'எழுநா' இணையத்தளத்தில் வெளியான கோப்பாய்க் கோட்டை பற்றிய எனது கட்டுரை. இதனை https://ezhunaonline.com/article/kopay-fort/ என்னும் இணைய இணைப்பில் வாசிக்கலாம். - வ.ந.கி -
தமிழர்களின் இராஜதானியாக நல்லூர் விளங்கிய பதினாறாம் நூற்றாண்டில், இராஜதானியில் அமைந்திருந்த பிரதான கோட்டைக்குப் பாதுகாப்பாக மூன்று சிறு கோட்டைகள் கொழும்புத்துறை, பண்ணைத்துறை மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களில் அமைந்திருந்தன. இவற்றைப் பிரதான கோட்டையுடன் இணைக்கும் பிரதான வீதிகளில் காவலரண்களும் அமைக்கப்பட்டிருந்தன. கொழும்புத்துறை, பண்ணைத்துறை ஆகியவை துறைமுகங்களாகவும் விளங்கின. இவற்றில் கோப்பாயில் அமைந்திருந்த கோட்டை பற்றி விபரிக்கின்றது இந்தக் கட்டுரை.
எண்பதுகளில் இக்கட்டுரையாசிரியர் தனது ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ பற்றிய ஆய்வின்பொருட்டுப் பேராசிரியர் கா. இந்திரபாலாவை யாழ். பல்கலைக்கழகத்தில் சந்தித்தபோது அவர் , ’சுவாமி ஞானப்பிரகாசர் பல வருடங்களுக்கு முன்னரே கோப்பாய்க் கோட்டை பற்றியும், அது இருந்ததாகக் கருதப்படும் இடம் பற்றியுமொரு கட்டுரையொன்றினை ஆய்விதழொன்றில் எழுதியிருப்பதாகவும், அது யாழ். பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் இருப்பதாகவும் ’ குறிப்பிட்டிருந்தார். அந்தக் கட்டுரை ஜனவரி 1917 இல் வெளியான Ceylon Antiquary and Literary Register என்னும் வரலாற்றிதழின் 194, 195ஆம் பக்கங்களில் ‘Sankily’s Fortress at Kopay’ (சங்கிலியின் கோப்பாய்க் கோட்டை) என்னும் தலைப்பில் வெளியாகியிருந்த கட்டுரை. கோப்பாய்க் கோட்டை பற்றிய ஆய்வுகள் செய்யும் எவரும் அந்தக்கட்டுரையினைத் தவறவிட முடியாது. அத்துணை முக்கியத்துவம் மிக்க கட்டுரை அது. அதிலவர் போர்த்துகேய வரலாற்றாசிரியரான தியாகோ தோ கூத்தோ (Diego do Couto) கொன்ஸ்தந்தீனு த பிறகன்சா என்னும் போர்த்துகேயத் தளபதிக்கும், யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசன் செகராசசேகரனுக்கும் (இவனே முதலாம் சங்கிலி என்பது வரலாற்றாய்வாளர் கருத்து) நல்லூரில் நடந்த போரின் போது சங்கிலி கோப்பாயில் அமைந்திருந்த கோட்டைக்கு ஓடியது பற்றியும், அந்தக் கோட்டை பற்றியும் குறிப்பிட்டிருந்ததைச் சுவாமி ஞானப்பிரகாசர் பின்வருமாறு சுட்டிக்காட்டுவார்:
“கோப்பாய்க் கோட்டையானது சுடாத செங்கற்களானது. அதன் கொத்தளங்கள் (Bastions), கூண்டுக் கோபுரங்களுடன் (Turrets) சிறப்பாகவும், உறுதியாகவும் கட்டப்பட்டிருந்தது” (கூத்தோ) (‘சங்கிலியின் கோப்பாய்க் கோட்டை’, ‘பக்கம் 194)
அத்துடன் வேர்ணாவோ டி குவேறாஸ் சுவாமிகளின் (Fernao De Queyrcz) கோப்பாய்க் கோட்டை பற்றிய குறிப்புகளின் அடிப்படையில் வரலாற்றாசிரியர் P. E. பீரிஸ் சங்கிலியின் பாதுகாப்பிடம் கோப்பாயிலேயே இருந்திருக்க வேண்டுமென்று கருதுவதையும் சுட்டிக்காட்டுவார் சுவாமி ஞானப்பிரகாசர். வேர்ணாவோ டி குவேறாஸ் சுவாமிகளின் குறிப்புகளில் கிறிஸ்தவ ஆலயம் யாழ். மன்னனின் இருப்பிடத்தில் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருக்கும் தகவலின் அடிப்படையில் சுவாமி ஞானப்பிரகாசர் அவ்விடத்தைக் கண்டுபிடித்து அங்கு செல்கின்றார். அப்பகுதியானது மானிப்பாய்- கைதடிச் சந்திக்குக் கிழக்காக, பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். அக்காணியின் பெரும் பகுதி திருமதி C.வேர்ட்ஸ்வேர்த் (Mrs.C.Wordsworth) என்பவருக்குச் சொந்தமாகவிருந்தது. அக்காணியின் பெயர் கோயில் வளவு என்று அழைக்கப்பட்டது. அங்கு ஃபிரான்சிஸ்கான் கிறிஸ்தவ ஆலயம் (Franciscan Church) கட்டப்பட்டபின்பு அப்பெயர் வந்தது. அப்பகுதி 1880இற்கு முன் C.M.S மிஷனுக்குச் சொந்தமாகவிருந்ததென்றும், சிம்மொன்ஸ் சுவாமிகளால் (Rev.Mr.Syammons) திருமதி வேர்ட்ஸ்வேர்த்துக்கு விற்கப்பட்ட விபரங்களையும் சுவாமி ஞானப்பிரகாசரின் மேற்படி கட்டுரை அறியத் தருகின்றது. கோட்டை அமைந்திருந்த காணி சுமார் பத்து ஏக்கரென்றும், அதன் 6/10 பகுதி C.M.S மிஷனுக்குச் சொந்தமாக இருந்ததென்றும், அப்பகுதியையே மிஷன் ,திருமதி வேர்ட்ஸ்வேர்த்துக்கு விற்றதென்றும் மேற்படி கட்டுரை விபரிக்கின்றது.
இக்காணியில் யாழ். மன்னர்களின் கோட்டை அழிக்கப்பட்டு கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டு, கூடவே ஆலயத்துக்குரிய இல்லமொன்றும் கட்டப்பட்டது. இந்த ஆலயம் பின்னர் ஒல்லாந்தர் காலத்தில் கவனிப்பாரற்று சிதைந்து போயிற்று. இந்த ஆலய இல்லத்தின் (Church House) இடிபாடுகளுக்கு மேல்தான் திருமதி வேர்ட்ஸ்வேர்த்தின் இல்லம் கட்டப்பட்டது என்பதை சுவாமி ஞானப்பிரகாசரின் மேற்படி கட்டுரை தெரிவிக்கின்றது. இதற்கு அவருக்கு உதவியது ஒல்லாந்தச் சுவாமியான பிலிப்பஸ் பால்டேயஸின் (Rev.Philippus Baldaus) நூலிலிருந்த போர்த்துக்கேயரின் கிறிஸ்தவ ஆலய வரைபடங்கள். இச்சுவாமியே ஒல்லாந்தர் முதலில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது அவர்களுடன் வந்திருந்த கிறிஸ்தவ சுவாமியாவார். இவர் அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பெரும்பாலான போர்த்துக்கேயரின் கிறிஸ்தவ ஆலயங்களின் வரைபடங்களைத் தனது புகழ்பெற்ற நூலான ‘மலபார், கொரொமண்டெல் மற்றும் சிலோன்’ (Malabar, Coromandel and Ceylon) என்னும் நூலில் உள்ளடக்கியுள்ளார். பிலிப்பஸ் பால்டேவியஸ் சுவாமிகளின் ஒல்லாந்த மொழியிலான மூல நூல் 1672 இல் அம்ஸர்டாமில் பிரசுரிக்கப்பட்டதாகவும், அதன் ஆங்கில வடிவம் 1703இல் வெளியானதாகவும் மேற்படி தனது கட்டுரையில் சுவாமி ஞானப்பிரகாசர் குறிப்பிடுவார்.
அந்த வரைபடங்களிலிருந்த ‘ஆலய இல்லத்தின் வரைபடத்தின் அடிப்படையில் திருமதி வேர்ட்ஸ்வேர்த்தின் இல்லத்தை ஆராய்ந்து பார்த்த சுவாமி ஞானப்பிரகாசர் ‘ஆலய இல்லத்தின் ஒரு சுவர் இன்னும் முழுமையாக திருமதி வேர்ட்ஸ்த்தின் இல்லத்திலிருப்பதை அவதானிக்கின்றார். அத்துடன் பழைய ‘ஆலய இல்லத்தின் அறையொன்றின் அத்திவாரத்தின் மீது திருமதி வேர்ட்ஸ்வேர்த்தின் இல்லம் கட்டப்பட்டுள்ளதையும் அவதானிக்கின்றார். இவ்விதமாக மேற்படி கட்டுரை கோப்பாய்க் கோட்டை அமைந்திருந்த பகுதியில் போர்த்துக்கேயரால் கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயம் பற்றியும், ‘ஆலய இல்லம்’ பற்றியும் பல தகவல்களைத் தருகின்றது.
மேற்படி கட்டுரையில் மேலும் பல வரலாற்று முக்கியத்துவம் மிக்க தகவல்களையும் சுவாமி ஞானப்பிரகாசர் சுட்டிக்காட்டுவார். கோப்பாய்ப் பகுதி மக்களால், திருமதி வேர்ட்ஸ்வேர்த்தின் இல்லம் அமைந்திருந்த பகுதி ‘பழைய கோட்டை’ (The Old Castle) என்று அழைக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டிய ஞானப்பிரகாசர் திருமதி வேர்ட்ஸ்வேர்த்திடம் “அதற்கான காரணம் தெரியுமா?” என்று கேட்கின்றார். அதற்கவர் “தெரியாது” என்கின்றார். அதற்கு ஞானப்பிரகாசர் “தமிழ் மன்னர்களின் கோட்டை இங்கிருந்தது. சங்கிலி போர்த்துகேயருக்கெதிராக இங்கிருந்துதான் போராடினான்” என்கின்றார்.
அத்துடன் மேற்படி பழைய கோட்டையைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதி ‘கோட்டை வாய்க்கால்’ என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டும் ஞானப்பிரகாசர் அது கோப்பாய்க் கோட்டையின் அகழி என்று அடையாளப்படுத்துவார். இவ்வரிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க தகவல்களைத் தருகின்றது,சுவாமி ஞானப்பிரகாசரின் 1917இல் எழுதப்பட்ட மேற்படி கோப்பாய்க் கோட்டை பற்றிய கட்டுரை.
இந்தக்கோட்டை பற்றித் தனது ‘யாழ்ப்பாண வைபவ விமர்சனம்’ நூலிலும் சுவாமி ஞானப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளார். அதனையும் ஆவணப்படுத்தும் பொருட்டு இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதும், நியாயமானதுமாகும்:
“நல்லூர்க் கோட்டை அக்காலப் போருக்குப் போதிய பலமுள்ளதாகவிருந்தமையால் செகராசசேகரன் அதிலிருந்து போர் தொடுப்பானெனப் பறங்கியர் காத்திருந்தனர். ஆயின் அர்த்தசாமத்தில் அவன் தன் திரவியங்கள் அனைத்தையும் அள்ளிக்கொண்டு அரண்மனைக்கும் நெருப்பு வைத்திட்டுக் கோப்பாய்க் கோட்டைக்கு ஓட்டம் பிடித்தான். இது ‘சுடாத செங்கற்களால் நன்றாய்ச் சமைக்கப்பட்டுக் கொத்தளங்களோடும், உருண்டைக் கோபுரங்களோடும் கூடியதாய் நயமான பெலனுள்ளதாய்’ விளங்கியது. (Couto) இதன் நிலையம் மானிப்பாய்க் கைதடித் தெருவும், யாழ்ப்பாணப் பருத்தித்துறைத் தெருவும் குறுக்கிடுஞ் சந்திப்பின், வடகிழக்குக் கோணத்தில் தற்காலம் ஶ்ரீ வேர்ட்ஸ்போத் குடும்பத்தினரது ஆட்சியிலிருக்கும் ‘பழைய கோட்டை’ எனும் வளவாமென எம்மால் சில ஆண்டுகளின் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது. (‘யாழ்ப்பாண வைபவ விமர்சன், பக்கம் 127 & 128)”
கோப்பாய்க் கோட்டை பற்றி சுவாமி ஞானப்பிரகாசருக்குப் பின்னர் எழுதப்பட்ட தனிக்கட்டுரையாக ‘கோப்பாய் பழைய கோட்டையின் கோலம்’ என்னும் தலைப்பில் 15.3.1981 அன்று வெளியான வீரகேசரி வாரவெளியீட்டில் இந்தக்கட்டுரையாசிரியர் வ.ந.கிரிதரன் எழுதிய கட்டுரையைக் குறிப்பிடலாம். வேறு யாராவது 1917 – 1981 காலகட்டத்தில் எழுதியிருப்பதாகத்தெரியவில்லை. கலாநிதி கா.இந்திராபாலவுடனான சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டிருந்த சுவாமி ஞானப்பிரகாசரின் ‘கோப்பாய்க் கோட்டை’ கட்டுரையை வாசித்ததிலிருந்து அதனை நேரில் சென்று பார்க்கவேண்டுமென்ற பேரார்வம் இக்கட்டுரையாசிரியருக்கு எழுந்தது. அதனால் அப்பகுதியைச் சென்று பார்த்து, அதன் நிலை கண்டு வருந்தி அவர் எழுதிய கட்டுரை அது.
அவ்விதம் கோப்பாய் சென்று கோப்பாய்ப் பொலிஸ் ஸ்டேசனுக்கு முன்பாயுள்ள ’சேர்ச்சைச்’ சேர்ந்த சற்குணசிங்கம் என்பவரைச் சந்தித்தபோது அவர் மானிப்பாய் கைதடிச் சந்திக்குச் சற்று அப்பால் வீதியின் வலது புறமாக இருந்த ஒரு பழமையான வாயில் முகப்பை காட்டி ‘இதுதான் பழையகோட்டை’ (Old Castle) என்றார். அதன் வாயில் முகப்பில் Old Castle என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. சுவாமி ஞானப்பிரகாசரின் 1917 கட்டுரையில் அம்முகப்பில் அவ்விதம் குறிப்பிடப்படாததால் அவ்வாயில் முகப்பு அதற்குப் பின்னர் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இக்கட்டுரையாசிரியர் சென்றிருந்தபோது ‘பழைய கோட்டை’ என்றழைக்கப்பட்ட அக்காணி மேலும் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்பட்டிருந்தது. எஞ்சிய பகுதி மட்டும் விற்கப்படாமல் திருமதி வேர்ட்ஸ்வேர்த் குடும்பத்தினருக்குச் சொந்தமாகவிருந்தது. தற்போது அப்பகுதி அடையாளம் தெரியாத வகையில் மாறிவிட்டது.
அக்காணியில் வேம்பொன்றை வெட்டும்போது எலும்புத் துண்டுகள் அகப்பட்டதையும், நிலத்தில் காணப்படும் செங்கற்களையும் சற்குணசிங்கம் எடுத்துரைத்தார். அத்துடன் ‘நல்லூர்க் கோட்டையையும், கோப்பாய்க் கோட்டையையும் இணைக்கும் ஒரு சுரங்கப்பாதை இருந்ததாக ஒரு கதை உள்ளது’ என்றும் கூறினார். சுவாமி ஞானப்பிரகாசர் குறிப்பிட்ட கோட்டை வாய்க்கால் ‘பழைய கோட்டை’ காணியின் அருகிலுள்ள சிறிய ஒழுங்கை. அந்த ஒழுங்கை வயலுடன் முடிவடைகின்றது. கோட்டை வாய்க்கால் பகுதி ‘பழைய கோட்டை’ காணிப்பகுதியைவிடத் தாழ்வானதாக அமைந்துள்ளது. சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் இந்தக் கோட்டை வாய்க்காலையே பழைய கோட்டையின் அகழியாகக் கருதுகின்றார்.
கோட்டை வாய்க்கால் முடியுமிடத்திலிருந்த வயலில் பயிர் விளைவிக்கும் விவசாயி ஒருவரையும் அந்த விஜயத்தின் போது சந்திக்க முடிந்தது . ‘மண்ணைக் கொத்துகையில் எலும்புகள் கிடைத்ததாக ‘ அவர் கூறினார்.
ஒரு காலத்தில் தனிச்சிறப்புப் பெற்று விளங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தப்பகுதி, சுவாமி ஞானப்பிரகாசரால் ஆய்வுகள் மூலம் அடையாளம் காணப்பட்ட பிரதேசம், இன்று நகரமயமாக்கலில் காணாமலே போய்விட்டது துரதிருஷ்டவசமானது, வருந்தத்தக்கது. அடையாளம் காணப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைக் கூடப் பாதுகாக்க முடியவில்லையென்பதை என்னவென்பது?
கோப்பாய்க் கோட்டை பற்றி முனைவர் பொ. ரகுபதியின் தனது முனைவர் பட்ட ஆய்வேடான Early Settlements in Jaffna (யாழ்ப்பாணத்தின் ஆரம்பக் குடியிருப்புகள்’) நூலில் கோப்பாய்க் கோட்டை பற்றிய இரு பக்கக் கட்டுரையுள்ளது. அது தற்போது இராசமாளிகை என்றழைக்கப்படும் காணித்துண்டொன்று பற்றிய தகவற் கட்டுரையே. இக்கட்டுரையில் கோப்பாய் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றன. ஓரிடத்திலும் சுவாமி ஞானப்பிரகாசரின் 1917இல் எழுதப்பட்ட கோப்பாய்க் கோட்டை பற்றிய கட்டுரை பற்றியோ, கோப்பாய்க் கோட்டை இருந்த இடம் பற்றிய அவரது ஆய்வு முடிவுகள் பற்றியோ குறிப்பிடப்படாதது ஆச்சரியமளிக்கின்றது.
மேலும் இராசமாளிகை என்று இவர் குறிப்பிடும் பகுதிக் காணி ‘பழையகோட்டை’ (Old Castle) என்றே அவ்வூர் மக்களால் அழைக்கப்பட்டு வந்ததை 1917இல் வெளியான சுவாமி ஞானப்பிரகாசரின் கட்டுரையும் அவ்வாறே குறிப்பிடுகின்றது. 1981 இல் இப்பகுதிக்கு இக்கட்டுரையாசிரியர் சென்றபோது வாயில் முகப்பில் Old Castle என்று எழுதப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார். அங்கு தமிழ் மன்னரின் அரண்மனை அழிந்த பின்னர் போர்த்துக்கேயர் கட்டிய கிறிஸ்தவ ஆலயமிருந்த காரணத்தால் இக்காணியின் பெயர் ‘கோயில் வளவு’ என்றழைக்கப்பட்டதையும் சுவாமி ஞானப்பிரகாசர் தனது 1917இல் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இவற்றை முனைவர் பொ. ரகுபதி தவறவிட்டிருப்பது அவர் மேற்படி சுவாமி ஞானப்பிரகாசரின் கோப்பாய்க் கோட்டை பற்றிய ஆய்வுகளை அறியவில்லையோ என்னும் சந்தேகத்தைத் தருகின்றது.
தமிழ் மன்னர்களின் காலத்தில் பிரதான கோட்டையான நல்லூர்க் கோட்டைக்குப் பாதுகாப்பாக மேலும் மூன்று கோட்டைகள் கோப்பாய், பண்ணைத்துறை, கொழும்புத்துறை ஆகிய இடங்களில் இருந்ததாக ஈழநாடு வாரமலரில் வெளியான இக்கட்டுரையாசிரியரின் இரு கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. கோப்பாய், நல்லூரில் கோட்டைகள் இருந்ததை போர்த்துக்கேயரின் வரலாற்றுக் குறிப்புகள் தருகின்றன. அதுபோல் கொழும்புத்துறை, பண்ணைத்துறை ஆகிய இடங்களில் பாதுகாப்பு துறைமுகங்கள் இருந்ததையும் அவை தெரிவிக்கின்றன. இந்நிலையில் பண்ணைத்துறை, கொழும்புத்துறை ஆகிய இடங்களில் ஏன் கோப்பாயிலுள்ளதைப் போல் கோட்டைகள் இருந்திருக்க வேண்டும் என்பதற்கான காரணங்களாக ஈழநாடு வாரமலரின் 2.11.1980 பதிப்பில் இக்கட்டுரையாசிரியர் எழுதிய ‘தமிழரின் சரித்திரம் கூறும் பழைய சின்னங்கள் சிதைவுறாமல் பாதுகாக்க வேண்டும்’ என்னும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன:
“.. நல்லூரில் பெரிய கோட்டை ஒன்றையும், கோப்பாய், பண்ணை என்பவற்றில் பாதுகாப்பின் நிமித்தம் வேறு சிறு கோட்டைகளையும் நிர்மாணித்திருந்தார்கள். …. வெளிநாட்டார் படையெடுப்பிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளும் பொருட்டு மன்னன் பண்ணையில் சிறு கோட்டையொன்றைக் கட்டியிருந்ததாக அறியப்படுகின்றது. அந்தக் கோட்டை தற்போதுள்ள கோட்டைக்கருகாமையில் தான் இருந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. கொட்டடி என்ற பகுதியில் அந்தக் கோட்டை இருந்திருக்கலாமென்று எனக்குப்படுகிறது. கோட்டையடியே கொட்டடியாக மாறியிருக்க வேண்டுமென்றுபடுகின்றது. கொட்டடிக்கு அண்மையில் நெடுங்குளம், வண்ணான் குளம், பிரப்பங்குளம் வீதி, கொல்லர் வீதி இருப்பது போன்ற அதே நிலை கொழும்புத்துறைக்கு அருகாமையிலிருப்பதையும் அவதானிக்கலாம்.”
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பண்ணைத்துறை, கொழும்புத்துறை ஆகிய பகுதிகளுக்கு அண்மையில் குறிப்பிடப்பட்டுள்ள காணிகளின் பெயர்களை நிலப்பட வரைஞரின் யாழ்ப்பாண நகருக்கான வரைபடங்களிலிருந்து இக்கட்டுரையாசிரியர்பெற்றிருந்தார். இப்பொழுதும் அவ்விதமே அழைக்கப்படுகின்றனவா அல்லது பெயர்கள் மாறிவிட்டனவா என்பது ஆய்வுக்குரியது. 14.12.1980 இல் ஈழநாடு வாரமலரில் வெளியான இக்கட்டுரையாசிரியரின் கட்டுரையான ‘பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் நகர அமைப்பு’ என்னும் இக்கட்டுரையிலும் இதனை வலியுறுத்தியுள்ளார்.
பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் அவர்களும் இவ்விதமே கோப்பாய்க் கோட்டை, பண்ணைக்கோட்டை, கொழும்புத்துறைக் கோட்டை ஆகியன பிரதான நல்லூர்க் கோட்டைக்குப் பாதுகாப்பாக இருந்துள்ளதாகக் கருதுவார். அவரது கோப்பாய்க் கோட்டை பற்றிய Kōpāy Cańkiliyaṉ Fort (March 1, 2022) என்னும் முகநூல் குறிப்பொன்றில் இதனைக் குறிப்பிட்டிருப்பார்.
உசாத்துணைப் பட்டியல்
1.'Sankily’s Fortress at Kopay By Rev. S.Gnana Prakasar – Ceylon Antiquary and Literary Register (1917), Pages 194 & 195
2. யாழ்ப்பாண வைபவ விமர்சனம் – சுவாமி ஞானப்பிரகாசர் (1928) – மீள் பிரசுரம் – ஆசியக் கல்விச் சேவை (Asian Educational services), 2003
3. கட்டுரை; ‘கோப்பாய்ப் பழைய கோட்டையின் கோலம்’ – வ.ந.கிரிதரன் , வீரகேசரி வாரவெளியீடு, 13. 3.1981
4.Early Settlements in Jaffna (Pagers 105 & 106) – Dr. P.Ragupathy, 1987
5.The temporal And spiritual Conquest of Ceylon By Fernao De Queyrcz (Translated From Portuguese), Asian Educational services, 1992
6. கட்டுரை – ‘தமிழரின் சரித்திரம் கூறும் பழைய சின்னங்கள் சிதைவுறாமல் பாதுகாக்க வேண்டும் – வ.ந.கிரிதரன், 2.11.1980 ஈழநாடு வாரவெளியீடு.
7. Kōpāy Cańkiliyaṉ Fort By Prof. P. Pusparatnam (Facebook Post) March 1, 2022
8. கட்டுரை; பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் நகர அமைப்பு – வ.ந.கிரிதரன் (ஈழநாடு வாரமலர் 14.12.1980)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.