- எழுத்தாளர் கலைவாதி கலீல் மறைந்த செய்தியினை இணையத்தின் வாயிலாக அறிந்து கொண்டேன். அவரது மறைவால் ஆழ்ந்த துயரில் மூழ்கிக்கிடக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். கலைவாதி கலீல் பன்முகத்திறமை மிக்க இலக்கியவாதி. இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு மன்னாரிலிருந்துத் திடமாகக் கால்பதித்தவர். என் பால்ய பருவத்திலிருந்தே இவரது பெயரை ஏதாவதொரு சஞ்சிகை, அல்லது பத்திரிகையில் அவதானித்தே வந்துள்ளேன் திக்குவல்லை, கமால், சாரணாகையூம், கலைவாதி கலீல், ஜவாத் மரைக்கார், எம்.ஏ.நுஃமான், பாலமுனை பாறுக், அன்பு ஜவகர்ஷா அடிக்கடி பல்வேறு அச்சூடகங்களில் தென்படும் பெயர்கள். எழுத்தாளர் எம்.எஸ்.எம்.ஸாகிர் கலைவாதி கலீல் பற்றி நல்லதோர் அறிமுகக் கட்டுரையினை அவரது பவளவிழாவின்போது எழுதியிருக்கின்றார். 17.10.2018 அன்று 'நியூஸ் பிளஸ்' இணையத்தளத்தில் வெளியான அக்கட்டுரையினைப் 'பதிவுகள்' இங்கு அஞ்சலிக் கட்டுரையாக மீள்பிரசுரம் செய்கின்றது. அத்துடன் எண்ணிம நூலகமான 'நூலகம்'தளத்திலுள்ள அவரது சிறுகதைத்தொகுப்பான 'ஒரு வெள்ளி ரூபாய்'க்கான இணைப்பினையும் பகிர்ந்துகொள்கின்றது. இணைப்பு - https://noolaham.net/project/06/544/544.pdf -
பவளவிழாவில் கலைவாதி - எம்.எஸ்.எம்.ஸாகிர் -
தமிழ் பிழைகள் எங்கு ஏற்பட்டாலும் அதனை தட்டிக்கேட்பவர். குற்றங்களுக்கு குரல் கொடுப்பவர். பாராட்டப்பட வேண்டியவர்களை ஏணி கொடுத்து உயர்த்தி விடுபவர். எதிரியாக இருந்தாலும் தோள் கொடுத்து தூக்கிவிடுபவர். எள்ளளவும் கோபம் எடுக்காதவர்.இப்படி அவரைப் பற்றி வர்ணித்துக் கொண்டே போகலாம். இவர் யாரென்று யோசிக்கிறீர்களா?அவர்தான் நவமணிப் பத்திரிகையில் ஜலதரங்கம் மற்றும் இலக்கியச் சோலை என்பவற்றை தயாரித்து தொகுத்தளிக்கும் பல்கலைவேந்தன் கலைவாதி கலீல். மதாறுமுகைதீன் மீரா உம்மா தம்பதிகளின் மகனாக முஹம்மது கலீல் எனும் கலைவாதி கலீல் 1943 ஒக்டோபர் 13 ஆம் திகதி புதன்கிழமை மன்னாரில் பிறந்தார்.
கடந்த சனிக்கிழமை (13) தனது அகவை 75 இல் காலடி வைத்திருக்கும் அவரின் தடம்பதித்த வரலாற்றை உற்று நோக்குவோமானால்…,
யார் இந்த கலைவாதி ?
மிகவும் பெயர் பெற்ற நொத்தாரிசுப்புலவர் குடும்பத்தில் பிறந்தவர்தான் கலைவாதி கலீல். தனது பள்ளிப் பருவ காலத்திலே அதாவது1956ஆம் ஆண்டில் ‘லட்டு’ என்ற மாசிகையில் ‘மறைந்த இருள்’ எனும் மகுடத்தில் இவரது முதல் ஆக்கம் வெளியானது. அன்று முதல் சிற்பக்கலை, கரும்பு, கலைக்கடல், செய்தி, மக்கள், தினகரன், வீரகேசரி, தினக்குரல், மல்லிகை, ஈழநாடு, ஞானம், பாமிஸ் மாசிகை,தீப்பொறி, தொழிலாளி, தேசாபிமானி, நவமணி ஆகிய பத்திரிகைகளில் கவிதை, சிறுகதை, கட்டுரை, துணுக்கு எனப் பல்வேறு கோணங்களில் தனது எழுத்தாளுமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்.
1958 ஆம் ஆண்டில் ‘கலைக்கடல்’ சஞ்சிகையிலும் மற்றும் அவரது சகோதரர் மக்கள் காதர் நடத்திய ‘மக்கள்’ (1965) சஞ்சிகையிலும் தற்போது ‘நவமணி’ப் பத்திரிகையிலும் ஆசிரியர் பீடத்தில் தடம் பதித்திருப்பவர்.
அந்த நாட்களில் புரட்சிக் கவிஞன் கே! என்ற புனைப்பெயரில் நன்கு பரீச்சயமானவர்தான் கலைவாதி. இவைகளோடு புரட்சிதாசன்,மன்னிநகர் கலீல், சர்தார், மன்னாரான், தீட்சண்யன், பஸீரா மணாளன் எனப் பல புனைப் பெயர்களில் வலம் வந்த வித்துவான்.
இன்று பெரிய இடங்களில் மின்னிக் கொண்டிருப்பவர்கள் தாங்களை உருவாக்கி விட்டவர்களை துரும்பளவேனும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. அதற்கு மாறாக கலைவாதி தூக்கிவிட்டவர்களை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார். தன்னை ஒரு காத்திரமான இலக்கியவாதியாக மக்கள் முன் நிறுத்தியவர் பிரபல பத்திரிகையாளர் அபூதாலிப் அப்துல் லத்தீப்தான் என்றும் அவர் நடாத்திய ‘இன்ஸான்’ வாரப்பத்திரிகை (1966 – 69) தான் எனது இலக்கிய உயிர்ப்புக்கு ஊன்றுகோலாகவும் உறுதுணையாகவும் இருந்ததாகவும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
‘புரட்சிக்கவிஞன் கே!’ என்ற பெயரில் கவிதைகளையும், ‘மன்னீநகர்கலீல்’ என்ற பெயரில் சிறுகதைகளையும் ‘மன்னாரான்’ என்ற பெயரில் செய்திகளையும் ‘புரட்சிதாசன்’ என்ற பெயரில் கட்டுரைகளையும் ‘சர்தார்’ என்ற பெயரில் பேனாசித்திரங்களையும் வரைந்தும் எழுதியும் இன்ஸான் பண்ணையின் மூலம் ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.
“இன்ஸான் பண்ணையில் வளர்ந்தவன் நான்” என மார்தட்டிச் சொல்லுவதில் பெருமிதம் கொள்கிறார்.
பலாலி விசேட ஆசிரியர் கலாசாலையில் கல்வி கற்று இலங்கை கல்வி நிர்வாக சேவை – SLEAS – II துறையில் தொழில் தகைமை பெற்ற இவர், -1963 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி திங்கட்கிழமை வில்பத்து – மறிச்சுக்கட்டி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ஆசிரியராக முதல் நியமனம் பெற்றார். அன்று தொட்டு பல பாடசாலைகளில் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார்.
எழுத்துத்துறை மாத்திரமல்லாது அவர் இலத்திரனியல் துறையிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியிருக்கிறார். இந்தவகையில் இருபத்தைந்து வருடத்துக்கும் மேற்பட்டது அவரது வானொலி வாழ்க்கை. வானொலியில் பங்கு கொண்டு சேவை ஒன்று, இரண்டு,முஸ்லிம் சேவை, கல்விச் சேவை, விளையாட்டுச் சேவை போன்ற வானொலிச்சேவைகளில் இலக்கிய மஞ்சரி, சதுரச் சங்கமம் (குறுக்கெழுத்துப் போட்டி), இலக்கியக் களஞ்சியம், நூல் உலா, கதை கேளீர் (சிறுகதை கூறும் நிகழ்ச்சி), தொடர் கவியரங்குகள், கவிதை எழுதுவோம் வாரீர் மாணவர் மன்றம், (குட்டிக்கதைகள்) பிஞ்சு மனம் – (ஆமீனா பேகம்), ‘மணமேடையில் ஒரு நாடகம்’ – தொடர் நாடகம், மாதர் மஜ்லிஸ் ஆய்ஸா பைரூஸ், என நிகழ்ச்சிகளை தயாரித்திருக்கிறார். ஏன் இசையும் கதையும் கூட எழுதியிருக்கிறார். சாதித்திருக்கிறார்.
இவை மட்டுமல்ல, சொற்பொழிவு, சிறப்புரைகள், உரைச்சித்திரம், தொலைக்காட்சிப் பிரதிகள் எழுதுதல் – தயாரித்தல் – நடித்தல்,மேடை நாடகம் – பிரதி – நடிப்பு – நெறியாள்கை, கவிரயங்குகளிற் பங்கு கொள்ளல் – தயாரித்தல் – தலைமை வகித்தல், ஓவியம் வரைதல் – பத்திரிகைகளுக்கு வரைதல், முகப் போவியங்கள் வரைதல், சுவரோவியங்கள் மற்றும் ‘பெனர்’ வரைதல், நூல் எழுதுதல் – அச்சிடல் – வெளியிடல் போன்றவற்றிலும் தனது பங்களிப்பை வழங்கத் தவறவில்லை.
கலை, இலக்கியம் இரண்டும் கலைவாதியின் இரு கண்கள் எனலாம்.
உலகை மாற்றிய உத்தமர்(இயல் இசைச் சித்திரம்), ஒரு வெள்ளி ரூபாய் (சிறுகதைத் தொகுதி), கருவறையிலிருந்து கல்லறைக்கு (புதுக்கவிதைகள்), றோனியோக்கள் வாழுமா? (ஆய்வு நூல்), ஓ! பலஸ்தீனமே (பலஸ்தீனப் போர்க் கவிதைகள்), வவுனியா முஸ்லிம்களின் வரலாறு, மன்னார் முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும் என்பவை அவர் எழுதிய நூல்களாகும்.
இவர் எழுதிய சிறுகதைத்தொகுதியில் பிரசுரமான ஒரு வெள்ளி ரூபாய், மையித்து, சகோதரத்துவம், வர்க்கம், நோன்புக் கஞ்சி , வண்டு,எனக்கு நானே எல்லாம், இன்னும் மனிதர்கள் இருக்கிறார்களா?, யாருக்குப் பெருநாள், ஓடப்போறேன், புதிய அலை போன்ற கதைகள் சிலாகித்து கூறத்தக்கவை.
இவரது கதைகள் மொழிமாற்றம் செய்யப்பட்டு பல சிங்கள நாளேடுகளில் பிரசுரமாகியுள்ளதோடு, அனைத்துலக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாட்டு மலரிலும் இடம்பெற்றுள்ளது. ஏழைச்சிறுமி றிஸானாநபீக் சவூதியில் மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டதை ஒரு சிறுகதையாக வடித்திருந்தார். அது ‘விடிவெள்ளி’ வார இதழில் பிரசுரமானது. பின்னர் Daily Ceylon நாளோட்டில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறு ‘றிஸானா’ சிறுகதை பல மொழிகளில் பெயர்க்கப்பட்டு, 7 தடவைகள் பிரசுரமானவை குறிப்பிடத்தக்கது.
கலைவாதிக்கு தெரியாத ஒரு கலை இல்லை எனலாம். தீடீரெனப் பாடுவார். அவர் ஒரு பாடகரும் கூட. இது பலருக்குத் தெரியாது.
கலைவாதி – மன்னார், பல்கலைக்குரிசில் – அடம்பன் மன்னார், தீந்தமிழ்ச் செல்வன் – அட்டாளைச்சேனை நூலகம், பல்கலைவேந்தன் தாஜுல் உலூம் – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு(1991), கலாபூஷணம் 1999 -(துறந்தது), கலாபூஷணம் (2002) – மன்னார் தமிழ்ச்சங்கம் செம்மொழி மாநாடு, இலக்கியவாருதி – காத்தான்குடி நவ இலக்கிய மன்றம் , தேசமான்ய – (கொழும்பு) போன்ற பட்டங்களை தனதாக்கிக் கொண்ட கலைவாதி, உலக கவிஞர் தினத்தையாட்டி 2015ஆம் ஆண்டு கலாசார அமைச்சு முதற்தடவையாக முதுகவிஞர்களுக்கு ‘காவ்யாபிமானி’ என்ற பட்டம் வழங்கியது. பின்னர் வழங்கப்படவில்லை. அவ்வாறு ‘காவ்யாபிமானி’ பட்டம் பெற்றஒரேயொரு முஸ்லிம் கவிஞர் கலைவாதி மட்டுமே என்பது சிலாகிக்கத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஆரம்பகால உறுப்பினரான இவர். போரத்தின் முக்கிய பதவிகளில் இருந்துள்ளதோடு,இவ்வாண்டு பத்திராதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமையும் மகிழ்ச்சிகரமான விடயம்.
1967ஆம் ஆண்டு உம்முல் பஸீரா பீபீயை திருமணம் முடித்து இவருக்கு 2 ஆண் மற்றும் 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர். அனைத்து பிள்ளைகளையும் திருமணமும் முடித்துக் கொடுத்தும் விட்டார். 4 பிள்ளைகளைப் பெற்றாலும் இன்றும் வாலிபனாக – கம்பீரமாக கர்ச்சிப்பவர்தான் கலைவாதி கலீல்.
தாயின் 13 பிள்ளைகளில் 7 ஆவது மகனாக – இரட்டையரில் ஒருவராக இருக்கும் கலைவாதி, தற்போது அவரது ஆண் சகோரர்களில் இளைய சகோதரர் அப்துல் வஹாப் மற்றும் பெண் சகோதரிகளில் 3 பேரும் உயிருடன் உள்ளனர்.
இவரைப் போன்ற ஆற்றல் உள்ள ஒரு திறமைசாலியை நான் இதுவரை பார்த்ததில்லை. ஒரு செய்தியோ, கவிதையோ, ஓவியமோ எதுவாக இருந்தாலும் ஒரு கணப்பொழுதில் வடிவமைத்து விடுவார். என்னைப்போல் இவரது திறமையைப்பார்த்து வியந்து பேசாதோர் யார்தான் உளர்?
ஆசிரியராக, அதிபராக, விரிவுரையாளராக, உபபீடாதிபதியாக, கலைஞனாக இருந்து தற்போது நவமணி ஆசிரியர் பீடத்திலே தனது பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கும் கலைவாதி, பழகுவதற்கு இனியவர், பண்பாளர், அன்பானவர். மொத்தத்தில் மனிதநேயம் உள்ளவர். இவருக்கு எதிரிகள் யாரும் இருப்பார்களேயானால் அவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகத்தான் இருப்பார்களே தவிர,வேறு எவ்வழியிலும் இருக்கமாட்டார்கள்.
75 வயதிலும் தான் பயன்பெறாவிடினும் வளர்ந்துவரும் சந்ததிகளுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் அரசின் பல விருதுகளை போராடி வென்று சாதனை படைத்திருக்கிறார். அதற்கோர் ஓர் உதாரணம் கலாபூஷண விருதில் வழங்கப்படும் பொற்கிழியின் தொகை அதிகரித்தமை. இப்படிப் பல பல… அடுக்கிக் கொண்டே போகலாம்.
தன்னலம் கருதாது, தன்னை எதிரியாகப் பார்ப்பவரையும் அரவணைத்து அவருக்கும் வாய்ப்பளித்து, பலபேரை எழுத்தாளர்களாக உருவாக்கிக்கொண்டிருக்கும் கலைவாதியை கௌரவப்படுத்த, அவருக்காக பவளவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூகத்துக்காக, கலைக்காக என்று முற்று முழுதான பணியாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கும் கலைவாதியின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று, தேகாரோக்கியத்தோடு வாழ்ந்து மேலும் வெற்றிவாகை சூட இறைவன் துணைபுரிவானாக!
ஓய்வு எடுக்க வேண்டிய நேரத்தில் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் கலைவாதிக்கு எமது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!
courtesy: https://www.newsplus.lk/feature/8594/