சிலம்பின் சிறப்பு
சிலப்பதிகாரத்தை ஏன் படிக்க வேண்டும்? சிலப்பதிகாரத்தில் அப்படி என்னதான் பொதிந்து கிடக்கிறது ! சிலப்பதிகாரத்தைவிட வேறு காப்பியங்கள் தமிழில் சிறந்து விளங்கவில்லையா ? என்றெல்லாம் எம க்குமுன்னே பல ஐயங்கள் வந்து நிற்கும் . சிலப்பதிகாரத்தைப் பற்றிய சிறப்பும் அதன் சிந்தனைகருத் துக்களும் சரியான முறையில் எம்மிடம் புகுந்துவிடுமானால் இப்படியான ஐயம் எழுவதற்கே இடமில் லாமல் போய்விடும் என்பது எனது மனக்கருத்தாகும்.தமிழில் வந்த முதல்காப்பியமாக சிலப்பதிகாரமே விளங்குகிறது.
இயற்றமிழ் , இசைத்தமிழ் , நாடகத்தமிழ் , மூன்றையும் கொண்ட முதல் தமிழ் காப்பியம் என்னும் பெருமையையும் கொண்டு நிற்கிறது. சேர, சோழ, பாண்டிய, நாடுகளான முத்தமிழ் நாட்டினையும் முழுமைபெறச் செய்த காப்பியமாகவும் அமைந்திருக்கிறது.இலக்கிய உன்னதத்தை வெளிப்படுத்தும் காப்பியமாகவும் இருக்கிறது.
தமிழர்களின் பன்முகப்பட்ட சமூகப் பண்பாட்டினைக் காட்டி நிற்கும் காப்பியமாகவும் திகழ்கிறது. வாழ்வியல் நெறிகள், வழிபாட்டு முறைகள், கலைகள், அரசுமுறைகள்,நீதி நிர்வாகம், பெண்களின் சமு தாய நிலை, என்று பலவற்றைக் காட்டி நிற்கும் காப்பியமாக சிலப்பதிகாரம் திகழ்கிறது எனலாம். இக் காப்பியத்தை புரட்சிக் காப்பியம், குடிமக்கள் காப்பியம், சமுதாயக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், தேசியக் காப்பியம், நாடகம் காப்பியம் என்றெல்லாம் பன்முகப் பார்வையில் நின்றும் பாராட்டப்படும் நிலையும் காணப்படுகிறது. இதனால் காலத்தை வென்று நிற்கும் காப்பியமாக சிலப்பதிகாரம் இருக்கி றது என்பது மறுத்துவிட முடியாத உண்மையெனலாம்.
இதனால் அன்றோ தேசியக்கவி பாரதி " நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் " என்று விதந்தோதி நின்றார் போலும் ! பாரதியின் வாக்கு எத்தனை வலிமையும் பெறுமதியுமானது என்பதிலிருந்தே சிலப்பின் சிறப்புப் புலனாகி நிற்கிறதல்லவா ! சிலப்பதிகாரம் தமிழ் தேசியக் காப்பி யம். சிலப்பதிகாரம் தமிழின் சொத்தாக நிற்கும் காப்பியம். சிலம்பைப் படித்தால் சிந்தனை வளரும் ! சிலம்பை நினைத்தால் பெருமிதம் நிலைக்கும் !
சிலம்பின் புதுப்பாதை
நாட்டையோ , சாதியையோ, சமயத்தையோ, சிக்கலுக்குள் புகாவண்ணம் நடுநிலையினைப் பேணி க்காத்து உண்மை ஒளி விளங்கும் வகையில் சிலம்பு மலர்ந்திருக்கிறது. வேற்றுமை பாராட்டும் பாங் கினை சிலம்பு தவிர்த்தே நிற்கிறது எனலாம். சாதிகளுக்கிடையே வேறுபாடுகள் காணாது ஒத்தும் உறழ்ந்தும் செல்ல வேண்டும் என்பது சிலம்பின் புதுப்பாதை எனலாம். கவுந்தி அடிகள் சாதியையோ குலத்தையோ பாராதவராக சிலம்பில் வருகிறார். இதுவும் சிலம்பின் புதுப்பாதையினையே காட்டுகிறது. காவியங்களின் தலைவனாக பெரும்பாலும் சிலம்பின் காலத்து உலக காவியங்களில் அரசர்களே வந் திருந்த வேளை - அரசர்க்கு அடுத்த நிலையில் இருந்த வணிக குலத்தை சேர்ந்தவரை காவியத்தலை மைக்கு காட்டியதும் சிலம்பின் புதுப்பாதை எனலாம். மூன்றாம் வருணமாகக் கொள்ளப்படும் வணிக குலத்து பெண்ணான கண்ணகியை தெய்வமாக்கி எல்லா வருணத்தாருமே வணங்கும் நிலையினை சிலம்பு உருவாக்கி நிற்பதும் சிலம்பின் புதுப்பாதை என்று எண்ண முடிகிறது அல்லவா ! பத்தினித் தெய்வமாக கண்ணகியை வழிபடும் நிலையினை உருவாக்கியமை சங்ககால இலக்கிய மரபில்வந்த கொற்றவை வழிபாட்டின் தொடர்ச்சியே எனலாம்.இதனை நோக்கும் பொழுது கண்ணகியை தேசிய அளவில் தெய்வமாக உருவாக்கும் புதுப்பாதை சிலம்பினால் வருகிறது என்றே எண்ண முடிகிறது.சேர சோழ பாண்டிய நாடுகளுடன் நின்றுவிடாது இலங்கையிலும் இடம்பெறும் நிலைக்கு தேசிய நிலையா க்கிய புதுமை சிலம்பின் புதுமை என்றுதானே பார்க்க முடியும். சுவாமி விபுலானநந்த அடிகளாரின் யாழ் நூல் தோற்றத்துக்கு பாதை அமைத்ததும் சிலம்பன்றோ ! தமிழிசை இயக்கும் உருவாவதற்கு பாதை வகுத்ததும் சிலம்பேயாகும்.
சிலம்புக்கு முற்பட்ட காலத்துப் புலவர்கள் கையாளாத பல புதிய கவிதை வடிவங்களை சிலம்பில் இடம்பெறச் செய்து இளங்கோ புதுப்பாதையை வருங்காலத்து காட்டி நிற்கிறார்.அகவலும் வெண்பா வுமே மிகுதியாகக் காணப்பட்டது பழைய இலக்கியத்தில் எனலாம். பிற்காலத்தில் தாழிசை, துறை , விருத்தம் என்னும் பெயரில் செய்யுள் இனங்கள் வளர்ந்ததைக் காண்கிறோம்.இவ்வாறான புதிய வடிவ ங்கள் வருவதற்கு வழிகாட்டிய பெருமையும் சிலம்புக்கே உரித்தாகிவிடுகிறது எனலாம். அக்காலத்தில் வழக்கிலிருந்த நாட்டுப் பாடல்களை உள்வாங்கியே கானல்வரிப் பாடல்களும், ஆய்ச்சியர் குரவைப் பாடல்களும் சிலம்பில் வரப்பண்ணியதும் இளங்கோவின் புதுப்பாதைதனையே காட்டுகிறது என்றும் கொள்ள முடிகிறது.அக்கால நாட்டுப் பாடல்களை மனமிருத்தி அதனூடாகப் பெற்றவற்றை புதிய செய் யுள் வடிவங்கள் ஆக்குவதற்கு முயன்று அதனை காப்பியத்திலும் இடம்பெறும் வண்ணம் செய்தமை நல்லவொரு புதுப்பாதை என்றே எண்ண முடிகிறது எனலாம். இதன் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு இளங்கோ அடிகள் செய்திருக்கும் தொண்டு மிகவும் பெறுமதி மிக்கதென்றே கொள்ளல் வேண்டும்.
சங்கால இலக்கிய மரபில் காதலும் வீரமும் அறமும் காட்டப்பட்டிருந்தாலும் கதையாக தொடராக இலக்கியத்தில் இடம்பெறவில்லை என்றே கொள்ள முடிகிறது. சங்ககாலத்தை அண்டிய காலத்தில் முதன் முதலாக ஒரு தொடராக ஒரு கதையினை வெளியிட்டு அதில் காதல், வீரம், அறம் , அத்தனையும் காட்டி தமிழ் இலக்கியத்துக்கே புதுப்பாதை காட்டிய வகையிலும் சிலம்பினை காட்டி நிற்கி றார் இளங்கோ அடிகள் என்பதை எவருமே மறுத்துவிட முடியாது என்பது உண்மை எனலாம். தமிழ் இலக்கியத்துக்கே சிலம்பு புதுப்பாதையாக அமைந்தமையால் பின்னர் காப்பியங்கள் பல வரவும் வாய் த்தது என்பதும் மனங்கொள்ளத்தக்கதெனலாம்.பின்னர் வந்த காப்பியங்கள் வழிநூல் வழிவந்து நூலாகி நிற்கின்றன. ஆனால் வழி நூல்கள் எதுவும் இன்றி தானே மூலநூலாய் தமிழ் இலக்கியப் பாதையில் புதுப்பாதை காட்டி அதன்வழி வந்தபெருமையினை சிலம்பதிகாரம் ஒன்றே பெற்று கொள் கிறது என்பதே சிலம்பின் சிறப்பும் பெருமையும் என்பதில் எள்ளளவும் எந்தவித ஐயமும் இல்லை என்பதையே காட்டி நிற்கிறது எனலாம்.
அறநூல் என்று சிறப்பிக்கும் நூல்களும் ஏனைய நூல்களும் ஆரம்பிக்கும் வேளை கடவுள் துதியி னைப் பாடியே தொடங்கும் மரபே காணப்பட்ட வேளை அவற்றை யெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இயற்கையினைப் பாடியே சிலம்பினை தொடக்கி காவிய மரபில் புதுப்பாதையக் காட்டி நிற்கிறார் இளங்கோ அடிகள் எனலாம். இப்பாதை தமிழ் இலக்கியத்தில் முற்றிலும் மாறுபட்ட வேறுபட்ட புதுப் பாதை என்று அறிஞர்களே வியந்து நிற்கிறார்கள்.
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
என்று இயற்கையினையே பாடி அதனையே மங்கல வாழ்த்தாக்கி சிலம்பினை ஆரம்பிக்கின்றார் இளங்கோ அடிகள். இஃது முற்றிலும் வித்தியாசமான புதுப்பாதை அல்லவா ! பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பதுதான் இறையாகும்.ஆகவே அந்த இறையினை இயற்கையில் கண்டு தனது காவியத்தை புதுப்பாதையில் தொடக்கியமை இளங்கோவின் மதி நுட்பத்தை புலப்படுத்தி நிற்கிற தல்லவா !
சிலம்பின் புரட்சி
அவதாரங்களையும் அரசர்களையும் ஆளும் வர்க்கத்தையும் கதைக்கு தலைமைதாங்கும் வண்ணமே காப்பியங்கள் வந்திருக்கின்றன. சாதாரண குடிமக்கள் தலைமை என்பது நினைத்துமே பார்க்கமுடியா மரபில் அதனை உடைத்து அவதாரமோ உயர்நிலையோ அல்லாத அதுவும் ஒரு சாதாரண குடிமகளை கதைக்கு தலைமைதாங்க வைத்து மாபெரும் காப்பியத்தை வடிவமைத்த இளங்கோ அடிகளாரின் புரட் சியானது தமிழ் இலக்கியத்தில் நடந்த மிகப்பெரிய புரட்சி என்றே கூறலாம்.
காப்பியத்தின் பெயரே புரட்சியாகவே மலர்கிறது. கதையின் நாயகியின் பெயராலோ அல்லது நாயகன் பெயராலோ அமையாது ஒரு அணியின் பெயரால் அமையப்பெற்றிருப்பது அடிகளாரின் மற்றொரு புரட்சியாகி நிற்கிறது.காப்பியத்தின் நாயகியான கண்ணகி கற்புத் தெய்வமாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். அந்தத் தெய்வத்தின் திருவடியைக் காண்பதுதான் மிக மிக பொருத்தமாகும். " கண்ணகி காப்பியம் " என்று பெயரிட்டால் அவளது திருமேனிதான் நினைவில் வந்து நிற்கும் என்னும் அச்ச உணர்வினால் அவள் திருவடியை அலங்கரிக்கும் அணியான சிலம்பின் பெயரை வைத்து அவளின் திருவடி ஒன்றே எல்லோர் நெஞ்சிலும் பதியவேண்டும் என்ற புரட்சிகரமான சிந்தனையினாலேதான் இளங்கோ வடிகள் " சிலப்பதிகாரம் " என்னும் பெயரையே சூட்டி இருக்கிறார். இது காப்பிய வரலாற்றில் எண்ணியே பார்க்கமுடியாப் புரட்சி என்று அறிஞர்கள் விதந்து நிற்கிறார்கள்.
மக்களின் உள்ளங்களை அறிந்தவர் இளங்கோவடிகள். இவருக்கு முன் இருந்த புலவர்கள் வழியில் செல்லாது அவர்கள் தொடாதவற்றை அவர்களால் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஆடல் பாடல் களை ஆசையுடன் நோக்கினார். மக்களின் வாழ்வில் பாடப்பட்ட படல்களைப் பற்றியோ அவர்களின் கூத்து வடிவங்களையோ சங்கநூல்களில் கண்டறியமுடியாதிருக்கிறது.ஆனால் இளங்கோவடிகள் அந்தப் பாடல்களின் உரிமையானவர்களின் கலைகளை மதித்தார். அவற்றுக்கு எழுத்து வடிவம் கொடு த்து தனது காப்பியத்தில் இடம்பெறுமாறு செய்தார்.
கதையில் எங்கெல்லாம் வைக்கமுடியுமோ அங்கெல்லாம் இப்பாடல்கள் வைத்து அழகு படுத்தினார். கடற்கரையில் செம்படவர் பாடும் பாடும் காதல் பாடல்கள், காவிரியாற்றினைப்பற்றி மக்கள் பாடி வந்த பாடல்கள், வேடர்கள் காளியை வழிபட்டுப் பாடும் பாடல்கள், குரவைப் பாடல்கள், திருமாலை, முருகனை, வழிபாடாற்றும் பாடல்கள், அம்மானைப் பாடல்கள், நெல்குற்றும் பாடல்கள், ஊஞ்சலாடும்போது பாடும் பாடல்கள், எல்லாவற்றையும் உள்வாங்கி அதன்வழியிலே செய்யுள்களை யாத்து அந் தநாட்டு மக்களே வாயாலே பாடப்படுவதாக காப்பியத்தில் அமைத்து காவிய வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார் இளங்கோவடிகள் எனலாம். இப்புரட்சியால் பழங்கால நாட்டுப்புற வடிவங்களை நாம் இன்று கண்டுகொள்ளுவதற்கு சிலம்புதான் ஆதாரவிளங்கின்றது எனலாம்.
மூன்று நாடு , மூன்று அரசர் , மூன்று கருத்து , மூன்று காண்டம், மூன்று தமிழ் , என்று காட்டிய இளங்கோவடிகள் மூன்று பெண்களைக் காட்டி பண்டையகால கற்பொழுக்கத்தை சிலம்பில் காட்டி யமையும் அவரின் ஒரு புரட்சி என்றே கொள்ளமுடிகிறது.
" வாயிலோயே வாயிலோயே
அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே " என்றும்
" தேரா மன்னா செப்புவது உடையேன் " என்றும்
கண்ணகி என்னும் பெண்ணை துணிவுடன் பேசவைத்து ஒரு நாட்டின் அரசனையே எதிர்கொள்ளும் புரட்சியை இளங்கோவடிகள் சிலம்பில் காட்டி நிற்கிறார். பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு மன்ன னையே குற்றவாளியாக்கி அதனால் மன்னனும் இறந்து வீழ அதனைப்பார்த்த அரசியும் அவ்விடத்தே உயிர் துறந்து தனது கற்பின் திண்மையைக் காட்டி விடுகிறாள். இதைப்பார்த்த கண்ணகி பாண்டியன் தேவியின் கற்புக்கு தனது கற்பு குறைந்தது அன்று எனக்காட்டும் முகமாக
" பட்டாங்கு யானும்ஓர் பத்தினியே ஆமாகில் "
என்று கண்ணகியை உச்சத்துக்கு கொண்டுபோய் மதுரையை எரிப்பதற்கு ஆணையிடுவது கூட இளங் கோவின் நல்லதோர் உத்தியும் ஒரு புரட்சிச் சிந்தனை எனலலாம். கற்புடை பெண்கள் " பெய் என்றால் மழையும் பெய்யும் " என்னும் வள்ளுவத்தின் சிந்தனை இங்கு கண்ணகியின் வாயிலிருந்து வருகின்ற "எரி " என்னும் சொல்லுக்கு வலுவூட்டி நிற்கிறது என்பதும் நோக்கத்தக்கதே.
பாடியதில் புரட்சி. பாத்திரங்கள் படைத்ததில் புரட்சி. கருத்துக்களை முன் கொண்டுவந்து வைத்ததில் புரட்சி. தொடங்கியதில் புரட்சி. குழந்தை இல்லாக் காப்பியமாக சிலம்பினைச் செய்ததும் பெரும் புரட்சி என்றே எடுத்துக் கொள்ள வேண்டியும் இருக்கிறது.இவ்வாறு சிலம்பு முழுவதுமே இளங்கோவடிகளின் புரட்சிச் சிந்தனைகளே நிறைந்து பொலிவினை வழங்கி சிலம்பினை உயர்வாக்கி இருக்கிறது எனலாம்.
எங்களின் சொத்து
முத்தமிழும் விரைவிவர எங்களின் தமிழ் சொத்தாக விளங்குவது சிலப்பதிகாரம். கோவலன் ஒரு கோ - அல்லன். அவன் ஒருசாதாரண குடிமகன். கண்ணகியும் கோ- மகள் அல்ல. அவளும் குடிமகளே. குடிமகனையும் குடிமகளையும் சிலப்பின் தலைவன் தலைவியாக்கி முடிமக்கள் காப்பியம் அல்ல குடி மக்கள் காப்பியம் என்று தமிழில் சிலம்பதிகாரம் அமையப் பெற்றிருப்பதே எங்களுக்கு பெரும் பெரு மையல்லவா ? இதனை எங்கள் சொத்து என்பது மிக மிக பெருமிதமும் அல்லவா ! கம்பனையும் வள் ளுவனையும் வியந்த பாரதி நிறைவில் “ இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை " என்று வியந்து நிற்பதும் எமது தமிழுக்கு வாய்த்த பெருமை அல்லவா! தேசிய ஒற்றுமைக்கு சிலப்பதிகாரம் வழிவகுதிருப்பதும் எங்கள் மொழிக்கு வாய்த்த பெருமை அல்லவா? அரசியல் பிழை த்தால் அறம் நிச்சயம் பதில் தந்தே தீரும்.கற்பு என்பது சமூகத்தின் கட்டாயம். கற்புடன் வாழும் பெண் கள் போற்றப்படுவர்.அவர்கள் வணங்கும் நிலையிலும் உயருவார்கள் என்பதை எல்லாம் சொல்லி நிற்கும் சிலம்பு எங்கள் மொழியின் பெருஞ் சொத்து அல்லவா ! நீதி தவறினால் உயிர்வாழ்தல் கூடாது என்பது எப்பொழுதும் எல்லா நாட்டுக்கும் பொதுவன்றோ ! அதைக்காட்டி நிற்கும் சிலம்பு எமக்கு வாய்த்த பெரும் சொத்தல்லவா !
பரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்
பொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்;
பொய்க் கரி போகல்மின்; பொருள்-மொழி நீங்கல்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர் மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்;
அற மனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும், களவும், காமமும், பொய்யும்,
வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின்
இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா
உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது;
செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்-
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு-என்
என்று பண்பாட்டின் பல பண்பட்ட தன்மைகளையெல்லாம் எடுத்துரைத்து அறத்தையும் நீதியையும் அனைவரது அகங்களிலும் அமர்ந்துவிடும் வண்ணம் இலக்கியச் சுவையினை அதனூடாக ஊட்டி எமக்கு எமது மொழியில் வாய்த்திருக்கும் மிகப்பெரிய சொத்தாக இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் விளங்குகிறது. தமிழுக்குக் கிடைத்த சிலம்பதிகாரம் எனும் சொத்தினை கண்ணுங்கருத்துமாய் காப்ப தும் அதன் பெருமகளை உண்மைகளை எடுத்து விளக்குவதும் அதனை உலகெங்கும் பரப்புவதும் ஒவ் வொரு தமிழரதும் தலையாய பொறுப்பாகும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.