- இந்து லிங்கேஷ் நினைவு கூரும் இந்த நனவிடை தோய்தல் முக்கியமானது. இதில் அவர் நினைவு கூரும் சீனி என்னும் சீனிக்குட்டி யாழ் இந்துவைப் பற்றி நினைத்தால் நினைவில் சிறகடிக்கும் முக்கியமானதோர் ஆளுமை. -
சங்கக்கடையின்ர இடது பக்கமா, ஒதுக்குப்புறமா,ஒரு மூலையில குமாரம்மானின்ர இருப்பிடம். நறுக்குப் புகையிலைத்துண்டு, வெத்திலை பாக்கு,பல்லி முட்டாய்,அரி நெல்லி,தோடம்பழ இனிப்பு என்றபடி சின்ன வியாபார மூலையது.குமாரம்மான் சேட்டுப்போட்டு நான் பார்த்ததில்லை.எப்போதும் சாரமும்,அவரது வண்டியும் அவர் கைகளில் பாக்கு வெட்டியுமாக வாங்கிலில் இருந்துகொண்டு பாக்குச்சீவிய காட்சிதான் இன்றும் அவர் நினைவாக! சின்னதாய் ஒரு மேசையில சப்பட்டைப்போத்தல்களுக்குள்ளே அரி நெல்லி,பல்லி முட்டை, தோடம்பழ இனிப்பென கண்ணைக்கவருகிறமாதிரி இவையெல்லாம் வெயிலுக்கு மின்னிக்கொண்டிருக்கும்.எங்கட கையில 10 சதம்,ஆக மிஞ்சிப்பார்த்தா 5 சதம்தான் வீட்டில தருவீனம். அதுக்கு குமாரம்மான் சரியா எண்ணி எதாவது தருவார்.பல்லி முட்டை தந்தால் அது வாயில கடிபட சீரகமும் சேர்ந்து அது வேற லெவல்.
அடுத்தநாள் உப்புத்தண்ணிக்குள்ள போட்ட அரி நெல்லி வாங்குவம்.ஒரு கடி கடிக்க அதுவும் வரண்ட தொண்டைக்கு ஊறிக்கிடந்த உப்பும் சுள்ளாப்பா இறங்கி வாய்க்குள்ள பாத்திகட்டி நெல்லிச்சாறாய் ஓடும்.தேகம் சிலுசிலுக்கும். அந்த அரிவரிபடிச்ச இளங்கன்று வயசில சுவைக்க குமாரம்மானின் தோடம்பழ இனிப்பு வாய்க்குள்ள சேர்ந்து கரைஞ்சு தித்தித்த அந்த ருசியும் இன்னும் மனசுக்குள் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டே யிருக்கின்றது. ஒருபக்கம் பாண்,பணிஸ் வாசம்.பேக்கரி மூலையில கொட்டிக்குவிஞ்சுகிடக்கும் உமி, மாக்கழிவுகளைக்கூட மாடுகள் வந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதும்கூட அதிலிருந்து நீராவிபோல காத்தில 'மா' பறக்குமே அந்தக்காட்சிதான் இந்தப்பெயர்போன சந்தியின் அன்றைய மெய்யழகு!
நடுவில சண்முகநாதன் கடையின்ர வாய்ப்பன்,கீரைவடை,உளுந்து வடை வாசம்.அதில தொங்கிற சினிமாப் படங்களின்ர பெயர்களும், அந்தப்பாட்டுப் புத்தகங்களின்ர அட்டைப்படங்களின்ர அழகும், பக்கத்தில ஐயாத்துரை கடையில இருந்து வாற பலசரக்கும் கலந்த புதுப்புது வாசங்கள். அதற்கு எதிரா சங்கக்கடையில இருந்து வாற மாசிக்கருவாடும்,அரிசி,மாவு,பயறு,உளுந்து, பயறும்,செத்தல் மிளகாயும் கலந்த தனித்த மளிகைக்கடை வாசங்கள்
எல்லாமே இச்சந்தியின் அடையாளங்கள்.
சீனி என்னும் சீனிக்குட்டி!
இந்தப்பெயர்போன ஆரவாரம் நிறைந்த "ஐயாத்துரை" கடைச்சந்தியின் ஒவ்வொரு கடை வாசலிலும் ஒரு ஆளுமையின் சுவாசம் நித்தம் படிந்தபடி.சிரித்த முகம்.விறைத்த மண்டை என்று சொல்லக்கூடிய நரம்புகள் புடைத்த தேகம்.சண்டிக்கட்டு.நெத்தியில் சிலவேளைகளில் வீபூதி,சந்தனம்.ஆரம்பத்தில் நாம் எட்டி நின்று பார்த்துப்பயந்தபோதும் ராசா,குஞ்சு என்று எங்களை அழைத்து அரவணைத்த அந்த உயிரின் அன்பு. கூடிநின்று வேடிக்கை பார்த்தால்,' இங்க நிற்காதைங்கோ,வீட்ட நேரத்துக்கு போய்ச்சேருங்கோ பிள்ளைகள்' என்ற காவலும்,கவனிப்பும்! அவர்தான் நாளடைவில் நாம் உச்சரித்த 'சீனி' என்று உரக்கச்சொன்ன சீனிக்குட்டி. சுற்றிவர வாழ்ந்த எங்கள் அயலவர்க்கு சீனிதான் சில வேளைகளில் சேவகனாயும்,காவல்காரனுமாய் வாழ்ந்தார் என்பதும் உண்மை. கள்ளங்கபடமற்ற தன் மனத்தால் எல்லோர் மனதிலும் பதிந்துவிட்ட மனிதம்தான் நாம் இன்றுவரை மறக்காத சீனிக்குட்டி. தனக்கென ஒரு திருமணமோ, குடும்பமோ விதைத்து அறுவடைசெய்து வாழாது,தன்னைச்சுற்றியிருந்தவர்களை மகிழ்வித்த ஒரு ஜீவன் இந்தச்சீனிக்குட்டி. புயலோ, வெயிலோ, மழையோ, வெள்ளமோ 'கட்டையைச்சரிப்பம்' என்றபடி சீனி இக்கட்டடத்து மூலைக்குள் உறங்கிக்கிடப்பார். சில வேளைகளில் அவரிடமிருந்து கள்ளும்,சாராய மணமும் காற்றில வீசும்.யாராவது அவரை அன்பில சீண்டினால் தூஷணமும் அந்தக்காத்தில பரவும்.பள்ளிக்காலம்தொட்டு யாழ்.இந்துக்கல்லூரியில் படித்து முடித்த எவருக்குமே,சீனியைத்தெரியாதவரே கிடையாது.அந்த அளவிற்கு அவரிடம் என்னதான் இருந்தது..?
யாழ்.இந்துக்கல்லூரிமீது அவர் கொண்ட காதல்.இது ஆண்பெண் உறவல்ல! இந்தத்தாய்மேல் அவர்கொண்ட அளவிட முடியாத பாசம்.'கிரிக்கெட் மச்'அல்லது இல்லங்களுக்கிடையே வருடா வருடம் நிகழும் விளையாட்டுப்போட்டி,ஏன் சர்வ சாதாரணமாக கிறவுண்ட் இற்குள் நாம் நடாத்தும் ' கிரிக்கெட் மச்'என்றா லும்,இல்லையேல் வைரவ கோயில் பூசையானாலும்சரி சீனியில்லாமல் எதுவுமே நடந்திருக்க சாத்தியமேயில்லை.
அதேபோல முக்கியமான 'ஜவ்னா ஹிண்டு, சென்ட்ரல் மச்'என்றால் சீனி முதல்நாளே அதற்கான முன் ஏற்பாடுகளைத்தொடங்கிவிடுவார்.'மச்' ஆரம்பித்து,நாங்கள் ஒரு விக்கெற் எடுத்துவிட்டால்,சீனியின் விசிலொலி கிரவுண்டை நிறைக்கும்.அவரின்ர பொங்கொஸ் குழுவும் உரத்து ஒலித்து ஓயும். அதேபோல அடுத்த 'இனிங்ஸ்'இல் சுபதரன் அடுத்து அடுத்து பவுன்ரியும்,சிக்ஸரும் அடிக்க சீனியும் சேர்ந்து குத்துக்கருணம் அடிப்பார்.
மணலில உருளுவார்.அந்தக்காட்சி,அந்த ஆனந்தம்,அவரின்ர அந்தக்குதூகல வாழ்க்கை.அவரைப்பார்த்து நாங்களும் பாவசப்பட்ட காட்சிகள் எம்வாழ்வில் என்றுமே மறந்துபோகாது.அதேபோல ஒருமுறை ' 'சென்ட்ரல் கொலிஜ்' ஐ நாம் எமது மைதானத்தில் விளையாடிக்கொண்டே வெற்றியீட்டப்போகின்றோம் என்றபொழுது, தோல்வியைச்சகிக்க முடியாத சில ரசிகர்கள் குழுவாக ஒன்று சேர்ந்து கிரவுண்ட்இற்குள் பாய்ந்து,பிச்சையும் எரித்து மச்சைக்குளப்பினார்கள்.அத்தருணத்தில் தனியொருவனாக இறங்கி அவர்களைத்தடுத்தவர் எமது சீனிக்குட்டிதான். பலராக வந்து விக்கெற்றுகள் கொண்டு தனியொருவரான சீனிக்குட்டியின் தலையில் தாக்கினார்கள்.நாம் பார்த்த சீனிக்குட்டி இரத்தம்வழிய இந்து மைதானத்தின் மண்ணில் சாய்ந்து கிடந்தார்.அப்போது அவரைப்பாதுகாக்க எவராலும் முடியாமற்போனது பெரும் ஏமாற்றமே!
இன்றும் கூட இந்து நண்பர்கள் நாலுபேர் கூடினால்,மைதான ரைவரரையும்,சீனிக்குட்டியையும் கூட்டிவந்து பங்கேற்காது எமது வாய்கள் ஓய்ந்ததில்லை. ஊர் பிரிந்தோம்.சிறுவர்,பெரியோர்,படித்தவர் படிக்காதவர் என்ற பாரபட்சம் பார்க்காத எமது சீனிக்குட்டி இன்றில்லை.சுற்றிவர அந்தச்சுவாசம் சுற்றித்திரிந்த ஐயாத்துரை கடைச்சந்தியும், கட்டட மூலைமுடுக்குக்களென எல்லாமே மெல்ல மெல்ல உருக்குலைந்து போகின்றன.
நாளை, " இந்தச்சந்தியிலும் இப்படியொரு வாழ்விருந்தது,அந்த வாழ்வும் இப்படியாகக்கொண்டாடப்பட்டது" என்று சொல்ல எவருமே இருக்கமாட்டார்கள். அதை நாம் சொல்லாவிடில் யார் சொல்வது?எமக்காக ஆயிரம் கதைகள் குவிந்து கிடக்கின்றன. யாரும் அறியா எம்மனசுக்குள்ளே மட்டும் அவற்றைப்போட்டு விதைத்து விட்டு,நாளை மரணித்துவிடுதல் என்பது மட்டுமா நம் வாழ்வு?இல்லை.இல்லவே இல்லை! பொழுது இருண்டு விடிந்ததே தெரியாததுபோல,எம் காலச்சிறகுகளும் நரைதட்டி வெகுதூரம் பறந்துவிட்டன.இப்போதாவது'பொற்கால நினைவுகளை'எழுதி எமக்கான பொக்கிஷங்களாக இன்றைய இளைஞர்களிடம் ஒப்படைத்து,அதைப் படித்தவர் அதை உணர்ந்து, ஒருவரிடமாவது தொடர்ந்து கடத்துவாரென்ற நம்பிக்கையுடன்..! எம்மோடு ஒன்றிப்பிணைந்து,எம்மையும் சிரிக்கவைத்த,மகிழவைத்த சீனிக்குட்டியை நினைவுகூர்ந்து அவரையும் தலை வணங்குகின்றோம்.
யாழ்.இந்துக்கல்லூரி, இந்து மைதானம், அந்த மரங்கள், அதற்குள் குடிகொண்ட வைரவர், கூடிக்கும்மாளமடித்த நண்பர் கூட்டம் என அந்தப்பசுமையான நினைவுகளைச்சுமந்தபடி இச்சந்தியில் இப்போது நிற்கின்றேன்!
நினைவுகளைத்தவிர கூடிவாழ்ந்து குதூகலித்த எவருமே இப்போது என் அருகிலில்லை!