1
அன்றும் அவ்வாறே நடந்தது. மிச்சிக்கு இது பழகிப்போயிருந்தது. “அவ்வே.. அவ்வே.. அய்யோ… அய்யோ…” என்று ‘மேல்கேரியில்’ எழுந்த பேரிறைச்சல் இன்று சற்று மிகுந்திருந்தது. அது அப்படித்தான். முதலில் மிகுந்திருப்பதாகத் தோன்றி, போக போக அதன் வீரியம் குறைந்துகொண்டே போகும். பெண்பூமிக்கு ஊற்றிய நீரைப்போல.
கார்த்திகை மாதத்துக் குளிர் இறங்கிக் கொண்டிருந்தது. முகத்தை இறுக்கி மூடியிருந்த ஆங்காங்கே ஒட்டுப்போட்ட கம்பளியைக் கழுத்துவரை இறக்கினாள் அவள். மெல்ல மெல்ல மங்கிப்போயிருந்த அந்த இறைச்சலைக் காதுகொடுத்து ஓர்ந்தாள்.
“ஏய்… வெளியே வாடா… பொட்டெப் பயலே…
கொறெ பிரசவத்தலே பொறந்தவனே… ஆம்புளெயா இருந்தா வெளியேவாடா பாக்கலாம்…
பொட்டெ மாதிரி வீட்டுக்குள்ளே புகுந்து கதவ சாத்திருக்கே…
டேய் மைரா… வெளியே வாடா…
நீ இப்போ வரலே…”
“அய்யோ… அய்யோ.. ஏய் கெல்லண்ணா அவர புடிங்க…
மாதண்ணா, உனக்கு வேறெ பொலப்பே இல்லையா?
உங்கக் குடும்பத் தகராற காலையிலே வச்சிக்கோங்க…
இந்த நடு இராத்திரியிலே… அதுவு அமாவாசே நாள்ளே…
உங்களுக்கெல்லா மனசாட்சியே இல்லையா…
கொழந்தங்க தூங்கறாங்க… தூக்கத்திலே அஞ்சி ஏங்குறாங்க வேறே…
கையிலே இவ்ளோ பெரிய கல்ல எடுத்துகிட்டு.. ஆ.. ஆ..
தப்பித்தவறி எங்கமேலே பட்டா என்ன ஆகுறது…
ஏய் மாதண்ணா.. இங்கே பாரு…
மொதல இங்கிருந்து கௌம்பு…
அம்மாவாசே ஆனாலே உங்க பஜனெய தாங்க முடியலே…”
வழக்கம்போல தொண்டைத்தண்ணிர் காய கத்தினாள் குனிக்கி.
தன் அண்ணன் மாதனுக்கு அஞ்சி வீட்டினுள்ளே தாழ்ப்பாள் போட்டிருந்தான் கெஜ்ஜெ. கதவை உடைக்க கையில் கல்லோடு நின்ற மாதனை என்றையும்போல தடுத்தாள் குனிக்கி. முற்றத்துச் சிறு நிலத்தின் தடுப்புச் சுவற்றிலிருந்து பிடுங்கியெடுத்த, பாசம்படிந்த செம்பாறைக் கல்லை தன் இருகைளால் ஏந்திகொண்டு, முற்றிய சாமைக்கதிர் போல போதையில் தள்ளாடும் மாதனின் கையிலுள்ள கல்லை எட்டமுடியாது, எம்பி அவனது கைகளைப் பற்றி கீழே இழுத்துக் கொண்டிருந்தாள். தூக்கம் வழியும் தன் கண்களை அடிக்கடி தனது இடது மணிக்கட்டால் துடைத்துக்கொண்டே வலதுக் கரத்தால் அவனை மறித்துக் கொண்டிருந்தாள்.
“ஏய் குனிக்கி, என்ன விடு…
அந்த நாய கொல்லாம விடமாட்டே…
அந்தத் திருட்டுநாயி ‘பெண்டனோடு’ சேர்ந்துட்டு ‘தவட்டெ’ தழைய போட்டு ஊறல் போடுறா… எவ்வளவு சொல்லியு அந்த மைராண்டிக்கு அறிவில்லே..
டேய் நாய்களா… மத்தவங்க வயிறு எரியவே பொறந்தீங்களடா… நாயே….
விடு குனிக்கி…. அவனே… அவனே… ம்.. ம்.. உம்..”
தன் நாக்கைத் துருத்திக்கொண்டு குனிக்கியைத் தாண்டிச் சென்றான். தள்ளாடிக்கொண்டே தன் இரு கைளாலும் வலுகொண்டு அந்தக் கல்லை, கருங்காலி மரத்தாலான, ஆங்காங்கு பூண்கள் பதியப்பட்ட அந்த வீட்டின் கதவின்மீது எறிந்தான். பண்டையில் செய்யப்பட்ட அந்தக் கதவில் பட்டு அக்கல் இரு துண்டுகளானது.
“அவ்வே… அவ்வே…”
என்று நிலைத்தடுமாறி கீழே சுருண்டு விழுந்த மாதனின் முதுகு செம்பாறைக் கற்களால் ஒழங்கின்றி கட்டப்பட்டுச் சாணமிட்டு மெழுகப்பட்ட அவ்வீட்டுத் திண்ணையில் பட்டது. சற்று பலத்த அடிதான். அதை போதை விழுங்கியிருந்தது. வலக்கன்னம் முழுதும் தரைத்தொட, பிதற்றலோடு எச்சிலும் சேர்ந்தொழுக அச்செம்புலம் மேலும் சிவந்தது. பூமிதாயின் முலைப்பற்றிய அவனின் இதழ்கள் குவிந்திருந்தன.
“டேய் நான் அமாவாசையில் பொறந்தவன்டா…
ஏய் குனிக்கி… ஏய் அம்மே குனிக்கி… என்ன மன்னிச்சிடு”
என்ற அவனது முனங்கல் கழனித்தொட்டியுள் நீர் அருந்தும் எருமையின் மூச்சுக்காற்றுபோல தொடர்ந்தது.
அவன் கடும் அமாவாசையில் பிறந்தவன். என்ன சொன்னாலும் அவன் அடங்கமாட்டான். என்ற எண்ணம் அக்கேரியிலுள்ள அனைவருக்கும் இருந்தது. இது ஒருவகையில் அவனுக்குச் சிறு சாதகமும், பெரும் பாதகமும்கூட. என்றையும்போல அவன் விழும் நேரத்திற்காகக் கால்கடுக்கக் காத்திருந்த அக்கேரியின் மக்கள் “அப்பாடா… சனிய தொலஞ்சது..” என்றவாறு தம் முற்றத்து ‘மிண்டேரி பள்ளியில்’ ஏற்றியிருந்த விளக்கினை அணைத்துவிட்டு, பூண்பொருத்திய தம் கதவுகளை மூடி உறங்க சென்றனர். அடுத்தடுத்து அடைத்துக்கொண்ட அக்கேரியின் வீட்டுக் கதவுகளின் கடுப்பின், வெறுப்பின் சப்தம் மிச்சிக்குச் சங்கடத்தைப் பெருக்கியது. அவள் எதிர்பார்த்திருந்த நேரம் வந்தது. கண்களைத் திறக்கவிடாது தழுவிய உறக்கத்தைத் துறந்தாள். உடலின் அசதியோ, அப்படியே உறங்கிபோனால்தான் என்ன? என்று அறிவிற்குத் தொடர்ந்து அறிவுறுத்தியும் என்றையும்போல அவளின் மனது கேட்கவில்லை. அவளின் அடிவயிற்றில் இனம்புரியாத பயமொன்று மெதுவாகப் படர்ந்தது. காலையில் பெய்த அடைமழையும், சிவந்த மாலை வானமும் கடும் பனிப்பொழிவின் முன்குறிப்பாகி நின்றதை அவள் எண்ணினாள். ‘மதிலில்’ எரிந்துகொண்டிருந்த நேரிமரத்தால் செய்யப்பட்ட விளக்கின் கரிந்து ஒதுங்கிய நிறமும் அடர்ந்து சிவந்த அவ்வானத்தின் நிறத்தையே ஒத்திருந்தது. தூக்கம் துறந்த அவளின் கண்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
போர்வையை விலக்கினால் அடுத்த நொடியே உடல்கொள்ளும் நடுக்கத்தின் பெருந்தொற்று அவள் விலக்கும்முன்னே தொற்றிக்கொண்டது. இரவில் உறங்கசெல்லுமுன் தலையில் அடர்த்தியாய் வெண்ணெய்ப் பூசும் அவள் அன்று பூசவில்லை. அமாவாசை நாளின் நினைவு வந்தவுடனேயே அவளைத் தொற்றும் அனிச்சை முடிவிது. இவ்வாறு ஒவ்வொரு நாளிலும் பல அனிச்சைகள் அவளை விடாது துரத்தின.
2
திருமணத்திற்கு முன்பே மாதன் குனிக்கிக்கு அறிமுகமானவன். குலதெய்வ சாமியாடி கெலப்பெ ஐயாவின் வார்த்தையை மறுக்கவியலாது குளிரில் உருகும் மாதனென்னும் வெண்ணெயை வேறு வழியின்றி அவள் சுமந்துகொண்டாள். அன்றுமுதல் அவ்வெண்ணெய்த் திண்ணம் குறையாது உருகிக் கொண்டிருந்தது. விதியை நொந்துகொண்டு போர்வையை முழுவதும் விலக்கினாள் அவள். முழங்காலுக்கு மேலே சென்றிருந்த ‘முண்டினைச்’ சரிசெய்தாள். வலுவான தேக்குக் கதவின் சங்கிலித் தாழ்ப்பாளை அகற்றினாள். அக்கதவை மெதுவாகத் திறக்க முடியாது என்பது அவளுக்குத் தெரியும். உள்ளே உறங்கும் பிள்ளைகளின் தூக்கம் கலையும் என்பது அவளுக்கு நன்கு தெரியும். பகலெல்லாம் சாராயம் காய்ச்சிவிட்டு உஷ்ணத்திற்குத் தலையில் ஆமணக்கு இலையைக் கட்டிக்கொண்டு உறங்கும் இளையமகன் ‘பெண்டன்’ தூக்கம் கலைய கோபத்தில் “மண்டெ… மண்டெ…” என்று சீரிபாய்ந்து கதவடைக்க வரும் முன்காட்சி அவளின் கண்முன்னே நிழலாடியது.
தளாத உறக்கம் தவழும் தன் கண்களைப் பலமுறை இமைத்து இமைத்து பார்வையைச் சற்று தெளிவாக்கிக் கொண்டாள். இருந்தும், கோர்த்திருந்த பீளை அவளின் பார்வையை மங்கலாக்கியிருந்தது. வலிந்து பலமுறை இமைத்தாள். கண்ணிடுக்கில் இறங்கிய பீளையின் காரம் கண்களில் பரவி துருத்தியது. இமைக்கொட்டுத் தொடர்ந்தது. பீளை தழுவிய இமைகள் ஒட்டி ஒட்டி விலகின. இந்தவிசை அவளுக்குப் பிடித்தவொன்று. இது ஏதோவொருநாள் அவளுக்கு வாய்ப்பது. அவளைக் குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச்செல்வது.
வெளியில் அமாவாசையின் அடர் இருட்டு அவளைக் கவலைக்கொள்ள செய்யவில்லை. விளக்கினைக் கையில் ஏந்திக்கொண்டு செல்வது வீண். கதவை விலக்கியதும் எதிர்காற்றில் அது அணைந்துவிடும். பலமுறை இருட்டில் நடந்து பழகியவளுக்கு அதுவொன்றும் பெரிதில்லை. ஒளியின்றி கதவை விலக்குவதும், அடைப்பதும் ஆகாது என்பதால் அணையுமென்று தெரிந்தும் எண்ணெய் நிரப்பாத விளக்கினை எடுத்துக்கொண்டாள். கதவைத்திறந்து விளக்கணைந்தாலும் மீண்டும் கதவடைப்பதற்கான ஒளிக்கு வழியொன்றிருந்தது.
முன்கேரி மல்லன் விடிய விடிய மெத்தை விளக்கினை ஏற்றிவைப்பது வழக்கம். கடும் காசநோயால் தொடர்ந்து இருமும் அவனுக்கு இரவுமுழுதும் அவ்விளக்கொளியே துணை. அகலமான மண்சட்டியில் நீரூற்றி, அதன் நடுவில் வெண்கலக் கோப்பையைக் கவிழ்த்துவைத்து, அதன் மேல் விளக்கினை ஏற்றி வைப்பான். ‘அரெபெட்டு’ மலையிலிருந்து அள்ளிவந்த, எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் ‘நஞ்சு உல்லு’ புல்லினால் வேயப்பட்ட கூரை நெருப்பின் அனல் பட்டாலே போதும். பற்றிக்கொள்ளும். அதற்கும் மல்லன் ஒரு வழி வைத்திருந்தான். கனமான ‘அவிரியொன்றினை’ அவ்விளக்கொளிக்கு நேராகக் கட்டியிருந்தான்.
ஒருமுறை கூரையில் நெருப்புப் பற்றிவிட அவன் அன்று தப்பித்ததே பெரும்பாடாயிற்று. நெடுநாட்களாகப் பேச்சுவார்த்தை இல்லாத மல்லனை மாதன் மிச்சியின் கம்பளியைக் கொண்டுப் போர்த்தி, நெருப்பிலிருந்து காப்பாற்றி, போரடிக்க முற்றத்தில் குவித்து வைத்திருந்த சாமைக்கதிரின்மீது தூக்கிவீசி, உரத்தக் குரலில் “வயிறு நிறைந்த குறும புல் வீட்டினை நெருப்பு வைத்தானாம்” என்ற முதுமொழியைக் கூறிக்கொண்டே தன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கேரியின் குறுக்கிலும் நெடுக்கிலும் பெருமிதத்தோடு நடந்த நாள்தொட்டு விளக்கின்மேல் அவிரியைத் தொங்கவிடும் எண்ணம் மல்லனுக்கு எழுந்தது. ‘அரெபெட்டில்’ சாராயம் காய்ச்சும் மாதனைக் கண்டே அவனுக்கு இவ்வெண்ணம் உதித்தது எனலாம். அன்று நெருப்பில் கருகிச் சொட்டையான தன் தலையில் மீண்டும் மயிர் வளரவேண்டி இன்றும் சிறிய வெங்காயத்தைத் தேய்த்துக் கொண்டிருந்தான். முழுதும் துருப்பிடித்திருந்த சங்கிலித் தாழ்பாளைப் பிடித்து வலுகொண்டு இழுத்தாள் மிச்சி. அவள் எதிர்பார்த்தது நடந்தது. விளக்கும் அணைந்தது. தன் தலைதுணியைக்கூட சரியாகக் கட்டாமல் வெளியேறி விரைவாகக் கதவினை அடைத்தாள். தாமதமின்றி எழுந்த பெண்டனின் வசவுகளை அடைப்பட்ட கதவு தனக்குள் தக்கவைத்தது.
“இன்னிக்கி அவ வந்து கத்திட்டிருந்தானு போயி கூட்டிட்டு வந்தே… நீ தீந்தே…
பெத்தவானுகூட பாக்கமாட்டே… பாத்துக்கோ…
இவ்வளவு நாளு காய்ச்சிக் கொன்ன…. இப்போ குடிச்சே கொல்லுறா…
இதிலே புத்திமதி மைரு.. வேறே…
ஓசியிலே கொடுக்குறத குடிச்சோமா… வந்து படுத்தோமானு இல்லாமே… பெரிய புடுங்கி புத்தி சொல்லுறா….
இங்கே பேசுனா மண்டெ ஒடெயுனு… அங்கேபோயி புடுங்குறா.. புடுங்கி…
ஏய் மண்டெ, மறுப்படியு சொல்லுறே, அவன கூட்டிட்டுவர போன… உன்ன வெட்டி போட்ருவே…”
என்று உறங்கபோகும்முன் என்றையும்போல பெண்டன் கூறிய வார்த்தைகள் செவியில் அறைந்து கொண்டிருந்தன. போனமுறைக் கூட்டிவந்ததற்காகப் பின்னங்கழுத்தைப் பிடித்து வீட்டைவிட்டு வெளியே தள்ளிய வலி இன்றும் லேசாக இருந்தது. நீண்டநேரம் கம்பளியின் கதகதப்பில் அவளது அடிபாதம் சூடேறியிருந்தது. அது குளிர்ந்த முற்றத்தில் பட்டதும் அதிகாலையில் பால்கறந்தப்பின் குளிர்நீரில் கழுவிய முதிர் எருமையின் மடிபோல் விறைக்கத் தொடங்கியது. அடுத்தடுத்த எட்டுகளில் பாதத்தில் ஏறியகுளிர் கால்விரலின் நக இடுக்கிலேறி பனிக்கனலைத் துருத்தியது. அவளை அறியாமலேயே எழுந்த முனங்களோடு தொண்டைச் செருமலும் சேர்ந்துகொண்டது. ஆனால், அந்தக் கூதிர்காற்று அவளின் விழியில் தவழும் உறக்கத்தை மட்டும் கலைத்தப்பாடில்லை. இன்று அதிகாலைமுதல் மாலைவரை ‘ஹனி ஹாடவிலிருந்து’ ‘மக்கரிக் கூடையில்’ உருளைக்கிழங்குச் சுமந்தவலி அவளின் கழுத்திலிருந்து முதுகுவரை ஆட்கொண்டிருந்தது. உறக்கம்மேலிட, பாதையின் பழக்கத்தில் கண்களை மாற்றி மாற்றி மூடிக்கொண்டே மேல்கேரியின் விளிம்பினை அடைந்தாள். அன்றும் அதேகாட்சி.
“ஏய் மாதண்ணா.. எந்திரிங்க…
குளிரு அதிகமா இருக்கு… எந்திரிங்க…”
கீழே விழுந்திருந்த மாதனை எழுப்பிக் கொண்டிருந்தாள் குனிக்கி. மற்றவர்களுக்கு இருப்பதைவிட குனிக்கிக்கு மாதனின்மேல் அதிக கோபமிருந்தது. அவனின் முகத்தைக் காண்பதே பெரும்பாவம் என்று குனிக்கியின் வீட்டார் அவனை வெறுத்து நெடுநாட்களானது. இருந்தும், அவனோடு மன்றாடும் குனிக்கியை அத்தெருவே பெருங்கோபத்தோடுப் பார்த்தது. “உனக்கு கொஞ்சம்கூட சொரணெயில்லே” என்று அத்தெருவே அவளை, பலமுறை திட்டித் தீர்த்தும் அவளின் இயல்பு தொடர்ந்தது.
“உம் புருஷன கொன்னவனோட கொஞ்சி குலாவுறே…
த்தூ… அவனோடு என்ன பேச்சு…
என் அடிவயிறு எரியுது டீ…
நீ.. நாசமா போவ…”
என்று மூன்று வீடுகள் தள்ளி வாழும் தன் அத்தை மண்ணள்ளி எறிந்தளித்த சாபத்தை அவள் பலமுறை துடைத்ததுண்டு. தன் கணவனைக் கொன்றவன் என்ற பழி இருந்தும் மாதனைப் பேண அவளுக்கு இரண்டுக் காரணங்களிருந்தன.
3
ஏறத்தாழ மேல்வயிறுவரை பழுத்த வெண்தாடி திரளும் அவ்வூரின் பெருங்கிழவன் குனிக்கியின் தந்தை காளன். ஒன்பது குறிஞ்சிகளைக்கண்ட அவன் நீலக்குறிஞ்சி பூக்கும் காலத்தில் குலதெய்வத்திற்கு முதல்தேன் எடுப்பவன். அவன் கொண்ட மூப்பால் அம்முறை எவ்வளவு சொல்லியும் கேளாது முதல்தேன் எடுக்கும் அப்பெருமரத்திலிருந்து கீழே விழுந்துபோனான். அவனது இறுதி நாட்களில் அவனுக்கு உறக்கத்தையும், வலிமறக்கும் நிம்மதியையும் அளிக்க பெருந்துணைப் புரிந்தவன் மாதன். அவன் சாராயம் காய்ச்ச ஊறல்போடும் ‘அரெ பெட்டிலிருந்து’, அது எந்த நேரமானாலும் சரி மண்குடுவையில் ‘கப்பளிக் கொடியை’ சுற்றிக் கொண்டுவரும் சாராயத்தில்தான் காளனின் வலிக்கு, உறக்கத்திற்கு வழியிருந்தது. சில நாட்களில் நள்ளிரவில் வந்து கதவை மூன்றுமுறைத் தட்டி சைகை செய்துவிட்டுச் சாராயத்தை வைத்துச்செல்லும் அவனது வருகைக்கு ‘மிண்டேரி பள்ளியின்’ விளக்கோடு காளனின் விழிகளும் காத்திருக்கும். புலியும் கரடியும் உலவும் அந்த அடர்காட்டின் வழியே எவ்வளவு ஆத்திரமானாலும் யாரும் வரத் தயங்குவார்கள். பலபேரைக் காவுவாங்கிய இந்த அபாயமான வழியின்வழியே, அவ்வடர் இருட்டில் மாதன் போதையில் வருகிறான் என்று அவனது துணிச்சலுக்கு ஊரார் காரணங்கற்பித்தாலும் மாதனின் வருகையில் போதையைத்தாண்டிய ஓர் தெளிவு இருந்தது.
அவன் கொண்டுவரும் சாராயத்தில் காளன் தண்ணீர் கலக்கமாட்டான் என்பதை அறிந்த மாதன் அவனுக்காக சாராயத்தில் ஓர் சூட்சுமத்தை வைத்திருந்தான். பெருந்தேன் எடுத்த அக்கிழவனால் கண்டறிய முடியாதபடி அச்சாரயத்தில் கொம்புத்தேனைக் கலந்திருப்பான். கொம்புத்தேனின் தித்திப்பு தெரியாவண்ணம் ‘ஜக்கல முள்ளு’ செடியின் கோலினைக் கொண்டு அச்சாரயத்தை நுரை பொங்க நன்கு கலக்குவான். காய்ச்சினசூடு குறையாத அந்தச் சாராயத்தைத் தனக்கு என்றும் நிற்காத விக்கல் பெருக குடித்துவிட்டு,
“அவந்தாமா… என்ன உசுரோட வச்சிருக்க…
அவ இல்லாம இருந்திருந்தா நா என்னிக்கோ செத்திருப்பே…
என் மகனே மாதா… என்ன சரக்குட இது… அமிர்தம்டா…”
என்று வலிகுறைந்த நிறைவில் புலம்பும் தன் தந்தையின் உளறலைக் குனிக்கி கேட்காத நாளில்லை.
இரவில் அளவின்றி குடித்தவர்களுக்கு அதிகாலையில் உண்டாகும் ‘ஓக்காடு’ கொடுமையானது. ‘ஓக்காடால்’ குடல்பிரட்ட, அங்காங்கே அமர்ந்து, நாக்கைத் தொங்கப்போட்டு வாந்தியெடுப்பவர்களுக்கு அதை சரிக்கட்ட கொஞ்சம் சாராயம் அவசியம். நடுங்கும் தம் கைகளை ஒன்றோடு ஒன்று கோர்த்தடுக்கிக்கொண்டே அவ்வூரின் ‘ஓக்காடு’ பேர்வழிகள் முதலில் செல்வது காளனிடமே. காளனை நலன்விசாரிக்க வருபவர்கள் அவன் குடிப்பதை அறிந்து கொண்டுவரும் சாராயத்தை அவர் இருப்பில் வைத்திருப்பது அவ்வூரில் எல்லோரும் அறிந்ததே. ‘ஓக்காடில்’ வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இல்லையென்று அவர் சொன்னதில்லை. அதன் வலியை அவர் நன்கு அறிந்தவர். அவரும் இதற்காக பலமுறை அலைந்ததுண்டு. ‘ஓக்காடில்’ உள்ளவர்களெல்லாம் அவரை அணுக இதுவும் ஒரு காரணம். அப்படி வந்தவர்களிடம் காளன் கேட்கும் முதல் கேள்வி,
“டேய்… நேத்து யாருகிட்டே சரக்கு வாங்குனே?”
என்பதே. அதற்கு வரும் பதில்களும் அவருக்குத் தெரியும்.
“அதே ஏ கேக்கிறீங்க…. ‘பட்டகொரெயிலிருந்துதா’… வெளங்காதவ… எந்தச் சரக்க கொடுத்தானோ… தலைய கழட்டி வச்சிடலாம்போல இருக்கு… பீடே..”
என்ற பதில்வார்த்தை முடியும்வரை காத்திருந்துவிட்டு, தன்னிடமுள்ள சாராயத்தைக் கொடுத்தவாறே,
“ஏய் பில்லா, நம்ம மாத, நேத்து ஒரு சரக்கு கொண்டுவந்தா பாரு… தேன்தா… தேனே தா..
ஒரு குடுவை முழுசும் நானே குடிச்சே..
‘ஓக்காடும்’ இல்லே… இம்மி தலைவலியும் இல்லே…
அதுதான் சரக்கு… ‘பெள்ளனின்’ சரக்கெல்லா என்ன சரக்கு… ம்..
அவனுக்கெல்லாம் அப்பன் இவன்…”
என்று சிலாகித்து கூறும் காளனின் புகழுரை வந்திருந்த அத்தனைப்பேரையும் மாதனிடம் செல்லத் தூண்டும்.
4
மாதனுக்கு ஒரு கொள்கையிருந்தது. அவன் தன் ஊராருக்குச் சாராயத்தை விற்பதில்லை. பொதுவாக, திருமணம் போன்ற ஏதேனும் பெரிய நிகழ்வுகளுக்கு மட்டும் சுற்றியிருக்கும் ஊர்களுக்கு, அதிலும், நன்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் மாதன் காய்ச்சித் தருவதுண்டு. அவனது ஒருகுடுவை சாராயத்திற்காக மூட்டை சாமையையும், கிழங்கையும், பணத்தையும் அளிக்க பலர் தயாராக இருந்தும் அவன் தன் சாராயத்தை அவனது ஊரில் விலைபேசியது கிடையாது. அதே அவனுக்கு நேர்முரண் அவனது சகோதரன் கெஜ்ஜெ. காசுக்காக எதையும் செய்பவன். பீயில் விழுந்த காசையும் எடுத்துத் துடைத்து வைத்துக்கொள்பவன். மாதனின் சாராயத்தைக் குடிக்கவே அவன் காய்ச்சியளிக்கும் விசேஷங்களுக்கு அவ்வூரில் சிலர் அழைக்காமலேயே செல்வதுண்டு. அதேபோல, அவன் லேசில் சரக்கைத் தரமாட்டான் என்பதை அறிந்தும் மாதனின் தரமான சரக்கு அவனைநோக்கி அவன் காய்ச்சும் இடத்திற்கே நகர்த்தும்.
“உங்களையெல்லா யாருட இங்கே வரசொன்னா…
ஒரு சொட்டுகூட நா தரமாட்டேனு உங்களுக்குத் தெரியாதா…
உங்க பொண்டாட்டிங்க முண்டெக்கன்னியாக நானா கெடச்செ.. ஆ…
மரியாதையா இங்கிருந்து போங்கடா…”
“மதண்ணா… ‘ஓக்காடு’… பத்தலெ…
காளய்யா நேத்திக்கி நீ கொடுத்த சரக்கப்பத்தி சொன்னாங்க… வந்துட்டோ…”
“அந்தக் காளனுக்கு வலிக்குக் கொடுத்தா உங்கள சொகத்துக்கு அனுப்பியிருக்கானோ…
உங்களுக்கென்ன, குடிச்சிட்டு இந்தப் புலிக்காட்டுலே மைரேசரின்னு படுத்துப்பீங்க… நீங்க செத்துத் தொலைஞ்சா உங்க வீட்டுக்கு யாருடா பதில்சொல்லுறது…
இப்பவே, நீங்க குடிக்கறதுக்கெல்லா ஊரே என்ன கரிச்சிக் கொட்டுது… இதுலேவேறே வந்துட்டாங்க ‘ஓக்காடு’… ‘போக்காடுன்ட்டு’… போங்கடா…
சரக்குமில்லெ… மைருமில்லே… திரும்பி பாக்கமா போங்கடா…
எடத்த காலிபண்ணுங்க….”
“அண்ணா… அண்ணா… இவ்வளவு தூர வந்துட்டோ… ‘ஒக்காடுக்கு’ கொஞ்சம் கொடுங்கண்ணா…
கொஞ்ச அடிக்காம நடக்குற தெம்புகூட இல்லெ… கோவிச்சுக்காதிங்க அண்ணா… கொஞ்ச ஒத்தாசெ பன்னுங்கண்ணா…”
“டேய்… சொன்ன கேக்கமாட்டிங்க…
இன்னு கொஞ்சநேர நின்னீங்க… வெட்டி போட்டிருவே…
கௌம்புங்கடா மைராண்டிகளா…”
கோபத்தோடு, கையில் உலையைத் தூண்டி கரிபடர்ந்த மூங்கில் தடியோடு முன்னகரும் மாதனுக்குப் பயந்து அனைவரும் உடனடியாக பின்வாங்குவார்கள். கச்சைக்கட்டிய அவனது நெடிய தோற்றமும் சில வேளைகளில் பட்டென வெளிப்படும் முன்கோபமும் அவன்மேல் அனைவருக்கும் ஒருவித அச்சத்தைக் கட்டமைத்திருந்தது. பின்வாங்கி பயந்தோடுபவர்களைக் காண மாதனின் மனதிற்குள் ஒருவித ஆனந்தம் விரவி அவனது வீராப்பைப் பெருக்குவதுண்டு. ஊக்கமும், வலுவுமிழந்து, தோள்கள் தொங்க தன்னை திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே ‘அரெபெட்டின்’ மேல்முடுக்குப் பாறைவரை சென்றவர்களை,
“ஏய் ‘சுவ்வே குனவெயே’ வாங்கடா…”
என்று மீண்டும் அழைத்து, அவர்கள் எதிர்பார்த்ததைவிட சுட சடச் சாரயத்தைக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதுண்டு. இறுதியில் எப்படியும் தந்துவிடுவார் என்று இந்த நொடிக்காகக் காத்திருக்கும் அவர்களுக்குச் சில நாட்களில் ஏமாற்றமே மிஞ்சும். அவர்களோடு அவனது தம்பி கெஜ்ஜெ செல்லும் நாட்களில் நிச்சயம் செல்பவர்களுக்கு ஒன்றும் கிடைக்காது.
இந்தப் போதையுலகில் அண்ணனெனும் பிம்பத்தை இழக்க அவனுக்குத் துளியும் விருப்பமில்லை. மேலும், குடித்துவிட்டு தன் மனைவியைக் கைவலிக்க அடிக்கும் கெஜ்ஜெயின் குணத்திற்கு, அப்பாவத்திற்குக் காரணமாவதை அவன் விரும்புவதில்லை. சில நாட்களில் ஏமாற்றி வாங்கிசெல்லும் சரக்குடன் ‘சோக்கெ பட்டையை’ சேர்த்துக் காய்ச்சி அதை பல மடங்காக்கி விற்கும் பாவத்திற்கு ஆளாகவும் அவனுக்கு விருப்பமில்லை. சரக்கோடு சேர்ந்த ‘சோக்கெ’ குடலை அரித்துத் தள்ளிவிடும். தன் தந்தைக்குக் கொடுத்த நல்ல சரக்கையெல்லாம் அவருக்குத் தெரியாமலேயே ‘சோக்கையிட்டுக்’ காய்ச்சி திடகாத்திரமான அவரை கொன்றதே கெஜ்ஜெதான். இதைக் கண்டுகொண்ட நாள்தொட்டு அவனைவிட்டு பெரிதும் விலகியிருந்தான் மாதன். கெஜ்ஜெ வாங்கும் சரக்கினை எவ்வாறு பயன்படுத்தப்போகிறான் என்பது அவனது அப்போதைய மனநிலையைப் பொறுத்தது. அதில் பெரும்பாலும் சுயநலமே மிஞ்சியிருக்கும்.
மனதில் உதித்த பெருமிதம்கலந்த சிறு கருணையில், சென்றவர்களைத் திரும்ப அழைத்ததும் அவன் வாயிலிருந்து வரும் முதல்வார்த்தை,
“அந்த ‘சுவ்வே கூசு’ வந்திருக்கானா…. ஆ…
பொய்சொல்லாம சொல்லுங்கடா?”
என்பதே. புகைப்பட்டும், தூக்கமின்றியும், மலையின் உச்சி வெயிலிலும் சிவந்திருந்த மாதனின் கண்கள் மேலும் கோபத்தால் சிவக்க, அவர்களின் கண்களை நோக்கி, பார்வை விலக்காது அவன் கேட்கின்ற இவ்வினாவிற்கு அக்கூட்டத்தில் யாரேனும் ஒருவர் பேந்த விழித்தால்போதும் கெஜ்ஜெயின் வருகையை அவன் உறுதிபடுத்திவிடுவான். ஒருவேளை இவ்வாறு நடந்துவிட்டால் அடுத்து நடப்பதேவேறு, பேந்த முழித்தவனுக்கு முதலில் விழும் பிரம்படி தொடர்ந்து எல்லோரின் முதுகையும் பதம்பார்க்கும். அவன் எவ்வளவுபெரிய ஆளாக இருந்தாலும் சரி. தன் தம்பி, தன் சரக்கினை இவர்களைக் கொண்டு தீமைக்குப் பயன்படுத்த எண்ணுகிறான் என்று அவனுக்குத் தோன்றும் எண்ணம் அவனை சில நிமிடங்களுக்கு மிருகமாக்கிவிடும்.
தன் தாய் இறந்தப்பின்பு தன் தந்தைக்கு இரண்டாம் தாரமாய் வந்து அவனை வளர்த்த தாய், உண்மை தெரியாமல்,
“சாராயத்த கொடுத்து கொடுத்து என் புருஷன கொன்னுட்டயே”
என்று தன் தந்தை இறந்தபோது பேசிய வார்த்தைகளின் நினைவு தன் தம்பியின்மீதான கோபத்தை அடிக்கடி பன்மடங்காக்கும். இரண்டாவது தாய்க்குப் பிறந்த தன் தம்பியின் பேராசையால், போதைவெறியால் நிகழ்ந்த அத்தவறை ஒருமுறையேனும் தன் தாய்க்கு அவன் கடும்கோபத்திலும்கூட சுட்டிக்காட்ட விரும்பியதில்லை. பெற்ற தாயைவிட வளர்த்த தாயிடம் அவப்பெயரைப் பெற்றுக்கொள்வது பெரும்பாவம். அவன் செய்யாத பாவம் இன்றும் தொடர்ந்தது.
சில நாட்களில் பெரும் சிரத்தையெடுத்து கெஜ்ஜெயைத் தவிர்த்துவந்தபோதும் மாதன் கேட்ட கேள்விக்குப் பேந்த பேந்த முழித்து அடிவாங்கிய கூட்டமுமுண்டு.
“ஏய்… ரோசமில்லெ…
இப்படி அடிவாங்கி குடிக்கனும்னு நம்ம தலெவிதியா?
இவ இல்லாட்டி வேறெ ஆளா இல்லெ…
திருட்டு நாயி… அவ மிரட்டி அடிக்கவா நம்மள பெத்துப் போட்டிருக்காங்க…”
என்று புலம்பிக்கொண்டே திரும்பும் கூட்டத்திற்குப் ‘பெந்நேரி’ மரத்தின் பட்டையையிட்டு அவன் காய்ச்சும், ‘ஓக்காடு’ ஏற்படுத்தாத சரக்கின் சுவை அடுத்தநாளும் அவனிடம் செல்லத் தூண்டும். அதிலும் காய்ச்சிய சாராயத்தில் அவன் கலக்கும், மூங்கில் கழியில் நேரியிலையை மூடி ஊறவைத்த, பாறையில் கட்டிய தேனும், அதை அவன் கலக்கும் விதமும் அவனது சரக்கின் பெரும்ஜாலம். பெரியவர்களுக்கு எனில் கொம்புத் தேனையும், விழாவிற்கெனில் பாறையில் கட்டிய பெருந்தேனையும் அவன் பக்குவமாய் கலப்பது யாருக்கும் தெரியாத இரகசியம். அவிரியில் ஊற்றிய சாராயத்தோடு தேனைக்கலந்து, அதை நேரிமரக்கோலினால் நன்கு நுரைத்ததும்ப கலக்கி, அக்கோலினை அதனுள்ளேயே இட்டு, அந்த அவிரியைக் ‘கப்பிளி’ கொடியால் நன்கு கட்டி, சூடு தணியும்வரை ஊறவைக்கும் அவனது சரக்கிற்குத் தம் சொத்தை விற்கவும் பலர் தயாராக இருந்தனர். இருந்தும் காசுக்கு ஆசைப்படாத ஜென்மம் அவன். ஒருவகையில் சாராயம் காய்ச்சுவது அவனுக்குக் கலை. அந்தக் கலையில் நான் ஞானி என்பது அவனின் எண்ணம். இதுவே, அவனுக்கும் அவனது மகன் பெண்டனுக்குமான முரணுக்குக் காரணமாகும்.
பலர், பலமுறை முயன்றும் அவனின் பதத்திற்குச் சரக்கினைக் காய்ச்ச முடியவில்லை. இதனாலேயே பகல் நேரத்தில் அவன் சரக்குக் காய்ச்சும் இடத்தைவிட்டு எங்கும் செல்வதில்லை. அவன் வருவதையறிந்தால் வியாபார நோக்குள்ள எதிரிகளாலும், அவனால் அவமானப்பட்டவர்களாலும் அவனது இடம் சூறையாடப்படும். இனிக்கப் பேசி வாங்கிக் குடித்தவனே முதல் ஆளாய் நின்று இதை செய்திருப்பான். போதை தீர்ந்தப்பின் தலைக்கேறும் பட்ட அவமானம் சூறையாடாமல் அடங்காது. இப்படி உண்டான பகையொன்று இன்றும் முன்வீட்டு மல்லனுடன் கனன்றுக் கொண்டிருந்தது.
தனக்கு மகன் பிறந்த செய்தியை அரெபெட்டிற்கு ஓடிவந்து சொன்ன மல்லன் என்றோ அவன் அவனிடம் உற்ற ‘ஓக்காடு’ அவமானத்திற்காக மாதனின் இடத்தை சூறையாடியிருந்தான். திரும்பும்போது கரிப்படர்ந்த கையுடன் இடையில் மாட்டிக்கொண்ட அவனோடு அன்று உண்டான சண்டையில் சாராயத்திற்குரிய நேரிப்பட்டையை உரிக்கக் கட்டைவிரலில் வளர்த்திருந்த மாதனின் நகம்பட்டு மல்லனின் முகத்தில் உண்டான ஆழமான புண்தழும்பின் வடுவிலிருந்து இன்றும் சீழ் வடிந்துகொண்டிருந்தது. அன்று அவன் மாதனிடமிருந்து பிழைத்ததே மறுபிறப்பென்பது அவ்வூராரின் உறுதியான எண்ணம். மல்லனின் முகத்தை மாதன் கைகளைக் கொண்டு பிதுக்கியபோது அவனது நகமிறங்கி வலது கன்னத்தில் கிழிந்ததோல் ஒன்றாமல் கந்திப்போயிருந்தது. அதைக் காணும்போதெல்லாம் மேல்கேரி ‘அஜ்ஜன்’ பாலப்பழமரத்தின் அடி மண்ணை எடுத்து ஆசையாய் செய்துதந்த, இராசியான சாராயம் காய்ச்சும் அவிரியை உடைத்த நினைவு எழுந்து மல்லன்மேல் மாதனுக்குப் பெருங்கோபம் மேலிடும். பல்லை நறநறவென கடித்துக்கொண்டே அவனைக் கடக்கும் மாதனின் கோபத்தை ஓர மல்லனுக்கு இன்றும் உள்ளளூர நடுக்கம் பிறப்பதுண்டு.
5
“ஏய் மாதண்ணா எழுந்திருங்க.. எழுந்திருங்க”
அவனின் முதுகை தன் இருகரங்களால் முக்கி முனங்கி நிமிர்த்தி எழுப்ப முயன்றாள் குனிக்கி. அவனை தன் வீட்டின் முன்வாயிலிற்குள் இழுத்துச்செல்ல போராடும் அவள் தன் குரலை முடிந்தளவிற்குக் குறைத்துக் கொண்டாள். சத்தம் கூடினால் என்ன நடக்கும் என்று அவளுக்கு நன்கு தெரியும். மாதனின் தோய்வை எதிர்ப்பார்த்து கண்கொத்திப் பாம்பாய் கெஜ்ஜெ காத்திருப்பான். அவனுக்குத் தெரிந்த அடுத்தநொடி பலமுறை கால்கடுக்க கொண்டுவந்து வைத்திருந்த சாரயத்தை, அவிரியுடன் உடைத்த கோபத்தையெல்லாம் அவன் மீது ஒன்றாக இறக்கிவிடுவான். மாதனைப் போதை விழுங்கிய நேரம் இதற்கு அவனுக்கு உகந்தவொன்று. பெண்டனுடன் சேர்த்து அவன் காய்ச்சிய சரக்கின் போதையேறும் நேரக்கணிப்பு மாதனுக்கு மட்டும் விதிவிலக்கு.
அமாவாசை நாளைக் கொடுப்பதற்கும், குடிப்பதற்குமான உகந்த சூழலாகக் கருதி, வியாபாரம் சூடுபிடிக்கும் மாலைநேரத்தில் மாதன் அவர்களுக்குப் பெருந்தொல்லை. போதையேறாத மாதனைச் சமாளிப்பது சாதாரணமானதல்ல. அதிலிருந்து தப்பிக்கவே பெண்டன் சாராயம் காய்ச்சியதால் உண்டான சோர்வென்று வீட்டிற்குச் சென்று படுத்துக்கொள்வான். போதை விழுங்கிய மாதனுக்கான குனிக்கியின் சப்தமே, தம் போதையை விழுங்கியவனைப் பதம்பார்க்க கெஜ்ஜெக்கான குறியீடு. சில நாட்களில் கெஜ்ஜெக்கு வெறி தலைக்கேறி, களைக்கொத்தால் மாதனின் தலையை அடித்து இரத்தம் வழிய அவனை மீட்டதுண்டு. இப்போது கெஜ்ஜெயின் வீட்டிற்குள்ளிலிருந்து எழுந்த சப்தம் அவன் களைக்கொத்தைத் தேடிக்கொண்டிருப்பதைப்போல குனிக்கிக்குப் பட்டது. வேகவேகமாக மாதனை எழுப்ப முயன்றாள். வலுகொண்டு இழுத்துச் சென்று தன் முற்றத்தில் கிடத்தினாள்.
“ஏய் குனிக்கி, உனக்கு எவ்வளவு சொன்னாலு சொரணையில்லே…
இதே எடத்துல இவனாலே உம் புருஷ செத்துக் கெடந்தது நியாபகமில்லையா?
அவனுக்குப்போயி ஒத்தாசெ செய்யுறே…
நீ என்ன பைத்தியமா…
அவன விட்டுட்டு உள்ளே வர்றயா.. இல்லெ நா இந்த வீட்டெ விட்டுட்டு வெளியே போகவா?”
தூக்கக் கலக்கத்தில் நின்ற தன் அக்காவின் வார்த்தைகளை அவள் சிறிதும் சட்டை செய்யவில்லை. வாயிலைத் தாண்டி நீட்டிக்கொண்டிருந்த மாதனின் கால்களைக் கடினப்பட்டு உள்ளே இழுத்து ஒருகளிக்கச் செய்தாள். திண்ணையில் நேற்று எடுத்த வெள்ளைப் பூண்டை மூடியிருந்த, சற்று கனமான சாக்கினை எடுத்து அவனுக்குப் போர்த்தினாள். கால்களையும் சாக்கினால் மூடினால் சரியென்று நினைத்தவள் முன்வாயிலின் மூலையில் உலர்ந்த அவரைத் தோல்களை நிரப்பி வைத்திருந்த சாக்கினைக் காலிசெய்ய எண்ணினாள்.
வாசலின் ஒரு மூலையில் அவரைத் தோல்களைக் கொட்டிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்து சேர்ந்தாள் மிச்சி. சாக்கிற்குள் நிரப்பப்பட்ட அவரைத் தோல்களை வெளியில் கொட்டுவது அவ்வளவு சுலபமல்ல. முனைக்காம்பு சிக்கிக்கொள்ளும் அதனைக் கையைவிட்டுப் பிடுங்கி எடுக்க வேண்டும். தூக்கக் கலக்கத்தில் இது ஆகாதவொன்று. இத்தகு நேரங்களில் குனிக்கியைத் தவிர வேறு யாராக இருந்தாலும், தம் இல்லத்தாரின் கால்களாக இருந்தாலும் விறைப்பதுக் குறித்த கவலையை விட்டிருப்பார்கள்.
வெளியில் வந்துநின்ற மிச்சியின் பற்கள் குளிர் நடுக்கத்தில் தந்தியடித்தன. ஓரளவு முழுமையாக அவரைத்தோல்கள் கழிந்துவிட்ட அந்தச் சாக்கினை மாதனின் கால்களுக்குப் போர்த்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள் குனிக்கி. மிண்டேரி பள்ளியின் விளக்கு எரிந்துகொண்டிருந்தது.
“எம் புருஷ செத்துக்கெடப்பதபோல உம்புருஷனு உடம்பு வெறச்சு செத்துப்போகலே எம்பேர மாத்திக்கோ…
ஐயோ என் வயிறு எரியுதே… உன் குடும்பமே நாசமாபோக….”
என்று இதே ‘கேரியில்’ மாதனின் சாராயத்தைக் குடித்து இறந்ததாக எண்ணப்பட்ட தன் கணவனின் இழப்பைத் தாளாது, மிச்சியைக் கண்டு குனிக்கியிட்ட சாபத்தின் கனலைச் சிவந்தெரியும் மிண்டேரி பள்ளியின் விளக்கொளி தக்கவைத்திருந்தது. போதையில் உளறிக்கொண்டிருந்த மாதனையே வெறித்துக்கொண்டிருந்தாள் மிச்சி. மீண்டும் வெளியே வந்தாள் குனிக்கி. கொண்டுவந்திருந்த கனமான ஒட்டுப்போட்ட கம்பளியைத் திண்ணையில் வைத்தாள். மீண்டும் உள்ளே சென்றவள் ஆமணக்கு எண்ணெயைக் கொண்டுவந்து மிண்டேரி பள்ளியின் விளக்கில் நிரப்பினாள். விளக்கின் திரியில் கட்டியிருந்த கரியை ‘மொரந்தசொப்பு’ கோலினால் தூண்டி அகற்றினாள். கதவினைப் பகுதிவரை முடிவிட்டு உள்ளே சென்றாள்.
“எவ்வளவு சொன்னாலு உனக்கு அறிவே இல்லையா…
சுத்த ‘பொட்டியா’ இருக்கே… ‘பொட்டி’… ‘பொட்டி’..
நீ திருந்தவே மாட்டே…. நீ திருந்தவே மாட்டே…
நீ எக்கேடு வேணா கெட்டுக்கோ…
எங்க நிம்மதிய கெடுக்காதே…”
“ஏய் நீ சும்மா இருக்கமாட்டே… சத்தம் போடாதே…”
எனும் கோபத்தின் மொழிகள் அவ்வீட்டிற்குள் அலைந்து கொண்டிருந்தன. இழப்பின் கோபங்கள் என்றும் பசியுடன் இருப்பது நியம்தானே.
மாதனை வெறித்தப்பார்வையோடு குளிரில் நடுங்கிகொண்டே திண்ணையில் தனக்கென குனிக்கி வைத்திருந்த கம்பளியை எடுத்து மாதனுக்கே போர்த்திவிட்டாள் மிச்சி. குனிக்கி பகுதியளவு சாத்திப்போன வீட்டின் கதவை நன்கு சாத்தினாள். திண்ணையில் கட்டி அடுக்கப்பட்டிருந்த சாமைக்கதிரோடு ஒட்டி நடுங்கிக்கொண்டே, கைகளை மார்போடு இறுக்கக் கட்டிக்கொண்டே அமர்ந்தாள். தன் முழங்காலில் முகம்புதைத்து தன் கரங்களால் முழங்கால்களை இறுக்கக் கட்டிக்கொண்டாள். மிண்டேரி பள்ளியில் ஓயாமல் எரிந்துகொண்டிருந்த விளக்கொளியை இமைக்கொட்டாது வெறித்தாள். இம்மாதத்து அமாவாசையும் இவளுக்குப் போதை இரவாய்த் தொடர்ந்தது. அடிபாதம்வரை இறுக்கி மூடிய ‘முண்டின்’ இடுக்கின்வழி உள்ளேறும் கூதிர்காற்றின் அம்புகள் விடாமல் அவளின் அடிவயிற்றில் இறங்கின. அவளையும்மீறி நடுக்கத்திலெழுந்த முனங்கலொலி குனிக்கியை எட்டியிருந்தது. மிச்சியை உள்ளே அழைக்க குனிக்கியின் நா துடித்தது. மிச்சியின் குளிரின் நடுக்கம் குனிக்கியின் அடிவயிற்றிலும் பற்றியெரிந்தது. உள்ளே அழைத்தாலோ உடனே இரண்டுபடும் வீட்டையும், எழும் சப்தத்தால் தூண்டப்படும் கெஜ்ஜெயின் வெறியையும் அவளால் எண்ணத்தில்கூட சகித்துக்கொள்ள முடியவில்லை. கொல்லப்பட்டவனின் பிரதிநிதி, கொன்றவனின் பிரதிநிதியின்முன் வஞ்சத்தை மிச்சம்வைப்பதே விதி. தலைவிதியைவிட இந்த விதி வலியது. அது அங்கு வழிந்துகொண்டிருந்தது. தொடர்ந்து இறங்கிய நள்ளிரவுப் பனியில் நன்கு இருமினாள் மிச்சி. அவள் நெஞ்சில் கட்டிய கபத்தின் ஒலி குனிக்கியின் மனதை மேலும் உலுக்கியது.
“நெனச்சே… ஏய் மண்டே… நா எத்தனவாட்டி சொல்லுறது…
ஏ என் உசுர எடுக்குற…
இவனுக்கு வேறே வேலேயில்லே… உனக்கும் வேறே வேலேயில்லே…
இந்தக் குடிகார செத்தா சாகுரா.. விட்டுத்தொலென கேக்குறேயா…
ஆ…
ஆதுவும் போயி போயி இந்த வீட்டுக்கு முன்னாடி.. ரோஷங்கெட்டு…
த்தூ.. ரோஷங் கெட்டவளே…”
பெண்டனின் குரல் வலுத்தது. அதைக்கேட்டு வீட்டின் கதவைத் தைரியமாய்த் திறந்து வெளியே வந்தான் கெஜ்ஜெ.
“ஏய் தம்மா… இந்த மைராண்டிய உடனே இங்கிருந்து கூட்டிட்டுப் போயிடு…
நா கோபத்துலே என்ன செய்வேனு எனக்கே தெரியாது….
அவ மண்டெய பொளக்கப்பேறே பாத்துக்கோ…
ஏய் மைரா.. என்னையா அடிக்க வர்றே…”
“ஏய்… நீ வேறே…
நீ மொதலெ உள்ளே போடா… உங்களுக்கெல்லா வேறே பொளப்பே இல்லெ…
நல்ல அண்ணா.. நல்ல தம்பி… நான்டுகிட்டு சாகுங்கடா… நீ மொதலெ உள்ளே போடா…”
பெண்டனின் கண்கள் மேலும் சிவந்தன. அவனது வாயிலிருந்து ஆவியெழுந்தது. அவன் ஒருபுறமும், மிச்சி மறுபுறமும் தாங்க மாதனை இழுத்துச் சென்றனர். தன்னை அவன் இழுத்துச் செல்வதையறிந்து,
“டேய் என்ன விடுடா… என்ன விடுடா… நா மாதன்டா…நா மாதன்டா… என்ன தொடகூட உனக்கு அறுகதெ இல்லெ… விடுடா… பொறுக்கி… பொறுக்கி..”
என்று எச்சில்வழிய பிதற்றிக்கொண்டிருந்த மாதனை அவனது கால்கள் தரையில் தேய தரதரவென இழுத்துச்சென்றான் பெண்டன்.
இன்று மாதனின் சாராயம் காய்ச்சும் இடம் பெண்டன் வசம். அவனுக்கு அவனது சித்தப்பா கெஜ்ஜெ துணை. காசுக்காக மாதனின் கலையை அல்ல, தொழிலை அவர்கள் வலிந்து எடுத்துக்கொண்டனர். அவர்களை முழுமூச்சோடு எதிர்த்த மாதனின் எட்டடி, மகனின் பதினாறடிக்கு முன்னர் எடுப்படவில்லை. மாதன் எவ்வளவு முயன்றும் மீண்டும் அவனைச் சாராயம் காய்ச்ச விடவில்லை. அவன் சரக்கின் தரத்திற்கு ஊராறின் நா ஏங்கினாலும், அவன்மேலான வெறுப்பு, சரக்கைச் சோதிக்க அதை விரலில் தொட்டு நெருப்புமூட்டும் சோதனையாய் அவனைநோக்கி எரிந்துகொண்டிருந்தது. கலையைக் காட்டத் துடிக்கும் அவனது கரங்கள் வேண்டுமென்றே இரண்டுமுறை உடைக்கப்பட்டது. திரும்ப சரியே ஆகாது என்று ஆழ உடைத்த அவனது வலக்கரத்தின் மணிக்கட்டைக் கலைத்தாய் மீண்டும் மீட்டுக்கொடுத்ததில் பலருக்கும் வருத்தம். இருந்தும் அவன் மோசமான சரக்கினைக் காய்ச்சி பலபேரைக் கொன்றவன் என்ற பழியிலிருந்து அவனை எந்தத் தாயாலும் மீட்க இயலவில்லை. முதலில் மாதனின் ஊறலை மூலதனமாய் வைத்து பெண்டன் காய்ச்சிய முதல் சரக்கு வியாபாரத்திற்காக மாதனே காய்ச்சியதாக அவர்களால் காட்டப்பட்டது. அதிகமான சரக்கிற்காக அள்ளிப்போட்ட ‘தவட்டெ’ செடிச் சோதனையின் முதல்சரக்கிற்குப் பலியாய் சிக்கியவனே குனிக்கியின் கணவன்.
6
வீட்டடின் முன்வாயிலின் ஓரத்தில் ஒதுக்கிவிட்டுப் போயிருந்த மாதனுக்குப் போர்த்தியிருந்த கம்பளியையும், சாக்கினையும் மடக்கி வைத்தாள் குனிக்கி. அங்கு வடிந்திருந்த மாதனின் எச்சிலில் தவட்டெ செடியின் நெடி. தன் கணவனின் வாயிலிருந்து அன்று எழுந்த அதே நெடி. அதற்குமுன்பு அவள் எங்கும் நுகராத நெடி. தினமும் மாதனின் சரக்கினைக் குடிக்கும் தன் தந்தையிடமிருந்து எழாதநெடி.
“அப்பா வலிக்கு மருந்த குடிக்கிறத விட்டுட்டு இது என்ன பொளப்பு…
நாள் தவறாம இதகுடிச்சா ஒடம்பு என்னத்துக்காகுறது?
அந்த மாதண்ணா வேறே, இத நேரங்க கால தெரியாம கொண்டுவர்றது எனக்குச் சுத்தமா புடிக்கலே…
அப்பா, பொண்ணுங்க இருக்கிற வீடுங்குறது உங்களுக்கு நியாபகம் இருக்கா இல்லையா….
அதிகமா சாராயம் ஆகனும்னு மாதண்ணா தவட்டெ பட்டெய போட்டுச் சாரய காச்சுறதா பேசிக்குறாங்க… ஏன் அவரு தம்பியே சொல்லுறாரு….
அது கொடல முழுசா அரிச்சுடுமாமே…
என்ன கருமமோ… இனிமே அது வேணாம்பா…”
குனிக்கியின் அக்காவின் வார்த்தைகள் அன்று விடாமல் தொடர்ந்தபோது. தன் பழுத்த தாடியைத் தடவிக்கொண்டே…
“ஏய் முதுக்கி… என்ன நெனச்ச கவலே படறயா?
இந்தக் காளன நெனச்சா…? ஆ…
நா இப்ப குடிச்சிகிட்டிருக்குறதுதா நல்ல மருந்து…
அதவிட சிறந்த மருந்தே இல்லே…
அது இல்லேன்னா நா எப்பவோ செத்துப்போயிருப்பே…
ஆழமான காயம்… வின்னுனு தலைக்கு ஏறுது.. கொடல்லே பட்டிருக்குனு நெனெக்குற.. இந்தக் காயம் எந்த மருந்துக்கும் ஆறாது…
இதோ, அடி நாக்கெல்லா புண்ணு… பல நாளாச்சு.. ஆறலே…
ஊரே அவ சரக்குக்கு அலையறப்போ எனக்கு தெனமும் சும்மா கொடுக்கறானே அவ ஒன்னும் முட்டாளில்லெ… இதுவர இதுக்கு அவ எங்கிட்டே ஒத்தபைசா வாங்குனதில்லெ….
இன்னு நா இருக்குற கொஞ்ச காலத்துக்கு இது ஒன்னுதாமா மருந்து…
நேரிப்பட்டைச் சரக்கு, அதுலெயு ,‘ஓக்காடு’ ஆகாத சரக்க இன்னிக்குச் சும்மா எவ தருவா… அதெலெயு கொம்புத்தேன கலக்கிவேற… எனக்குத் தெரியாதுனு நெனச்சிருக்கா அந்த மடைய…
எனக்குத் தெரியும்… அவ காசுக்கு ஆசெப்பட்டு சாராயம் காய்ச்சுரவ இல்லே… நேரிப்பட்டையிலே அவ போடுற ஊறல்லே தவட்டெப் பட்டெய போட்டா ஒன்னுக்குப் பத்து மடங்குக் காச்சலா…
ஆனா… அவ அப்படியில்லே…. ஒருநாளும் இந்த ஊர்லே அவ சாராய வித்ததில்லே…
அவ வேறம்மா… எனக்குத் தெரியும்.. அவ உசிரே போனாலும் அவ அப்படி செய்யமாட்டா..”
என்ற காளனின் நீளமான இறுதி உரையாடல் குனிக்கியின் செவியை அறைந்து கொண்டிருந்தது.
அவளுக்கு நன்கு தெரியும். தன் கணவனின் இறப்பிற்கு மாதன் காரணமல்லவென்று. மடக்கிய சாக்கினை அங்கேயே விட்டுவிட்டு ‘அட்டுலின்’ பரண்மேல் ஏறினாள். மாதன் தன் தந்தைக்கு இறுதியாகக் கொண்டுவந்த சாரயக்குடுவையை எடுத்தாள். அதை ஆழமாய் நுகர்ந்து பார்த்தாள். இந்த நெடியின் சுவடே இல்லை. இந்தச் சோதனை அவளுக்கு எத்தனாவது முறையோ தெரியவில்லை. ஆம், இல்லைதான்… அவன் அப்படிப்பட்டவன் இல்லைதான்… அந்தக் கலைஞனின் போதைச்சின்னம் கட்டியம் கூறியது. நேற்று ஓரத்தில் கொட்டிய அவரைத் தோல்களை மீண்டும் அந்தச் சாக்கில் நிரப்பினாள் குனிக்கி. அதை நிரப்புவது எளிது. அதிலும் மனம் நிரம்பியிருந்த அவளுக்கு அது மிக மிக எளிது.
விடிந்தும் விடியாததுமாக திடீரென்று தவட்டெயின் நெடி அவளின் மூக்கில் அறைந்தது. நேற்று காய்ச்சிய பத்து அவிரி சாராயத்தில் மூன்று அவிரியைப் பத்திரமாய் அடுமனையில் ஒளித்து வைத்திருந்தான் கெஜ்ஜெ. அதை மாதனிடமிருந்து காப்பதற்காகவே, நேற்று வியாபாரம் சூடுபிடிக்கும் அமாவாசையின் இருட்டிற்கு முன்பே, வந்தவர்களிடம் இல்லையென்றுகூறி வீட்டின் கதவை அடைத்திருந்தான். ‘ஓக்காடில்’ வருபவர்களைத் தவட்டெயின் நெடி வரவேற்றது. முதல் ஆளாய் ‘ஓக்காடோடு’ வந்து நின்றான் மாதன். தரையில் பிளந்திருந்த அந்தச் செம்பாறைக்கல் அவனைப் பார்த்து வாய் பிளந்து சிரித்தது. “மைராண்டி வாடா..” என்று மனதில் கூறிக்கொண்டே முதல் குடுவையை மாதனுக்குக் கொடுத்தான் கெஜ்ஜெ. ‘ஓக்காடு’ மாதனை யோசிக்கவிடவில்லை. தவட்டை நெடிவீசும் சரக்கினைப் பற்றி ‘ஓக்காட்டிற்கு’ சிறிதும் கவலையில்லை. மூக்கைப் புடைத்துக்கொண்டு ஒரே மூச்சில் குடித்து முடித்தான் மாதன். அடுத்த குடுவையும் அவனுக்குத் தயாராக இருந்தது. அது அவனைத் தெளியவிடாமல் செய்யும் வியாபார உத்தி. ‘ஓக்காட்டிற்கான’ அம்மூன்று அவிரிகளுக்கான மூலதனம். நிரம்பிப்போன தன் வயிற்றிற்குள் அதை முட்ட நிரப்ப அக்குடுவையோடு குனிக்கியின் திண்ணையில் அமர்ந்தான் மாதன். மிண்டேரி பள்ளியின் விளக்கு அவனுக்கென பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.