- எம். ரிஷான் ஷெரீப் -
1. மொழிபெயர்ப்புத் துறை என்பது தனித்துவமானதாகும். நீங்கள் எழுத்துப் பணியோடு மொழிபெயர்ப்பையும் சுமக்கிறீர்கள். அந்த வகையில் ஒரு எழுத்தாளனுக்கும், மொழிபெயர்ப்பாளனுக்கும் இடையிலான புரிந்துணர்வை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
ஒரு படைப்பை மொழிபெயர்ப்பதற்கு முன்பே அந்தப் படைப்பை எழுதிய எழுத்தாளருடனான புரிந்துணர்வு சிறப்பாக இருந்தால் மாத்திரம்தான் அந்த மொழிபெயர்ப்புப் படைப்பும் சிறப்பாக அமையும் என்றே நான் கருதுகிறேன். எனது அனுபவங்களை வைத்துக் கூறும்போது என்னால் இதை உறுதியாகக் கூற முடியும். நான் மொழிபெயர்க்கும் படைப்புகளை எப்போதும் நானேதான் தெரிவு செய்வேன். நூல்களையும், படைப்புகளையும் வாசிக்கும்போதே அவை தமிழில் வெளிவந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றினால் மாத்திரமே அதை மொழிபெயர்க்கத் துணிவேன்.
ஆனால் மொழிபெயர்ப்புப் பணியைத் தொடங்கும் முன்பு அந்தப் படைப்பை எழுதிய மூல எழுத்தாளரிடமிருந்தோ, கவிஞரிடமிருந்தோ மொழிபெயர்ப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களை அணுகுவேன். என்னுடனான அவர்களது உரையாடல் தொனியையும், அவர்களது மனோபாவம் மற்றும் சுபாவங்களையும் கொண்டு அவர்களை என்னால் புரிந்து கொள்ளவும், நட்பு ரீதியாக அணுகவும் முடியுமாயின் மாத்திரமே மொழிபெயர்ப்பைத் தொடங்குவேன். அவர்களது உரையாடல் தொனியோ, மனோபாவமோ, சுபாவங்களோ எனக்கு அணுக்கமாக இல்லாவிட்டால் அவர்களது படைப்பை மொழிபெயர்ப்பதைத் தவிர்த்து விடுவேன்.
அதற்குக் காரணம் இருக்கிறது. பிற மொழியில் எழுதுபவர்கள் எப்போதும் எனக்கு அந்நியமானவர்களாக, மாற்றுச் சமூக மக்களாக இருப்பார்கள். அவர்களது படைப்பை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், மொழிபெயர்ப்பின் போது கதைக்களன்கள் மற்றும் கதாபாத்திரங்கள் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களைக் கேட்பதற்கும் அவர்களை அடிக்கடி நான் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கும். அப்போது அவர்கள் அதையிட்டு சலித்துக் கொள்வார்களானால், எனக்கும் அதே சலிப்பு தோன்றி விடும். மாறாக, அவர்கள் நான் கேட்கும் சந்தேகங்கள் குறித்து உற்சாகமாக பல விடயங்களை தெளிவாக எடுத்துச் சொல்வார்களானால், எனக்குள்ளும் அதே உற்சாகம் தோன்றி மொழிபெயர்ப்பை எந்தப் பிழையுமின்றி சிறப்பாகக் கொண்டு வர என்னால் இயலுமாக இருக்கும்.
இதுவரை நான் மொழிபெயர்த்த படைப்புகளின் மூல எழுத்தாளர்கள் அனைவருடனுமே எனக்கு சிறந்த புரிந்துணர்வும், நல்ல நட்பும் இருப்பதால்தான் என்னால் அவர்களது படைப்புகளை சிறப்பாக மொழிபெயர்க்க முடிந்திருக்கிறது. அவர்களது ஒத்துழைப்பு இருந்திருக்கா விட்டால் அது சாத்தியமடைந்திருக்காது. எனவேதான் எழுத்தாளனுக்கும், மொழிபெயர்ப்பாளனுக்கும் இடையிலான புரிந்துணர்வு மிக மிக அத்தியாவசியமானதாகும் என்று கருதுகிறேன்.
2. உங்களுடைய மொழிபெயர்ப்பு சிறுகதைகள், நாவல்கள் இலங்கைச் சூழலுக்கு நெருக்கமான விடயங்களை பற்றியே பேசுகின்றன. அவை பற்றிய உங்களுடைய மதிப்பீடு என்ன?
நான் இலங்கையன் என்பதால் ஆசியச் சூழலுக்கு இணக்கமான படைப்புகளையே பெரும்பாலும் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கிறேன். அதுவே உங்களது இந்தக் கருத்துக்குக் காரணமாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன். நான் ஆபிரிக்க உலகச் சிறுகதைகளை மொழிபெயர்த்து, ஒரு பெருந்தொகுப்பாக வெளியிட்ட போதும், உகாண்டா சிறுகதைகளை மொழிபெயர்த்து நூலாக வெளியிட்ட போதும் அதிலிருந்த சிறுகதைகள் இலங்கைச் சூழலுக்கு முற்றிலும் மாற்றமானதாக இருந்தன. அவற்றை தேர்ந்த தமிழ் இலக்கியவாதிகளும், தேர்ந்த தமிழ் வாசகர்களுமே வாசித்துப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் ஆரம்ப கட்ட வாசகர்களுக்கு அவை இலங்கைச் சூழலுக்கு நெருக்கமற்றவை என்ற காரணத்தினாலும், கதைகள் செறிவாக இருப்பதன் காரணத்தினாலும் அவ்வாறானவற்றை வாசிப்பதில் தயக்கம் இருக்கிறது.
என்றாலும், உலகத்திலுள்ள அனைத்து சமூகங்களையும், பண்பாடுகளையும் தமிழ் வாசகர்கள் தெரிந்து கொள்ளவும், புரிந்துகொள்ளவும் அந்தப் படைப்புகள் கட்டாயம் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இலங்கையின் சம கால நிகழ்வுகள் அனைத்துமே ஓரோர் நாடுகளிலும் எப்போதோ நிகழ்ந்தவைதான். அங்கெல்லாம் அவை நிகழும்போது எழுதி வைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் இப்போது மொழிபெயர்க்கப்படும் போது அவை சம கால இலங்கைச் சூழலைப் பிரதிபலிப்பவையாகவே இருக்கும்.
3. உங்களுடைய மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘பீடி’ நாவலில் இலங்கையின் தற்கால நிலையை மையமாகக் கொண்ட சில விடயங்களை அவதானிக்க முடிந்தது. இதனை மொழிபெயர்க்க ஏதுவாக அமைந்த விடயங்கள் பற்றி கூற முடியுமா?
‘பீடி’ நாவல் சமூக, அரசியல் விவகாரங்கள் கலந்து சம காலத்தில் எழுதப்பட்ட ஒரு முக்கியமான நாவல். இலங்கையில் அதன் கதைக்களமானது வெள்ளையரின் ஆட்சிக்காலத்திலிருந்து விரிகிறது. மேலோட்டமாக வாசிக்கும்போது குடும்பப் பிணைப்பு, சகோதர பந்தம், நட்பு, காதல் என சாதாரணமான ஒரு நாவல் போலத் தோன்றினாலும், அதன் ஒவ்வொரு வரிகளையும் ஆழமாக, கூர்ந்து வாசிக்கும்போதுதான் அதில் இலங்கையின் தற்கால நிலைமையும், பல தசாப்த காலம் முதல் இன்று வரையான அரசியலும் கலந்து விமர்சிக்கப்பட்டிருப்பதை வாசிப்பவர் உணரக் கூடியதாக இருக்கும். உங்கள் கேள்வியானது நீங்கள் அந்த நாவலைக் கூர்ந்து கவனமாக வாசித்திருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது.
இலங்கையானது வெள்ளையர்களின் ஆதிக்கத்திலிருந்து மீண்ட போது, கலப்பினப் பரம்பரை உருவாகி அவர்களால் ஏற்பட்ட கலாசார மாற்றங்கள் முதற்கொண்டு, தாழ்ந்த சாதி என சமூகம் கருதும் மனிதர்கள் தமது பெயர் முதற்கொண்டு அனைத்தினாலும் சமூகத்தில் அனுபவிக்க நேரும் சகல விதமான சங்கடங்களையும், துன்பங்களையும் அந்த நாவல் எடுத்துரைக்கிறது. நாவலின் இறுதியில், கதையின் பிரதான கதாபாத்திரமான மரத்தினைக் காடையர்கள் வெட்டாமல் பாதுகாக்க புத்தர் முதற்கொண்டு எல்லோருமே முன்வருகிறார்கள், இல்லையா? அந்த மரத்தை, இலங்கையின் சிறுபான்மையினமாகக் கொண்டே ‘பீடி’ நாவல் எழுதப்பட்டிருக்கிறது. அதை மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் மீண்டும் அந்த நாவலை வாசித்துப் பார்த்தால், நாவல் முழுவதும் வரும் அந்த மரம் சொல்லும் செய்தி உங்களுக்குப் புலப்படும்.
அந்த நாவலை வாசித்துப் பார்த்தபோது அதில் கூறப்பட்டிருக்கும் மறைமுகமான அரசியல்தான் எனக்கு அந்த நாவலை மொழிபெயர்க்கத் தூண்டியது. அதை எழுதிய சிங்களப் பெண் எழுத்தாளர் தக்ஷிலா ஸ்வர்ணமாலி கூட 'அந்த நாவலை தமிழில் மொழிபெயர்க்கலாமா?' என்று அவரிடம் அனுமதி கோரியபோது முதலில் தயங்கினார். இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்கள் அதை எவ்வாறு எடுத்துக் கொள்வார்களோ என்ற ஒரு பெருந் தயக்கம் அவருக்குள் இருந்தது. தமிழில் வெளிவந்து இன்று அந்த நாவலை எல்லோரும் கொண்டாடும்போதுதான் நல்லதோர் படைப்பை அளித்திருக்கிறோம் என்ற திருப்தி எம் இருவருக்கும் வந்திருக்கிறது. இன்னுமொன்றைக் குறிப்பிட வேண்டும். அந்த நாவலில் மரம் சார்ந்திருக்கும் பகுதிகளும், இறந்தவர்கள் உரையாடும் நிகழ்வுகளும் மாத்திரமே புனைவுகள்.
4. புனைவுகளாயினும், யதார்த்தமாயினும் சிங்கள எழுத்தாளர்கள் தமது எழுத்துக்களில் முன்வைக்கும் சமூக அரசியல் சார்ந்த விடயங்களை தமிழ் பேசும் எழுத்தாளர்களால் முழுவீச்சில் சொல்ல முடிவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
இலங்கையில் தற்போது வசித்தவாறு எழுதிக் கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்களையும், சிங்கள எழுத்தாளர்களையும் மாத்திரமே இந்த விடயத்தில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது சிங்கள எழுத்தாளர்கள் தமது எழுத்துகளில் பகிரங்கமாக முன்வைக்கும் சமூக, அரசியல் சார்ந்த விடயங்களை உண்மையில் தமிழ் பேசும் எழுத்தாளர்களால் முழு வீச்சில் சொல்ல முடிவதில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு கருத்தாக இருக்கிறது.
ஒரு உதாரணமாக இந்தக் கேள்விக்கும் ‘பீடி’யை முன் வைக்கிறேன். அதில் சிங்களப் பெண் எழுத்தாளரான தக்ஷிலா ஸ்வர்ணமாலி சமகால அரசியல்வாதிகளின் பெயர்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு விமர்சித்தே தனது நாவலை எழுதியிருக்கிறார். அவ்வாறு சம காலத்தில் இலங்கையில் வசித்துக் கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் எவராலும், தமது சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் பெயர்களைப் படைப்புகளில் வெளிப்படையாகக் குறிப்பிட்டுச் சாட இயலுமாக இருக்குமா?
மற்றுமொரு உதாரணமாக, என்னால் மொழிபெயர்க்கப்பட்ட ‘அபராஜிதன்’ நாவலைக் குறிப்பிட விரும்புகிறேன். பிரபல சிங்களப் பெண் எழுத்தாளரான சுநேத்ரா ராஜகருணாநாயக்கவால் எழுதப்பட்ட அந்த நாவலானது, இலங்கைப் பெண்ணொருத்தியால் எழுதப்படவே கூடாத கதையென்று இப்போதும் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ‘இயற்கையாக நிகழும் பேரழிவுகளை விட, மனிதர்களால் ஏற்படுத்தப்படும் பேரழிவுகள் தீவிரமானவை’ என்பதைத்தான் தாய், மகள், பேத்தி என மூன்று பிரதான பெண் கதாபாத்திரங்களைக் கொண்டு மறைமுகமாக அந்த நாவலில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். என்றாலும், இலங்கையில் இந்த நவீன காலத்திலும், திருமண சமயத்தில் மணப்பெண்ணின் ஒழுக்கத்தைப் பகிரங்கமாகப் பரிசோதித்துப் பார்க்கும் சிங்களவர்களின் கலாசாரத்துக்குப் புதிதானதும், புறம்பானதுமான திருமணம் முடிக்காமலேயே ஆணும், பெண்ணும் தம்பதிகளாக ஒன்றாக இணைந்து வாழ்தல்; அந்தப் பெண், குழந்தை பெற்றுக் கொள்ளுதல்; ஒற்றைத் தாய் குழந்தையைத் தனியாக வளர்த்தல், குடும்பப் பாரம்பரியங்களைச் சிதைத்தல், ஓரினக் காதல், இலங்கையில் பேரழிவொன்று ஏற்படுவதாக அபசகுனமாக சித்தரித்திருத்தல் போன்ற விடயங்கள் அந்த நாவலில் குறிப்பிடப்பட்டிருப்பதால் அந்த நாவல் வெளியான காலத்திலிருந்து இன்று வரை பல்வேறு எதிர்ப்புகளைச் சிங்கள சமூகத்திடமிருந்தும், அதிகாரத் தரப்பிலிருந்தும் சந்தித்துக் கொண்டேயிருக்கிறது.
அத்தோடு அந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்திருக்கவில்லை. போர் உச்சம் பெற்று நாளாந்தம் படையினரின் சடலங்கள் சவப்பெட்டிகளில் வீடுகளுக்கு வந்து கொண்டிருந்த காலத்தில் ‘பிரபாகரனும் நேசிக்கப்பட வேண்டியவர்’ என்று சிங்களவர்களுக்கு அன்பாக எடுத்துரைக்கும் விதமாக அந்த நாவலை அந்த சமயத்தில் எழுதுவதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். அந்தக் கால கட்டத்தில் இலங்கையில் நிலைகொண்டிருந்த சமாதானத் தூதுக் குழுக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றோடு இலங்கை அரசாங்கம் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றின் குறைபாடுகளையும், செயற்பாடுகளையும், ஊழல்களையும் அந்த நாவல் வெளிப்படையாக விமர்சித்திருப்பதால் அதிகார வர்க்கத்திலிருந்தும் அந்த நாவலுக்கும், நாவலாசிரியைக்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
ஆகவே, அந்த நாவல் வெளியானதிலிருந்தே அந்த நாவலை எதிர்த்து கொழும்பிலும், இன்னும் பல ஊர்களிலும் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. என்றாலும், இவ்வாறான பல்வேறு எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளும் தைரியம் அந்த சிங்களப் பெண் எழுத்தாளருக்கு இருக்கிறது. அவர் இன்றுவரை தொடர்ந்தும் பல நல்ல நாவல்களை எழுதிக் கொண்டுதான் இருக்கிறார். காரணம், எதிர்ப்பவர்கள் அவரது படைப்பைத்தான் எதிர்க்கிறார்களே தவிர, படைப்பாளியை எதிர்ப்பதில்லை. எதை எதிர்க்க வேண்டும் என்ற தெளிவு சிங்கள சமூகத்திடம் இருக்கிறது. ஆனால், இலங்கையிலிருந்து கொண்டு, தமிழ் எழுத்தாளர் எவராவது இவ்வாறு எழுதியிருந்தால், நமது தமிழ் சமூகமானது, படைப்பை விட்டுவிட்டு, எழுதியவரைத்தான் அவரது வாழ்நாள் முழுவதும் தனிப்பட்ட ரீதியில் எதிர்த்தும், தாக்கியும், அவமானப்படுத்திக் கொண்டும் இருப்பார்கள், அல்லவா?
இவ்வாறாக, பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளும், ஆபத்துகளும் வரும் என்பதை நன்றாக அறிந்திருக்கும்போதும் சிங்கள எழுத்தாளர்கள் தமது மதம், சடங்குகள், கலாசாரம், மரபார்ந்த பண்பாடுகள், பாரம்பரிய மூடப்பழக்க வழக்கங்கள் போன்ற பலவற்றைக் குறித்தும் பகிரங்கமாக சாடி எழுதுவதைப் போல அண்மையில் இலங்கையில் தமிழில் எவரும் எழுதியதை நான் காணவில்லை. அதற்காக தமிழ் எழுத்தாளர்கள் எவரையும் குற்றம் சொல்ல முடியாது. சிங்கள எழுத்தாளர்களுக்கு அதியுச்ச நிலையில் இருக்கும் படைப்பு ரீதியான சுதந்திரம், குடும்ப மற்றும் சமூக ரீதியான வரவேற்பு, அவர்களது நூல்களைப் பரவலாக சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் போன்ற எவையும் இலங்கையில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கு இல்லை. சிங்கள எழுத்தாளர்கள் தாம் எழுதிப் பெரும் வருமானத்தின் மூலம் அன்றாட வாழ்க்கையைக் கொண்டு செல்லலாம் என்ற நிலைமையும், தமிழ் எழுத்தாளர்கள் வருமானத்துக்காக வேறு எதையாவது செய்து கொண்டு, பொழுதுபோக்காகத்தான் எழுத வேண்டியிருக்கிறது என்ற நிலைமையும் இலங்கையில் தொடர்ந்தும் நீடித்துக் கொண்டே இருக்குமானால் இதே நிலைமைதான் தொடர்ந்தும் நீடிக்கும்.
5. தமிழகத்தோடு ஒப்பிடுகின்ற போது அங்குள்ள எழுத்துக்களை அதிகம் கொண்டாடுகின்ற எழுத்தாளர்களே இன்னும் இலங்கையில் நிரம்பியிருக்கிறார்கள். இலங்கை சூழலில் உத்வேகத்தோடு வெளிவருகின்ற இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள் போன்ற படைப்புகள் குறிப்பிட்ட காலத்துக்குள்ளேயே முடங்குகின்றன. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. இலங்கைச் சூழலில் மிகுந்த உற்சாகத்தோடு வெளிவரும் இலக்கிய நூல்கள், சஞ்சிகைகள் போன்றவை குறிப்பிட்ட காலம் மாத்திரம் வெளிவந்து முடங்குகின்றமையினாலேயே தமிழ் இலக்கியப் படைப்புகளைத் தொடர்ச்சியாகக் கொண்டு வரும் தமிழக இலக்கியப் படைப்புகளைக் கொண்டாடும் வாசகர்கள் பெருகி வருகிறார்கள். நல்ல இலக்கியப் படைப்புகள் உலகின் எந்த மூலையிலிருந்து எழுதப்பட்டாலும், வெளிவந்தாலும் அவை கொண்டாடப்படவே வேண்டும். ஆகவே, இலங்கையில் தமிழ் இலக்கியப்படைப்புகள் வெளிவருவது அருகி வரும் இந்தக் காலத்தில் இப்படியாவது தமிழ் நூல்களைப் பெற்று நமது இலங்கை மக்கள் வாசிக்கிறார்களே என்று இதனை ஒரு ஆரோக்கியமான சூழலாகவே நாங்கள் பார்க்க வேண்டும்.
6. இந்த நிலையை மாற்றியமைக்க முடியுமென நீங்கள் நினைக்கிறீர்களா?
தமிழகத்தின் தரமான இலக்கியப் படைப்புகள் இலங்கையில் பரவுவதைத் தடுக்கக் கூடாது. அவ்வாறான சம கால இலக்கியங்களே இலங்கையின் தமிழ் வாசகர்களுக்கு, எழுத்தின் மூலமாக பல தரப்பட்ட சமூகங்களையும் புரிந்து கொள்ளும் வாய்ப்புகளை மேலும் மேலும் உருவாக்கும். இந்த நிலைமையை மாற்றியமைக்கத் தேவையேயில்லை. காகிதத்தின் விலை அதிகரிப்பதால், இலங்கையில் தமிழ் பதிப்பகங்கள் மூடப்படும் நிலைமை இன்று காணப்படுகிறது. கடந்த காலங்களில் வெளிவந்த ‘பெருவெளி’, ‘யாத்ரா’, ‘மூன்றாவது மனிதன்’ போன்ற காத்திரமான இலக்கிய சஞ்சிகைகள் தற்போது முடங்கிப் போயிருக்கின்றன. ‘கலைமுகம்’, ‘ஜீவநதி’, ‘மகுடம்’, ‘காற்புள்ளி’ போன்ற தரமான இலக்கியப் படைப்புகளுக்குக் களம் கொடுக்கும் ஒரு குறிப்பிட்ட சில சஞ்சிகைகள் மாத்திரம் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் காலத்துக்குக் காலம் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறான நிலைமையில், இலங்கையில் இவ்வாறான நூல்களும், சஞ்சிகைகளும் வெளிவருவது வெகுவாகக் குறைந்திருக்கும் இந்தக் கால கட்டத்தில், தமிழகத்திலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தரமான இலக்கியப் படைப்புகள் இலங்கையில் பரவலாக வாசிக்கப்படுவதைத் தடுப்பதனால் எமக்கும், வருங்கால சந்ததியினருக்கும்தான் பலத்த நஷ்டம் உருவாகி விடும், அல்லவா? தமிழ்மொழியானது உலகம் முழுக்க பரவியிருக்கும் இந்தச் சூழலில் நாம் ஏன் ஒரு தீவுக்குள் நமது தமிழ் இலக்கியத்தை முடக்க முற்பட வேண்டும்? அதை முடக்க முற்படாமல், இலங்கை சார்ந்த எமது சமூகங்களுக்கான இலக்கியப்படைப்புகளை நாம் சிறப்பாக எழுதி வெளிக் கொண்டு வந்தால், நமது எழுத்துகளை அதிகம் கொண்டாடும் பிற நாட்டவர்களை உருவாக்கவும் நம்மால் முடியும், அல்லவா?
7. நீங்கள் இலங்கையில் பெரும்பான்மையாக சிங்கள சமூகத்தினர் வாழ்கின்ற சப்ரகமுவ மாகாணத்தை சேர்ந்தவர். அங்கு, தமிழ் எழுத்துக்களுக்கும், எழுத்தாளர்களுக்குமான சூழல் குறைவாகவே உள்ளது. இந்த நிலைமை இலக்கியச் சூழலுக்கு ஒப்பீட்டளவில் கடினமானதாகும். இதனைக் கையாள்வது சிக்கலாக இல்லையா?
நீங்கள் கூறுவது சரி. சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த என்னை, தமிழ் இலக்கியச் செயற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஏனைய மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அறிந்திருக்கும் அளவுக்கு எனது மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு என்னைத் தெரியாது. தமிழ் வாசகர்கள் நிறைந்திருக்கும் உங்கள் மாகாணத்தோடு ஒப்பிடும்போது சப்ரகமுவ மாகாணத்திலுள்ள, தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையும், தமிழில் படைப்புகளை எழுதுபவர்களின் எண்ணிக்கையும் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கே தற்போது காணப்படுகிறது.
இத்தனைக்கும் தொண்ணூறுகளுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழ் இலக்கியச் செயற்பாடுகள் தீவிரமாக நிகழ்ந்த, பல காத்திரமான இலக்கிய சஞ்சிகைகள் வெளிவந்த, நூல் வெளியீடுகளும், இலக்கியக் கூட்டங்களும் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருந்த மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்தவன் நான். இன்று அந்த நிலைமை யாரோ உயரத் தூக்கித் தலைகீழாகப் புரட்டிப் போட்டது போல முற்றாக மாறியிருக்கிறது. தமிழ் நூல்களை வாசிக்கும் ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்தக் கூடிய விதத்தில் செறிவானதொரு நல்ல நூலகம் கூட இல்லாத நிலைமையில் எனது மாகாணம் இன்று காணப்படுகிறது என்பது எந்தளவு வருந்தத்தக்க விடயம்?!
நான் ஊரிலிருந்து கொண்டு எழுதிக் கொண்டிருப்பேனாயின், இந்த நிலைமையானது எப்போதோ என்னை மிகுந்த சோர்வுக்குள் தள்ளி, என்னை எழுதவே விட்டிருக்காது. கையாள்வதற்குச் சிக்கலான இந்த நிலைமை என்னை எழுதவோ, மொழிபெயர்ப்புகளைச் செய்யவோ, நூல்களை வெளியிடவோ ஆர்வமூட்டாமல்தான் இருந்திருக்கும். நல்லவேளையாக நான் வெளிநாட்டில் இருந்து கொண்டு எழுதுகிறேன். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் நூல்களுக்கான புத்தகக் கண்காட்சிகள் பரவலாக வைக்கப்படுவது போன்ற நிலைமை சப்ரகமுவ மாகாணத்தில் இல்லை.
இங்கெல்லாம் இலக்கியவாதிகள் என்பவர்கள் ஒன்றுக்கும் உதவாத வேற்றுக்கிரக வாசிகள் போல தனியாகவும், வேறாகவும் பார்க்கப்படும் துரதிர்ஷ்டமான நிலைமையே இன்று காணப்படுகிறது. ஊரில் நான் வளர்ந்த காலத்தில் என்னை ஊக்குவிப்பதற்கு எனது குடும்பம் மற்றும் ஆசிரியர்கள் முதற்கொண்டு நிறையப் பேர் இருந்தார்கள். இன்றோ, ஊக்குவிப்பதற்கு யாருமே இல்லாமல்தான் தமது திறமையைக் கொண்டு எனது பிரதேசத்தில் ஆங்காங்கே ஓரிருவர் சுய ஆர்வத்தோடு அத்திபூத்தாற்போல இப்போது எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
8. உங்களுடைய இலக்கிய அனுபவம் பரந்தது. இன்றைய சூழலில் அச்சுப் பிரதிகளை தாண்டி நவீனம் என்ற போர்வையில் மின் நூல்கள், மின் இதழ்களின் வருகையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இதில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. முதலில் நல்லதை எடுத்துக் கொண்டால், பரவலாக மின் நூல்கள், மின் இதழ்கள் போன்றவை வெளிவரும்போது அவற்றில் எழுதுபவர்களதும், அவற்றை வாசிப்பவர்களதும் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கிறது. ‘அச்சு இதழ்கள் எல்லோருக்கும் போய்ச் சேருவதில்லை’, ‘அவற்றைப் பணம் கொடுத்து வாங்க வேண்டும்’ போன்ற நிலைமைகள் காணப்படுவதால், அவற்றோடு ஒப்பிடும்போது தமிழ்ப் படைப்புகளை வாசிக்க விரும்புவர்களுக்கும், புதிதாக எழுத விரும்புபவர்களுக்கும் மிகவும் எளிதான ஊடகங்களாக மின் நூல்களும், மின்னிதழ்களும் இருக்கின்றன. அந்த வகையில் அவற்றை வரவேற்கத்தான் வேண்டும்.
என்றாலும் அதில் கெட்டதும் இருக்கிறதெனக் குறிப்பிட்டேன், இல்லையா? அது ஒரு சில மின்னிதழ்களின் தரம். ஆரம்பத்தில் நல்ல எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளைக் கொண்டு வெளிவரும் மின்னிதழ்களின் தரமானது, காலப்போக்கில் 'ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளியிட்டே ஆக வேண்டும்' என்ற நிர்ப்பந்தத்தில், இதழுக்காக வந்து சேரும் தரமற்ற படைப்புகளையும் கூட முகஸ்துதிக்காக பிரசுரிக்கப் போய், தரமற்ற மின்னிதழ்களாக அவை மாறி விடுகின்றன. அச்சு இதழ்கள் அவ்வாறில்லாமல் சிறந்த, காத்திரமான இலக்கியப்படைப்புகளை மாத்திரமே முன்வைத்து வெளியாகின்றன.
என்னதான் இருந்தாலும், புதுப்புது மாற்றங்களோடு தினந்தோறும் காலம் மாறிக் கொண்டேயிருப்பதால் மின் நூல்களும், மின் இதழ்களும் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டும். அவற்றை வாசிக்கக் கூடிய கருவிகள் நம் அனைவரிடத்திலும் தற்போது பரவலாக இருக்கிறது எனும்போது வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும். மின்னிதழோ, அச்சிதழோ எதுவாக இருந்தாலும் தரமான எழுத்துகளுக்கு மாத்திரம் இடமளிக்கும்பட்சத்தில்தான் இலக்கியம் வளமாகும். வாசகர்களும் தரமானவற்றைத் தேர்ந்தெடுத்து வாசிக்கப் பழக வேண்டும். உயர்தரமான இலக்கியப் படைப்புகள், நல்ல வாசகர்கள் எங்கிருந்தாலும், எவ்வாறேனும் அவர்களைப் போய்ச் சேரும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.