ஒவியம் AI
கூதல் விறைத்த காலமது.மழை விடாது பெய்துகொண்டிருந்த பகலது .பள்ளிகள், கல்லூரிகளென மெல்ல மெல்ல நிரம்பிய வெள்ளம் ஓடிவந்து வகுப்புகளுக்குள் புகுந்து கால்களால் குளிரேறி உடம்புகளை நடுங்க வைத்துக் கொண்டிருந்த பொழுதது. 'வெய்யோன்' கண்களை மூடியபடி கார்மேகத்துடன் கட்டுண்டு கிடந்த மார்கழித் திங்களது. எம்மண்ணும்,மக்களும் உசாரின்றி போர்வைக்குள் முடங்கிக்கிடந்த மழைக்காலமது. எது எதுவாகினும் குளிர்காற்று வந்து அரசமரத்தையும், ஆலமரத்தையும் ஆரத்தழுவி,கடைசியில் எம்மையும் முத்தமிட்டுச்சென்ற பரவச விடியலது. இந்தப்பரவசத்தில்தான் நாம் பல பிரச்சனைகளையும் கடந்து பள்ளி, கல்லூரியென வெள்ளத்தைக்கிழித்துக்கொண்டே சைக்கிள் ஓடிப்படிக்கச்சென்றோம்.
பஸ்ஸில் வந்தவர்கள் நனைந்து, நடுங்கி விறைத்து வகுப்பிற்குள் நுழைந்ததையும் மறக்க முடியுமா? சில வகுப்பறைகள் நித்தம் நிறையாமல் போனதும் இந்த மார்கழியில் தான். காற்சட்டையும்,சேட்டுமாய் வெறுங்கால்களுடன் மழைவெள்ளக்காடுகளைக்கடந்து கல்லூரிகளில் கால்வைத்தவைத்தவர்களுக்கு அந்த அனுபவம் புரியும். காலையில் தோய்ந்து,தோய்ந்து பால்காரர்கள்கூட தமது உழைப்பை கஷ்டப்பட்டு கண்ணியமாக ஒப்பேற்றிக்கடந்து சென்றதையும் எம்மால் மறக்கமுடியாது.
பாடசாலைகளின் ஓட்டைக் கூரைகளிலிருந்து ஒழுக்குகள் வகுப்புகளுக்குள் விழ மேசைகள் வாங்குகளை அரக்கிவிட்டு பாடங்களைத்தொடங்கியதையும் எம்மால் மறக்கமுடியாது.
எதையும் சகிக்கலாம்.மூத்திரக்கிடங்குகளிலிருந்தோ, மலசலகூடங்களிலிருந்தோ காற்றில் பரவிய மூத்திர நாற்றத்தை மட்டும் சகிக்க முடியாது இன்னல் பட்டதும் மழைக்காலத்தில்தான். ஆண்களோ,பெண்களோ யாராயினும், "அசௌகரியங்களின் அனுபவங்களை நாமும் கடந்து வந்தவர்கள்தான்" என்றும் கூறலாம் இல்லையா?
ஒருபுறம் அவை.மறுபுறம் இவையென இன்னும் சிலவற்றைக்கூறிக்கொண்டே போகலாம்.
மழைவிட்டு ,நிலம் வெளிச்சுக்கிடக்கும் தினங்களில் கஸ்தூரியார் வீதியின் 'கன்னாதிட்டி'முற்றங்களில் கோலங்களின் அழகும், சாம்பிராணி வாசமும் மனதை வருடும். கோயில்களில் 'திருவெம்பாவை'யும், திருப்பள்ளியெழுச்சியாய் எழும்
"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும்.."
எனும் பாடலும்,பாடல் முடிய ஒலிக்கும் சேமக்கலமும்,மணிகளின் சந்தங்களும், சங்கொலியும் ஒன்றாய்ச்சங்கமித்து உயிரை உருக்கும்.அத்தருணத்தின் பக்திப்பரவசமே பூத்துக்குலுங்கிய மார்கழியின் பூபாளம்.
எம்மோடு வாழ்ந்த ஆடு,மாடு,கோழி,பூனை, நாயென அவைகளும் மழைக்காலக்குளிருக்குள்ளும் எம்மோடு ஒன்றிப்பிணைந்து பயணித்ததை இப்போது நினைத்தாலும் ஏதோ ஒரு தனி சுகம் நெஞ்சை வரிடும்.
இயற்கையுடன் ஒன்றிப்பிணைந்து, விறகு வைத்து,அடுப்பு மூட்டி, அம்மியில் அரைச்சு, தேங்காய் துருவி,முதற்பால், இரண்டாம் பாலென பிழிந்து, கூட்டிக்கறிவைத்து எம்மையெல்லாம் ஊட்டி வளர்த்த அந்தத்தெய்வங்களையும் இந்த மார்கழி நினைவேந்துகின்றது. ஈர விறகைக்கூட மரக்காலையில் வாங்கி வந்து, மண்ணெண்ணெய் ஊற்றி, ஊது குழல்கொண்டு ஊதிப்பத்தவைக்க அவர்கள் பட்ட பாடிருக்கே நினைத்தால் மழைபோலப்பொழிகின்றது கண்ணீர்.
மழைக்காலத்தில் சொந்தபந்தத்தில் யாராவது இறந்துபோனால், அடை மழைக்குள் அந்த உடலை அடக்கம்பண்ண நாம் பட்ட பாட்டையும் எப்படி மறப்பது?எம் வாழ்வோடு எல்லாமே கூடிக்கிடந்தது.இப்போது படிப்படியாய் சில மறந்தும்போனது சிலரிடம்.
மற்றைய மாதங்களைப்போல மார்கழியில் மீன்காரரைப்பார்த்துக்கொண்டு நிற்கமுடியாது. அந்தப்பருவ மழைக்குள்ளே வீதியால ஒன்றோ,இரண்டு மீன்காரர் வருவதே அதிர்ஷ்டம்.வந்தாலும் எல்லாம் விற்று கடைசியில ஏதோ திரளியும், இறாலுமெனக்கொஞ்சம்தான் இருக்கும்.என்றாலும் குருட்டுவாக்கில திரளியை வாங்கிச்சொதி வைச்சா,அதுகூட அந்தக்குளிருக்கு அமிர்தமாயிருக்கும். மத்தியானத்துக்கு வீட்டில இருக்கிற கட்டப்பாரைக்கருவாட்டில குளம்பும்,திரளியும் போட்டு வைச்ச சொதியும், வாய்க்கு ருசியாய் குத்தரிசிச்சோறும் சாப்பிட்டால்..?
பொழுது சாய்ந்துபோற நேரத்தில மரவள்ளிக்கிழங்குத்துவையலும்,பிளேன் ரீயும் குடித்தால்? குடித்தோமே!சாப்பிட்டோமே!
ஆகா.அது பொற்காலம்.மார்கழியின் இன்னொரு வாசமது. மழையும் மார்கழியும் என வானொலியிலும் வலம்வந்த பாடல்களும் அப்படித்தான் எம்மை வசப்படுத்தின.மழை அடித்துப்பெய்ய பழைய 'றீகல்' தியேட்டருக்குள் அந்தத்தகரக்கொட்டகையில் மழைவந்து விழும் ஒலியுடன் Gow Boy படம்பார்க்கும் இன்னொரு ஆனந்தம் எமக்கு வாய்த்ததே! அதைச்சொல்லி மாளாது. எம்மண்.அப்பா,அம்மா,அப்பு,ஆச்சிதொட்டு தொப்புள்கொடி உறவென ஒன்றாய்க் கூடிவாழ்ந்த எம் சொந்தங்கள், நண்பர்கள் என எம் வாழ்வு.அந்த மழைக்காலம். இனித்திருந்த அந்தப்பொற்காலம்போல இனிக்கனியுமா..?
"உலை வைச்சு வடித்த குத்தரிசிக்கஞ்சி- கையில்
துருவிமுடித்த உடன் சிரட்டை
அதற்குள் மெதுவாக இறங்கியது கஞ்சி
தித்திக்க அளவாக பிழிந்தெடுத்த கடும்பால் (தேங்காய்ப்பால்)
வாய்க்கு ருசியா ஒரு சிரங்கை உப்பையும் கலக்கி
சுடச்சுட அந்த மழைக்கு ஊதி ஊதி
அந்த மண்ணில ஆறஅமர்ந்து குடிச்சோமே !
இந்த உசிருக்கு இதைவிட வேறென்ன ருசியும் பூரிப்பும் வேன்டும்!