கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு இன்று பிறந்தநாள். கவிஞருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். கவிஞருடன் அதிகம் பழகும் வாய்ப்பு கிட்டாதபோதும் சந்தித்த, பழகிய, உரையாடிய தருணங்கள் இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன.
முதன் முதலாக அவரைச் சந்தித்தது எனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வுக்காக யாழ்ப்பாண வைபவமாலை நூலைத் தேடியபோது அவரிடம் இருப்பதையறிந்து அவர் இல்லம் சென்றபோது. அக்காலகட்டத்தில் யாழ்நகரில் ஓரிரு தினங்கள் சைக்கிளில் அலைந்திருக்கின்றோம்.
அதன் பின்னர் அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது, லங்கா கார்டியனில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். அக்காலகட்டத்தில் ஓரிரவு அவரை பொரளையில் சந்தித்தேன். மருதானை வரையில் என்னுடன் உரையாடியபடியே ஆமர் வீதி வரை மட்டக்குளிய பஸ்ஸில் வந்தார். அதனையும் மறக்க முடியாது.
அதன் பின்னர் கனடா வந்திருந்தபோதும் சந்தித்தேன். அவரை அடிக்கடி சந்திக்காதிருந்தாலும் அவருடன் தொடர்ந்து இணையத்தொழில் நுட்பம் மூலம் தொடர்பில் இருந்து வருகின்றேன்.
இன்று அவரது பிறந்தநாளையொட்டி அவரது புகழ் பெற்ற கவிதைகளில் ஒன்றான 'நீலம்' கவிதையைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
நீலம்
- வ.ஐ.ச.ஜெயபாலன்
தோழி
காலமாய் நுரைகள் உடைகிற மணலில்
சுவடுகள் கரைய
சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா?
கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய்
நம்மிலும் எதோ படர்கிற தென்றேன்.
மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய்
உன் கண்களில் எனது பிம்பம் அசையும்.
ஆண்டு பலவாகினும்
நரையிலா மனசடா உனக்கென்றாய்.
தோழி
இளமை என்பது வாழும் ஆசை.
இளமை என்பது கற்றிடும் வேட்கை.
இளமை என்பது முடிவிலா தேடல்;
இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும்.
இளமை என்பது வற்றாத ரசனை
இளமை என்பது நித்திய காதல்.
இளமை என்பது
அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன்.
தோழா உனக்கு எத்தனை வயசு?
தோழி எனக்கு
சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.