- இசைக்கலைஞர் மொஹமெட் இக்பால் -
- இசைக்கலைஞர் மொஹமெட் இக்பாலுடனான (Mohammed Iqbal) இந் நேர்காணல் ‘பதிவுகள்’ இணைய இதழுக்காக எழுத்தாளரும், சமூக,அரசியல் செயற்பாட்டாளருமான ஜோதிகுமாரினால் நடாத்தப்பட்டது. மொஹமெட் இக்பால் அவர்கள், இலங்கையின் அதிமுக்கிய இசை வல்லுநர்களில் ஒருவர். தனது பல்கலைக்கழக நாட்களில் விக்டர் ஹாரா (Victor Hara) இசைக்குழு என்ற இசைக்குழுவை நடத்தியவர். இன்றுவரை இதே இசைக்குழு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. ‘கிட்டார்’ இசைகருவியை இசைப்பதிலும், பாடுவதிலும் வல்லுநராக திகழும் திரு. மொஹமெட் இக்பாலின் பங்களிப்பு, இசை உலகில் குறிப்பிடத்தக்கது. இது போன்றே இந்நாட்டின் அரசியலிலும் இவரது இசையின் அதிர்வுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. -
கேள்வி: இதுவரை எத்தனை பாடல்களுக்கு இசையமைத்துள்ளீர்கள்?
பதில்: கிட்டத்தட்ட 40 பாடல்கள். 100 இசை கச்சேரிகள் அளவில் நிகழ்த்தியுள்ளேன். இதில் நான் வீதிகளிலும், தொழிலாளர்கள் மத்தியிலும், தொழிற்சாலைகளிலும், சிறு குழுவினரிடையேயும் நடாத்தும் நிகழ்ச்சிகள் கணக்கில் அடங்காதவை ஆகும். இது தவிர சில வருடங்களில் Guitar Festival யும் நடத்தியுள்ளேன். இவைகள் அனைத்தும் மிகுந்த பணத் தேவையை உள்ளடக்குவதாய் உள்ளன. இதனால் இவற்றின் எல்லைப்பாடுகளும் புரிந்துகொள்ளத் தக்கவையே.
கேள்வி: உங்கள் பாடல்களில் முக்கியமான இரண்டை எமது வாசகர்களுக்காக தெரிவு செய்வீர்கள் என்றால் அவை எவை எவையாக இருக்கக் கூடும்?
பதில்: ‘மொனரவில’ என்ற பாடலையும் ‘மினிசா’ என்ற பாடலையும் நான் குறிப்பிடலாம்.
கேள்வி: ‘மொனரவில’ பாடல் எதைப் பற்றியது? அதன் பின்னணி என்ன?
பதில்: 1817இல், ‘ஊவா வெல்லஸ்ஸ’ இடத்தில் நடந்த மாபெரும் போராட்டமே, இலங்கையில் நடந்த, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான, முதலாவது போராட்டம் எனலாம். இதற்கு தலைமை தாங்கியவரே ‘மொனரவில கெப்படிபொல’ எனும் வீரர். இப்போராட்டத்தின் பிறகு கிட்டத்தட்ட 40 ஆயிரம் மக்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொன்று குவித்தனர். அவரைப் பற்றிய பாடலே இது.
கேள்வி: அப்படியென்றால் கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு முன்பு நடந்த இப்பழைய, பண்டை வீரரை இன்னும் நீங்கள் போற்றி பாடுவதன் காரணம் என்ன? ஏனெனில் 1817க்கு பின், இந்நாட்டில் எவ்வளவோ விடயங்கள் நடந்தேறிவிட்டது. 1940 களில் கிடைக்கப்பெற்ற சுதந்திரம், அதன் பின்னர 1971இன் JVP விடுதலை போராட்டம், அதன் பின்னர் 1989இன் JVP எழுச்சிகள் -இதற்கிடையில் வட-கிழக்கு தமிழ் இளைஞர்களின் தனி நாட்டுக்கான ஆயுத போராட்டங்கள் - இன்னும் அனந்த தொழிற்சங்க - ஏனைய போராட்டங்கள் - இவற்றையெல்லாம் கடந்து இன்னும் ‘மொனரவில’வை, மீட்டு பாடுவதன் அர்த்தம் என்ன அல்லது தொடர்புதான் என்ன?
பதில்: இதை ஒரு சிறந்த கேள்வியாகக் கருதுகின்றேன். 1817-1818இல், ‘மொனரவில கெப்படிபொல’ தன் மக்களுடன் போராடிய வேளை, அதன் போதும் அதற்கு பிறகும், கிட்டத்தட்ட 40,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். இக்காலக்கட்டத்தில் கண்டிய மன்னன் சிறைபிடிக்கப்பட்டிருந்தாலும் (1815), இதன் பின்னர் அரங்கேற்றப்பட்ட கண்டிய உடன்படிக்கையில் (Kandyan Convention -1815) அன்றைய சிங்கள தலைவர்கள் என கூறப்பட்டோர் தமிழில் கையொப்பமிட்டிருந்தாலும், இப்படி சிங்களத் தலைவர்கள், தமிழில் கையொப்பமிட்ட விடயமானது, சிங்கள மக்களிடம் இருந்து இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்துள்ளது. பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியானது இவ் இருட்டடிப்புக்கு அடிப்படையாக அமையலாம். இன்றுவரை இந்த இருட்டடிப்பு அரசியல் தொடர்கின்றது. அதாவது இந்த சிங்களத் தலைவர்கள் எனக் கூறப்பட்டோர் அல்லது சிங்கள நிலவுடமையாளர்கள் இப்படித் தமிழில் கையொப்பமிட்டுள்ளதை இன்றைய அரசியல் தலைவர்கள் ஏற்று கொள்வார்களா?. மாறாக அதனை இருட்டடிப்பு செய்யவே முனைவர். எனவேத்தான், இந்த இருட்டடிப்பு அரசியல் இன்றைய நிகழ்வுகளுக்கு அரசியல் அடித்தளம் அமைத்து, மக்களை பிரித்தாள, இந்நாட்டின் ஆதிக்க சக்திகளுக்கு வழிவகை செய்கின்றது என்பேன். இந்த, இருட்டடிப்பு, வரலாற்றில் ‘மொனரவில’ வின் பெயர் என்பதும் கூறப்பட்டதாயில்லை. அப்படி ஒரு மனிதன் இருந்தானா, என்பதற்கான சான்றும் இல்லை.
கேள்வி: இன்னும் சற்று விரிவாக இதனை எடுத்து கூறுவீர்களா?
பதில்: ‘மொனரவில கெப்பட்டிபொல’ தலைமை தாங்கிய, முதல் காலனித்துவத்துக்கு எதிரான போராட்டம், வரலாற்றில் பதிவாகி இருக்கும் பொழுதே, அதற்குப் பக்கத்தில் கண்டி மன்னனை சிறைபிடித்த பிரிட்டிஷார், கண்டிய நிலவுடைமையாளர்களோடு ஓர் ஒப்பந்தத்தை செய்து கொண்டனர் ( Kandyan Convention). இவ் ஒப்பந்தத்தை, உள்நோக்கங்களுக்காக, முன்நின்று கட்டமைத்த பிரிட்டிஷாரால், இவ் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதாவது, கண்டிய தமிழ் மன்னனையும் அவனது வழிதோன்றல்களையும் சிறைபிடிக்கவும் நாடுகடத்தவும் அவர்களது ஆட்சியுடைமையை பறித்துக் கொள்ளவும் அவர்களை மக்களின் மனங்களில் இருந்து அகற்றி விடவும் இவ் ஒப்பந்தம் பிரிட்டிஷாரால் தோற்றுவிக்கப்பட்டது. அதாவது, இவ் ஒப்பந்தத்தின் உண்மையான அர்த்தம் என்பது கண்டிய மன்னனின் அரசுடைமையை, பிரிட்டிஷாரின் அரசுடைமையாக மாற்றிக்கொள்வதே ஆகும். மொனரவில, இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தாலும் இவ் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தபடாத போது அவன் பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தில் இறங்க தயங்கவில்லை. மறுபுறத்தில் இவ்ஒப்பந்தத்தின் பங்குதாரர்களான ஏனைய சிங்கள தலைவர்கள் இவ் ஒப்பந்தத்தை பிரிட்டிஷார் நடைமுறைபடுத்தப்படாத போது அதை எதிர்க்காமல் அவர்களின் அடிமைகளாக, கையாட்களாக மாறினர். அதாவது வரலாற்றில் இரண்டு பிரிவினர் முன்னிலை நோக்கி நகர்ந்துள்ளனர். ஒரு பிரிவு, பிரிட்டிஷ{க்கு எதிராக போராடும் அதேவேளை, இன்னுமொரு பிரிவு அவர்களோடு இணைந்து, அதாவது அவர்களது ஆதிக்கத்தை ஏற்று, கையேந்தி பிழைப்பதில் ஆர்வம் காட்டி நின்றது. இதே கையேந்தி பிழைக்கும் இக் கூட்டம், கண்டிய மன்னனை சிறை செய்வதை ஆமோதித்த அதேவேளை அல்லது அதற்கு உடன்பட்ட அதேவேளை, இந்நாட்டை ஆள, இம்மக்களை காட்டிக் கொடுக்க இப்பிரிட்டிஷ் பாதகர்களோடு ஒரு ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை செய்து கொள்ளவும் முன்நின்றது. அதாவது ஒருவர் போராட, மற்றது காட்டி கொடுக்கும் சதிகளில் ஈடுபடுகின்றது.
கேள்வி: சரி, ஆனால், இதற்கும் இப்போது நீங்கள் அரங்கேற்றும் இப்பாடலுக்கும் இடையே உள்ள அரசியல் தொடர்பாடல் என்ன?
பதில்: நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி 1817-1818இனது, ‘ஊவா வெல்லஸ்ஸ’ காலத்தில் இருந்து, அதாவது ‘மொனரவில கெப்பட்டிபொல’ காலத்தில் இருந்து, இந்நாட்டில் இரு பிரிவினர் இருந்து வந்துள்ளனர். ஒரு பிரிவு பிரிட்டிஷாரை இந்நாட்டில் எதிர்த்த உண்மையான தேசிய பிரிவு. மற்ற பிரிவு, பிரிட்டிஷாரை இந்நாட்டில் ஆராதித்த அடிமை பிரிவு.
கேள்வி: இதற்கும் இன்றைய அரசியலுக்கும் இடையிலான தொடர்பு என்ன?
பதில்: பிரிட்டிஷாரை ஆராதித்த இந்த பிரிவு, பின்னர் வந்த நாட்களில், பிரிட்டிஷாருடன் இணைந்தே இந்நாட்டின் கல்விமுறையை கட்டுவிப்பதில் ஈடுபட்டது. பிரிட்டிஷாரை ஆராதித்த இதே அடிமை பிரிவுதான், பின்னர், எமது பல்கலைகழகங்களில் விரிவுரையாளர்களாக, பேராசியர்களாகவும் இருந்து, இந்நாட்டின் கல்வியையும், எமது இன்றைய இளைய தலைமுறைகளையும் கட்டமைத்துள்ளனர். அவர்களே, இந்நாட்டின் அரசியலையும் வரலாற்றையும் இதுவரையில் தம் பார்வையில் எழுதி வந்துள்ளனர். அதாவது, எமது, அரசியலும் வரலாறும் இவர்களால் அதாவது, இப்பிரிவினரால், தங்களுக்கு ஏற்றாற்போல், புனைந்து எழுதப்பபட்டுள்ளது. ‘மொனரவில’ மறைக்கப்பட்டான். அல்லது மறக்கடிக்கப்பட்டான். இனவாதம் இந்நாட்டில் ஆழ ஊடுருவியது – அரசியலிலும் வரலாற்றிலும் கல்வி கட்டமைப்புகளிலும் ஆழ ஊடுருவியது. இதனையே எமது இளைய தலைமுறையினரும் படிக்க வேண்டிய நிர்பந்தமும் எழுந்தது.
கேள்வி: இதற்கெதிராகவா நீங்கள் உங்களது ‘மொனரவில’ பாடலை நீங்கள் பாடினீர்கள்?
பதில்: ஆம். எனது பார்வையில் எனது பாடலை எனது நாட்டின் முன், முன்வைக்க நான் கடமைபட்டுள்ளேன்.
கேள்வி: இப்பொழுது 2005இல், ‘ஊவா வெல்லஸ்ஸ’ பல்கலைக்கழகம் பதுளையில் அமைக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ‘ஊவா வெல்லஸ்ஸ’ எதிர்ப்பலையை அங்கீகரிப்பதாகவும் ஒருவகையில் அடையாளப்படுத்துவதாகவுமே உள்ளது. இது பொறுத்து என்ன கூறுவீர்கள்?
பதில்: ‘ஊவா வெல்லஸ்ஸ’ பல்கலைகழகம் மாத்திரமல்ல. ஆனால் சரதியல், வீரப்புரன் அப்பு போன்ற பிரிட்டிஷாரை எதிர்த்த வரலாற்று முற்போக்கு சித்திரங்களை கூட இன்று நாட்டின் ஆதிக்க அரசியலின் பிரித்தாளும் கொள்கைக்கு துணைப்போகும் வகையில், பெருந்தேசியவாதத்தின் சாயத்தில் துவைக்கப்பட்டு, முன்னிறுத்தப்படுகின்றார்கள்- சித்தரிக்கப்படுகின்றார்கள். அவர்கள் முன்னெடுத்த தேசியவாதம் வேறு. இவர்கள் முன்னெடுக்கும் பெருந் தேசியவாதம் வேறு. அவர்கள் முன்னெடுத்த தேசியவாதம் பிரிட்டிஷாருக்கு எதிரானது. மக்கள் சார்பானதாக இருந்தது. இவர்கள் முன்னெடுக்கும் தேசியவாதம்; பெருந்தேசியவாதமாக, சிறுபான்மைகளுக்கு எதிராக, மொத்தத்தில், மக்களுக்கு எதிராகவும் இருக்கின்றது. எனவே, ‘ஊவா வெல்லஸ்ஸ’ பல்கலைக்கழகத்தின் ஸ்தாபிப்பும் வேறுபட்ட நோக்கங்களுக்காக எழுந்த ஒன்றே அன்றி பிறிதொன்றில்லை, என்றே கூறுவேன்.
கேள்வி: ஏனைய பல்கலைக்கழகங்களின் ஸ்தாபிப்பும், இதே அரசியல் கொண்டு இயங்குவது தானா?
பதில்: இருக்ககூடும். ஏனெனில். பேராதனை பல்கலைக்கழகம் 1942இல் ஆரம்பிக்கப்பட்ட போது அது பல்வேறு அரசியல் உள்நோக்கங்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டதாய் கருத இடமுண்டு. முதலாவது இது கண்டியிலேயே துவங்கப்பட்டது. அதாவது, பிரிட்டிஷாருக்கு எதிரான கண்டிய எழுச்சிகளை (ஊவா வெல்லஸ்ஸ உட்பட) மறக்கடிக்கவும், முக்கியமாக அவ் எழுச்சிகளுக்கு பின்னால் ஆயிரகணக்கில் அரங்கேற்றப்பட்ட படுகொலைகளை மறக்கடிக்க செய்யவும், இந்நாட்டின் புத்திஜீவிகளை புதிய வார்ப்பில், இவ்வரலாறுகளை மறந்து உருவாக்கிக் கொள்ளவும் இப்பல்கலைக்கழகம் போன்றவை எழுப்பப்பட்டன. இது போக, அது, எழுப்பப்பட்டதானது, எமது புத்திஜீவிகளுடனான இந்திய போராட்ட உறவுகளை கத்தரித்து விடவும், இந்திய விடுதலை இயக்கத்தின் செல்வாக்கில் இருந்து, எமது புத்திஜீவிகளை தள்ளி வைக்கவும் இந்நிர்மாணம் உதவியது. மேலும், புதிய புத்திஜீவிகளை உங்கள் ரசனைக்கேற்ப கட்டமைக்க போகின்றீர்கள் என்றால் ஒரு பல்கலைகழகம் எப்படியும் தேவையுறவே செய்கின்றது. ஆங்கில பாணியில் அமைக்கப்பட்ட இப்பல்கலைகழகம், அந்நாட்களில், எம் மக்களிடம் இருந்தும், அந்நியப்படுத்தப்பட்டதாய், காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு, துணை புரிவதாய் இருந்தது என்பதும் தர்க்கம் சார்ந்ததே.
கேள்வி: அதாவது, பல்கலைகழகமானது வரலாற்று கொலைகளை மறக்கடிக்கவும், முற்போக்கான, பிரிட்டிஷாருக்கு எதிரான இந்திய விடுதலை இயக்கம் போன்றவற்றை நிராகரித்து கொள்ளவும், பிரிட்டிஷாரின் அரச இயந்திரத்துக்கு ஆள் கட்டவுமே – மொத்தத்தில் இந்நாட்டு புத்திஜீவிகளுக்கு புது உரு கொடுக்கவுமே திறக்கப்பட்டது என்கின்றீர்களா?
பதில்: ஆம்.
கேள்வி: நீங்கள் குறிப்பிடக்கூடிய அடுத்த பாடல் யாது?
பதில்: ‘மினிசா’ என்ற எனது பாடலையே நான் குறிப்பிடுவேன்.
கேள்வி: ஏன்?
பதில்: இப்பாடல், நான் தாகூரின் எழுத்துக்களை படித்ததால் நிகழ்ந்த ஒரு எதிர்வினை என்றும் கூறலாம்.
கேள்வி: இப்பாடலின் அர்த்தம் என்ன?
பதில்: பாடலின் அர்த்தம் மனிதனுக்கு அப்பால், எந்த ஓர் சக்தியும் இல்லை என்பதாகும். அதாவது மனிதனே, மனிதன் மாத்திரமே, மனிதனுக்கு உதவக் கூடியவன். ஓர் அமானுஷ்ய சக்தி, உலகில் பிறப்பெடுத்து மனிதரை இனிமேல்த்தான் வந்து காப்பாற்ற போகின்றது என்பதெல்லாம் ஒரு வெற்று நாடகம்தான். மனிதனின் பிரச்சினைக்கு - இவ்உலகின் பிரச்சினைக்கு-மனிதனே தீர்வு காண வேண்டும். தாகூரின் இக்கருத்தை ஒட்டிய பாடல்களை-எழுத்துக்களை நான் படித்ததினால் பெற்ற உத்வேகத்தில் எழுந்ததே இப்பாடலாகும்.
கேள்வி: ஒருமுறை மலையக பழம் கவிஞரான திரு.சி.வி.வேலுப்பிள்ளை அவர்களுடன் நான் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் கூறினார்: “முனியாண்டி, தேயில தூர்ல, அர ராத்த பான ஒனக்காக ஒளிச்சி வச்சிருக்கேன். ‘போய் எடுத்துக்க’ அப்படின்னு ஒரு நாளும் கடவுள் முனியாண்டிகிட்ட சொல்ல மாட்டார்” என்றார். இதனையா உங்கள் பாடலும் ஒரு வழியில் வற்புறுத்துகின்றது?
பதில்: நிச்சயமாய்.
கேள்வி: இப்பாடல் எந்த அளவில், இசை விழாக்களில் வரவேற்பு பெற்றது?
பதில்: மிக பிரமாதமாய்.
கேள்வி: கவிஞர்கள் தங்கள் கவிதையை மக்கள் முன் அரங்கேற்றும் வேளை, ஒரு சில நேரங்களில், அக்கவிஞர்கள் எதிர்பாராத தருணங்களில், சில விடயங்கள் அந்த மக்களாலேயே அரங்கேற்றப்படுவதுண்டு. உதாரணமாக மயோக்வாஸ்கி தொடர்பில், பிரபல்யமான கதை ஒன்று உண்டு. அதாவது, அவர் ஒரு மண்டபத்தில், ‘லெனின்’ பற்றிய தனது கவிதையை அரங்கேற்றி கொண்டிருந்தார்:
“கையில் பீரங்கியுடனும்
தலையில் லெனினுடனும்
நாங்கள் முன்னேறுவோம்”
இப்பாடலை அவர் பாடிய வேளை, அவரை, இடைநடுவே, மண்டபத்தில் இருந்து எழுந்த ஒரு மனிதன் இடைமறித்தான்: “தோழர் ஒரு நிமிடம்”. மண்டபத்தினர் அதிர்ந்து போயினர் - யார் இப்படி, இந்த கவிஞனை குழப்ப துணிந்தது என்று: யார் இந்த கவிதை அரங்கை குழப்புபவன் என்று. குழப்பியவர் கவிஞரை பார்த்து கூறினார்:
“ஆம் தோழர்…
கைகளில் பீரங்கிகளுடனும்
தலையில் லெனினுடனும்
‘இதயத்தில் உங்கள் பாடலுடனும்’
நாங்கள் முன்னேறுவோம்” என்று.
இப்போது அதிர்ந்து போனது, கவிஞன்.
இது போன்று, உங்களது இசை நிகழ்விலும், ஏதேனும் சம்பவங்கள் நடந்துள்ளதா?
பதில்: கூறலாம். அண்மையில் Gota Go Home காலிமுகத்திடல் அரகலயில், நான் தினமும் பல மணி நேரங்கள் இசை கச்சேரியை நடத்தினேன். அங்கு குழுமியிருந்த மக்களிடம் என் பாடல்களை பாடினேன். ஒவ்வொரு பாடலின் இடையேயும் நான் எனது கருத்துக்களை அல்லது என் சிறிய உரைகளை நிகழ்த்தி விடுவேன். ஒரு நாள், பாடல் முடிந்து, நானும் மேடையில் இருந்து இறங்கி வரும் போது ஒரு இளைஞன் - 24 வயதிருக்கும் - என்னை மறித்து கூறினான்: “நான் எனது கல்வியை முடித்த பின், வெளிநாட்டிற்கு சென்று விடலாம் என்று யோசித்திருந்தேன். என் சொந்த பந்தங்களும் வெளிநாட்டில் இருக்கின்றார்கள். ஆனால் இப்பொழுது உங்கள் பாடலை கேட்டபின் இந்நாட்டை விட்டு என்றுமே அகல போவதில்லை என்று முடிவு செய்து கொண்டேன்” என்றான்.
கேள்வி: ‘கோட்டா கோ கம’ அரகலவிற்குள் எப்படி நீங்கள் உள் நுழைந்தீர்கள்?
பதில்: உண்மையில் என் மகன்தான் காரணம். அவன் என்னிடம் கேட்டான்: “அப்பா இந்த அரகலயில் நீங்கள் பங்குபற்ற போவதில்லையா” என. நான் சிந்தித்தேன். அதன் பின் அங்கு சென்று அங்கு மேடை அமைத்தவர்களிடம் வினவினேன். நானும் ஒரு பாடலை பாடலாமா என்று. ‘தாராளமாக’ என்றார்கள் அவர்கள். நாளுக்கு நாள் என் பாடலை கேட்டு என்னை ஆர்வப்படுத்திய மக்கள் பெருகினர். நான் அவர்களோடு ஐக்கியமானேன். கிட்டத்தட்ட தினந்தோறும் அல்லது ஒருநாள் விடுத்து ஒருநாள், நான் மக்களோடு அங்கு கலக்க நேர்ந்தது. நிமிடங்கள் மணிகளாகின. மணிகள் நாட்களாகின. நாட்கள் கிழமைகளாகின. இறுதியில் அந்த பெரிய நாளும் இறுதியில் வந்து சேரவே செய்தது.
கேள்வி: எந்த வயதில் இருந்து இசையில் இப்படி ஆர்வமாய் இருந்தீர்கள்? Mohammed Rafi யின் பாடலை கேட்க நேரும் ஒரு இளைஞன் ஓர் தேனீர் கடையின் முன்னால், அப்பாடல் ஒலிக்க நேரும் போதெல்லாம், கண்ணீர் வடித்தவாறே நிற்பான். பின்நாட்களில் அவன் ஒரு மிக பெரிய பாடகனாக வந்த பின் கூறுவான்: “அன்று என் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் துக்கத்தால் அல்லது பாடலின் துயரத்தால் ஏற்பட்ட ஒன்றல்ல. ஏன் அன்று என் விழிகளில் இருந்து அப்படி கண்ணீர் கொட்டியது என்பதற்கான காரணம் அன்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால், இன்று அதன் காரணத்தை நான் அறிவேன். கண்ணீர் கொட்டியதன் காரணம், அக்குரல் ஓர் மனித குரல் என்பதால் அல்ல. அது, ஒரு தெய்வத்தின் குரல் என்பதால்” என்பார் அந்த பாடகர். உங்களது இள வயதில் இது போன்ற அனுபவங்கள், உங்களுக்கும், ஏற்பட்டதுண்டா?
பதில்: ஒருவகையில். எனது தந்தை ஒரு சிறிய அஞ்சல் அலுவலகத்தில் தபாலதிபர். அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் மிக மிக குறைவானது. அன்று நாங்கள் சிறு பிள்ளைகள். ஐந்து பேர் படிக்க வேண்டிய சூழல். என் சகோதரி–பின்நாட்களில் ஒரு மருத்தவ கலாநிதி–கண்டி பெண்கள் உயர் பாடசாலையில் கல்வி கற்றாள். அவருக்கு ஒரு மாத பஸ் பிரயாண செலவு 12 ரூபாய் ஆகிவிடும். இதற்கே என் தந்தை சிரமமப்பட்ட காலம், அந்தகாலம். நான் ஹிந்தி பாடல்களை, பக்கத்து வீட்டில், இசைக்கும் போது, மெதுவாக ஏழெட்டு வயது சிறுவனாய், சுவரோரமாய் நகர்ந்து, சுவரோரமாய், நின்று, கவனித்து கேட்பேன். இது போக, எனது தாயார் எனது வீட்டில் வானொலியின் அருகே அமர்ந்து பகல் உணவுக்கு பின் House Wife Choice என்னும் நிகழ்ச்சியை நாள் தவறாமல் கேட்பார்கள். அப்பொழுதெல்லாம் அவர் என்னை இழுத்து அருகே வைத்து கொள்வார். நாங்கள் இருவரும் பழைய ஆங்கில பாடகர்களின் பாடல்களை அமைதியாக கேட்போம். Jim Reeves, Engelbert Humperdinck , Tom Jones ஆகியோரின் பாடல்களும் மறக்க முடியாதவை. தமிழ்பாடல்களை, இரவு நேரங்களில் கேட்பதிலும், என் அன்னை பிரியபட்டவர்.
கேள்வி: இதுவா உங்களின் பின்னணி–நாவலர் முதல் இன்றைய இசை கச்சேரிகள் வரை நடாத்த?
பதில்: இருக்கலாம்.
கேள்வி: நீங்கள் முறைப்படி இசைக்கல்வி கற்றவரா?
பதில்: இல்லை. அதற்காக நான் வருந்தியதுண்டு.
கேள்வி: அப்படியென்றால் இந்த ‘கிட்டார்’ இசைக்கருவியை நீங்கள் எப்படி கற்று தேர்ந்தீர்கள்?
தொடரும்…
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.