எழுத்தாளராகவும், சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் விளங்கிய அமரர் எல்.சாந்திகுமார் பற்றிய நூலிது. நந்தலாலா பதிப்பகத்தின் வெளியீடாக , சிதம்பரம் ராதாகிருஷ்ணனின் நிதியுதவியுடன் வெளிவந்துள்ளது. இலக்கியம், சமூகம், அரசியல், வரலாறு என்னும் தளங்களில் செயற்பட்ட சாந்திகுமாரின் தத்துவார்த்த பார்வை மிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்டுரைகளையும், அவரைப்பற்றிய பல்வேறு ஆளுமைகளின் மதிப்பீடுகளையும் உள்ளடக்கியதாக தொகுதி அமைந்துள்ளது.
நூலினை மேலோட்டமாகப் பார்த்தபோது நூலின் காத்திரமான தன்மையினைக் காண முடிகின்றது. மலையக மக்கள் பற்றி, மலையக மக்களின் சமூக உருவாக்கம், வரலாறு பற்றி, மலையக மக்கள் எதிர்கொண்ட இனக்கலவரங்கள் மற்றும் அவர்கள்தம் எதிர்காலம் பற்றி, மலையக மக்களின் அடையாளம் பற்றி, மார்க்சிய அடிப்படையில் தேசியவாதம் பற்றிய கண்ணோட்டம் பற்றி, மு.நித்தியானந்தனின் 'கூலித்தமிழ்' நூல் பற்றி என நூலிலுள்ள சாந்திகுமாரின் கட்டுரைகள் பேசுகின்றன. அவரது மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் மற்றும் இலக்கியக் கட்டுரைகளையும் நூல் உள்ளடக்கியுள்ளது.
மலையகத்தின் கலை, இலக்கிய , சமூக , அரசியலில் முக்கிய ஆளுமையாளர்களில் ஒருவராக விளங்கிய எல்.சாந்திகுமாரின் ஆளுமையை நன்கு விளக்கும் வகையில் அவரது கட்டுரைகளும், அவர் பற்றிய கட்டுரைகளும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. நூல் வடிவமைப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. நூலினை அனுப்பி உதவிய எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான எல். ஜோதிகுமாருக்கு நன்றி. நூலினை முழுமையாக வாசித்த பின்னர் என் கருத்துகளைப் 'பதிவுக'ளில் பகிர்ந்து கொள்வேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.