எதிர்ப்பார்க்கப்பட்டது போல், ஜெய்சங்கரின் வருகையின் பின், பல்வேறு சக்திகள், பேச்சுவார்த்தையின் தாக்கத்தை முற்றாக இல்லாதொழிக்கவோ என்னவோ, கங்கணம் பூண்டாற் போல், வரிந்து கட்டி களத்தில் இறங்கியுள்ளது இப்போது தெரியவந்துள்ளது. இதில், முதலாவது வெடி ஓசை, ஜனாதிபதி அவர்களாலேயே ஏற்படுத்தப்பட்டது. அதாவது, ஜெய்சங்கர், பேச்சுவார்த்தை முடித்து நாட்டை விட்டு கிளம்பிய கையோடு, அன்னார், தமிழ் தலைவர்களை பேச அழைத்துள்ளார். ஜனாதிபதியின், பேச்சுக்கான இவ் அழைப்பை பலர் நிராகரித்துள்ள வேளை, சம்பந்தனும் சுமந்திரனும், கிளம்பி ஜனாதிபதி அவர்களை சந்தித்துள்ளனர். இதற்காரன காரணம், சுமந்திரன், ஜெய்சங்கரிடமே தெரிவித்துள்ளது போல், பேச்சுவார்த்தைக்கு இந்நாட்டின் உயர்பீடம் அழைக்கும் போது, அப்பேச்சுவார்த்தைகள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், நாங்கள் அதில் பங்குபற்றாவிட்டால், பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாரில்லாதவர்கள் - அதுவும் அழைத்த போதும் கூட, என்ற அவபழிக்கு ஆளாகும் சூழ்நிலையிலேயே, இவ்வாறு கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தங்கள் எழுகின்றன என்று கூறப்பட்டாற் போலும் இருக்கலாம். இருந்தும், இது, தமிழ் தலைவர்களிடையே பிளவுகளை உருவாக்க கூடியது என்பதில் ஐயமில்லை.
இது விடயத்தின் ஒரு பக்கம். விடயத்தின் மறுபக்கமே, சுவாரஸ்யமானது - சாணக்கிய நகர்வு சம்பந்தமானது.
யாழில், தனது பொங்கல் விழாவில், 13 உடனடியாக அமுல்படுத்தப்படாது என்ற தனது நிலைப்பாட்டை அவிழ்த்து விட்ட ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கூற்றுக்கு நேர் விரோதமான நிலையில், அண்மையில் வருகை தந்த ஜெய்சங்கரின் நிலைப்பாடு இருந்துள்ளது. அதாவது ’13 உடனடியாக முழுமையாக அமுல்படுத்தப்பட்டாக வேண்டும்’ என்பது அவரது நிலைப்பாடாகின்றது. இத்துடன் நிறுத்தாது, அன்னார் உடனடியாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டாக வேண்டும் என்ற அழைப்பும் அவரால், அன்னார் கையில் திணிக்கப்பட்ட கதையுமானது. அப்படி எனில், தான் இந்தியா செல்லும் முன், சில விடயங்களை இங்கே முடித்தாக வேண்டும் - (காட்டுவதற்கேனும் அல்லது பேசுவதற்கேனும்). முக்கியமாக, 13வது திருத்த சட்டத்தின் அமுலாக்கத்தை அல்லது மாகாணசபை தேர்தலை - இழுத்தடிப்பது – என்பதற்கு வழிவகை செய்யும் வகையில், சில நகர்வுகள் இங்கே மேற்கொள்ளப்பட்டாக வேண்டி உள்ளது.
இச்சூழ்நிலையிலேயே சம்பந்தன்-சுமந்திரன் ஒரு ‘சிறு’ பேச்சுவார்த்தைக்கு அவசர, அவசரமாக அழைக்கப்பட்டுள்ளனர். இது, பேச்சுவார்த்தையின் பெறுபேறுகளை, உடனடியாக அரசு நடைமுறைபடுத்துவதில் இறங்கி உள்ளதாக ஒரு சித்திரத்தை இந்தியாவுக்கு, காட்டினாலும், உள்ள உள்குத்து யாதெனில், 13வது அமுலாக்கத்தில், சில சிக்கல்களை சம்பந்தன்-சுமந்திரன் வாயிலாக கண்டுணர்ந்து, விடயங்களை இழுத்தடிப்பது, என்பதற்கான வழிகளை கண்டுபிடித்து கொள்வது என்பது ஒரு குறிகோளாக இருந்தாலும், தமிழ் தரப்புகளிடையே இச்சந்திப்பு-இப்பேச்சுவார்த்தை மூலம் ஒரு குளறுபடியை உருவாக்கி விடுவது மறு நோக்கமாக இருந்தாலும், தமிழ் தலைமையை, இந்தியாவிடம் இருந்து கத்தரித்து –அதற்கூடாக – 13இன் அமுலாக்கத்தை காலம் தாழ்த்துவதே பிரதான நோக்காக இருக்க கூடும் என விமர்சகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறும் அடிப்படை காரணம்: 13வது திருத்தச்சட்டம் ஏற்கனவே இலங்கை அரசியல் அமைப்பின் ஒரு அங்கமாக உள்ளது. அப்படி எனில், இதனை – அதாவது இருக்கும் ஒரு சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில், என்ன பிரச்சினை என்பதே ஜெய்சங்கரின் நிலையாகும். அதாவது, 25 வருடங்களுக்கு மேல், ஒரு அரசியலமைப்பு இப்படி நடைமுறைப்படுத்தாமல் கிடக்குமிடத்து, இது தொடர்பில் மேலும் என்ன பேச்சுவார்த்தை வேண்டி கிடக்கின்றது - இத்தனை வருடங்களாய் கதைத்த பின்பும் - இன்னமும் கதைப்பதா, என்பதே அவரது வாத்தின் சாரமாகின்றது. இங்கேதான் பிரச்சினை ஆரம்பமாகின்றது எனலாம். அதாவது, இன்று, 13வது திருத்தச்சட்டம் பூரணமாக நடைமுறைப்படுத்தப்படுமிடத்து:
i. இந்தியா தனது நற்பெயரை இலங்கை தமிழர் பிரச்சினையில் தக்க வைத்து கொள்ளும்.
ii. இப்பின்னணியில், புலம்பெயர் அரசியலின் தீவிர பக்கமும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எமது உள்நாட்டு தமிழர் அரசியலும், இனியும் ஓர் நிகழ்ச்சி நிரலை தேடிக் கொள்வது என்பது சிரமமாகி விடும்.
ஆனால், இலங்கை பெருந்தேசியவாதத்தின் கொடூர முகத்தையும், தீண் போட்டு வளர்க்கப்படும் அதன் கோர வளர்ச்சியையும் நேரடியாக நாளும் அனுபவிக்ககூடிய, இலங்கை மக்கள் - முக்கியமாக இலங்கை தமிழ் மக்கள் - இப்பேரினவாதத்தின் தாக்குதலில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள தாம் நம்பக்கூடிய தலையாய சக்திகளில், இந்தியாவும் இப் 13வது திருத்த சட்டமும் முக்கிய பங்கை ஆற்றக்கூடும் என்பதனை நன்கு அறிந்தே உள்ளனர். ஆனால், திரு. விக்னேஸ்வரன் ஐயா நடத்திய திருவிளையாட்டின் மொத்த விளைவு, அங்கஜன் ராமநாதனின் தேர்தல் வெற்றியில் வெளிப்படுவதாய் சென்று முடிந்தது. (விக்னேஸ்வரன் ஐயா தட்டு தடுமாறி பாராளுமன்றத்துள் புக).
இவை அனைத்தும், ஒரு புறமாய் இருக்க, அதாவது ரணிலின் உள்நோக்கம் கொண்ட ‘அழைப்பு’ ஒரு புறம் இருக்க, ஜெய்சங்கரின் வரவு ஒரு புறம் இருக்க, இன்று இந்தியாவானது, தமிழ் தேசத்தை அங்கீகரித்து, சமஷ்டிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், எழுத்து மூலமாக இந்தியாவிடமே கோரி உள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. அதாவது, இந்தியா 13ஐ கடந்து, அல்லது 13ஐ கதைக்காமல் சமஷ்டியை கதைக்க வேண்டும் என்பது கஜேந்திர குமார் அரசியலின் சாரம்சமாகும். அதாவது, அவரது கூற்றுப்படி ‘13வது திருத்த சட்டத்தை தமிழர்கள் பேச்சுவார்த்தைக்கான ஒரு ஆரம்ப புள்ளியாக கருதுவதிலும் கூட கூடுதலான அரசியல் ஆபத்து உண்டு’ என்பதேயாகும். அத்துடன், “ஐக்கிய இலங்கைக்குள் வட-கிழக்கில் உள்ள முஸ்லீம் மக்களின் அபிலாசைகள் மற்றும் மலையக தமிழ் மக்களின் அபிலாசைகள் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை நாம் முன் வைத்துள்ளோம்” என அக்கடிதம் கூறுவதாயுள்ளது. (22.01.2023: வீரசேகரி).
இது, ரணில் விக்கிரமசிங்கவின் அரசியலோடு பயணிக்கின்றதா என்பதே இங்கு எழும் கேள்வியாகின்றது. பொங்கல் விழாவின் போது, திரு.ரணில் விக்கிரமசிங்காவின் கூற்று பின்வருமாறு இருந்தது: உதாரணமாக அன்னாரின் அண்மித்த வடக்கிற்கான தமது பொங்கல் விஜயத்தின் போது அன்னார் திட்டவட்டமாக அறிவித்தது மூன்றே மூன்று விடயங்கள் தான்: ஒன்று, 13வது திருத்தச்சட்டம் பூரணமாக அமுல்படுத்தப்படும். இரண்டாவது, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உண்மை கண்டுப்பிடிக்கப்படும். மூன்றாவது, இதற்காக தனியே ஓர் விசாரணை கமிஷனும் நியமிக்கப்படும் என்பதே அவையாகும்.
ஆனால், இச்செயற்திட்டங்கள் எப்போது அல்லது எத்தினத்தில் நடைமுறைக்கு வரும் என்பதெல்லாம் கூறப்படவே இல்லை, வழமைபோல். அதாவது, எப்போது இம்மூன்றும், நடந்தேறும் என்பதற்கான ஒரு நேர அட்டவணையோ அன்றி ஒரு தடயப்பொருளோ உரையில் எங்குமே ஒலித்ததாக இல்லை. போதாதற்கு அவர், நாட்டின் மலையக பிரச்சினை, இஸ்லாமிய சமூகத்தின் பிரச்சினை, கிராமங்களில் நிலவக்கூடிய சாதிகளின் பிரச்சினை என ஏகப்பட்ட பிரச்சினைகளை தன் உரையின் போது முன்வைக்கவும் அன்னார் தவறியதாகவும் இல்லை. அதாவது அன்னாரின் மலையக பிரச்சினை, இஸ்லாமிய சமூகத்தின் பிரச்சினை, மற்றும் 13இன் பொருந்தாமை - இவை அனைத்தும் கஜேந்திரகுமார் முன்வைக்கும் யோசனைகளுடன் கைகோர்க்கின்றவா என்பதுவே அடிப்படை கேள்வி.
உண்மையில், இவ் ஒற்றுமை, இருவரும் கூடி பேசி வெளிவந்தவையாக இருக்க முடியாது. ஆனால், இங்கே, இவ் இருவரின் பின்னால் ஓர் மறைகரம் செயல்படுகின்றதா என்பதுவே பிரதான கேள்வியாகின்றது. மறுபுறத்தில் “ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குள் பேச்சுவார்த்தை முடிக்கப்படக்கூடாது” என 27 தமிழ் சிவில் சமூக அமைப்புகளும் 551 தனிநபர்களும் கையொப்பமிட்டு ஓர் ஆவணத்தை முன்வைத்திருப்பதாகவும் இன்று செய்தி வெளிவந்துள்ளது (22.01.2023: வீரகேசரி). இதில் இருந்துதான் ஜெய்சங்கரின், அதாவது, இந்தியாவின் நிலைபாடு வித்தியாசமுறுகின்றது: “முதலில் 13 தீர்க்கப்பட வேண்டும். இது ஓர் ஆரம்பபுள்ளியாக இருக்கலாம். பின்னர் நீங்கள் நினைப்பவற்றை எல்லாம் கேட்டு எடுத்துக் கொள்ளுங்கள்” என்பதே அதுவாகும். இப்பின்னணியிலேயே, மகிந்த மற்றும் கோட்டா உட்பட்டோருக்கு தடை விதித்த கனடா, இப்போது பு-7 நாடுகளையும் இணைக்க முயற்சித்து வருவதாக இன்று செய்தி வெளிவந்துள்ளது –ஜெய்சங்கரின் விஜயத்தின் பின் (22.01.2023: வீரகேசரி).
அதாவது, 2009 இல் இருந்து, இத்தனை வருடமாய், காத்திருந்த கனடா இப்போதுதான் தடை பொறுத்து சிந்திக்க ஆரம்பித்துள்ளது. (பொங்கல் வாழ்த்துக்களை மறவாமல் வழக்கம் போல் வழங்கியதன் பின்). இப்படியான தடைகள், பல்வேறு ராணுவ அதிகாரிகளுக்கும் சர்வதேசம், அவ்வவ் சந்தர்ப்பங்களில் விதித்ததும், புலம்பெயர் சமூகம் பூரித்து கிடந்ததும் பழங்கதைத்தான். ஆனால், ஒரு பிரதேச சக்தியின் செயல்பாட்டால் (அது, தன் நலன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு இருப்பதும் கூட) இந்நாட்டின் பெருந்தேசிய வாதம், எத்தகைய கோரங்களுக்குள் தமிழ் மக்களை தள்ளிவிட கூடும் என்பதனை தமிழ்மக்கள் தம் வாழ்நாளில் அறிந்தே உள்ளனர். அத்தகைய ஓர் கோரத்தை தடுக்ககூடிய இடதுசாரிகளின் அணியும் கடந்த, நிகழ்காலங்களில் பலமுள்ளதாகவும் நேர்பட கதைத்ததாகவும் இல்லை. (நம்பிக்கை தரக்கூடிய முளைகளான வசந்த முதலிகே கூட உள்ளே அடைக்கப்பட்டு கிடக்கினறனர் - மாத கணக்கில்). ஆனால், இவை அனைத்தையும் சீர்தூக்கி பார்க்குமிடத்து, இவை அனைத்தும் எமது வரலாற்றில், ஏற்கனவே, ஓர் நடந்த கதைத்தானோ என்ற கேள்விக்குள் தமிழ் மக்களை நிறுத்துவதாகவே உளது.
இந்தியா உள் நுழைவதும் (ஒப்பரேசன் ப10மாலை காலத்தில் இருந்து) பின் அது வெளியேற்றப்படுவதும், அதற்கான அரசியலை தமிழர்களின் தீவிர முகமே முன்வைப்பதும் - இவை அனைத்தும் விடயங்களின் மறு அரங்கேற்றமா என்ற கேள்விக்கு எம்மை இட்டு செல்கின்றன. ஆனால், இன்று உலகமும், அதன் ஒழுங்கும் மாறுகின்ற அல்லது மாறிவிட்ட தருவாய் இது. நேற்றைய இந்தியா, இன்னமும் இங்கிருப்பதாகவும் இல்லை. மறுபுறம், மேற்கும் ஓர் சுகவீனமுற்ற நிலையில் இருப்பதாகவே படுகின்றது. விடயங்களின் முக்கியத்துவமோ படுபயங்கர வேகத்தில் முன் சென்று கொண்டிருக்கின்றன. இப்பின்னணியில், எமது தமிழ் தலைமைகள், கனவுகளிடை இனியும் காலம் தள்ளாது, குறித்த தருணத்தின், முக்கியத்துவத்தை உள்வாங்கி முன்நோக்கி நகர்தல் சால சிறந்ததாகின்றது. மிக முக்கியமாக, கத்தரிக்க முனையும் பெருந்தேசியவாத சக்திகள் தொடர்பில்,–முக்கியமாக –13இன் முக்கியத்துவம் பொறுத்து தெளிவுபடுத்த வேண்டிய கடமையும், குழப்பி அடிக்க முனையும், கத்தரிக்க முனையும் சக்திகளின் அரசியலை அம்பலப்படுத்த வேண்டிய தேவைப்பாடும் உண்டு எனலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.