அஞ்சலிக்குறிப்பு : மலேசியா எழுத்தாளர் சை. பீர்முகம்மது விடைபெற்றார் ! ஆறாம்திணை தமிழ் இலக்கியத்தில் இணைந்திருந்தவரின் இழப்பு ஈடுசெய்யப்படவேண்டியது! - முருகபூபதி -
“இலக்கியப்போக்குகள் ஒவ்வொரு தலைமுறையிலும் மாற்றங்களைப்பெற்றே வளர்ந்துள்ளன. நமது சங்க இலக்கியங்களிலிருந்து இன்றைய இலக்கியப் போக்கின் வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால் இது விளங்கும். இலக்கிய வரலாறு ஒவ்வொரு மொழிக்கும் மிக முக்கியமானது. ஆனால், தமிழைப்பொறுத்தவரையில் ‘ வரலாறு ‘ என்பது கண்டுகொள்ளப்படவேயில்லை. தமிழ் இலக்கியத்தை நமது இலக்கணத்தில் கூறப்படுவது போல் ஐந்திணைகளில் இப்பொழுது அடக்கிவிடமுடியாது. தென்குமரி, வடவேங்கடம் வரையிருந்த தமிழ் வேறு, இன்றுள்ள தமிழின் பரப்பு வேறு. ஐந்திணைகளில் பனிகொட்டும் நாடுகளில் வளர்ந்துவரும் தமிழ் இலக்கியத்தை நாம் அடக்கிவிடமுடியாது. வடவேங்கடம் தென்குமரிக்கு அப்பால் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமல்லாது, உலகின் ஐந்து கண்டங்களிலும் தமிழ் இலக்கியம் அதனதன் போக்கில் உருப்பெற்று வளர்ந்து வருகிறது. “ என்று மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் நூலகர் என். செல்வராஜாவின் மலேசியாவில் தமிழ்: பார்வையும் பதிவும் என்ற நூலில் ( 2016 ) தனது கருத்தை எழுதியிருக்கும் எமது இலக்கியக்குடும்பத்தினைச் சேர்ந்த எழுத்தாளர் மலேசியா சை. பீர்முகம்மது இன்று அதிகாலை ( செப்டெம்பர் 26 ) மறைந்தார் என்ற துயரமான செய்தி எம்மை வந்தடைந்தது.
1942 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் பீர்முகம்மது, தனது நீண்டகால உழைப்பிலும் தேடலிலும் வெளியான இலக்கியப் படைப்புகளையும், தொகுப்பு நூல்களையும் வரவாக்கித்தந்துவிட்டு, 81 வயதில் விடைபெற்றிருக்கிறார். மலேசியா தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பீர்முகம்மது தவிர்க்க முடியாத ஆளுமை. மலேசியா தமிழ் இலக்கிய வரலாற்றில் இவரது பங்களிப்பும் சேவையும் பலரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.