- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். - பதிவுகள்.காம் -
தனது குழந்தைகளுக்கான
ஏராளமான இனிய பாடல்களை
நாலாதிசைக் கரைகளின்
மணற்பரப்பெங்கும் எழுதிவைத்த அவள்
அவ்வப்போது வந்து தொட்டுத்தடவி
புவுத்திரம் பார்த்துச் செல்வாள்.
ஆழியரவிந்த மைகொண்டு எழுதிய பாடல்கள்.
அத்தனை எழுத்தும்
கொத்தடங்கா முத்துக்களால்
ஆழிப்பட்டு நூல் திரித்து
கோத்துக் கட்டிய பாடல்கள்
சொல்லுக்குச் சொல்
நாவடத்தில் குழைத்த
மீனாம்பல் திரவியம் பூசிய பாடல்கள்.
பளிங்குப்பாறை மேனிமேலே
கலகலத்த சோகிகளை
குலுக்கிப் போட்டாற் போல
சந்தம் அடுக்கி கட்டியவை.
அவள்
அவ்வப்போது வந்து
தொட்டுத்தடவி
புவுத்திரம் பார்த்துச் செல்வாள்.
இப்படித்தானே
இருந்துவருகிற காலத்தில்....
முகில்கள் திரண்டு
தம்மோடு தாம் மோதி
வெடித்துச்சிதறிய
நெருப்புத் துண்டங்களிலிருந்து
செம்பருந்துகள் புறப்பட்டு வந்தன.
கருடா என்று கரைகளெல்லாம்
கையெடுத்து வணங்க எழுந்தபோது
ஆவென்ற செம்பருந்து வாய்களெல்லாம்
யார்தான் கட்டி வைத்தார்
கொடுஞ்சுறாவின் கோரப் பற்களை?
கரைகளையெல்லாம்
கிழித்துப்போட்டன செம்பருந்துச் சுறாக்கள்.
கிழிந்து தொங்கிய மணற்பரப்பெங்கும்
அவளது பாடல்கள்
பாறையில் விட்டெறிந்த பாற்சங்குச்சில்லுகளாய்
மாவும் தூளுமாகின
பாடல்களை பறிகொடுத்தவள்
கரை கரையாக கதறித் திரிகிறாள்.
ஒப்பாரி சொல்லியழ
ஒரு வார்த்தைகூட
இப்போது இல்லை அவளிடம்
இருப்பதென்னவோ கோபம் மட்டுமே.
நன்றி: தமயந்தி முகநூல் பக்கம்