VII
“எல்லாவற்றையும் விற்றுவிட்டு மீண்டும் தரைக்கே வர அதிகபட்சம் ஒரு வருடம். பிறகு? ஒரு இருபது ஏக்கர் தோட்டம் மிஞ்சினால் போதும். அதில் விவசாயம் செய்து வாழலாம்… விவசாயம் செய்ய சொன்னார் தாத்தா (பொன்னுமணி பெருவட்டர்)” (பக்கம் 151).
வெறிகொண்டு, நாய் நாயைக் கடித்துக் குதறும், பொருளாதாரப் போட்டியை, இறுதியாக இப்படி முடித்து வைப்பதில் சமாதானம் காண்கின்றார் ஜெயமோகன்.
இதற்கு முன், மேலே குறிப்பிட்டதுப்போல், இம் மூன்று தலைமுறைகள் செய்யும் அட்டூழியங்களும் துரோகங்களும் கேவலங்களும் அழகுற நாவலில் இலக்கிய மயப்படுத்தப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் ஒரு தாழ்ந்த சமூகத்தினருக்கு மாத்திரம் சொந்தமானது எனக் காட்டப்பட்டும், அதேவேளை, பொதுவில், இது மேல்தட்டு வர்க்கத்தையும் ஆட்டிப்படைக்கும் பொதுமையான ஒன்று எனும் உண்மை, வாசகனில் இருந்து மறைக்கப்படுவதே, அல்லது குறைத்து வாசிக்கப்படுவதே, நாவலின் சிறப்பு – நாவலின் அரசியலின் முக்கிய பகுதி எனக் கூறலாம்.
இதேவேளை, கார்க்கி போன்றோர் இதேபோன்று, மூன்று தலைமுறைகள் சம்பந்தமான ஒரு நாவலை படைத்ததும் அதில் ஒரு வர்த்தக் குடும்பத்தின் தோற்றுவாயையும், அதன் மூன்று தலைமுறையினரையும் படம்பிடித்து காட்டுவதும், டால்ஸ்டாய் அத்தகைய ஒரு கருவை மிகுந்து சிலாகித்ததும் உண்டு என்பதும் பதிவு.
ஆனால், கார்க்கி, ஜெயமோகனைப்போல், தன் நாவலை ஒரு சாதீயக் கண்ணோட்டத்தில் அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், ஒரு மேட்டுக்குடி கண்ணோட்டத்தில் படைத்தாரில்லை. பகைவனை வர்ணிக்கும்போது கூட, மேல் குறித்த மனவக்கிரம் கார்க்கி அல்லது டால்ஸ்டாய் போன்ற கலைஞர்களிடம் காணப்படவில்லை என்பது, இவ்விருபாலருக்கும், இடையே தென்படும் நிரந்தர வித்தியாசமாகின்றது.
கார்க்கியின் நாவலில், ஒரு மேல்தட்டு வர்க்கமானது எப்படி எழுச்சியுறுகின்றது என்பதும் அது தனக்கென, சணல் தொழிற்சாலை ஒன்றை எப்படி விவசாயிகளைக் கொண்டு நிறுவிக்கொள்கின்றது என்பதும், ஈற்றில், அதே நபர்களின் வாழ்வு எப்படி அத்தொழிற்சாலையாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றது என்பதும், அவர்கள் எப்படி, இறுதியில், அத்தொழிற்சாலைக்கு அடிமையாகின்றார்கள் என்பதும் நாவலின் கருப்பொருளாகின்றது. வேறு வார்த்தையில் கூறினால், இதுவே முதலாளித்துவ உற்பத்தியின் சாரமாகின்றது என்பதையும் கார்க்கி தனது நாவலில் படைத்துக் காட்டுகின்றார். மனவக்கிரம்? பழிதீர்க்கும் உணர்வு? சாதீய மனோநிலை? - இவற்றுக்கும் கார்க்கிக்கும் ஒரு வித சம்பந்தமுமில்லை எனக் கூறலாம்.
சுருங்கக்கூறினால், கார்க்கியின் கருப்பொருளானது பொதுவில் உழைப்போரின் வர்க்க அரசியல் கண்ணோட்டத்தில் வாழ்வைப் பார்க்கையில், ஜெயமோகனோ இலக்கியமானது, சாதீயப் பிளவுகளை ஊக்குவிக்கவும், விரிவுப்படுத்தவும், தணிந்த சாதியினரைத் தொடர்ந்து தடம்புரள்வதாக, சித்தரிப்பதிலும், தெவிட்டாத இன்பம் கொண்டவராயுமே நிமிர்ந்து நிற்கின்றார்.
ஆக, அவரது அரசியலை, மிக மிக சுருக்கமாகக் கூறுவோமெனில் : “அற்பனுக்கு வாழ்வு வந்தால் என்ன ஆகும்” என்று காட்டுவதிலும் “இங்கு யார் அற்பன்” என்பது குறித்து போதிப்பதிலும், தமது சாதி இந்த அற்பர்களை விட என்றும் உயர்வான சாதி எனப் பறைசாற்றுவதிலும் - மொத்தத்தில் - இந்தச் சமூக அமைப்பை இச்சாதியப் பிளவுகளினுடு, அப்படியே கட்டிக் காப்பதுமே இவரது எழுத்தின் அடிநாதம் ஆகின்றது. இதனோடு இவரது பழிதீர்க்கும் ஆர்வமும், தன் சாதியைச் செழுமையுடன் நிலைநிறுத்தும் அவாவும், சுருங்கச்சொன்னால், மேலே கூறியதுபோல் இச்சாதீய சமூகத்தை நிலைகுலையாமல் கட்டிக்காப்பதுமே இவரது அரசியல் பணி ஆகின்றது. இனி இவை சத்திய ஒளி என்றும் தார்மீக எழுச்சி என்றும் அலங்கரிக்கப்படுவது வேறுவிடயம்.
நாவலின்படி தங்கம்-என்ற உயர்சாதிப் பெண்ணை, கயமை செய்து, அவளைக் கர்ப்பமாக்கி, இறுதியில், அவள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ய வழிவகை செய்வதும் நாவலில், இடையே வந்துபோகும் கதையாகின்றது.
இனி இதற்கும், பழிதீர்த்தாக வேண்டியுள்ளது. அதாவது ஒரு அற்பனுக்கு வாழ்வு வந்தால் என்ன என்ன நடக்கும் எனக் காட்டுதலின் பின்னணியில், இங்கே சாதீய அறம் ஒன்று, இங்கு நிலை நிறுத்தப்பட வேண்டிய தேவை எழுகின்றது.
VIII
“நான் சாபம் போடமாட்டேன்… சபித்தால் பலித்துவிடும்” (பக்கம் 74).
இந்தச் சாபத்திற்கு, வழிவகைகளைத் தேடுவது நாவலுக்கு அவசியமாகின்றது.
அதாவது, குறித்த அறம் இங்கே நிலைநாட்டப்பட வேண்டிய தேவை எழுகின்றது. அதாவது பொதுவில் சாபம் போடாதவர் சாபம் போடுவார் எனில் மேற்படி அறம் செயல்பட தொடங்கிவிடும் என்பது கதையாகின்றது. இக்கதையானது ஒருபுறமிருக்க, இது யாருடைய அறம் என்பது இங்கே எழக்கூடிய முதல் கேள்வியாகின்றது.
பெருவட்டன் (பொன்னுமணி) தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவனாயிருந்தாலும் அவனது அறம் ஒரு போதும், பாட்டாளியின் அறமாகப் போவதில்லை என்பது தெளிவு. தனது நாவலான ‘தாயில்’ கார்க்கி பின்வருமாறு கூறுவார் : “இப்புதிய பாடல்… சந்தேகமும் நிச்சயமின்மையும் கொடிபோல் பிண்ணிப் பிணைந்து இருண்டு மண்டிக்கிடக்கும் ஒரு பாதையிலே, தன்னந்தனியாகத் தானே துணையாகச் செல்லும் ஒரு துயரப்பட்ட ஆத்மாவின் துன்ப மயமான வேதனைப் புலம்பல் அல்ல. தேவையால் நசுக்கப்பட்டு பயத்தால் ஒடுக்கப்பட்டு, உருவமோ, நிறமோ இல்லாத அப்பாவி உள்ளங்களின் முறையீட்டையும் அந்தப் பாடல் பிரதிபலிக்கவில்லை. இருளிலே இடமும் வழியும் தெரியாமல் தட்டுத் தடுமாறும் சக்திகளின் சோக மூச்சுக்களையோ – நன்மையாகட்டும், தீமையாகட்டும் - எதன் மீதும் கண்மூடித்தனமான அசுர வெறியோடு மோதிச் சாட முனையும் வீறாப்புக் குரல்களையோ அந்தப் பாடல் பிரதிபலிக்கவில்லை. எதையும் உருப்படியாய்க் கட்டிவளர்க்கத் திராணியற்ற, எல்லாவற்றையும் நாசமாக்கும் திறமைபெற்ற, அர்த்தமற்ற துன்பக் குரலையோ, பழிக்குப் பழி வாங்கும் வெறியுணர்ச்சியையோ அவர்கள் பாடவில்லை. சொல்லப்போனால், பழைய அடிமை உலகத்தின் எந்தவிதமான சாயையும் அந்தப் பாட்டில் இல்லவே இல்லை.” (பக்கம் 50 – தாய்).
சுருக்கமாகச் சொன்னால், கார்க்கி இங்கு முன்வைக்கும் அறம் வித்தியாசப்பட்ட ஒன்றாகக் காணப்படுகின்றது. பொன்னுமணியின் அறம், அவனுக்கான, அவனது தனித்த பொருளியல் நலனை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டதாய் இருக்கின்றது. ஆனால் இத்தேர்வு விரும்பியே ஜெயமோகனால் மேற்கொள்ளப்படுகின்றது. அதாவது, இதுவே ஜெயமோகன், விரும்பும் அறமாகின்றது. அதாவது, தான் விரும்பும் அறத்தை கட்டுவிக்க, பொன்னுமணி, அவரிடம் தேவைப்படுகின்றான். இங்கேயே, கார்க்கியின் அறம் வித்தியாசம் பெறுகின்றது. அதாவது, இது நாய்க்கும் நாய்க்குமிடையே நடக்கும் போட்டி. இதனாலேயே பொன்னுமணியின் வெறிநாய் சித்திரமானது உயிரோடு எழுவதாகவும் உள்ளது. அவனது நியாயப்பாடு, அவனது மேல்நோக்கிய வாழ்க்கைக்கான போராட்டத்துடன், நியாயப்படுத்தப்பட்டதாக இருக்கின்றது. அதாவது பொன்னுமணியின் வாழ்க்கைத் தேடல் என்பது, ஒரு பொதுப்பார்வையில், அந்நியப்பட்டதாகவும் அகோரமானதாகவும் காட்டப்படுகின்றது என்பது தற்செயல் அல்ல. இது, ஜெயமோகனால் தேர்தெடுக்கப்பட்டு இப்படி சித்திரிக்கப்படுகின்றது. ஆனால் ஓர் அறைக்கல் பிராமணரும், பெருவட்டரும், நாயக்கரும் ஏதோ ஒரு கட்டத்தில், இப்படி தேடுதல் நிகழ்த்தியவர்களே. அதாவது பொருளியல் திருடு என்னும் தார்மீகத்துடன் இயங்குவது இவர்களது அறமாகின்றது. அதாவது, இவ்அடிப்படையிலேயே, ஒரு சிறுமுதலாளிய அறமும், ஒரு முதலாளிய அறமும் கை கோர்க்கக் கூடியதாக இருப்பதென்பது இவர்களின் பொது அறமாகின்றது.
ஆனால், கார்க்கி போன்ற கலைஞர்கள் முன்வைக்கக்கூடிய அறமோ மேலே கூறியதுபோல், இதனுடன் ஒட்டுவதாக இல்லை. அது தனித் தன்மைக் கொண்டதாக அமைகின்றது. மறுபுறத்தில், ஜெயமோகன், பொன்னுமணியின் அறத்தையே அக்குலத்தின் அறமாகக் காட்ட முனைவதிலும் அரசியல் இல்லாமல் இல்லை. பொன்னுமணி என்பவன் அக்குலத்தின் அடிமட்டத்தின் தொழிலாள – விவசாய வாழ்வுகளின் பிரதிநிதி அல்லன் என்பது முதலான விடயம். அவனது சிறு முதலாளிய அறம், தணிந்த குல வகுப்பினரிடையே உள்ள சாதாரண மக்களின் நலன்களுக்கு நேரெதிரானது. இதனை மறைத்து, பொன்னுமணி என்ற ஓர் விதிவிலக்கான பாத்திரத்தைத் தேர்ந்து அதனைக் கேவலமாகச் சித்திரிப்பதற்கூடு, ஜெயமோகன், முன்னரே குறித்தப்படி, இரு மாங்காய்களை ஒரே அடியில் வீழ்த்துவதில் தமது கைவரிசையைக் காட்டுகின்றார்.
இதற்கு எதிராகவே, பாட்டாளி போராட வேண்டியவனாக இருக்கின்றான். அவன், பிராமணக்குலப் பாட்டாளியாக இருந்தாலும் சரி, பிராமணக்குல முற்போக்குப் புத்தி ஜீவியாக இருந்தாலும் சரி, அல்லது, இச்சமூக அமைப்பை மாற்ற முனையும் ஏனைய அனைத்து சக்திகளாக இருந்தாலும் சரி - அவர்களது அரசியலும் எழுத்தும் இதில் இருந்து, வித்தியாசப்பட வேண்டி இருக்கிறது. பாரதி முதல் இன்றைய வரவரராவோ வரையிலான எண்ணற்ற உயர்குலக் கலைஞர்கள் இதற்காகப் போராடுபவர்களாகவே இருந்திருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும், தத்தமது சாதீய அடையாளங்களை உதறித்தள்ளிவிட்டு ஒன்றாய் இணைய முன்னுக்கு வருபவராயிருக்கின்றனர். இதனாலும், இவர்களது அறம், மேற்படி ஜெயமோகனின் அறத்திலிருந்து வேறுபட்டதாகின்றது.
ஜெயமோகன் கூறுவார் : “தம்புராட்டிகளைக் கீழ்ச்சாதிகாரன் தொடக்கூட வேண்டாம், ஒரு கல்லை எடுத்து வீசி எறிந்து விட்டால்கூடப் போதும்: அது பட்டால்கூடத் தீண்டி அசுத்தப்படுத்தியதற்குச் சமம்தான். அவளைப் பிடித்து அவனுக்கே தந்துவிடுவார்கள். அவளுக்கு அந்திமக்கிரியைகள் செய்து அவள் இறந்துவிட்டதாய் அறிவித்து விடுவார்கள்” (பக்கம் : 90).
இறந்து போன, இவ் அறத்தைத்தான், ஜெயமோகன், தன் இலக்கியத்துக்கூடாக மீள உயிர்பிக்கின்றார். அதற்கு ஓர் இலக்கிய அந்தஸ்தையும் அளிக்கின்றார்.
இது ஒருவகை அறம்தான். பத்தாம் பசலித்தனமான, நிலபிரபுத்துவ அறம்.
இதுவே மேலே குறிப்பிட்டவாறு பாரதி போன்றோரின் அறத்திற்கு அந்நியமானதாகின்றது. நாவலில், தாழ் குலங்களைச் சமரசமின்றி பழித்துக்காட்டி, அவர்களது பின்புலத்தை அல்லது அவர்களது வரலாற்றை, கேவலமிக்க வழியில் தேர்ந்துக்கூறி, பழிதீர்த்துக்கொண்ட பின், வேறு ஒரு வளைவில், அவர்களைத் தட்டிக்கொடுத்து, சமாதானம் செய்து, ‘என்ன செய்வது வாழ்வு இப்படித்தான் எனக்கூறி ஆற்றுப்படுத்துவது ஜெயமோகனின் கலையாகின்றது’.
ஆனால், யதார்த்தத்தில் “ரப்பரின்” வருகை வித்தியாசப்பட்டு, விடயங்கள் வேறுவகைப்படுகின்றது. அதாவது மேற்குறிப்பிட்ட கேடுகெட்ட வரலாறு தடம்புரள செய்வதற்கான அடிக்கல், ‘ரப்பரின்’ வருகையால் இடப்படுகின்றது என்பதே வரலாறு எமக்குப் புகட்டும் பாடமாகின்றது.
IX
துயின்று, விழித்தெழ முடியாத நிலையிலிருக்கும் சாதீய சமூகத்தை அல்லது- சாதீய ஆசிய உற்பத்தி முறையைத் தகர்த்து பின் விழித்தெழ செய்வது - ஆங்கிலேயரின் வரலாற்றுப் பணி என்பார் மார்க்ஸ். பாரிய அளவிலான உற்பத்திமுறை – அல்லது ஒரு பெருந்தோட்ட உற்பத்திமுறை, இங்கே அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றது. தனி மனிதனாய் உற்பத்தியில் இறங்கி, கொத்தடிமைகளாய், பண்ணையாரின் நிலத்தில் புரண்டு நின்ற அமைப்புமுறை தகர்த்தப்பட்டு, மனிதன் நிலத்திலிருந்து விடுவிக்கப்பட்டவனாய், நூற்றுக்கணக்கில் தொழிலாளர்களாய் இணைபவனாய் எழுகின்றான் - மறுபுறத்தில், பெருந்தோட்ட பயிர்களின் உற்பத்திக்காகப் புதிய அடிமைமுறை இங்கே தோற்றுவிக்கப்படுகின்றது.
இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் யாதெனில், விவசாயிகளிலிருந்து உருமாறிய, தொழிலாளி இங்கே பிறப்பெடுக்கின்றான். அவன் தனக்கெனத் தொழிற்சங்கங்களையும், இயக்கங்களையும் உருவாக்கிக் கொள்கின்றான். இந்திய விடுதலை இயக்கமானது சுழன்று மீள ஓர் போராட்டத்தைத் துவங்குகின்றது. ஆனால், ஜெயமோகனது கண்ணில் இவை யாதொன்றும் படுவதாயில்லை. அவர் படைக்கும் நவீனமானது ரப்பரையும் அத்தோட்டத்தையும், அவ்உற்பத்தி முறையினையும் நஞ்சாகச் சித்திரிப்பதாகவே உள்ளது. அதாவது, ட்ரக்டரை விட்டுவிட்டு மனிதன் மீண்டும் எருதுகளை நோக்கி நடை பயில்வது சிறப்பானது என வாதிக்க முனைகின்றார் அவர். இவரின், இப்பின்னடைந்த பார்வையும், பழிதீர்க்கும் மனோபாவமும், இச்சாதீய அமைப்பு முறையைக் கட்டிக்காக்கும் அவரது அவாவும், அவரது இந்நாவலின் அடித்தளமாகின்றன.
X
“இப்பம் ரப்பரயே எடுத்துக்கிடுங்க அது நம்ம ராஜ்ஜியத்து மரம் இல்ல. எக்கச்சக்கமா மள பெய்யுத நாட்டில் உள்ள மரம். லாபத்துக்காக இஞ்ச கொண்டு வந்தாவ. மலையும் காடும் எல்லாம் ரப்பர் தோட்டமா மாறியாச்சு. மலைகள் முளுக்க இப்பம் ஒரே மரம். ஒரே சருகு… ஒரே வேரு. சென்னேன் இல்லியா-இயற்கையோட பேலன்ஸ் ஒக்கே போச்சு. ரப்பர் மரத்திலே பறவைகள் கூடணஞ்சு பாத்திருக்கியளா? ரப்பர் காட்டுக்குள்ள, புளு உண்டா? பூச்சி உண்டா? சந்தயா இருந்த எடம் பட்டாளக்கேம்பா ஆனது மாதிரி இருக்கு கண்டா. வரிவரியா… போட்டும், இப்பம் நம்ம நதியில் தண்ணி உண்டா? அணையில மணல் தானே கெட்டி கெடக்குது? ஏன் எண்ணு யோசிச்சியளா ஆரெங்கிலும்? ரப்பர் வந்த பெறவு மலையில ஈரம் இல்ல, ஊற்று இல்ல. மலை ஊறாம நதியில் எங்க தண்ணிவரும்? வாய்க்கால் மாதிரிப்போவுது வள்ளியாறு! மீதி இருக்க காட்டயும் வெட்டிப் போட்டா மணலு கோரி டவுண்ஸ் விக்கலாம். கான்கிரீட் வீட்டுல ரப்பரும் திண்ணு கெடக்கிலாம். ரப்பர் மரங்க இந்த ஊரோட சீதோஷணத்தயே மாத்தியாச்சு. ரப்பர் வேணும்: வேண்டாமிண்ணு செல்லேல்ல. ஆனா, ரப்பர் விட்டா வேற மரமே இல்லைங்குத நெலமை ரொம்ப ஆபத்தாக்கும். இப்பம் இதப் பிடிச்சுக் கெட்டேல் லெங்கி ஊரயே கொளம் தொண்டின் பெறவுதான் அடங்கும்” (பக்கம் - 158).
ஆக, இதுவே தீர்வாகின்றது.
சாகப்போகிற கிழவன், பொன்னுமணியின் வாயிலாக, கூட, ஜெயமோகன் இதே இறுதித்தீர்வைத்தான் கூறுவார் : “நீ கிருஷி செய்யி” (பக்கம் 149). அதாவது விவசாயம் செய்வதே தீர்வாகின்றது. “பிரான்ஸிஸ் சிரித்துக் கொண்டான்… விவசாயம் செய்யச் சொன்னார் தாத்தா” (பக்கம் 151).
ஆக, இது வரலாற்றைப் பின்னோக்கி சுழற்றும் ஒரு முயற்சிதான்.
பெருந்தோட்ட அமைப்பு முறையின் சிதைவுகளோடு, சில நாடுகளில் புதிய நகர்வுகள் ஆரம்பமாகி உள்ளதைப் பதிவுகள் எமக்குக் காட்டுவதாயுள்ளன. பிரான்ஸிசின் அழிவிற்கு முன்பே, மாரி செல்வராஜ்ஜிகளின் புதிய வருகையும், புதிய திரைப்படங்களின் தோற்றமும் அமையப்பெறக்கூடும். இதனுடன் கூடவே டாடா-பிர்லா போன்றோர்கள் அம்பானி-அதானி போன்றோரின் குழுமங்களால் பிரதியீடு செய்யப்படலாம். மேலும், இவை அனைத்திற்கும் பாதுகாப்பாய், மோடியும்-ஜெய்சங்கரும்-டோவாலும் கட்டி நிறுத்தப்படலாம். உண்மையில் இன்று திரிபுரா, குவாத்தி ஆகிய மாநிலங்களில், புதிய ரப்பர் தோட்டங்கள், பல்லாயிரக் கணக்கான ஏக்கரில் ஆரம்பமாகியுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் இம்மாற்றங்கள யாவும் ஜெயமோகனுக்குத் தேவையற்றவை. அவரது எளிமையான நோக்கம் இரண்டு முரண்களை, அதாவது சாதீய முரணை மீட்டெடுத்து மீள வலுவுடன் ஸ்தாபிப்பதும், இச்சமூக அமைப்பை எப்பாடுபட்டேனும் கட்டிக்காப்பதுமே - இலக்கியத்தின் மூல பயன்பாடு என அவர் அவாவுறுவது தெரிகின்றது. ஆக, ரப்பரின் வரலாறு இந்நாவலில், மேற்படி நோக்கங்களை மையமாக வைத்தே எழுதப்படுகின்றது. அதாவது, பொன்னுமணி மலங்கழிப்பது முதல், தங்கம் கிணற்றில் விழுந்து செத்து தொலைவது வரை, மிக மிக நுண்ணிப்பாகப் பார்க்கப்படும் ஒரு இலக்கிய பார்வையில் ரப்பர் தோட்டங்களின் உருவாக்கம் காட்டப்படுகின்றது. ஆனால் இங்கே, சராசரி உழைக்கும் மனிதன் விடுபட்டுப் போகின்றான். ஆனால் பெருந்தோட்ட அமைப்பு முறையிலோ, அவன் பாடும் பாடல் மாத்திரம் மிஞ்சி வரலாறுகளைக் கடந்ததாக அது இன்றும் நிற்கின்றது :
ரப்பரு மரமு மானேன்
நாலு பக்கப் வாது மானேன்
இங்கிலீசு காரருக்கு
ஏறிப்போக காரு மானேன்
ரப்பரு மரமு மானேன்
நாலு பக்கப் வாது மானேன்
ஸ்டோரு கல்லுக்கு
இழுத்தரைக்கும் ரொட்டியானேன். (நாட்டார் பாடல் : தீர்த்தக்கரை : மார்ச் 1982).
மனிதன் இங்கே இங்கிலீஸ் காரனுக்கு மாத்திரமல்ல, உள்ளூர் நாயர்களுக்கு மாத்திரமல்ல, அல்லது உள்ளூர் நாயுடுகளுக்கு மாத்திரமல்ல – ஆனால் இன்றைய டாடாவுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் ரப்பரை இழுத்தரைக்கும் ரொட்டியாகவே காணக்கிட்டுகின்றான்.
இப்புள்ளியிலேயே இவனைப்பற்றி, பாரதி வித்தியாசப்பட்டு சிந்திப்பதாக தெரிகின்றது : “பிரமதேவன் கலையிங்கு நீரே” எனக்கூறும், அவனது அறம் வித்தியாசமானதுதான். “பொன்னுமணி கால்களை விரித்து, கைகளை இடையில் ஊன்றி, தலையைச் சற்றுத்தூக்கி, மலை எடுப்புக்களைப் பச்சைப் போர்த்திய திசைகளைப் பார்த்தப்படி நின்றான்”.
ஜெயமோகனின் இவ் அறம், பாரதியின் அறத்திலிருந்து வித்தியாசம் பூண்டதுதான் - என இந்நாவலின், நிதான வாசிப்பு, எமக்கு எடுத்துரைக்கக்கூடியதே.
இவை அனைத்தும், ஒரு வேளை, புதிய எழுத்துக்களின், தோற்றத்துக்கு வழி அமைப்பதாக இருக்கும் - காலம் அதை கோருமெனில்.
முற்றும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.