இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்"என்று கூறுவதற்கு "பெலிஸ் நத்தால்"(Feliz Natal) என்றோ அல்லது "கொம்பிரி மென்டொஸ் பெலோ நத்தால்" (Cumprimentos pelo Natal)என்றோ போர்த்துக்கேய மொழியில் வாழ்த்துவார்கள். போர்த்துக்கேய வார்த்தையாகிய 'நத்தால்' சிறிது திரிபடைந்து தமிழில்'நத்தார்'ஆக மாறிவிட்டதாம்.எது சரியோ எது எமக்கு சம்மதமோ; இயேசுவின் பிறப்பான இந்நாளை நண்பர்களாகியதிலிருந்து நானும்,என் நண்பன் குட்டியும் கொண்டாடினோம். ஊரே கொண்டாடும். இந்த உலகமே கொண்டாடும். நானும் அவனும் கொண்டாடுகின்ற விதமிருக்கே,அது வேற லெவல். அதைச்சொல்லியே ஆகவேண்டும்.
படைப்பவன் இறைவன்.தாயின் தண்ணீர்க்குடத்தில் பிறக்கும் அவனது படைப்பை மதமெனும் அரசியல் ஆக்கியவன் மனிசன். அதற்குள் நான் இந்து ஆகவும்,என் நண்பனோ இந்துவும்,கிறிஸ்துவுமாக இருவரும் இந்த வாழ்வுக்குள் நாமும் கட்டுண்டு போனோம். அவன் தந்தை இந்துவாக. தாய் கிறிஸ்தவராக.காதல்கொண்டு கரம்பற்றிய வாழ்க்கை.பிறப்பால் இவன் பெயர் ஜோர்ஜ் செல்வகுமாரன்.சிவனும் சக்தியுமாக இவன் ஒருவனே இருவருமாக பெற்றோரை வாழ்நாள்வரை தன் முழுப் பெயரிலும் சரிசமமாக சுமந்தவன்.
விடிந்ததும் நத்தார் என்றால்,வடிவாக உடுத்து அம்மாவுடனும்,தங்கச்சியுடனும் முதலில் அவன் தேவாலயத்திற்கு சென்று வருவது வழக்கம். அன்று மத்தியானம் என் வீட்டிற்கு கேக் உடன் வருவான். என் அப்பா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்குவான்."உன்னை மத்தியானச்சாப்பாட்டுக்கு அம்மா கூட்டிக்கொண்டு வரச்சொன்னவா, வாடா" என்பான். ஒரே சைக்கிளில் இருவருமாக யாழ்.போதனா வைத்தியசாலை குவாட்டர்ஸ் இற்குச்செல்வோம்.அங்குதான் Matronஆக வேலை செய்தார் அம்மா. அவாவுக்கென்றே அழகான தனி விடுதி. அங்கு சென்று அன்பாய் ஆசைதீரக்கதைக்குக்கொண்டு ஆட்டிறைச்சிக்கறி, கத்தரிக்காய்க்கறி,ரசமென்று ஏப்பம் வரும்மட்டும் ஒரு பிடி பிடிப்போம்.அதைப்பார்க்கின்ற தாய்க்கும், தங்கச்சிக்கும் சிரிப்பு ஒரு பக்கம்,சந்தோசம் ஒரு பக்கமாய் ஆனந்தம் முகத்தில் வெளிப்படும். நானும்,குட்டியும் அன்பாய் அவ்வளவுகாலம் ப்ரெண்ஸ் ஆக இருப்பதைப்பார்த்து அம்மாவின்ர கண்கள் கலங்குவதை ஒவ்வொரு நத்தார் கொண்டாட்டத்திலும் என்ர கண்களும் கண்டு பனித்திரையாகும்.தங்கச்சியைக் கோபப்படுத்தி தங்கையிடம் அடிவாங்கும் பந்த பாசத்தையும் இந்த நாள் நிறைவேற்றும். நத்தார் என்றதும் என்றும் முதலில் என் நினைவில் நிற்பது மறக்கமுடியாத பேரன்பின் இக்காட்சிப்படிமங்கள்தான்.
கோயில் என்றால் நானும் அவனும். தேவாலயம் என்றாலும் அவனும் நானும். ஆவணி என்றால் நல்லூர். வெள்ளி என்றால் முனியப்பர்கோயில். செவ்வாய் என்றால் மத்தியானம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில். பின்னேரம் பாசையூர் அந்தோனியார் ஆலயம். கிரிக்கெட் விளையாடப்போனால் கிரவுண்ட் இற்குள்ள வைரவகோயில்.எங்கே போனாலும், நாமிருவருமாகத்திரிந்தோமே,வாழ்ந்தோமே! மனிதம் தன் புத்தியால் எத்தனை வகுத்தது ? நாம் மட்டும் மாறவில்லையே, எமக்குள் எந்தவித பாகுபாடும் இல்லையே?ஆழமான நட்பிற்கு நாம் உதாரணமாக இருந்தோமே ! உனக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை என்றதும் என்னிடம் ஓடி வந்தாயே.அந்தக்கணமே என் மோதிரத்தைக்கழற்றி உன்னிடம் கொடுத்து, " இந்தாடா இதை முதல்ல வித்து,காரைத்திருத்து.பிறகு மற்றதைப்பார்க்கலாம்.யோசியாத."என்றேனே !இப்படித்தானே எங்கட நட்பு இருந்தது!
உனக்கு ஒண்டென்றா நானும், எனக்கு ஒண்டென்றா நீயும்..அப்படி வாழ்ந்தோமேயடா? எல்லாமே இந்த நெஞ்சாங்கூட்டுக்குள்ள நினைவுகளாக நிரம்பிக்கிடக்கு. இந்த முறை வீட்டில கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து சோடிக்க சோடிக்க கண்ணால ஊத்திச்சுது. மரம்தானே அதுவும் நனைஞ்சுது.யாருமே அப்போது வீட்டில இல்லை. இருந்தாலும் எம்மை,எம் வாழ்வை அந்த உணர்வுகளை எவராலும் உணர்ந்துகொள்ள முடியாது.இல்லையாடா மச்சான்?உன்னையோ என்னையோ ஒருவன்தானே படைத்தான்! ஒன்றையுமே அவன் எதிர்பார்ப்பவன் அல்ல. என்றாலும் எம்மை நண்பர்களாக வாழவைக்க அவன் உருவாக்கிய அவனது அன்பு நாடகம் இருக்கே ; அதற்காக நிச்சயமாக அவனுக்கு நன்றி சொல்வோம் இந்நாளில்!
"நமக்கான நாடகத்தின் காலம் இவ்வளவுதான்"என நாடகத்தை எழுதும்போதே;அவன் போட்ட கணிப்பது. அதனால்தான் அவனே உன்னை என்னிடமிருந்து பிரித்து, உன் கதையை முதலில் எழுதி முடித்துவிட்டான்.எமுதி முடித்த என் கதையையும் நாடகத்தின் கடைசிக்கட்டமாக ஒருநாள் அரங்கேற்றுவான்.அதுவரை
உன் நினைவுகளைச்சுமந்தபடியே நண்பா இந்த உசிரும் உயிர்வாழுமடா!