எனக்கும்'கிரி'க்குமான நட்பை இன்று நினைத்தாலும்; "இது எப்படி சாத்தியமானது?" என்று இன்றும் நான் வியந்தும்,மகிழ்ந்தும் போகின்றேன்! முதன்முறையாக பள்ளிக்கூடம் போகின்றேன். முதலாம் வகுப்பு.முதலாம் நாள்.அம்மாகூட்டிப்போகிறா.அழுகை, அழுகையாக வருது.பயமா இருக்கு. இதனால் அம்மாவின்கையை இன்னமும் அழுத்தமாக பிடித்துக்கொள்கின்றேன். அம்மாவை விட்டிட்டிருக்கவேணும்.அதுதான் அழுகை.யாரோடோ இருக்கவேணும்.அதுதான் பயம். அழுகையும் வராமல், பயமும் வராமல் "இஞ்சை எனக்குப்பக்கத்தில இருக்கலாம்"என்று ஒருவன் இடம் தந்தான்.அவன் என் மனதில் இடமானான். அவன்தான் என் உயிர் நண்பன் 'ஜோர்ஜ்'.
"குட்டி"என்று செல்லமாய் அழைக்கும் இவனுக்கு'கிரி'சொந்த மச்சான்.குட்டியால் கிரி அறிமுகமானார்.நண்பர்கள் கூட்டமாய் கே.கே.எஸ் வீதியிலுள்ள பன்றிக்கொட்டுப்பிள்ளையார் கோயில் அருகே இருக்கும் 'ஆச்சி' வீட்டின் முன்வாசலில் கூடி நிற்போம்.குட்டிக்கு அப்பம்மா.கிரிக்கு அம்மம்மாவான ஆச்சி வீடு. எப்போதுமே ஆரவாரம் நிறைந்த,எம்மைக்கலகலவென காக்கைக்கூட்டங்களாய் ஒன்றுசேர்ந்து மனச்சோர்வின்றி எண்ணக்கிடக்கைகளால் சிறகடித்துப்பறக்க வாழ்வுதந்தது
- 'குட்டி' (ஜோர்ஜ்) -
இந்தப்பன்றிக்கொட்டுப்பிள்ளையார் கோயிலடி. வெயில் தாழ அந்தி மெல்ல இறங்கிவர நண்பர்கள் கூட்டமாய் கூடி நிற்போம். கிரியும் சைக்கிளில் வந்து இறங்குவார்.
கல்லூரியில் வகுப்பில் எமக்கு ஒருபடி மூத்தவர் என்றாலும் எம்மோடு பழகுவதில் சரி சமமானவர்.முதலில் எல்லோருக்குமாய் ஒரு 'ஹலோ'.அதில் சிறு புன்னகை.அவ்வளவும்தான்.அறிமுகமில்லாத ஒருத்தரிடம் ஒரு குழந்தை எப்படி உடனடியாகச்சேர விரும்பாதோ, அதேபோலத்தான் கிரியும்.எம்மோடு ஒன்றாகச்சேர்ந்து சிரித்துக்கொண்டாடிட அதற்கான கால இடைவெளியிருந்ததை என்னால் மறக்கமுடியாது.
நாளடைவில் நாம் விரும்பியதுபோல கிரியும் இக் காக்கைக்கூட்டத்திற்குள் இணைந்து சிறகடித்துப்பறந்தார். கூட்டமாக துரையப்பா மைதானத்திற்குச்சென்று உதைபந்தாட்டப்போட்டி பார்ப்போம்.வரும்போது மலாயன் கபேயில் வடையும்,ரீயும்.அந்தச்சுவையில் எழும் புதுவித உற்சாகம்.அந்த உற்சாகத்தில் கே.கே.எஸ் வீதியும்,பன்றிக்கொட்டுப்பிள்ளையார் கோயிலடியும் இந்தக்காக்கைக்கூட்டங்கள் கத்தி ஓய்ந்த உரத்த ஒலியால் அன்றல்ல, என்றுமே ஆரவாரமாய் இருந்தது.அப்படித்தான் எம் நட்பு வளர்ந்தது.