- எழுபதுகளில் யாழ் சுப்பிரமணியம் பூங்காவில். வலது கோடியில் இருப்பவர் ரஞ்சித். -
எம்மண்ணின் விடியல் என்பது அத்தனை பேரழகு! விரிந்த மொட்டுக்களின் வாசத்தை அள்ளிவரும் தென்றல்.பல்லவி சரணமாக பவனிவரும் பறவைகளின் சங்கீதம். உயிரை உருக்கும் பெருமாள் கோயில் சுப்ரபாதம்.வானத்தில் துள்ளிக்குதித்து கடலுக்குள் விழுந்து எழுந்து,பனைகளுள் ஒளித்து மறையும் சூரிய உதயம். அடுப்படியில் சுண்டக்காய்ச்சிய ஆட்டுப் பாலின் வாசமும், சாமியறைச் சாம்பிராணி வாசமும் போர்வைக்குள் முடங்கிக்கிடந்த என்னை மெல்லத்தட்டி எழுப்பும்.முகங்கழுவி அடுப்படிக்குள் கால்வைத்தால் சுடச்சுட ஆட்டுப்பால் தேநீரை அம்மா தர,அது தொண்டைக்குள்ளால் உள்ளிறங்க இந்த விடியலின் அழகும்,ஆட்டுப்பால் தேநீரின் சுவையும் பரவசப்படுத்தும் மனசுக்குள் புகுந்து புதுக்கவிதை எழுதும்.அப்படித்தான் ஆரம்பிக்கும் அந்த நாளின் புதுவரவு. நல்லூரும் கொடியேறிவிட்டால் இந்த நாட்கள் எமக்கு ஆட்டமும்,கொண்டாட்டமும்தான்!
தன்னை அழகாய் உடுத்திவரும் சிவந்த அந்தி. அதற்கு பொருத்தமாய் பட்டுப்பாவாடை சட்டை.கூந்தல் நிறைய கனகாம்பரம் அல்லது மல்லிகை.வெள்ளிக்கொலுசு கட்டி உலாவந்த கன்னியரின் பாதங்கள் இசைக்கும் மெளனராகம்.காத்திருந்த இளங்காளையரின் எண்ணங்கள் பட்டாம் பூச்சியாய்ப் பறக்க, குளிர்ச்சியான கோயில் வீதியின் மணலும், வானத்தில் நட்சத்திரங்களின் அழகும் பொற்கால நினைவாய் இன்றும் இணைந்து நனவுடை தோய்கின்றது.
ஒன்றாய்ப்படித்து, ஒன்றாய்த் திரிந்த எம் நண்பர்கள் குழாமிற்குள் 'ரஞ்சித்'வந்தான். அன்பாய் அவன் அறிமுகமாகும்போது முதலில் அவன் புருவங்கள் சிவந்தன. சிரிப்பை அவனது கண்கள் பரிமாறிக்கொண்டன.' யாரடாஇவன், புதுவிதமான பேர்வழி?" என்ற முணுமுணுப்பு எமக்குள்! போகப்போகத்தான் தெரிந்தது அட்டகாசமான அவனது சிரிப்பின் அறிகுறிதான் அவனது புருவங்கள் சிவப்பதென!யாராவது பகுடிவிட்டால் ரஞ்சித் சிரிப்பை நிறுத்தமாட்டான்.அதையே நினைச்சு நினைச்சு விழுந்து விழுந்து சிரிப்பான்.ஆளும் சிவலை. இனி சிரிச்சா சொல்லவா வேணும்?
'டேய் ரஞ்சித்,காணும் இனி நிற்பாட்டு'என்றால்;இன்னும் கூடுமே தவிர குறையாது.குறைந்தாலும்,5 நிமிடம் போக அதற்கும் சேர்த்து நினைச்சு நினைச்சு சிரிப்பொலி கூடுமே தவிர; ம்கூம் குறையவே குறையாது. சிலவேளை சினிமாவுக்கு கூட்டமா போனா அவ்வளவும்தான். நாகேஷைக்கண்டவுடனே தொடங்கிடுவான்.
'சுத்தம்' என்பேன் நான்.அதற்கும் சேர்த்துச்சிரிப்பான். நகைச்சுவை என்றால் போதும்.அவனோ ஆனந்தத்தின் உச்சத்தில்! வெட்கத்தால் சிலர் அவனுக்கு பக்கத்திலேயே இருப்பதில்லை. ஆனால்,எனக்கு அவனை நன்றாகப்பிடிக்கும்.
அவனுக்குள் வாழ்ந்த சோகமே அவனை என்னால் இன்னும் இறுக்கமாகத்தழுவி அரவணைக்க முடிந்தது. தன்னந்தனியா சித்தி வீட்டில் இருப்பவன்.சித்தி என்பதைவிட சித்தி அன் கோ (கொடுமைக்காரி) என்பான் ரஞ்சித். சாப்பாட்டைக்கூட ஒழுங்காக பரிமாற மறுக்கும் பேர்வழி.அங்கே போகக்கூடாது, இங்கே போகக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் வேற!குடும்ப சூழல் இவனை எம்மண்ணிலேயே அன்று அகதியாக்கியது என்றுகூட இப்போது என்னால் எழுத முடிகின்றது. அவனது கதையோ சோகக்கதை.அதனால்தான்
"எப்போது மனசு ஆற வாய்விட்டுக்கதைக்கலாம்,சிரிக்கலாம், பறவைபோல் சிறகடித்துப்பறக்கலாம்?"
என்று எம்மோடுமட்டும் வாய்விட்டுச்சிரித்து ஆசைதீர பறந்தவன்.
நித்தம் கல்லூரியில் சந்திப்போம். வாரம் இருதடவை ரியூசனில் ஒன்றாய் மீண்டும் கூடுவோம். எல்லோருமாய் ஒன்றுகூடி மகிழ்ந்திட ஓரிடம் அந்த ரியூசன் கிளாஸ்தான். 'அங்கு போகின்றேன்' என்றுதான் என் வீட்டிற்கு வந்து, வேட்டி கட்டிக்கொண்டு நல்லூர்த்திருவிழா பார்க்க வருவான் ரஞ்சித். வீட்டிற்கு வந்தால் வற்புறுத்தி என் அம்மா ரஞ்சித்துக்கு சாப்பாடு கொடுத்துத்தான் விடுவா.ரசித்து, ருசிச்சுச்சாப்பிடுவான்.. போகும்போது,"அன்புத்தெய்வமடா உன்ர அம்மா'என்று கண் கலங்குவான்.
நல்லூர்த்திருவிழா பார்த்துவிட்டு கூட்டமாக வீடு திரும்பினோம். தண்ணீர்ப்பந்தல் ஒன்று வந்தது. நெருக்கமான சனக்கூட்டம் அங்கே. ரியூப் லைட்டுக்களின் வெளிச்சத்தில் வாழைக்குலைகளும்,தோரணங்களுமாய் சோடித்திரிந்த பந்தலும் வடிவாய் இருந்தது. பந்தலின் நடுவேபரப்பியிருந்த ஈர மணலில் நம் பாதங்கள் பதிய, ரஞ்சித்தும் தனது வேட்டியையும் மெதுவாக கழட்டிக்கையில் எடுத்தான்.எவருமே எதிர்பார்க்கவில்லை. பக்கத்தில் வந்தவர்கள் 'ஈ......'என்று கண்களை மூடிக்கத்தியது மட்டும் ஞாபகம். அடுத்த கணம் எல்லோருமாக ஓங்கிச்சிரித்ததும் ஞாபகம்.வேட்டிக்குப்பதிலாக அவன் ஸோட்ஸ்'அணிந்திருந்தான்.
இப்படிக்குறும்புகள் செய்து எம்மைச்சிரிக்க வைத்து மகிழ்வதும் அவன் இயல்பு.
மழை தூறிக்கொண்டிருந்தது. எல்லோருமாக ரியூசன் க்ளாஸிற்குள் இருந்தோம். வசந்தன் மாஸ்ரர் அல்ஜிப்ரா (Algibra)கணக்கில் 'சரக்குமுதல்' எனும் பகுதி ஒன்றை கரும்பலகையில் எழுதி விளங்கப்படுத்திக்கொண்டு, பெரும்பாலும் இக்கணக்கு இம்முறைப்பரீட்சையில் வரலாம்'என்றார். இதற்குள் ஒருத்தன் பகுடிவிட, இதைக்கேட்ட ரஞ்சித் சிரிக்க,"ரஞ்சித் சிரிப்பதை நிற்பாட்டு, பாடத்தைக்கவனி" என்றார் மாஸ்ரர். உடனே பயந்து அவனும் சிரிப்பை நிற்பாட்ட முயற்சித்தான்.ஒரு10 வினாடி கூட இருக்காது. மறுபடியும் சிரித்தான்.மழையோ இப்ப அடித்துப்பெய்யுது.மாஸ்ரர் வீட்டின் கூரையின் சத்தம்.தூவானமும் மெல்ல மெல்ல காத்தோட கிட்ட வந்துவந்து போக உடம்பும் சிலிர்க்குது.ரஞ்சித்தின் சிலிப்பொலியோ மழையோட சங்கமிக்குது.வசந்தன் மாஸ்ரரின் கோபத்தை அன்றுதான் நாமும் கண்டோம்.
" ரஞ்சித், ஸ்டான்ட் அப் அன்ட் கெற் அவுட்" என்றார் அன்பான எங்களின் வசந்தன் மாஸ்ரர்.' சோ'என்று கொட்டும் மழையில் தோய்ந்து போகின்றான் நண்பன் ரஞ்சித். வகுப்பை நிரப்பியது நிசப்தம். நிறைந்திருந்த நண்பர்களின் முகங்களில் சோகம். மாஸ்ரரின் கால்கள் 'சிரிப்பழகன்' நோக்கி விரைந்தன. அவனைக் கட்டியணைத்துக்கூட்டிக்கொண்டு வந்தார். ஓடிப்போய் துவாய் கொண்டு வந்து கொடுத்தார். 'முதலில் தலையைத்துடை‘very sorry Ranjith. Please try to understand me' என்றார்.
மழை இன்னும் ஓயவில்லை. அன்றைய வகுப்புமட்டும் அத்துடன் இடை நிறுத்தப்பட்டது. ஆனால், மாஸ்ரர் வீட்டிலிருந்து சுடச்சுட பால்தேநீர் பரிமாறப்பட்டது. தேநீரை குடித்துக்கொண்டு, அன்றுதான் ரஞ்சித்துக்குள் இருக்குள் சோகத்தை வசந்தன் மாஸ்ரருக்கு நாம் சொன்னோம். "இனி என் க்ளாஸ் இல் மட்டும் நீ எப்போதும் சிரிக்கலாம்"என்றார் மாஸ்ரர்.எல்லோரும் சேர்ந்து சிரித்தோம்.