* ஓவியம் - AI
“நான் றம்ஜித்கான் பேசுகிறேன்”.
ஒரு சிறிய டப்பாவில், அளவாகக் கத்தரிக்கப்பட்டு நிரப்பப்பட்டிருந்த சிவப்புநிறத் தர்பூசணித்துண்டுகளை நீட்டிப்பிடித்தார் : ‘ஒன்ன எடுத்துக்குங்க’.
கண்ணாடி அணிந்த, சிவந்த, 60 வயது மதிக்கத்தக்க மனிதர் அவர். நாடியைச்சுற்றி செறிவற்ற முறையில், அங்கொன்றும், இங்கொன்றுமாய், வெண்ணிறம் கொண்ட தாடியை வளர்த்துவிட்டிருந்தார்.
அவரது கண்கள் அவரது தடித்த கண்ணாடிக்குப்பின் இருந்து அவரது உதடுகளைப் போலவே மென்மையாகச் சிரித்துக்கொண்டிருந்தன. தூய்மையான வெண்ணிறத்தில் ஷர்ட்டு. சாம்பல்நிறக் கால்சராய். எதுவுமே இவரில் படாடோபமாய் இல்லை. எளிமை இழையோடியது. காந்தியடிகளைப்போல.
“34 வருடங்கள் துபாயிலேயே செலவிட்டுவிட்டேன். பிஸினஸ்தான். ஓடித்திரிந்து. இப்போதுதான் மகன்களிடம் வியாபாரத்தைக் கொடுத்துவிட்டு, மூச்சுவிட்டு, வெறும் மேற்பார்வையுடன் இருக்கிறேன். களைத்துவிட்டேன். வாழ்க்கை எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. மகன்கள் இப்போது பெரியவர்கள். திருமணம் முடிந்தாகிவிட்டது. பெரியவன் அங்கேயே தங்கியிருக்கின்றான். சின்னவன் மாத்திரம் வந்துபோய்… ஆனால், பிஸினஸ் என்பது முந்தியைப்போல் இல்லை. எழுபதுகளில்தான் அதன் உச்சம். அதன்பிறகு, ஈராக்-ஈரான் சண்டை. அதனோடு, அது அப்படியே சரியத்தொடங்கியது. டுபாய் மனிதர்கள், முன்பைப்போல் பணத்தைச் செலவழிக்கப் பயந்து-கைக்குள்ளேயே பொத்திப்பிடித்துக்கொள்ளத் துவங்கிவிட்டார்கள் - அவரது வலதுகை, அவர் அறியாமலேயே ஒருமுறை பொத்திப்பிடித்து எனக்குப் பாவனை காட்டியது – எப்படி பொத்திப் பிடித்துக் கொள்வது என்று.
இப்பம், மனைவி-முடியாமல் ஆஸ்பத்திரியில் - ஆறுமாதங்களாயிற்று – ஒரு 32 லட்சம் செலவாகிவிட்டது. டாக்டர்கள் ஒருவர் மாறி ஒருவராய் - மாறி மாறி – ஏதேதோ கூறுகின்றார்கள்…
நான் இங்கேயே தங்கிவிட்டேன். அவளைப்பார்த்தாக வேண்டுமே. அதிலும் நானில்லாவிட்டாள், இவ்வுலகில் அவளுக்கு ஒன்றுமே கிடையாது. எல்லாம் அல்லாவிட்ட வழிதான். இப்பொழுது உளுந்தூர்பேட்டை சென்றுக்கொண்டிருக்கிறேன். நாளை மகன் டுபாய் சென்றாக வேண்டும். செலவுக்குப் பணமும் எடுத்தாக வேண்டும். அவனிடம் வியாபாரம் சம்பந்தமாகச் சில விடயங்களைக் கதைத்தாகவும் வேண்டும். அதனால்தான் இந்த விடியல் காலையில் புறப்பட்டு வந்தேன். நாளை மீண்டும் ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிப்போய் விடுவேன். தங்க முடியாது… இப்ப மகள்தான் அவளைப் பார்த்துக்கொண்டிருக்கின்றான். ஒரு நாளைக்கு மாத்திரம் இருபத்தைந்தாயிரம் செலவு… டெஸ்ட். புது புது டெஸ்ட் - அதற்கு ஏழாயிரம் - இனி டாக்டர் பீஸ் - ஆஸ்பத்திரி தங்கும் செலவு - ஆஸ்பத்திரி பீஸ் - உணவு – அது இது என்றுப்பார்த்தால் எப்படியும் இருபத்தைந்தாயிரத்தைத் தாண்டிவிடுமே… நீங்கள்… ஓ… அல்லா… இலங்கையா… அது சரி. பார்த்தாலே தெரியுது. வித்தியாசமாகப் பேசுகின்றீர்கள்…
அவருக்கு அடிக்கடி போன்வந்து தொல்லைத்தந்தது. அல்லது அவரே அடிக்கடி ஃபோன் எடுத்தார், பேசினார். வியாபாரம் சம்பந்தமாக அல்லது தனது மகனை அனுப்பிவைப்பது சம்பந்தமாக அல்லது தான் இப்போது அவசர அவசரமாக உளுந்தூர்பேட்டை சென்றுக்கொண்டிருப்பது சம்பந்தமாக அல்லது தனது மனைவி வைத்தியசாலையில் இருப்பது சம்பந்தமாக – ஓயாத ஃபோன்கள்.
இடையே, மேலும் ஒரு போன். அவரது மகளாய் இருக்க வேண்டும். ஆஸ்பத்திரியில் இருந்து. ‘என்ன… ஐ.சி.யூக்கு மாத்திடாங்களா? மாத்த போறாங்களா… என்ன நடந்துச்சு? டாக்டர் சொன்னாரா… உடம்புக்குத் திடீர் என முடியலையா…? சரி… நாளைக்கு விடிந்த உடனேயே வந்துருறேன். ஐ.சி.யூக்கு மாத்துறதுனா சரின்னு சொல்லிடு…’
தொடர்ந்து அவரது முகத்தில் ஒரு சிறிய மாறுதல். வைத்தியசாலை நிர்வாகத்துக்கு ஓர் அழைப்பை எடுத்துப்பேசினார்.. ‘அம்மா… அதிமாவுட்டு ஹஸ்பண்ட் பேசுறேன்… ஐ.சி.யூக்கு மாத்த போறீங்கனு சொன்னாங்க…’
‘நல்லது அம்மா… அப்படியே செஞ்சிருங்க அம்மா…’
‘ஆனால் நான் எங்க தங்குறது… மொத இந்த ரூம்ல நானும் மகளும் தங்கிப்பார்த்துகிட்டோம்… இப்ப இவள ஐ.சி.யூக்கு மாத்தினா இதே ரூம்ல நாங்க தொடர்ந்து தங்கலாமா…’
‘முடியாதா… அப்ப நாங்க தங்குற இடம்… ம் சரி… சரிமா…’ ‘நிலைமை மாறிவிட்டதோ’ என்றேன் மெதுவாக. ‘ஐ.சி.யூக்கு மாத்திடாங்க… என்ன செய்ய… அல்லா காவல்… நான் இங்க’
மகனுக்கு ஒரு கோலை அவசரமாக எடுத்து விவரங்களை விரிவாக விளக்கினார் மனிதர் : ‘அம்மாவ, ஐ.சி.யூக்கு மாத்திடாங்கலாம். நான் காலையிலேயே புறப்பட்டாகனும். நீ புறப்படும்வரை நான் காத்திருக்க முடியாது’. பஸ்வண்டி மிக விரைவாகச் சென்றுக்கொண்டிருந்தது. ட்ரைவர் லாவகமாகத் தடைகளை வெட்டி வெட்டி, வளைத்து வளைத்து பஸ் வண்டியை அதிவேகமாய் செலுத்திக் கொண்டிருந்தார்.
மேலும் ஒரு கோல். அவரது மகள்தான் : ‘என்ன… போகமாட்டாளாமா… வீட்டுக்கா… காலையிலேயா… விடிய புறப்பட்டு வந்துர்றேன்…’ அவரது முகத்தில் மேலும் மேலும் சிக்கல்களின் கோடுகள். கூறினார் : ‘அவ ஐ.சி.யூக்குப் போக மாட்டேங்குறாங்களாம்… வீட்டுக்குப் போகனும் என்கிறாளாம்…’ என்ன நடந்திச்சி… நடந்தது என்ன… தெளிவா சொல்லு…’ கவலையுடன் ஃபோனில் கேட்டார். ‘சரி… நா உடனே ஒரு கார ஒழுங்குப்படுத்தி இப்பவே வந்துடுறேன்… அதுவரைக்கும் பார்த்துக்க…’
வீட்டைத்தொடர்பு கொண்டார்-மகனாய் இருக்க வேண்டும். ‘அம்மா… ஐ.சி.யூக்குப் போக முடியாதுன்னு சொல்றாளாம். வீட்டுக்குப் கூட்டிப்போகச் சொல்றாளாம்… என்ன நடக்குதுணு எனக்குத் தெரியல… நா பஸ்ஸவிட்டு இறங்குன உடனே திரும்புற மாதிரி உடனே ஒரு கார ஒழுங்கு பண்ணிரு… அந்த ட்ரைவர்… அவனுக்குத் தெரியும்… போன தடவ அவன் கேட்ட கணக்கக் கொடுத்துடலாம்… ஒழுங்கு பண்ணிரு… இன்னும் அரைமணி நேரத்துல பஸ்ஸவிட்டு உளுந்தூர்பேட்டையில இறங்கிடுவேன்’.
எனக்கு அவரது வேதனை புரிந்தது ஆனால் என்ன சொல்வது…?
‘என்னால் என்ன செய்ய முடியும்… நான் தங்கமுடியாது. உடனடியாகப் புறப்பட்டாக வேண்டும்’.
இறங்கும் முன்னரேயே, அவர் மீளவும் இப்போது பயணப்பட முடிவு செய்துவிட்டது தெளிவாகத் தெரிந்தது. கிட்டத்தட்ட இந்த நான்கு மணிநேர பஸ் ஓட்டத்தின் பின்…
‘ட்ரைவர் கிடைச்சுட்டானா… நீ பேசிவிட்டாயா… ஆயிரமா கொடுக்கலாம். ஆனா, நான் ஒடனே கிளம்பியாக வேண்டும்… நீ வா… பஸ்டேண்டுக்கு. அங்கேயே கதைத்துக் கொள்ளலாம்… ஒரு ஐந்து பத்து நிமிடம்…’
மகளை மீண்டும் அழைத்தார் : ‘இப்ப ஒடனடியா… கார்லயே திரும்பி வர்ரதா சொல்லு… வீட்டுக்கும் போகாம… நா வர்ரவரைக்கும் கொஞ்ச பொறுமையா இருக்க சொல்லு’
‘நா என்ன செய்ய… என்னால என்ன செய்ய முடியும்…?’ பஸ் மெதுவாக உளுந்தூர்பேட்டை பேரூந்து நிலையத்தினுள் அசைந்து அசைந்து நுழைந்தது.
துயரத்துடன் எழும்பும் அவரிடம் நான் அவசரமாக ஆனால் மென்மையாக கூறினேன் : ‘அல்லா உங்களுடன் துணை இருப்பார்’. ‘அல்லா’ என்று மென்மையாக அரற்றியப்படி தட்டுத் தடுமாறியவாறு அவர் பஸ்ஸைவிட்டு இறங்கி, காரை தேடத்தொடங்கினார். பஸ்ஸும் நானும் அவரைவிட்டுப் புறப்படத் தொடங்கினோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.