கீரிமலையிலிருந்து ஒவ்வொரு மணித்தியாலத்துக்கு ஒன்றென புறப்பட்டஇ.போ.ச769 லைனில ஒன்று இப்ப யாழ்ப்பாணத்தில தரித்து நிற்குது.அது இனி வெளிக்கிட்டால் சாவகச்சேரி வந்து கொடிகாமம் போகும். பிரிட்டிஷ்காரன் கொடுத்த டபிள் டெக்கர் பஸ். தந்தை செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம் வாழ்ந்து அகிம்சைவழி அரசியல் சூடு பிடித்துப்போய் காற்றின் குளிர்மையில கனவுகள் பூத்த காலமது..
பஸ் வெளிக்கிடுது. மேல்தட்டில இடம் பிடிச்சாச்சு.ஒரு மூலையில யன்னல்பக்கமா இருந்தா வடிவா ஊர் மனைகளையும், மரங்களையும், வடிவான நாச்சார் வீடுகளையும் ரசிச்சுக்கொண்டு போகலாம்.அங்கே இருந்தா அந்த முக்கால் மணித்தியாலத்துக்கு மனச்சிக்கல் எல்லாம் மறந்துபோகும்.ஓடிற பஸ்ஸின்ர வேகத்தில புழுதி கிளம்பி போறவாற சனங்கள் நிண்டு கண்களைப் பிசுக்குவது தெரியுது. மண்ணும் சேர்ந்து கிளம்ப காத்தில பாவாடை பறந்திடுமோ என்ற பயத்தில சட்டென இறுக்கிப்பிடிக்கும் பெண்கள். குடும்பமே கதியென அடுப்பின் வெக்கைக்குள் சிறை கொண்ட தாய்க்குலம் சுதந்திரக் காற்றை அணுகி கொடிகளில தோய்த்த உடுப்பைக் காயப்போட்டுக் கொண்டு அண்ணாந்து பஸ்ஸைத்தான் அவர்களின் கண்கள் ஆவலாய் மேயுது. எனக்கு இவையெல்லாம் வேடிக்கை.இடையில யாராவது இறங்கவேண்டுமென்றால் பெல்லை அடிக்க வேணும். அந்தச்சத்தம் மட்டும் வெள்ளைக்காரன், வெள்ளைக்காரன்தான் என்று என்ர காதுக்குள்ள கத்தும். கண்ணை மூடி அயந்துபோனாலும் அந்த ஊர் தன் பெயரை பலாப்பழ, மாம்பழ வாசத்திலேயே தட்டி எழுப்பிப்போடும் .
"சாவகச்சேரி இறக்கம்"
என மணி அடிக்காமலே நிற்கிர பஸ் ஸ்டான்ட் சாவகச்சேரி வந்தாச்சு. சரி இறங்குவம். இறங்கி நடந்தா பத்து நிமிஷத்தில பெரியம்மா வீடு. எட்டி நடந்தேன். "பத்திரமா பொழுதுபடுறதுக்குள்ள கொண்டுபோய்க்குடுத்துப்போடு என்ர செல்லம்" எண்டு அம்மா தந்த சங்கிலியும் என்னோட சேர்ந்து நடக்குது. நானும் உன்னோட கூட வாறன் எண்டு அந்தத் தேத்தணிக்கடைக்கு முன்னால படுத்திருந்த நாயும் கொஞ்ச தூரம் தன் அன்பை வெளிப்படுத்த வாலை ஆட்டிக் கொண்டு அந்தப்படலை மட்டும் வந்து நிற்குது. அதுக்குக்கொடுக்க ஒருதுண்டு பிஸ்கட்கூட அப்போது என்னிடம் இருக்கவில்லை. அது எனக்கு சரியான கவலை. படலை அரைகுறையா திறந்து கிடக்கு. அதுகளுக்கு ஏது அப்போ பூட்டும், திறப்பும்?
காணிக்க கால் வைச்சு படலையை சாய்க்க, சாய்த்த கிரீச்செண்ட சத்தம் கேட்டு "வீரா" குரைக்குது. அதுவும் குரைக்க வந்தநாய்ப்பிள்ளையார் பறந்திட்டார்.யாரென்று தெரியாமல் உதவி செய்ய வந்த அந்த ஊர்த்தொண்டனை இந்த வீரா துரத்துவதைப்பார்க்க எனக்குச் சங்கடமாயிருந்தது. கறுத்தக்கொளும்பான் கொத்துக்கொத்தா பெரியம்மாவின்ர முற்றத்தில அந்த மரத்தில தொங்குது. அணில் கொத்தி, குருவிகள் கொத்தினது மீதியா இரண்டு மூண்டு கீழ கிடக்கு.
அடுத்த வீட்டு சிங்கப்பூர் பென்சனியர் வீட்டின்ர பலாக்குலை நல்லாப் பழுத்து அது மூக்கைத்துளைக்குது. இப்ப என்ர பசி வயித்த விறாண்டித்
தள்ளுது.
"யாரங்க. அட லிங்கேசு?வா ராசா வா.என்ன இந்தப்பக்கம்?" என்று பெரியம்மா கூப்பிட அக்கா, அண்ணன்மார், அக்காமார், என்ர வயசு வசந்தா, தேவன் என வீட்டுக்குள்ள நிண்ட சகோதரங்களும் இப்ப முற்றத்தில. முருங்கைமரம்கூட தன்ர உடம்பில காய்ச்சுத்தொங்கிற முருங்கைக்காய்களின்ர பாரத்தில நல்லாய்க் கூனிப்போச்சு.
ஒவ்வொருவர் பாசமும் மூச்சுவிடாமல் பொங்கி வழியுது. எல்லாரோடையும் பேசிமுடிக்கிறதுக்குள்ள, என்ர நோக்கம்.. "இருட்டுறதுக்குள்ள அந்தச்சங்கிலிய எப்படியாவது யாருக்கும் தெரியாம பெரியம்மா விட்ட கொடுத்திட்டா நிம்மதி".கிணத்தடியில கால் கை முகம் கழுவிக்கொண்டு நிக்கேக்க சரியா தனியா குடத்தோட பெரியம்மா வாறா.
"இந்தா இதைப்பிடியுங்கோ". எண்டு ஒரு மாதிரிச்சொல்லி சங்கிலியைக்கொடுத்திட்டன்.இப்பதான் எனக்கு நிம்மதி.
"இன்னும் விளக்குக்கொளுத்தேல்ல" எண்டா பெரியம்மா.கொளுத்தியிருந்தா அவ்வளவும்தான். சங்கிலி திரும்பியும் என்னோட யாழ்ப்பாணம் வந்திருக்கும். நானும் இன்னொருக்கா டபிள் டேக்கரில வந்துபோயிருப்பன். அந்த நாய்களுக்கும் ஆசையாய்க்கடிக்க ஏதேனும் வாங்கி வந்திருப்பன். வீராவையும், அந்தத் தொண்டனையும் ஒரு மாதிரி ஒன்று சேர்த்திருப்பன்.
சின்னம்மாவின்ர கல்யாணத்திலன்று அம்மா ஆசையாய்க் கேட்டுட்டாவெண்டு அதிலேயே கழட்டிக்கொடுத்து இதைப்போடெண்டு ஆக்கினைப்படுத்திப் போடப்பண்ணின முத்துச் சங்கிலி.ஒண்டுக்குள்ள ஒண்டெண்டா துடிச்சுப் பதைச்சு ஓடிவந்து கைகொடுத்த வாழ்வது.. உறவெண்டா ஆறாப்பாய்ஞ்சுது. "காசு பெரிசில்ல. மனிசர்தான் பெரிசு" எண்டு சொல்ற பெரியம்மாவை இன்னொருக்கா என்ர ஆசைதீர கட்டிப்பிடிச்சுக்கொஞ்சினன். கொஞ்சின பிறகு அவா சொன்ன ஒரு வார்த்தை.. "கோடி கோடியாச்சம்பாதித்தாலும் இந்தச்சந்தோஷம் கிடைக்காது என்ர குஞ்சு. வா வந்து சாப்பிடு. இரவுக்கு குழல்பிட்டும் மாம்பழ மும் இருக்கு.வந்து சாப்பிடு" என்று சொல்ல நான்.
"எல்லாரும் வரட்டும். சேர்ந்து சாப்பிடுவம். இப்போதைக்கு தேத்தணி. அது போதும் பெரியம்மா" எண்டன். 9 பிள்ளைகள் பெரியம்மாவுக்கு. மூத்த அண்ணர் கொழும்பில.
இருண்டுதெண்டா அந்த வீடு திருவிழாத்தான். அதுகளோட வீராவும் சேர்ந்துதெண்டா அவ்வளவும்தான். எல்லாரையும் உலுப்பி எடுத்து அதுவும் களைச்சுப்போயிரும். வீரஞ்செறிந்த நாயெண்டு அப்பவே பெரியப்பா வைச்ச பெயர். எல்லாரும் கீழ சப்பாணிகட்டிஇருந்து சாப்பிட்டு, நல்லாய்க்குதியம்குத்திச்சிரிச்சு விளையாடேக்க சின்ராசண்ணை ஒரு பாட்டுப்போட்டார்.
எதில?
அந்தக்காலத்துப்பொன்னுகிராம்பெட்டியல.(Gramophone) நல்லா முதல்ல வைன் பண்ணிப்போட்டார். போடேக்க கறகறத்தது அது. ஊசியை மாத்தி புதுசாப்போட்டு மெதுவா கையால சரியா டிஸ்க்கில அந்தப் பொயின்ரில விட்டார். நிலவு மாமரத்தைச் சோடிச்சுக்கொண்டு முற்றத்தில எங்களிட்ட வருகுது. முதல்ல போட்ட பக்திப் பாட்டில், பால்போல் வெளிச்சத்தில், ரி.எம்.எஸ் குரலில் நாம் எல்லோரும் பரவசத்தில்... சில்லெண்டு வீசின காத்தில அந்தப் பலாப்பழம் இன்னும் நல்லாப்பழுத்து தன்னையும் எங்கட வீட்ட கூட்டிக்கொண்டு போகச்சொல்லுது.
அந்தப்பாட்டை இப்போது பேர்லினில் எம் உறவுகளின் வீட்டில் கேட்டேன்.. பிரமித்துப்போனேன். காலம் தன்னை மாற்றிக்கொள்ளலாம். இன்னும் சில மனிதர்கள் தம்மை மாற்றிக்கொள்ளவில்லை. அதற்கு உதாரணம் என்னருமைச்சித்தப்பா. அவரின் பொக்கிஷம் இது.கேளுங்கள். உங்களையும் அந்தநாள் நினைவுகள் மீண்டும் தாலாட்டும்.