யாழ்.இந்துக்கல்லூரிக்குள் 70களில் இளவட்டங்களாக காலடி எடுத்துவைத்த பொற்காலம்.இந்துவின் மைதானத்துடன் உறவாடியபடி பச்சைப்பசேலென முப்பெரும் மரங்களுடன் நாமும் ஒன்றிப்பிணைந்து,ஒட்டுண்டு கிடந்த காலமது.மரங்கள் பகிர்ந்த நிழல்களே எமக்கான இளைப்பாறும் கூடுகள்.நீட்டி நிமிர்ந்து சாய்ந்து சல்லாபிக்க தோள்தந்த மதில்கள்.காற்று அள்ளி வந்து மைதான மணலை எம்மில் தூவி,முகங்களை வருடிவிட்டுப்போன கணங்கள்கூட நினைவிலிருந்து அழியாத கோலங்கள் அவை.
கல்லூரி மணி அடித்து ஓயும்.வெள்ளியென்றால் அந்த மணியோசை மனசைப்பரவசப்படுத்தும்.2 நாட்கள் விடுமுறை என்ற சந்தோசமது.தவிர,அன்று மாலை எமது மைதானத்தில் கிரிக்கெட் மச்சென்றால் அந்தக்குதூகலம் இன்னும் ஒருபடி மேல. நல்ல இடம்பிடிக்க ஓடிவந்து,மதில்களில் பாய்ந்து ஏறியிருந்து ரசித்த அன்றைய துடுப்பாட்டப்போட்டிகளின் வெற்றிகள் மனத்திரைக்குள் கறுப்புவெள்ளைக்காட்சிப்படிமங்களாக ஓடிக்கொண்டேயிருக்கின்றன.வெள்ளி இருள,மச்சும் முடிய புத்தகங்களுடன் வீட்டுக்குச்சென்று அந்த இனிய நாளை அரங்கேற்றியதையும் இளம்பருவத்தை அனுபவித்த எவராலும் மறக்க முடியாது.
"சீக்கிரமா விடியாதா சனி?"
விடிந்தவுடன்;காலைச்சாப்பாட்டை முடித்துவிட்டு சைக்கிளை எடுத்து கால்கள் மிதிக்க,கிரவுண்ட் நோக்கி சைக்கிள் பறக்கும்.
' இவனுக்கு கிரிக்கெட் என்றால் பைத்தியம்' என்பதை சைக்கிளும் நிச்சயம் புரிந்திருக்கும்.அதுதான் அந்தக்கடுகதி வேகம்.மத்தியான இடைவேளைக்குக்கூட
வீட்டிற்குப்போகாமல் பக்கத்தில் இருந்த சண்முகலிங்கம் கடையில கீரைவடை, உளுந்துவடை, கச்சான் அல்வா என வாங்கி நண்பர்கள் பலராகப்பகிர்ந்து சாப்பிட்டோம்.
என்றாலும் பசிக்கும்.பசிக்காக வீட்டை போய் சாப்பிட்டு வந்தால்,பிடித்துவைத்த நல்ல இடம் போய்விடும்.மாறாக,நண்பர்களுடன் ஒன்றாய் இருக்கவும் முடியாது என்ற கவலை வேறு. இடைவேளைக்கு அந்த வெயிலுக்கு ஐஸ்பழம் வாங்கிக்குடித்துத்தாகம் போக்கியதும் ஞாபகம்.அந்த அழகிய வானம்போல எம்வாழ்வும்,எமக்கான குட்டிக்குட்டிச்சந்தோசங்களும் பரந்து கிடந்த காலமது.
சனி ஞாயிறுகளில் இந்த மைதானம் நிரம்பி வழியும்.இந்தக்குட்டி மைதானத்தைப்பிரித்தே நம்மவர் 4,5 பிரிவுகளாக 'மாட்ச்' விளையாடி மகிழ்ந்ததை எப்படி மறப்பது? இவையனைத்திற்கும் காவலனாக அன்றி லிருந்து இன்றுவரை ஒருத்தர் எம்மைக்காத்தருளுகின்றார்.அவரே எம் மைதான வைரவர்.கல்லூரி ஆரம்பித்த காலத்திலிருந்து காத்தருளும் பிதா அவர்.தனக்கென ஒரு மூலையில் சிவனேயென அமைதியாய் அமர்ந்திருக்கும் இவரை அறியாதவர்,நிச்சயமாய் இந்துவில் படித்த எவருமே இருக்க முடியாது. உரக்கச்சொல்லவேண்டுமென்றால் எனக்கு இவர் மீது அத்தனை ப்ரியம். கல்லூரிக்காலம்தொட்டு இன்றுவரை
என் மனக்கண்ணுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்னொரு இறை இந்த வைரவர்.
இந்தப்பற்றுவரக்காரணம்; பின்னேரங்களில் அநேகமாக கிரிக்கெட் விளையாட நித்தம் கிரவுண்ட் இற்குள் நிற்போம்.அப்போதுதான் பூசை செய்ய ஐயர் வருவார்.பூசை செய்வார். 'மாட்ச்'சை நிற்பாட்டிவிட்டு ஓடிவந்து கும்பிடுவோம்.கைக்கு அடக்கமாய் பிரசாதமென மோதகம்,சுண்டல் என ஏதாவது கொஞ்சமாவது கிடைக்கும்.அவற்றின் ருசியே தனி!அதையும்தாண்டி வைரவரைப்பார்த்துப்பார்த்து ஏதோ ஒன்று உள்ளத்தை வருடியதுபோன்ற உணர்வு.அந்த அமைதி.அவர் குடிகொண்டிருக்கும் அச்சூழல்.
இத்தனை ஆண்டுகள் கடந்தும் இடம்பெயராது இருந்த இடத்தில் இருந்தபடி காத்தருளும் அவரின் அன்பு என்னையும் கட்டிப்போட்டுவிட்டது. இம்முறையும் ஊருக்குச்சென்று, அவரை வணங்கினேன்.மைதானம் மாறிவிட்டது.அரச மரமென ஒன்றுமட்டும் இன்னும் வாழ்கின்றது.முன்புபோல வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சுற்றிவர மைதானஅழகை முழுமையாக மறைப்பதுபோன்ற, கண்களுக்குத்தடங்கல்போல பச்சைக்கம்பிகள் தூண்களாக.
'பழமை'அழகென அன்றிருந்த அந்த வடிவங்கள் எல்லாமே படிப்படியாக மாற்றப்பட்டுவிட்டன.காற்றுவந்து எம்மைத்தாலாட்டுமே அன்று!அதைக்கூட வரவிடாது தடுக்கும் நெருக்கம் நிறைந்த கட்டிடங்கள் புதிதாக! அன்றைய உணர்வலைகளை இன்றைய நவீனச்சீர்கேடுகள் குலைத்துவிட்டன.எது எப்படியாயினும் எங்கள் அன்பு வைரவர்மட்டும் எம்மை விட்டுப்போகவில்லை.