பேராசிரியர் ராஜ் கெளதமன் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வாளர். தலித்தியச் சிந்தனையாளர். நாவலாசிரியர். மொழிபெயர்ப்பாளர். இவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு மிகப்பெரும் இழப்பு. தமிழ்ப் பண்பாடு, தலித் இலக்கியம் என்றால் நினைவுக்கு வரும் ஆளுமைகளில் ஒருவர். தனது எழுத்துகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றவர் அவர். அவரது மறைவால துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரில் பங்குகொள்கின்றோம்.
அவரை நினைவு கூரும் முகமாகப் பேராசிரியர் அ.ராமசாமி தனது வலைப்பதிவில் பதிவேற்றியிருந்த 'ராஜ்கௌதமனின் தலித்தியப்பங்களிப்புகள்' என்னும் கட்டுரையினை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம்.
ராஜ்கௌதமனின் தலித்தியப்பங்களிப்புகள் - முனைவர் அ.ராமசாமி
தமிழ்நாட்டின் இப்போதைய விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டியில் பிறந்து சொந்த ஊரிலும் மதுரையிலும் பள்ளிக்கல்வி கற்றவர். திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் கல்லூரிக்கல்வியைக் முடித்தவர். பட்டப்படிப்பில் விலங்கியல் பட்டமும் பட்டமேற்படிப்பில் தமிழ் இலக்கியமும் பயின்றவர். புதுச்சேரி அரசுக் கல்லூரிகளில் 38 ஆண்டுகள் பணியாற்றியவர். பணியிடைக் காலத்தில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும், சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் நாவல் எழுத்தாளர்களில் முன்னோடியான அ.மாதவய்யாவின் படைப்புகள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றவர். ஓய்வுக்குப் பின்னர் திருநெல்வேலியில் வசித்துவருகிறார் ராஜ்கௌதமன்.
1950 இல் பிறந்த ராஜ்கௌதமனின் கல்விப் பருவமும் பணிக்காலமும் இந்திய வாழ்க்கையில் வேகமான வளர்ச்சிகள் நிகழ்ந்த காலகட்டம். கிராமிய வாழ்வை விலக்கிவிட்டு நகரியத்தையும் தொழில்துறை வளர்ச்சியையும் நோக்கி நகர்ந்த காலகட்டம். அப்பின்னணியில் கல்வி, தொழில்துறை வளர்ச்சி, போக்குவரத்து, வங்கிப் பரிவர்த்தனை போன்றன உறுதியான நிலையில் செயல்பட்டன. இவற்றில் ஆண் – பெண் பால் வேறுபாடற்ற நிலையை நோக்கித் தமிழ்ச் சமூகம் நகர்ந்துகொண்டிருந்தது. ஒருவர் தனது காலச் சூழலின் சமூகப்போக்கு, அறிவுப்போக்கு, கிளர்ந்தெழும் விடுதலை உணர்வுகள் ஆகியவற்றோடு இயங்கும் மனப்பாங்கு கொண்டவராக இருந்தால் ராஜ்கௌதமனைப் போலவே பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் ஈடுபாட்டுடன் கல்விப்பருவத்தைத் தொடங்கியிருப்பார். அல்லது முதலில் பெரியாரின் சிந்தனைகளில் ஈடுபாடு காட்டியவராகத் தொடங்கியிருப்பார். பின் அதன் தொடர்ச்சியாகப் பெரியாரியம்/ மார்க்சியம் என நகர்ந்து நிலைகொண்டிருப்பார். அந்நிலைப்பாட்டின் நீட்சி தன்னகர்வாகத் தலித்தியம், பெண்ணியம் போன்றவற்றை உள்வாங்குபவராக மாற்றும். மரபைச் சட்டெனக் கைவிட்டுவிட்டு நகர்ந்து நவீனத்துவத்தை ஏற்றுக் கொண்டதைப்போல இல்லையென்றாலும் பின் நவீனத்துவத்தோடு உரையாடவும் தன்னைத் தயார் படுத்திக்கொள்வார். தமிழின் அறிவுஜீவிகளின் நகர்வு என்பது இப்படியான நகர்வுதான்.
எஸ்.கௌதமன் என்ற இயற்பெயர் கொண்ட ராஜ்கௌதமன் தமிழ் எழுத்துப் பரப்பில் பல தளங்களில் செயல்பட்ட ஆளுமை. அவர் எழுதிய புனைகதைகளாக 2 நாவல்கள் கிடைக்கின்றன. ஒரு பயண நூலும் கிடைக்கின்றது. 4 சிறுகதைகள் அச்சில் இருப்பதாகக் குறிப்பு சொல்கின்றது 8 மொழிபெயர்ப்புகளைத் தந்துள்ளார். எழுத்துப் பிரதிகளாக இவையெல்லாம் கிடைத்தபோதும் ராஜ்கௌதமன் முதன்மையாக ஒரு திறனாய்வாளராகவே அறியப்படுகிறார். முழுமையாக இல்லையென்றாலும் கல்விப்புல ஆய்வின் ஒழுங்குகளை விலக்காத திறனாய்வாளராகவே அறியப்படுகிறார்.
தனது நூல்களை வெளியிடுவதற்காக அவர் தொடங்கிய கௌரி பதிப்பகம், (பாண்டிச்சேரி) என்ற வெளியீட்டகத்திலிருந்து மட்டுமல்லாமல், நவீனத் தமிழ் எழுத்துகளைப் பதிப்பித்த காவ்யா(பெங்களூர்), விடியல்& விளிம்பு ட்ரஸ்ட் (கோவை) , காலச்சுவடு (நாகர்கோவில்), அடையாளம் (புத்தாநத்தம்-திருச்சி) ஆகிய பதிப்பகங்களின் வழியாகத் தனது எழுத்துகளைப் பதிப்பித்தவர் ராஜ்கௌதமன். இப்போது அவரது மொத்த எழுத்துகளும் சென்னை, நியூசெஞ்சுரி புத்தக நிலையத்தின் வழியாக வெளியிடப்பட்டு இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
திறனாய்வு/ ஆய்வு நூல்களில் கடைசியில் பட்டியலிடப்பெற்றுள்ள ஐந்து நூல்களும் தலித்தியப் பார்வையை முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்டவை எனப் பிரித்துத் தரப்பட்டுள்ளன. என் இக்கட்டுரைக்கு அவைகளே முதன்மைத்தரவுகளாக அமைகின்றன. ஏனெனில் இக்கருத்தரங்கில் நான் வாசிக்கும் கட்டுரையின் தலைப்பு: தலித்தியத்திற்கு ராஜ்கௌதமனின் பங்களிப்புகள் என்பது. அத்தலைப்பில் நான் விவாதிக்க விரும்பும் சொல்லாடல்களுக்காக ஐந்து நூல்களில் நான்கு நூல்களை மட்டுமே முதன்மைத் தரவாக எடுத்துக்கொண்டுள்ளேன். வேதாகமக் கல்லூரியும் தலித்தும் என்ற நூல் கிடைக்கவில்லை. அந்நூல் மறு அச்சு ஆகவில்லை என்று கருதுகிறேன்.
தலித்தியம்: சில சொல்லாடல்கள்
ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகப்போக்கின் நிகழ்வுகளைக் கவனித்து, அதன் அடுத்த கட்ட நகர்வுக்குத் தேவையான கருத்துகளைப் பலரும் முன்வைப்பதுண்டு. தனிமனிதர்களாலும் இயக்கங்களாலும் முன்வைக்கப்படும் கருத்துகள், கருத்தியலாக மாறிக் குறிப்பிட்ட நிலவியல் பரப்பில் வாழும் மனிதர்களிடையே ஒரு கோட்பாடாக உறுதிபெறும். உருவாகி நிலைபெறும் ஒவ்வொன்றுக்கும் அரசியல் பார்வையும் நோக்கமும் உருவாகும். அரசியல் நோக்கத்தின் விளைவாக ஒருங்கிணைக்கப்படும் மனிதக்கூட்டத்திற்குப் புதியதொரு வாழ்வியலை – பண்பாட்டுத்தளத்தை உருவாக்கிக் கொடுக்கும். அதனை அனைவரிடம் கொண்டு சேர்க்கும் விதமாகக் கலை இலக்கியங்கள் உருவாக்கி, அவற்றின் வழியாகப் பரப்புதலை மேற்கொள்வதையும் அந்தக் கோட்பாட்டின் விளைவுகளாகவே மதிப்பிட வேண்டும்.
தமிழ்நாட்டில் தலித் என்ற சொல்1980 -களின் கடைசி ஆண்டுகளில் அறிமுகமாகி, பாபாசாகேப் அம்பேத்கரின் நூற்றாண்டுவிழாக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்த 1991 -க்குப் பின்னால் வெகுவேகமாக ஒரு கோட்பாடாக உறுதிப் பெற்றது. தமிழில் தலித் அரசியல், தலித் பண்பாடு, தலித் இலக்கியம் என்ற சொல்லாடல்களை உருவாக்கியதில் மூன்று நபர்களுக்கு முக்கியப் பங்குண்டு. ராஜ் கௌதமன், அ. மார்க்ஸ், ரவிக்குமார் என்ற அந்த மூவரில் ராஜ் கௌதமன் முழுவதும் எழுத்து சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர். மற்ற இருவரும் எழுத்துக்களோடு செயல் தளத்திலும் பணியாற்றியவர்கள். தலித் பண்பாட்டுப் பேரவைகள், தலித் கலை விழாக்கள், தலித் விமர்சன அரங்குகள் என தலித் இயக்கங்கள் தொண்ணூறுகளில் செயல்பட இம்மூவரின் எழுத்துக்களே அடித்தளங்களாக இருந்தன. இந்தக் கட்டுரை ராஜ்கௌதமனின் எழுத்துகள் தலித்தியத்தை உருவாக்குவதில் எத்தகைய பங்களிப்பைச் செய்தன என்பதை விவரிக்கிறது.
கோட்பாடாக மாறியுள்ள தலித்தியத்திற்கு ராஜ் கௌதமனின் பங்களிப்பைப் பின்வரும் விதமாகப் பிரித்துப் பேசலாம்:
1. தலித் அரசியலுக்கு அவரது பங்களிப்பு
2. தலித் பண்பாட்டிற்கு அவரது பங்களிப்பு
3. தலித் திறனாய்வுக்கு அவரது பங்களிப்பு
4. தலித் இலக்கியத்திற்கு அவரது பங்களிப்பு
தலித் அரசியல்
இந்தியச் சூழலில் விரிவானதொரு கோட்பாடாக மாறியிருக்கும் தலித்தியம் முழுமையான -தனித்த நிலைப்பட்ட தோற்றத்தைக் கொண்ட கோட்பாடல்ல. ஏற்கெனவே மனிதர்களை வர்க்கமாகப் பிரித்துப் பார்த்து ஒன்றோடொன்று முரண்படும் வர்க்க நிலைப்பாடுகளைப் பேசிய மார்க்சியம் அதன் முன்னோடி கோட்பாடாக இருந்த ஒன்று. உலகு தழுவிய மார்க்சியக் கோட்பாட்டின் இந்திய வடிவமாகத் தலித்தியத்தைச் சொல்லலாம். இந்தியச் சமூகப் பிளவுகளை வர்க்கமாகக் கணக்கிட்டுப் பேசிவிட முடியாத நிலையில், சாதிய முரண்பாட்டை முன்வைத்துக் கருத்துகளை உருவாக்கிக் கோட்பாடாக மாறியிருக்கிறது தலித்தியம். மார்க்சியம் உலகத்தை விளக்கவும், மாற்றவும் முன்வைத்த முறையியல்களை உள்வாங்கிச் செயல்படும் தலித்தியம் அதன் எல்லா நிலைகளிலும் மார்க்சியத்திற்குக் கடன்பட்டிருக்கிறது. தனது தொடக்க காலச் சிந்தனைமுறையைக் கட்டமைத்த மார்க்சியத்தை உள்வாங்கிய ராஜ்கௌதமனின் தலித் அரசியலை விளங்கிக் கொள்ள உதவும் எழுத்துப்பிரதியாக இருப்பது தலித் அரசியல் என்னும் சிறுவெளியீடே. அந்நூலில் அவர் எழுதியுள்ள முன்னுரைக்குறிப்பில் பின்வரும் குறிப்பொன்றைத் தந்துள்ளார்:
கோட்பாட்டளவில் கருப்பு -வெள்ளை அணுகுமுறை, காலாவதியாகியுள்ளது. செயல்/சிந்தனை ஆகிய இருதளங்களிலும் செறிவான ஆழமான விவாதங்களைக் கிளப்பிய கிராம்ஸ்கி, பூர்தியு, ஃபனான் ஆகிய பலர், வரலாறு, ஒடுக்கப்பட்டோர் மனநிலை, அடக்குமுறைக்கு எதிரான எழுச்சி, பொதுப்புத்தி ஆகியவற்றைத் தீவிர மறுவிசாரணைக்கு ஆளாக்கியுள்ளனர். சாதியச் சிந்தனை/ செயல் தளங்களை ஊடறுத்து நாம் எங்கு நிற்கிறோம்? எதை நோக்கிச் செல்கிறோம்? என்பதை விவாதிக்கும் தளங்களை உருவாக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. (ப.8)
இந்தியாவின் அரசியலை வர்க்க அரசியலாகப் பார்ப்பதற்குப் பதிலாகச் சாதிய முரண்பாட்டரசியலாக விளக்க விரும்பி, இந்தியச் சாதி அமைப்பை ஒழிப்பதற்கான கருத்தியல்களை முன்வைத்த மூவரின் சிந்தனைகளை முன்வைத்துச் சொல்லாடல்களை உருவாக்கியுள்ளார். தொடக்கத்தில் இந்தியாவில் சாதிமுறையை ஒழிக்க முடியாது; அதற்குப் பதிலாகச் சாதி எண்ணிக்கையை முன்வைத்துச் சாதிப்பெருமித அரசியலை – பொருளாதார மேல் நிலை நோக்கிய நகர்வை முன்வைக்கும் பேராசிரியர் பெ.தங்கராசுவின் (சாதி ஒழிப்பின் வரலாற்றுப் படிப்பினை’புரட்சிக்கனல் நூல் வெளியீட்டகம், சென்னை,1999) ஆய்வு முடிவுகளைத் தொகுத்துக்கொண்டு விவாதிக்கிறார். பேராசிரியர் பெ.தங்கராஜ்,
“சுதந்திர இந்திய அனுபவத்தில் எல்லாவிதமான சனநாயகத்துறைகளிலும் தலித்துகளின் சாதி ஒழிப்பு அரசியலுக்கு இடமில்லை என்பதை நம்பிக்கை வறட்சி தோன்ற அடுக்கினாலும் இவற்றை இல்லை என ஒரேயடியாக மறுக்க முடியாது. உள்ள நிலைமைகளைத் தொகுத்துக் கூறிய பிறகு அவர் வந்து சேரும் முடிவுதான் அவசரப்பட்டதாக, சாதி ஒழிப்புக்காக இதுவரை நடந்த முயற்சிகளை ஒரே வார்த்தையில் அழித்துவிடுவதாக அமைந்து விட்டது”
என்ற கூற்றை ஏற்று விவாதிக்கிறார். அவரது விவாதத்தில் அம்பேத்கர், க.அயோத்திதாசர், பெரியார் ஆகிய மூவரின் சிந்தனைகளும் நோக்கங்களும் முன்வைக்கப்பட்டுக் கடைசியில் நம்பிக்கையின்மையையே தீர்வாக முன்மொழிகிறார்.
“சுயமரியாதையே பொருள் ஆதாயங்களைவிட முக்கியமானது; நமது போராட்டம் சுயகௌரவம், சுயமரியாதை ஆகியவற்றுக்காகவே; வெறும் பொருளாதார முன்னேற்றம் ஒன்றுக்காக மட்டுமல்ல நமது போராட்டம்..”
“சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற எனது சமூக தத்துவம் என்ற எனது சமூக தத்துவம் பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து பெற்றதல்ல; புத்தரின் போதனையிலிருந்து பெற்றதாகும்”
என்ற அம்பேத்கர் கூறியதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பெரியாரின் கருத்துக்களும் அம்பேத்கரின் கருத்தினை எதிரொலிக்கின்றன.இதன் தொடர்ச்சியாகவும் இறுதியாகவும் தலித்திய அரசியலையும் சூத்திரரின் சாதி அரசியலையும் காணலாம். க.அயோத்திதாசரையும் பெரியாரையும் ஒப்பிடலாம். அம்பேத்கரையும் சேர்த்துக் காணலாம். மூவருமே தத்தம் நோக்குநிலையிலிருந்து பிராமணியத்தை (இந்துமதம் -சாதி) எதிர்த்தார்கள். இவ்விதத்தில் ஒற்றுமைகள் பல உள்ளன; அதே வேளையில் வேற்றுமைகளும் உள்ளன.
க.அயோத்திதாச பண்டிதர் கூறியதுபோல இந்துமதமும் அதன் சாதியும் அழிந்து, சாதி பேதமற்ற தன்மம் பரவ வேண்டும்; டாக்டர் அம்பேத்கர் கூறியதுபோல இந்துமதமும் சாதியும் அழிந்து, எல்லோருக்கும் சுதந்திரமும் சமத்துவமும் சகோதரத்துவமும் வரவேண்டும். பெரியார் கூறியதுபோல இந்துமதமும், அதன் சாத்திரங்களும், பிராமணிய சாதி முறையும், சாதி இழிவும் அழிந்து,அனைவருக்கும் சுயமரியாதை, சமதர்மம் பகுத்தறிவு ஏற்பட வேண்டும். இவற்றை மாற்று அரசியலாக அதிகார அரசியலாக முன்வைத்து போராட இன்று எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்? ஏழைச்சூத்திர ர் மற்றும் தலித் சாதி மக்களைத் தவிர மற்றவர்களுக்கு இந்த மாற்று அதிகார அரசியல் பற்றித் தெரியுமா? என்ற ஐயங்களோடு முடிகிறது அந்நூலின் இறுதிப்பகுதி
ராஜ்கௌதமனின் இந்தச் சிறுநூலின் விவாதங்கள் முழுமையும் சாதி ஒழிப்பை முன்வைத்துப் பேசிய சிந்தனையாளர்களின் வழிசென்றதாகவே இருக்கிறது. இதற்கு மாறாக இந்திய அளவிலும் தமிழக அளவிலும் செயல்பட்ட /செயல்படும் தேர்தல் அரசியல் கட்சிகளின் தரவுகளையும், அதனை மறுத்துச் செயல்படும் சமூக இயக்கங்களின் தரவுகளையும் ஆதாரங்களாக்கி விவாதிக்கும் நிலையில் அவரது நம்பிக்கையின்மை வேறுவிதமாகவும், வேறுவிதமான வழிகாட்டுதல்களோடும் அமைந்திருக்கக்கூடும். அத்தோடு அவர் முன்னுரையில் குறிப்பிட்ட இந்தியரல்லாத சிந்தனையாளர்களின் விடுதலைக்கருத்தியல்களையும் உள்வாங்கி விவாதிக்க வேண்டும். ஏனென்றால், நவீன இந்தியச் சிந்தனையாளர்கள் ஒவ்வொருவரையும் மூர்க்கமாக வளர்ந்துவரும் இந்துத்துவம் உள்வாங்கிச் செரித்துக் கொண்டிருக்கிறது. இந்துத்துவ அம்பேத்கராகவும், அயோத்திதாசரைப் பெரியாரின் எதிர்நிலைச் சிந்தனையாளராகவும் முன்னிறுத்துவதில் அது வெற்றிகண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் தான் இந்தியரல்லாத சிந்தனையாளர்களின் விடுதலைக்கருத்தியல்கள் இங்கே தேவைப்படுகின்றன.
தலித் பண்பாடு
இந்துப் பண்பாடு X தலித் பண்பாடு என்ற இரட்டை நிலைகளை உருவாக்கி எல்லாவற்றையும் விவாதிக்கும் ராஜ்கௌதமன் தலித் பண்பாட்டைக் கலகப் பண்பாடாகவும், தலைகீழ் மாற்றத்தை முன்மொழியும் பண்பாடாகவும் முன்வைக்கிறார்.
“இந்துப் பண்பாடு வைதீகப் புரோகிதக் கும்பலின் பண்பாடு வேதம், பிராமணியம், சூத்திரம், சுமிருதி, தர்மசாத்திரம், புராணம், இதிகாசம் ஆகியவற்றை இங்கே இந்துப் புரோகிதக் கூட்டம் உருவாக்கியது.
மொத்த சமுதாயத்தையே தங்களுடைய சௌகரியங்களைக் கவனித்துக் கொள்வதற்காகப் பல்வேறு வரிசையில் ஒரு சாதிக்கு மேல் மற்றொரு சாதி என்று பிரித்து அடுக்கி ஒன்றோடொன்று அந்தஸ்துக்காகச் சதாகாலமும் பூசலிட்டுக்கொள்வதற்கான ஒரு பண்பாட்டைத் தான் பார்ப்பணப் புரோகிதக்கூட்டம் உருவாக்கியது.
எல்லா நாடுகளிலும் தான் சமூக ஏற்றத்தாழ்வுகளும் தீட்டுகளும் விலக்குகளும் இருந்திருக்கின்றன. ஆனால் இந்தச் சமூகத்தில் பிறப்பின் அடிப்படையிலேயே தீட்டு, அசுத்தம் என்று கற்பித்து ஒரு பெரும் மக்கள் தொகுதியையே தாழ்வானவர்களாக ஆக்கி வைத்திருப்பதைப் போல எங்குமே காண முடியாது. இந்தச் சாதிய சமுதாயத்தில் தாழ்ந்தவன் – உயர்ந்தவன்; அசுத்தமானவன் -சுத்தமானவன்,குரு -சிஷ்யன் என்றுதான் இந்துக்களிடம் உறவுகளைப் பார்க்கமுடியுமே தவிர நல்லவன் என்று எந்தச் சாதி இந்துவையும் பார்க்கமுடியாது(சாதி கிறித்தவன், சாதி முஸ்லீம் எனச் சேர்த்தே வாசிக்கவும்)
என இந்து பண்பாட்டை விளக்குகிறார். இவ்விந்துப் பண்பாட்டை ஏற்று ஒவ்வொரு இடைநிலைச் சாதிகளும் தங்களை ஆதிக்கசாதிகளாக நினைக்கின்றன என்பதை விளக்கும் ராஜ்கௌதமன், குலதெய்வ வழிபாடு, கிராமத் தெய்வ வழிபாடு போன்ற நாட்டார் பண்பாட்டின் வழியாகப் பெரும்பான்மையான மக்கள் இந்துப் பண்பாட்டிற்கெதிராக இருப்பதையும் விளக்குகிறார். என்றாலும் வளர்ந்துவரும் இந்துத்துவ மேலாதிக்க மனநிலையில் ஒவ்வொரு சாதிகளும் மேல்நோக்கியே நகர்கின்றன; அதற்கு தலித் சாதிகளும் விலக்கில்லை என்றும் கூறுகிறார். பார்ப்பண ஆதிக்கத்தை ஏற்கச் செய்யும் இந்துப் பண்பாட்டிற்கெதிராக உருவாக்கப்படும் புதிய பண்பாடு இன்னொரு மதத்திற்கு மாறும் வழியாக இருக்கமுடியாது என்பதை விரிவாகப் பேசிவிட்டுத் தலித் பண்பாடு என்பது எல்லாவற்றையும் தலைகீழாக்கிப் போடும் ஒன்றாகவும் கலகத்தன்மையோடும் எதிர்நிலைப்பண்பாடு கொண்டதாகவும் இருக்கும் என்கிறார். இவை ஒவ்வொன்றையும் வரலாற்று நிலையில் விளக்கிக் காட்டி விரிவான எடுத்துக்காட்டுகளோடு விளக்குகிறார். தலித் பண்பாடு -கூட்டுவிவாத்தில் அவர் முன்வைத்த ஒரு பகுதியை இங்கே தருகிறேன்:
தலித் கலகப்பண்பாட்டில் ஒன்று: ஆதிக்கப்பண்பாட்டை உடைப்பது. சுயமரியாதை, தன்மானம், உரிமை ஆகியவற்றுக்காக ஆதிக்கப்பண்பாட்டில் இடம் கேட்பது, ஆதிக்க உணர்வு பெறுவதற்காக இன்றி தன்மானம், சுயமரியாதை கருதி இதைச் செய்வது வரவேற்கப்படலாம். இரண்டு கலகப்பண்பாட்டில் நம்மிடம் உள்ளவற்றை மேலானதாக ஏற்பது; கூறுவது என்பதாகும். ஆனால் நம்மிடம் உள்ளவற்றைத் தலித் மக்களே கேவலம்; அசிங்கம் என்று கருதுகிறார்களே? மாட்டிறைச்சி உண்பதைத் தவிர்க்கவே விரும்புகிறார்கள். இதைப் பெருமைக்குரியதாகக் காணவில்லை.
தலித் பண்பாடு குறித்த ராஜ்கௌதமனின் கருத்தியல்கள் அவர் எழுதிய காலத்திலேயே விவாதங்களுக்கு உள்ளானது. அவர் முன்வைத்த கலகப்பண்பாடு நிகழ்நிலையில் தலித்துகளால் ஏற்கப்பட வேண்டிய ஒன்றா? என்று கேள்விகள் எழுப்பப் பட்டன. அப்பண்பாடு தலித்துகளுக்கான விடுதலையைப் பெற்றுத்தரும் ஒன்றா? அல்லது திரும்பவும் இழிவுகளையும் துயரங்களையும் ஏற்கும் ஒன்றாக இருக்குமா? என்பதுபோன்ற வினாக்கள் வழியாக எதிர்கொள்ளப்பட்டன. எடுத்துக்காட்டாக பறையை ஆயுதமாக க்கருத வேண்டும் என முன்மொழிந்த தையும் மாட்டுக்கறியை விரும்பியுண்ணும் உணவாகச் சொன்னதையும் பல இடங்களில் மறுத்த நிலையைச் சுட்ட முடியும். பறை எப்போதும் இழிவின் அடையாளமாக – சாவுப் பறையாகவே கருதப்படும் என்றும், மாட்டுக்கறி உணவு விலக்கலின் அடையாளமாகவே கருதப்படும் நிலையில் அவற்றைத் திரும்ப ஏற்பது விடுதலையை எதிர்நிலைக்குத் தள்ளிவிடும் என்று கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அவற்றையெல்லாம் திரும்பவும் விவாதிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.
தலித் இலக்கியம்
ராஜ்கௌதமன் முதன்மையாக இலக்கியத்துறைக்குள் செயல்படும் கருத்தியலாளர் என்ற நிலையில் தலித் இலக்கியம், தலித் திறனாய்வு என்ற இரண்டு தளங்களிலும் அவரது கருத்துகளும் முன்வைப்புகளும் முக்கியமானவையாகக் கொள்ளவேண்டும். தலித் திறனாய்வின் அடிப்படைகளை உருவாக்கித் தந்த முதன்மையான திறனாய்வாளராக அவரையே கூறவேண்டும்.
சமூக உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அவற்றில் வெவ்வேறு இனக்குழுக்களின் பங்கேற்பும் இடமும் எத்தகையன என்பதைப் பேசும் விதமாக ஒரு நூலையும் ஒரு கட்டுரையையும் எழுதியுள்ளார். தலித் பார்வையில் தமிழ்ப்பண்பாடு என்ற நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் ஒருவிதத்தில் வரலாற்று நூல் போல எழுதப்பெற்றுள்ளன. வேட்டைச் சமுதாயம், இனக்குழுச் சமுதாயம், நிலவுடைமைச் சமுதாயம், வணிக முதன்மைச் சமுதாயம் என வரலாற்றுப் பொருள் முதல்வாதம் விளக்கும் வரலாற்றுப்பார்வையே தலித் பார்வையாக முன்வைக்கிறது இந்நூல். பாட்டும் தொகையுமான செவ்வியல் இலக்கியங்களில் கிடைக்கும் மனிதக்கூட்டங்கள் பற்றிய தரவுகளைத் திரட்டி அவைகளின் பண்பாட்டு நடவடிக்கைகளாக விளக்குகிறார். ஒரு கதைபோலவும் கதாகாலட்சேப நிகழ்ச்சியின் வடிவத்திலும் எழுதப் பெற்றுள்ள இந்நூலின் முடிவுகள், ஏற்கெனவே எழுதப்பெற்ற வரலாற்று நூல்களின் – குறிப்பாக ந.சுப்பிரமணியன் போன்றோர் எழுதிய ‘ தமிழர் வாழ்வியல்’ போன்ற வரலாற்று நூல்களின் முடிவுகளை மறுபரிசீலனை செய்யக் கோருகிறது. தலித் சாதி இளையோர்களோடு உரையாடும் தன்மை கொண்ட இந்நூலின் எடுத்துரைப்பு முறைமையில் நமது – மற்றவர்கள் என்ற எதிர்வுகள் வழியாகத் தொடக்ககால வேட்டைச் சமூகவாழ்க்கையும் மலைசார் வேளாண்மை வாழ்க்கையும் ஆதித் தமிழர்களான தலித்களின் வாழ்க்கையாக இருந்தது என்பதை நிறுவிக் கொண்டு, உள்பகுதித் தமிழ்நிலம், கடலோரத்தமிழ்நிலம் போன்றவற்றில் வாழ்ந்த தமிழ் இனக்குழுக்களையும் அவர்களின் தொழிற்பண்பாட்டையும் அடையாளப்படுத்தும் தன்மை வெளிப்பட்டுள்ளது.
தமிழ் நிலத்தை அடுத்து இருந்த நிலப்பகுதியிலிருந்தும் வடக்கே இருந்தும் வந்தவர்களோடு சம்ஸ்க்ருதப்பண்பாடும் பெருமதப்பண்பாடும் வந்ததையும் கதைகளாகச் சொல்லி ஆதித்தமிழர்கள் நிலமற்றவர்களாக ஆக்கப்பட்டதைப் பேசுகிறது. சிறுசிறுபண்பாட்டுக்கூறுகளை -வழிபாட்டு முறைகளைப் பெருமதம் -வைதீக மதம் உள்வாங்கியதையும், உள்வாங்கி உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் அரசாதரவுத் தன்மைகொண்டனவாக இருந்தன என்பதையும் எடுத்துக்காட்டிப் பேசுகிறது. அரசாதரவுத் தன்மைப் புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் நிலையிலும் இருந்தன என்றும் காட்டுகிறது. இக்கட்டுரையின் சொல்முறைமை மற்றும் நோக்கத்தோடு கூடிய இன்னொரு கட்டுரையைப் பொய் + அபத்தம்> என்ற நூலின் முதல் கட்டுரையாகவும் வாசிக்கலாம். தமிழில் அறநெறியும் உடைமைச் சமூக உருவாக்கமும் என்பது கட்டுரைத் தலைப்பு. உடைமைச் சமூகம் உருவாகி வரும் நிலையில் சமூகத்தின் அமைப்புகளும் அவற்றை நிலைநிறுத்தத் தேவையான அறநெறிகளும் உருவாகும் என்பதை எடுத்துக்காட்டி விளக்கும் நோக்கம் அதற்கிருக்கிறது.
மாற்றுவாசிப்பு முறையில் சங்கச் செவ்வியல் இலக்கியங்களை வாசித்ததைப் போலவே பெரியபுராணத்தையும் விரிவாகத் தலித் பார்வையில் வாசித்துள்ளார். பெரியபுராணத்தில் பேசப்படும் நாயன்மார்களுக்குள்ளேயே மேல் – கீழ் வரிசைகள் இருந்துள்ளன என்பதைக் கருதுகோளாக்கிக் கொண்டு வாசிக்கும்போது அதில் வெளிப்பட்ட. முறைமீறல்களையும் ஒழுக்கம் நீதி மீறல்களையும், சாதி தீட்டு மீறல்களையும் பதிவுசெய்துள்ளதாக பெரிய புராணப் பிரதியை முன்வைக்கிறார். நந்தன் என்னும் புலையன், கண்ணப்பன் என்னும் குறவன் போன்றோரை நாயன்மார் வரிசையில் வைத்திருந்தாலும் பக்தி செய்வதிலும், சிவன் அவர்களிடம் வந்து உறவுகொள்வதிலும் வேறுபாடுகள் இருப்பதாக எழுதியுள்ளார் சேக்கிழார் என்பதை விரிவாக எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். பிராமண நாயன்மார்கள், வேளாள நாயன்மார்கள், விளிம்புநிலைச் சாதியைச் சேர்ந்த நாயன்மார்கள் எனப் பிரித்துக்காட்டிச் சிவன் காட்டிய அருள் மட்டுமல்லாமல், அவர்களின் வாழிடம், பக்தி ஈடுபாடு, பண்பாட்டு நடவடிக்கைகள் என ஒவ்வொன்றிலும் வெளிப்பட்ட ஒழுங்குகளையும் ஒழுங்குமீறல்களையும் விரிவாகப் பேசும் இக்கட்டுரைத் தமிழ்த் திறனாய்வுக்கு முக்கியமானதொரு பங்களிப்பு.
எப்போதும் வகைமாதிரிப் பாத்திரங்களைத் தேர்வுசெய்து இரட்டை ஓரங்களை மிகையாக எழுதிக்காட்டிய திராவிட இயக்க எழுத்தாளர்களின் கதைகளில் இடம்பெற்ற பெண் பாத்திரங்கள், உதிரிப்பாத்திரங்கள் வாசிப்பவர்களின் கவனத்தை ஈர்த்து அவர்கள் மீது இரக்கம் கொள்ளத்தூண்டும் விதமாக எழுதப்பெற்றன. அத்தோடு பிராமண எதிர்ப்பு, கடவுள் மறுப்பு போன்றன கவிதைகளில் இடம்பெற்றன. முதலாளிகள், நிலச்சுவான்தார்கள் போன்றோர் முழுமையாக எதிர்க்கப்பட்டனர். இந்தக் கூறுகளை வரவேற்றுத் திராவிட எழுத்தாளர்களின் பிரதிகளைக் கலகப் பிரதிகளாக வாசித்த ராஜ் கௌதமன், புதுமைப்பித்தன், கி.ராஜநாராயணன், இமையம் ஆகியோரது எழுத்துகளை ஆதிக்கப் பண்பாட்டின் சார்புப் பிரதிகளாகவும் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட பாத்திரங்களை விலகலான பார்வையில் எழுதிய பிரதிகளாகவும் வாசித்தார். இந்த வாசிப்பு அவரது வாசிப்பை முன் முடிவுகள் கொண்ட வாசிப்பாக அடையாளம் காட்டின. அவை எழுதப்பெற்ற காலத்திலேயே நேர்மறை வரவேற்பையும் எதிர்மறை நிந்தனைகளையும் எதிர்கொண்டவை. பாத்திரங்களில் வெளிப்படும் சாதி அடையாளத்தையும் சார்பையும் வைத்து எழுதியவரின் சாதிச்சார்பைச் சுட்டுவதுதான் தலித் இலக்கியத்திறனாய்வின் நோக்கமா? என்ற கேள்விகளை எழுப்பின. தலித்தியத்தின் கலக நோக்கம் நிறைவேறியது என்ற வகையில் மட்டுமே அவை முக்கியத்துவம் பெற்றன.
தமிழ் தலித் இலக்கியம், தமிழ்க்கதைகளில் தலித்தியம் என்ற இரண்டு கட்டுரைகளும் சமகாலத் தமிழ்க்கதை இலக்கியங்களில் தலித் கதாபாத்திரங்கள் எழுதப்பெற்ற விதத்தையும் தலித்துகளால் எழுதப்பெற்ற பிரதிகளின் மொழிநடை, வெளி, சமூகமுரண், பேசுபொருள் போன்றனவற்றின் விலகலையும் அறிமுகம் செய்வதாக அமைந்துள்ளன. சில இடங்களில் தலித்தியக் கோட்பாட்டு நிலையில் மதிப்பீடுகளையும் முன்வைப்பனவாக அமைந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் விரிவாக எழுதப்பெற்றிருக்க வேண்டிய கட்டுரைகள். இக்கட்டுரைகளில் பேசப்படுபவர்களைத் தாண்டியும் கதைகள் எழுதியுள்ள தலித் எழுத்தாளர்கள் உண்டு.
தலித்தியத்திறனாய்வில் ராஜ்கௌதமனின் விரிவான பங்களிப்பைச் சுட்டிக்காட்டும்போது, தலித் இலக்கியத்தின் பொதுக்கூறுகள் எவை? சிறப்பியல்புகள் எவை என்பதை எங்காவது விளக்கியிருக்கிறாரா? என்ற கேள்வியோடு வாசிக்கும்போது அதற்கான பதில்கள் எங்கும் கிடைக்கவில்லை. அவரது இரண்டு நாவல்களின் சொல்முறையையும், பாத்திர வார்ப்புகள் மற்றும் விவாதங்களை வைத்துக்கொண்டு, தலித் இலக்கியத்தின் ஆகக்கூடிய மாதிரிகள் தன்வரலாற்று நாவல்களாக இருக்கும் என்று அவர் கருதியிருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அச்சில் இருக்கும் சிறுகதைகளின் எடுத்துரைப்பும் கூட சிலவகைப் பாத்திரங்களின் வரலாற்றைச் சொல்வன தான்.
இலக்கியம் மற்றும் இலக்கியத்திறனாய்வு சார்ந்த பங்களிப்பை மதிப்பிடுட்ட நிலையில் தலித்தியத் திறனாய்வு என்ன செய்யும் என்பதற்கான அடிப்படை ஒன்றை இங்கே சுட்டிக்காட்டலாம் என நினைக்கிறேன். முன்னரே குறிப்பிட்டபடி தலித்தியம் மார்க்சியத்திற்கும் அதன் முறையியலுக்கும் கடன்பட்டிருக்கிறது மட்டுமல்லாமல் பொதுப்புத்தி, சமூக உளவியல், கூட்டுநனவிலி போன்ற கருத்தாக்கங்களை உள்வாங்கித் தலித் திறனாய்வு, தனது திறனாய்வுச் சொல்லாடல்களை உருவாக்கியுள்ளதால் உளவியல் திறனாய்வுக்கோட்பாட்டிற்கும் கடன்பட்ட தாக இருக்கிறது. சமூகத் தளத்தில் கோட்பாடுகளாக வளர்த்தெடுக்கப்பட்டுப் பின்னர் இலக்கியத் திறனாய்வுக்கோட்பாடாக வளர்ந்த பலவற்றையும் விரிவாகப் பேசும் ஒரு கல்விப்புல நூல் பெர்ரி பீட்டரின் கோட்பாட்டுத் தொடக்கம்- Barry Peter, “Beginning Theory-An Introduction to Literary and Cultural theory” First Indian edition, 1999,Manchester University Press, Manchester and Newyork (1995).அந்நூலில் பெண்ணியக் கோட்பாடு என்பதை விளக்கி, அதன் இயங்குநிலைகளைப் பேசும் பெர்ரி பீட்டர் பெண்ணியத் திறனாய்வு என்ன செய்யும்? என்ற கேள்வியை எழுப்பிப் பதினொரு குறிப்புகளைத் தந்துள்ளார்(பின் இணைப்பாகத் தரப்பட்டுள்ளது). அப்பதினொரு குறிப்புகளை உள்வாங்கி மாதிரியாகக் கொண்டு தலித்தியம் என்ன செய்யும்? என்பதற்கான குறிப்புகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவை வருமாறு:
தலித் திறனாய்வு என்ன செய்யும்?
1.இலக்கியத்திலும், சமூகத்திலும் தலித்களின் இயல்புகளை அல்லது இயல்பான தலித்களின் குணம் என்று காட்டப் பயன்படும் மொழியின் பாத்திரத்தைக் கண்டறிதல்.
2.சமுகவியல் ரீதியாக தலித்துகள் உள்வாங்கப்பட்டவர்களாக இருக்கிறார்களாக வெளித்தள்ளப்பட்ட வேறுபட்டவர்களாக இருக்கிறார்களா என்பதை விசாரிக்கும். இப்படி இருப்பது உண்மையா?அல்லது கட்டமைக்கப்பட்ட உண்மையா என்பதைக் கேள்வியாக எழுப்பி ஆய்வு செய்தல்.
3.தலித்துகளுக்கான மொழியொன்றைக் கண்டுபிடித்துக் கொண்டாடுவதாக இருக்கும் என்பதும், அப்படிக் கொண்டாடுவதன் தேவை என்ன என்பதை விளக்கும்.
4.தலித் அடையாளம் என்பதிற்குள் செயற்படும் சாராம்சம், குறியீடுகளை உளவியல் பகுப்பாய்வுக் குட்படுத்துவது.
5.இலக்கிய விளக்கம் தரும் பொதுப்போக்குப் பார்வை அல்லது நடுநிலைப்பார்வை என்பவற்றில் இருந்து விலகி சரியான,உறுதியான கருத்தியல் அடிப்படைகளை உருவாக்குதல்.
6.தலித்களால் எழுதப்பட்ட பனுவல்களைக் கண்டுபிடித்து அவற்றின் நோக்கத்திற்கேற்ப வகைப்படுத்த வேண்டியது பற்றி மறுபரிசீலனை செய்யும்.
7.பனுவல்களில் வெளிப்படும் தலித்களின் அனுபவங்களை மறுமதிப்பீடு செய்யும்
8.தலித் அல்லாதவர்களால் எழுதப்பட்ட இலக்கியப் பனுவல்களில் இடம்பெறும் தலித் பாத்திரங்களை ஆய்வுக்குட் படுத்தும்
9.இதுவரை எழுதப்பட்டபிரதிகளில் இடம் பெற்றுள்ள தலித் பாத்திரங்கள்,'இயல்பானவர்களாக'[ nature]' குறையுடையவர்களாக' [lack]' மற்றவர்களாக' [other]சித்திரிக்கப்பட்டிருப்பதின் காரணங்களைக் கண்டறியும் கேள்விக்குட்படுத்தும்.
10.நடப்பு வாழ்க்கைக்கும், பனுவலில் காட்டப்படும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டும் விதமாகப் பனுவலைக் கட்டுடைத்து, அதனை அரசியல் பிரதியாக முன்வைத்து, அதில் செயல்படும் சாதியதிகாரப்படிநிலையை சுட்டிக் காட்டும்.
இப்பத்துக்குறிப்புகளில் சிலவற்றை முழுமையாகத் தனது தலித்தியத் திறனாய்வில் செய்துகாட்டியுள்ளார் ராஜ்கௌதமன். சிலவற்றை உதாரண நிலையில் மட்டுமே செய்துள்ளார். பாதிக்கும் மேலான குறிப்புகளை அவரது திறனாய்வுக்கட்டுரைகள் காண முடியவில்லை. விரிவான தனித்த பிரதிகளின் மீது செயல்பட வேண்டிய குறிப்புகளைப் பொது நிலைத் திறனாய்வுகளில் எதிர்பார்க்க முடியாது.
கட்டுரையை முழுமையாக வாசிக்க