும் இக்கட்டடமும், இச்சேதனக்கட்டடக்கலைக் கோட்பாடும் முக்கியமானவை. இக்கோட்பாட்டின் மூலவரான அமெரிக்கக் கட்டடக்கலைஞர் ஃப்ராங் லாயிட ரைட் இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் மிகச்சிறந்த அமெரிக்கக் கட்டடக்கலைஞராகக் கருதப்படுகின்றார். கட்டடக்கலையில் ஆர்வமுள்ள எவரும் அமெரிக்கா செல்லும்போது தவறாமல் சென்று பார்க்க வேண்டியதொரு கட்டடம்தான் இந்த 'வீழும் நீர்' இல்லமும்.
இச்சேதனக் கட்டடக்கலையினை வெளிப்படுத்தும் வடிவமைப்புடன் அமைக்கப்பட்ட அண்மைக்காலக் கட்டடங்களிலொன்று புதி தில்லி, இந்தியாவில் அமைந்துள்ள் தாமரை ஆலயத்தினைக் ( Lotus Temple, India; Architect: Fariborz Sahba - Iranian-Canadian -) குறிப்பிடலாம். இதனை வடிமைத்தவர் ஈரானியக் கனடியக் கட்டடக்கலைஞரான Fariborz Sahba என்பவர். பெரியதொரு தாமரை மலர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இக்கட்டமானது அனைத்து மதப்பிரிவினரும் வந்து வணங்கும் பஹாய் இல்லமாகும் (Bahai House).
3. 'குறைவில் நிறையச் (Less is more) சாதித்த கட்டடக்கலைஞர் லட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies Van der Rohe)
லட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies Van der Rohe)
ஜேர்மனியில் பிறந்து 1938இல் அமெரிக்கா குடிபுகுந்து அமெரிக்காவில் நவீனத்துவக்கட்டடக்கலையின் முக்கிய கட்டடக்கலைஞராக விளங்கியவர் 'லட்விக் மீஸ் வான் டெர் ரோ' (Ludwig Mies Van der Rohe). இவர் தனது கட்டடக்கலைத் தொழிலை ஜேர்மனியில் ஆரம்பிப்பதற்கு முன்னர் அமெரிக்கக் கட்டடக்கலைஞரான பீட்டர் பெஹ்ரென்ஸுடன் (Behrens) பணி பழகுநராகச் சேர்ந்து தன் கட்டடக்கலைத் தொழிலினை ஆரம்பித்தவர்.
கனடியர்களுக்குக் குறிப்பாகட்த் தொரோண்டோ வாசிகளுக்கு மீஸ் வான் டெர் ரோ என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது நகரின் வர்த்தக மையத்தில் உயர்ந்து நிற்கும் TD centre (1964)
தான். இதுபோல் அமெரிக்க வாசிகளுக்கு, குறிப்பாக நியுயார்க் வாசிகளுக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது அவரது சீகிரம் கட்டடம்தான் (Seagram Building 1958). இவ்விரு கட்டடங்களைப் பார்த்ததுமே இவரின் தனித்தன்மை உடனே புலப்படும்.
இவர் உருக்குச் சட்டங்கள் (Steel Frames), கண்ணாடி (Glass) போன்ற புதிய கட்டடப்பொருட்களைப் பாவிப்பதில் முன்னோடிகளிலொருவராக விளங்கினார். அதில் மிகுந்த தெளிவுடனிருந்ததுடன் தனது பாணியினை 'தோலும், எலும்பும்' (Skin and Bones) என்றும் அழைத்தார். தேவையற்ற கட்டட அலங்காரங்களை இவர் தவிர்த்ததுடன் , கட்டடங்களின் உள்வெளியினை (interior space) முழுமையாக, தேவைக்கேற்ப திரைச்சுவர்கள் (curtain walls) மூலம் பிரித்துப் பாவிக்கும் வகையில் தனது கட்டட வடிவமைப்புகளை உருவாக்கினார்.
1929இல் பார்சலோனா கண்காட்சியிலிருந்த ஜேர்மன் விளையாட்டரங்கில் பச்சைக்கண்ணாடிகளைக் கொண்டு வடிவியல் ஒழுங்கில் பச்சைக் கண்ணாடி, பளிங்குக் கல் (marble), 'குரோம்' தூண்கள் (chrome columns), ஒனிக்ஸ் எனப்படும் ஒருவகை இரத்தினக் கல், இத்தாலி நாட்டில் காணப்படும் travertine என்னும் ஒருவகைக் கிறிஸ்டல் அல்லது படிகக் கல் ஆகியவற்றைப் பாவித்து அமைக்கப்பட்ட தளங்கள் (planes) ஆகியவற்றைப் பாவித்திருக்கின்றார் இவர்.
இவரது புகழ்மிக்க கட்டடமான சீகிரம் கட்டடம் எளிமையானதும், பொதுவாகத் தேவையற்ற (superfluous) மிதமிஞ்சிய அலங்காரங்களால் மறைக்கப்பட்டிருக்கும் நிலை தவிர்க்கப்பட்டு கட்டுமான உறுப்புகள் (structural elements) வெளியில் தெரியும் வகையில் அமைந்த வானுயரக் கட்டடங்கள் உருவாவதற்குரிய புதிய சகாப்தமொன்றினைக் கட்டடக்கலை வரலாற்றில் உருவாக்கி வைத்ததெனலாம்.
சீகிரம் கட்டடம் (Seagram Building)
லட்விக் மீஸ் வான் டெர் ரோ என்றதும் புகழ்பெற்ற இன்னுமொரு சொற்றொடரும் நினைவுக்கு வரும். அது குறைவே நிறைய என்னும் அர்த்தத்தைத்தரும் Less is more என்னும் சொற்றொடராகும். இச்சொற்றொடரைத்தாம் முதலில் தனது கட்டடக்கலைக் குருவான பீட்டர் பெஹ்ரென்ஸிடமிருந்து தான் கேட்டதாகக் கூறுமிவர் அவர் அதனைப்பாவித்த அர்த்தம் வேறு. தான் பாவித்த அர்த்தம் வேறென்றும் கூறுவார். தான் அவரிடம் பணி புரிந்த காலகட்டத்தில் ஒருமுறை தொழிற்சாலையொன்றின் முகப்புக்கான வடிவமைப்புகளாகப் பல வரைபடங்களைக் குருவான பீட்டர் பெஹ்ரென்ஸிடம் காட்டியபோது அவர் குறைவானதே அதிகம் என்னும் அர்த்தத்தில் அத்தொடரைப் பாவித்ததாக ஒருமுறை நினைவு கூர்ந்திருக்கின்றார். ஆனால் லட்விக் மீஸ் வான் டெர் ரோ கட்டடமொன்றின் தேவையற்ற அலங்காரங்களை ஒதுக்கி, மிகவும் எளிமைப்படுத்தி, கண்ணாடி, உருக்கும் மற்றும் திரைச்சுவர்களைப் மற்றும் புதிய கட்டடப்பொருட்களைப் பாவித்து காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புதியதொரு கட்டடக்கலைப்பாணியின் அறிமுகப்படுத்தினார். பழைய பாணிக் கட்டடக்கலையிலிருந்து அதிகமாகப்பாவிக்கப்பட்ட மிதமிஞ்சிய தேவையற்ற அலங்காரங்களையெல்லாம் குறைத்து, மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட நவீன வானுயரக் கட்டடங்களை அமைத்ததைக் குறிப்பிடுதற்கே 'குறைவில் நிறைய' (Less is more) என்னும் சொற்றொடரினைப் பயன்படுத்தினார்.
இவர் பெயரைக்கூறும் பல வானுயரக் கட்டடங்கள் பல்வேறு நாடுகளிலுள்ளன. கட்டடங்கள் தவிர தளபாட வடிவமைப்பிலும் காத்திரமான பங்களிப்பினை நல்கியவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விதமான புதியதொரு கட்டடக்கலைப்பாணியினைக் காலத்துக்கேற்ப அறிமுகப்படுத்திய லட்விக் மீஸ் வான் டெர் ரோ நவீனக் கட்டடக்கலையின் மூலவர்களில் முக்கியமான ஒருவர் என்னும் கூற்று மிகையானதொரு கூற்றல்ல.
4. லெ கொபூசியேவின் (Le Corbusier) நவீனக்கட்டடக்கலைக் கருதுகோள்கள்!
நவீனக்கட்டடக்கலையின் முன்னோடிகளில் பன்முகத்திறமை வாய்ந்த ஆளுமைகளில் முதன்மையானவர் சுவிஸ்-பிரான்ஸ் கட்டடக்கலைஞரான லே கொபூசியே. சுவிஸில் பிறந்து பிரான்சு நாட்டின் குடிமகனானவர் இவரின் இயற்பெயர் சார்ள்ஸ் எடுவார்ட் ஜென்னெரெ Charles-Édouard Jeanneret. நகர அமைப்பு, கட்டடக்கலை, ஓவியம், தளபாட வடிவமைப்பு , எழுத்து எனப்பன்முகத்திறமை வாய்ந்த ஆளூமை மிக்கவர் இவர். உலகின் பல நாடுகளிலும் ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிலெல்லாம் இவரது கை வண்ணம் மிளிர்கிறது. சுதந்திர இந்தியாவில் முதன் முதலாகப் புதிதாக அமைக்கப்பட்ட சண்டிகார் நகர வடிவமைப்பினை அமைத்தவர் இவரே. அத்துடன் அந்நகரிலுள்ள பல முக்கியமான கட்டடங்களையும் வடிவமைத்தவரும் இவரே.
நவீனக் கட்டடக்கலையில் முன்னோடிகளில் முக்கியமான எனக்குப் பிடித்த ஆளுமைகளாக ஃப்ராங் லாயிட் ரை (Frank Lloyd Wright ) , மீஸ் வான்ட ரோ (Mies van der Rohe) , லி கொபூசியே ஆகியோரையே குறிப்பிடுவேன். இவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவராக நான் கருதுவது லி கோபுசியேயைத்தான். அதற்குக் காரணம் இவரது பன்முகத் திறமையும், படைப்பாக்கத்திறனும், சீரிய சிந்தனை மிக்க எழுத்துகளும்தாம். இம்மூவரும் முறையாகக் கல்விக்கூடங்களில் கட்டடக்கலைத்துறையில் கற்று கட்டடக்கலைஞராக வந்தவர்களல்லர். தம் சொந்தத் திறமையினால் , அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற பயிற்சிகள் மூலம், இத்துறை சார்ந்த பாடங்கள் மூலம் தம் கட்டடக்கலையாற்றலை வளர்த்துச் சாதித்தவர்கள். முறையாகக் கர்நாடக சங்கீதம் கற்காமல் வந்து சிறந்த பாடகர்களாக விளங்கும் பாடகர் பாலசுப்பிரமணியம் போன்று , தம் சொந்தத்திறமை காரணமாகச் சிறந்து விளங்கியவர்கள்.
லி கொபூசியே என்றால் முதலில் நினைவுக்கு வருபவை அவரது புகழ்பெற்ற கூற்றான " ஒரு வீடானது வாழ்வதற்குரிய இயந்திரம்" ("A house is a machine to live in"), என்னும் கூற்றும், நவீனக் கட்டடக்கலையில் கட்டட வடிவமைப்பு சார்ந்து அவர் கொண்டிருந்த ஐந்து முக்கிய கருதுகோள்களும் ஆகும். ஒரு வீடானது வாழ்வதற்குரிய இயந்திரம் என்னும் அவரது கூற்றின் முக்கிய அர்த்தம் என்னவெனில் ஒரு வீட்டின் சகல உறுப்புகளுமே மனித வாழ்வின் தேவைகளைத் தீர்ப்பதற்கான இயந்திரங்களே என்பதுதான். குளியல் அறை, சமையலறையிருந்து அனைத்து அறைகளுமே இயந்திரங்கள்தாம். இவ்விதமான பல இயந்திரங்களை உள்ளடக்கிய பெரும் இயந்திரமே ஒரு வீடு என்னும் அர்த்தத்தையே இவரது கூற்றான " ஒரு வீடானது வாழ்வதற்குரிய இயந்திரம்" என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது.
அடுத்து நவீனக் கட்டடக்கலையில் கட்டடமொன்றின் வடிவமைப்பைப்பொறுத்தவரையில் லி கொபூசியேயின் ஐந்து பிரதான கருதுகோள்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
1. தரைத்தளத்திலிருந்து கட்டடமொன்றினை உயர்த்திப்பிடிக்கும் தூண்கள் (Pilotis): உருக்குக் கம்பிகளினால் அல்லது உருக்கு வலையினால் வலிதாக்க்கப்பட்ட காங்கிரீட்டினால் ஆன தூண்கள். (Reinforced Concrete). இவ்விதமாகக் கட்டடமானது அதன் தரைத்தளத்திலிருந்து உயர்த்திப்பிடிக்கும் தூண்களினால் உயர்த்திப்பிடிக்கும் வகையில் கட்டடங்கள் அமையும்போது, அதனால் உருவாகும் வெளியினால் அதிக வெளிச்சம் அப்பகுதிக்குக் கிடைக்கின்றது. வாகனத்தை நிறுத்த அல்லது மேலும் பல தேவைகளுக்கு அவ்வெளியினைப் பயன்படுத்தும் நிலை உருவாகின்றது.
2. தளத்தரையின் சுதந்திரமான கட்டுப்பாடற்ற திறந்த வெளி வடிவமைப்பு (Open Floor Plan) : கட்டடமொன்றின் நிறையினைத்தாங்குவதற்கு வலிய தூண்கள் இருப்பதால் , முன்பிருந்ததைப்போல் சுவர்கள் மூலம் கட்டடமொன்றின் நிறையினைத்தாங்கும் நிலைக்கு விடுதலை கிடைக்கின்றது. இதனால் கட்டடமொன்றின் உள்வெளியினை (Interior Space) விரும்பியவாறு , எவ்வித நிர்ப்பந்தங்களுமற்று வடிவமைக்கும் நிலை உருவாகின்றது.
3. சுதந்திர வடிவமைப்புக்கு இடம் தரும் முகப்பு (The free design of the façade ): கட்டடமொன்றினை பாரம் தாங்குவதைத் தூண்களை உள்ளடக்கிய கட்டுமான அமைப்பு செய்வதால், கட்டடமொன்றின் வெளிப்புறத்தை அதாவது வெளிப்புறச்சுவரினை கட்டட நிறையினைத் தாங்குவது போன்ற அதன் கட்டுமானத்தேவைக்கான பொறுப்பிலிருந்து விடுவிக்கின்றது. இதனால் வெளிப்புறத்தையும் விரும்பியவாறு வடிவமைக்கும் சுதந்திரம் கட்டடக்கலைஞர் ஒருவருக்கு ஏற்படுகின்றது.
4. நீண்ட கிடை ஜன்னல்கள் (The horizontal window): சுவர்கள் கட்டடமொன்றின் பாரம் தாங்கும் பொறுப்பிலிருந்து தவிர்க்கப்படுவதால் அச்சுவர்களையும், அச்சுவர்களில் அமையக்கூடிய ஜன்னல்களையும் சுதந்திரமாக வடிவமைக்க முடியும். நீண்ட கிடை ஜன்னல்களை அமைப்பதன் மூலம் கட்டடத்துக்கு வடிவு மட்டுமல்ல, உள்ளிருந்து பார்ப்பதற்கு நீண்ட கண்ணாடி ஜன்னல்கள் உதவுகின்றன. அத்துடன் உள்புறம் அதிக அளவில் வெளிச்சமும் கிடைக்கும் வழியேற்படுகின்றது.
5. கூரைத்தோட்டம் (roof garden ): சாய்வான கூரைகளுக்குப் பதில் அமைக்கப்படும் காங்கிரீட்டினாலான கிடையான் கூரைகளின் மேல் கூரைட்த்தோட்டங்கள் அமைப்பதால் பல நன்மைகளுள்ளன. ஒன்று கட்டடமொன்றினைக் கட்டுவதால் எடுக்கப்பட்ட நிலத்தின் பகுதியினை ஈடு செய்வதாக முடிகின்றது. அடுத்தது கிடையான காங்கிரீட் கூரைகளுக்கு பாதுகாப்பினையும் வழங்க முடிகின்றது. இவை போன்ற பயன்களுடன் தோட்டங்கள் மானுடருக்கு இன்பத்தினையும் தருகின்றன.
லி கொபூசியே வடிமைத்த பாரிஸிலுள்ள வீடான வில்லா சவோஜ் (Villa Savoge) லி கோபூசியேயின் நவீனக்கட்டடக்கலை பற்றிய ஐந்து கருதுகோள்களையும் உள்ளடக்கிய, சர்வதேசபாணியிலமைந்த நவீனக்கட்டடக்கலையின் மிகச்சிறந்த உதாரணமாகக் குறிப்பிடக்கூடிய கட்டடம்.
வில்லா சவோஜ் (Villa Savoge)
லி லொபூசியேயின் இவ்வைந்து நவீனக்கட்டடக்கலை பற்றிய கருதுகோள்களையும் வெளிப்படுத்தும் வகையில் அவரது கட்டடங்கள் அமைந்திருந்தன. நவீனக்கட்டடக்கலையின் சர்வதேசப் பாணியின் (Internattional Style) பிரதான பண்புகளாக தேவையற்ற அலங்காரங்களற்ற கட்டடக்கூறுகள், வளைவுகளற்ற நேர்க்கோடுகளில் அமைந்த தளங்கள், சுவர்களையுள்ளடக்கிய வடிவமைப்பு, ஒளி வழங்கும் நீண்ட கண்ணாடி ஜன்னல்கள், நவீன கட்டடப்பொருட்களாலான கண்ணாடி, வலுவூட்டப்பெற்ற காங்கிரீட் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட கட்டடங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். லி கோபூசியேயின் கட்டடங்கள் இவ்வகையான பாணியிலமைந்த கட்டடங்களுக்கு மிகச்சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன.
உசாத்துணை விபரங்கள்
1 . Le Corbusier's Five Points of Architecture - http://www.geocities.com/rr17bb/LeCorbusier5.html
2. Wikipedia: Le Corbusier's Five Points of Architecture - https://en.wikipedia.org/wiki/Le_Corbusier%27s_Five_Points_of_Architecture
3. காணொளி: VIDEO: Villa Savoye, The Five Points of a New Architecture by Karissa Rosenfield - https://www.archdaily.com/430550/video-le-corbusier-s-five-points-of-architecture
4. book: Towards A New Architecture_ https://monoskop.org/images/b/bf/Corbusier_Le_Towards_a_New_Architecture_no_OCR.pdf
5. Wikipedia notes on Modern Architecture
6. A history of architecture by by Fletcher, Banister
7. Organic Architecture as a Design Tool Frank Lloyd Wright's Natural Harmony by Jackie Craven
8. Examples of Organic Architecture Buildings Concept Characteristic By Jay Amrutia
9. Frank Lloyd Wright integrated architecture into nature at Fallingwater by Eleanor Gibson
10. Organic architecture From Wikipedia, the free encyclopedia
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நன்றி: அபத்தம் (இணைய இதழ்) வைகாசி 2023