1600ல், கிட்டத்தட்ட 215 வியாபாரிகளும் முதலீட்டாளர்களும், லண்டனில் ஒன்றிணைந்து, ஈஸ்ட் இந்தியன் கம்பனி என்ற ஒரு கம்பனியை உருவாக்கிக்கொண்டனர். நோக்கம் : தென்னிந்தியாவில் திரவிய பொருட்களுக்கான, வர்த்தக உறவுகளை ஸ்தாபித்து, ஏகோபிதத்தை நிலைநாட்டுதல், என்பதுவே. (அபின் உட்பட–பருத்திப்பட்டு, ஏனைய பல்வகைப் பொருட்கள்). ஆனால், போர்த்துக்கல்-டச்சு-பிரான்ஸ் போன்ற நாடுகள் ஏற்கனவே களத்தில் இருந்த ஒரு சூழ்நிலையில், இக்கொள்ளையடிப்பில் ஓர் ஏகோபித்த நிலையானது, பெருத்த சவாலை ஏற்படுத்தக்கூடியதுதான். ஆனால், இலாபங்களை ஈட்டித்தருவது என்ற கோதாவில், மேற்படி நடவடிக்கை தவிர்க்க முடியாததேயாகும்.
ஒரு 39 வருடங்கள் கழிந்துபோன நிலையில், 1639இல், சென்னையின் ஒரு ஒதுக்குபுற மீன்பிடி கடற்கரையில், இதற்கென ஒரு கோட்டை தனது கட்டுமானத்தை துவங்கியது (Fort Saint George). ஆனால், 1608லேயே (அதாவது, இதற்கு 30 வருடங்களுக்கு முன்னரேயே) ஆங்கிலேயர் சூரத், குஜராத் போன்ற இடங்களில் இத்தகைய வர்த்தக தளங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர் என்பதும் அவதானிக்கத்தக்கதே.
தனது கடந்தகால, இரு தளங்களின் அனுபவங்கள், துணையிருந்தது போல, போர்த்துக்கேயர், திரவிய பொருட்களுக்காக, இலங்கையில், தொடுத்த போரின் போது, இலங்கையில் உள்ள கோயில்களை எல்லாம் சிதைத்தொழித்தனர் என்ற தகவல்களும், அதன் வழி பெற்ற அனுபவங்களும் ஆங்கிலேயருக்கு கை கொடுத்திருக்கலாம்.
இருந்தும், ரோமன் இராணுவத்தில் பணிப்புரிந்து, பின் ஈற்றில், மதத்துறவியாக பழுத்துவிட்ட Saint George என்ற இறந்து போன ஒரு மதகுருவின் பெயராலேயே மேற்படி கோட்டையானது, நிர்மாணிக்கப்பட்டது. இது தனது இறுதிவடிவத்தை 23.04.1644ல் நிறைவு செய்தப்போது, அன்றைய மதிப்பில் அது 3000 பவுன்களை விழுங்கி தீர்த்திருந்தது. ஆனால் இம் 3000 பவுன்கள் என்பது ஓர் ஆங்கிலேய பார்வையில் ஓர் முதலீடாகவே இருந்தது.
இக்கோட்டையை ஸ்தாபிக்க அன்றைய இந்திய நாயக்க மன்னர்கள் தேவைப்பட்ட நிலத்தை வழங்கினர் எனவும், இதற்காக அவர்களுக்கு, இவ்ஆங்கிலேயக் கம்பனி, போர்த்துக்கல்-டச்சு போன்ற ஐரோப்பிய படைகளிடமிருந்து தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தித்தரும் என்ற உத்தரவாதத்தின் பேரிலேயே மேற்படி நிலமானது அவர்களுக்குக் கையளிக்கப்பட்டது என்பதும் பதிவு.
ஆனால், கால நகர்வுடன், இக்கோட்டை தனது மாறி வந்த நோக்கங்களுக்கேற்ப, தனது செயற்பாட்டையும் வடிவத்தையும் கால ஓட்டத்தில் மாற்றி மாற்றிக் கொண்டே இருந்தது.
- சென்ட் மேரிஸ் என்ற எங்ளிக்கன் தேவாலயம் -
மிக மிக ஆரம்பகட்டத்தில் உள்ளுர் வாசிகளை (மதராசப் பட்டினம்) கவர்த்திழுக்கும் எண்ணப்பாட்டுடன், கோட்டையானது அவர்களிடை மிகுந்த ஆர்வத்தை உண்டுப்பண்ணும் விதத்தில் இயங்க முற்பட்டிருந்தது. பொது உணவு விடுதி (Puplic Canteen) என்றும் லாட்டரி சீட்டு குலுக்கள் என்றும உள்ளுர் வாசிகளை கவர்த்திழுக்கும் பொறிமுறைகள் கோட்டையில் தாராளமாக இறக்கிவிடப்பட்டிருந்தன. இது 1664ல். ஆனால், கிட்டத்தட்ட 20 வருடங்களின் பின், 1680ல் மேற்படி கோட்டையில் சென்ட் மேரிஸ் என்ற எங்ளிக்கன் தேவாலயம் அமைக்கப்பட்ட போது கோட்டையின் நிலைமைகள் வேறுவிதமாய் மாற்றம் கண்டிருந்தன.
இக்காலப்பகுதியில் இக்கிழக்கிந்திய கம்பனிக்கு பிரதான எதிரியாக தென்பட்டது பிரெஞ்சு படைகளே. 1674ல் பிரெஞ்சு படைகள், மேற்படி கோட்டையின் மீது தாக்குதலை தொடுத்தாகவும் எனவே இத்தேவாலயம், இது போன்ற தாக்குதலுக்கு முகங்கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இத்தேவாலயத்தின் தோற்றப்பாட்டில் உடனடியாக எமக்கு தட்டுப்படும் விடயம், இக்கோயில் முழுக்க காட்சியளிப்பது, இறந்துப்போன கிழக்கிந்திய கம்பனியின் இராணுவ அதிகாரிகள் தொடர்பான ஞாபக குறிப்புகளும் கல்வெட்டுகளுமே.
அவர்களது வீர மரணத்தின் பின், அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் ஒதுக்கப்படுகிறது என்ற செய்தியையே இங்குள்ள ஓவியங்களும் வர்ணனைகளும் ஆணித்தரமாக எடுத்துரைப்பனவாக இருக்கின்றன. இச்சூழலில், இக்கோவிலில், இயேசுநாதருக்கு இடமில்லாமலேயே போய்விட்டதாகவே காணப்படுகிறது.
வேறுவார்த்தையில் கூறினால் இத்தேவாலயத்தின் நிர்மாணம் என்பது இறந்துப்போன இராணுவப் படைகளுக்கான ஓர் நன்றி தெரிவிப்பாய் அமைந்துள்ளது. போதாதற்கு, இதன் சுவர்களும் கூட, பிரெஞ்சு படைகளிடமிருந்து தாக்குபிடிக்கும் வகையில், நான்கடி பருமனான வெறும் கொங்கிரிட்டாலேயே கட்டப்பட்டிருக்கின்றன. கூரையும் கூட மரத்தாலன்றி, ஒரு யுத்தத்தாக்குதலை முறியடிக்கும் வகையிலேயே, அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
ஆக, ஒருபுறம் ஆங்கிலேய சிப்பாய்களுக்கு அவர்களின் மரணத்தின் பின் சொர்க்கம் நிச்சயம் என்ற நம்பிக்கையை ஊட்டி, வளர்த்து அவர்களுக்கு போர் வெற்றி ஊட்டும் எண்ணப்பாட்டுடனும், அவர்களின் இறப்பானது என்றுமே வீண் போகாதது - என்றுமே அவர்கள் தங்கள் நாட்டுக்காக உயிர்விட்டதை எண்ணி நாளும் நினைக்கப்படுவர் என்ற பொய்யான போதையை அவர்களிடையே ஏற்றி அவர்களை இயக்குவிப்பது என்ற எண்ணப்பாட்டுடனேயே, இத்தேவாலயம் வடிவமைக்கப்பட்டுள்ளதை நாம் கண்டுகொள்ள கூடியதாயுள்ளது.
மறுபுறத்தில் இத்தேவாலயமானது, உள்ளுர் வாசிகளை கிறிஸ்தவ மதப்பிரியர்களாக மாற்றும் ஓர் எண்ணப்பாட்டுடன் கட்டப்பட்டுள்ளதாக தெரியவில்லை. இது கோட்டையினதும், தேவாலயத்தினதும் கதை. மறுபுறத்தில், கால ஓட்டத்தில், கோட்டையை அடுத்து ‘கருப்பு நகரம்’ (Black Town என்பது எழுச்சிக் கொள்வதை நாம் ஒரு கட்டத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. கருப்பு நகரத்தில் பெரும்பாலும் இந்தியர்கள்-உள்ளுர் வாசிகள்-குடியிருந்தார்கள் என கருதப்படுகின்றது.
- இனரீதியாகப் பிரிக்கப்பட்ட கோட்டை நகர அமைப்பு -
அதாவது தமது வர்த்தக ஊடுறுவல்களை நடாத்தவும், தமது உளவு வேலைகளை நடத்தவும் இவ்வகை ஏற்பாடுகள் அன்று முக்கியமானதாக இருந்திருக்கலாம். அதாவது, இருவகையான குடியிருப்புகள் இக்காலக்கட்டத்தில் இக்கோட்டையின் சூழலில், இருந்திருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.
'White Town' என்று அழைக்கப்பட்ட வெள்ளையர்கள் குடியிருந்த கோட்டைபகுதி. மற்றது கோட்டைக்கு வெளியே வடக்கில் அமையப்பெற்றிருந்த ‘கருப்பு நகரம்’ (Black Town)
ஆனால் இந்த கருப்பு நகர் என்பதே காலப்போக்கில் மாறுதல் அடைகின்றது. ஒரு கட்டத்தின்பின், இக்கருப்பு நகரானது முற்றாகவே நீக்கப்படுவதாயும் இருக்கின்றது.
கோட்டையிலிருந்த பீரங்கிகள் நேரடியாக தமது தாக்குதலை தொடுப்பதற்கு வசதி செய்துதரும் வகையிலேயே கருப்பு நகரானது அகற்றப்பட்டிருந்தது என்ற ஒரு வியாக்கியானம் கூறப்பட்டிருந்தாலும், கருப்பு நகரை அகற்றியப்போது ஆங்கிலேயரின் நோக்கங்கள் இந்தியாவில் மாறிவிட்டன எனக்கருதுவதில் தவறிருக்க முடியாது. கிட்டத்தட்ட ஒன்றரை மைல் சுற்றளவில் அமைத்திருக்கக்கூடிய இக்கருப்பர்களின் நகரில், மிகஆரம்பத்தில் போர்த்துகேயர்கள், ஆர்மேனியர்கள், இந்தியர்கள் ஆகிய பலரும் இருந்தனர் என்ற ஓர் பதிவும் காணக்கிட்டுகின்றது. இது, வர்த்தகங்களுக்கு வகைசெய்யும் ஏற்பாடுகளாக இருக்கலாம். ஆனால், பிற்பட்ட நாட்களில், இங்கே குடியிருந்திருக்கக் கூடிய நபர்களின் தகுதியும் தராதரமும் மாறுபட்டிருக்கக்கூடும் என்ற எண்ணப்பாடு எழவே செய்கின்றது. கூடவே, ‘கருப்பு நகர்’ என்பது கூட காலநகர்வில் மாறுபட்டதாய் உருவாகியது. அழைக்கப்பட்டது.
சுருங்கக்கூறின், பொது உணவுசாலை, லாட்டரி குலுக்கள் முறை போன்றவை இப்போது அடியோடு மறைந்து, கருப்பு நகரின் முக்கியத்துவமும் மாற்றம் அடைகின்றது. அதாவது, ஆங்கிலேயரின் வர்த்தக நோக்கம் இப்போது பூதகரமாய் வெற்றிக்கண்டு, தவிர்க்க முடியாவண்ணம், அது தனது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தப்போது, கருப்பு நகர் என்பது இப்போது தேவையற்ற ஒரு மிகைப்பொருளாக காலப்போக்கில் உருவாகியிருக்கிறது.
அதாவது, இதுவரை வசதி செய்து தந்திருந்த கருப்பு நகரானது, தற்போது, மாறிய நோக்கங்களின் அடிப்படையில், ஓர் சுமையாக கணிக்கப்பட்டு அகற்றப்படுகிறது.
இப்போது முழு இந்தியாவுமே ஆங்கிலேயரின் காலடியில் மண்டியிட தயாராகிவிட்ட ஒருநிலை காணக்கிட்டுகின்றது. இம்மாற்றங்களையே Saint George அருங்காட்சிசாலை மிக அருமையாக படம்பிடித்துக் காட்டுவதாயுள்ளது.
உள்ளுர் நவாப்புகள், ஆங்கிலேய மன்னருடன் கூடிகுலாவுவதும், பின் அம்மன்னர்கள் தமது அக்கம்பக்கத்து எதிரிகளை, ஆங்கிலேயரிடம் கிரமமாக பிடித்து கொடுப்பதும் நடந்தேறுகின்றது (வீரபாண்டியன் கட்ட பொம்மன் பிடித்துக் கொடுக்கப்பட்டது போல). பதிலுக்கு ஆங்கிலேயர்களும், இம்மன்னர்களை தகுந்தப்படி உபசாரம் செய்து நவாப் என்றும் மகாராஜா என்றும் அழைத்து உச்சம் காட்ட தவறினார்களில்லை. ஆங்கிலேயரின் இத்தகைய திருவிளையாடல்களை பார்ப்பது என்பது, எஜமானர்களிடம் மறைந்திருக்கும் உண்மை கொடூரங்களை வெளிக்கொணர்வதாக இருக்கின்றது.
2
- ராஜா ரவிவர்மா வரைந்த' இங்கிலாந்து வர்னர் ஆத்தர் எவலோக்' ஓவியம் -
ஆனால், இவற்றை எல்லாம் மறைக்கும் விதத்தில், பெரும் இந்திய ஓவியர் எனப்பாராட்டப்பட்டுள்ள ராஜா ரவிவர்மா கூட, இங்கிலாந்து வர்னர் ஆத்தர் எவலோக்கை, வரைந்த மாபெரும் ஓவியமானது (7’ ஒ 4’) அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, எம்மை பிரமிக்கவே செய்கின்றது,
இது, அரசியல்வாதிகளும் நவாப்புகளும் மாத்திரமல்ல – கலைஞர்கள் கூட எவ்வகையில், ஒரு கட்;டத்தில், ஆங்கிலேய அடிவருடிகளாக இருந்துள்ளார்கள் என்பதை படம் பிடித்துக்காட்டுவதாக இருக்கின்றது.
இவை அனைத்தும், இன்றும் கூட வெவ்வேறு வடிவங்களில் தொடரும் நிகழ்வுகளாக உயிர் பெற்று வருவது, வேறுவகை கதையாக இருக்கலாம். உதாரணமாக ஜெயமோகன்.
கருப்பு நகரம் பொறுத்த அவரது புனைவு (வெள்ளை யானை) இந்திய வரலாற்றை தம்மனம் போன போக்கில் படம்பிடித்துக் காட்டுவதாகவே உள்ளது. ஊதாரணமாக வெள்ளையானை பதிப்புரையில் 1876-1878 நிகழ்ந்த கொடூர பஞ்சத்தை இணைத்ததாய் கருப்பு நகர் கதை நகர முற்படுகின்றது. ‘கருப்பு நகர்’ அதன் அரசியலோடு நகர்வது 1600களில்! பஞ்சம் நிகழ்வது 1876-1878 காலப்பகுதியில்!! இரண்டுக்கு முடிச்சுப்போட்டு புதிதாய் ஓர் வரலாறு கண்டுபிடிக்கப்பட்டு, திரிக்கப்படுகின்றது – வழமைப்போல. போதாதற்கு. ஏகாதிபத்திய சுரண்டலை ஒடுக்கப்பட்டவர் நிலையிலிருந்து வரைந்து காட்டுகின்றோம், என்ற மார்த்தட்டல் வேறு. (வெள்ளை யானை பதிப்புரை – ஜெயமோகன்). வேறுவார்த்தையில் கூறினால் ராஜா ரவிவர்மாவின் ஓவியத்துடன் இணைந்தப்படி, இன்றைய வடிவத்தின், வஞ்ஞகத்தின் தொடர்ச்சியாகவே உள்ளது. ஆகவேதான், ரவிவர்மா மறைந்தபோது, பாரதிபாடிய “சந்திரன் ஒளி…” என்ற கவிதையைத்தாண்டி, இந்த கருப்பு நகரங்களை தாண்டி, ஆங்கிலேயர் மேற்கொண்ட அரசியல் நகர்வுகள் என்பன வித்தியாசம் நிரம்பியவை என்பதனை இவ்அருங்காட்சியகம் நிரூபிப்பதாக உள்ளது.
3
மறுபுறத்தில், மதம் எவ்வாறு ஆரம்ப காலக்கட்டத்தில், இராணுவத்துடன் பின்னிபிணைந்து நின்றது என்பதுபோக, அது பின்னர் ஆன்மீக ரீதியில் இந்திய மக்களை, அடிமைக்கொள்ள இறங்கிவரும் முயற்சிகளையும் இவ்அருங்காட்சியகம் கோடிடுகின்றது.
அதாவது, 1800-1960துகளில் தென்னாபிரிக்காவை கைப்பற்றிய, ஆங்கிலேயர் குறித்து அண்மைக்கால தென்னாபிரிக்க கிறிஸ்துவ துறவியான டெஸ்மன் டுட்டு பின்வருமாறு கூறியிருப்பார் : 'மிஷனரிகள் ஆபிரிக்காவிற்கு வந்தப்போது அவர்களது கரங்களில் பைபிள்களும், எங்கள் கரங்களில் நிலமும் இருந்தது. கண்ணை மூடி வணங்குங்கள் என அவர்கள் கூறியவாறு நாம் கண்ணை மூடி திறந்தபோது அவர்களது கரங்களில் எங்களின் நிலமும் எங்கள் கரங்களில் அவர்களது பைபிலும் இருக்கக் கண்டோம்.'
இதுபோல தேவாலயத்தில் இருந்து, மதமானது இந்திய சமூகத்தை நோக்கி புறப்பட்ட பின்பு நடந்தேறிய ஒரு கதையாகக் கூட இது, இருந்திருக்கலாம். (கருப்ப நகர் அகற்றபட்ட போது).
4
முதலாளித்துவமானது, தான் தூக்கிலிடப்படும் போதுகூட (அல்லது அப்படி நாம் நினைத்துக்கொண்டிருக்கும் போதும்) அது உண்மையில், தனது தூக்கு கயிற்றை விலைபேசிக்கொண்டிருக்கும் என்ற கூற்றில் உண்மையில்லாமலில்லை.
ஒரு 215 வியாபாரிகள், ஒன்றிணைந்து, இந்திய திரவிய பொருட்களான ஏகபோக உரிமையை, நிலைநாட்டிக்கொள்ள, மாத்திரமே கிழக்கிந்திய கம்பனி என்ற ஒன்றை துவங்கினர் என்பது பதிவு.
அதாவது, நாயக்க மன்னர்களின் தயவில், கிழக்கிந்திய கம்பனியினர், இங்கு வந்து Saint George Fort இன் கட்டுமானத்தை துவங்கியபோது, அவர்களின் உள்நோக்கங்களை, நாயக்க மன்னர்கள் அறிந்திருந்தனரா இல்லையா என்பதெல்லாம் பதில் தெரிந்த வினாக்களே.
லாட்டரி சீட்டு குலுக்களிலும் பொது உணவுவிடுதியை நடத்துவதிலும் பிரபல்யம் பெற்றிருந்த இவ்ஆங்கிலேய கம்பனி, கருப்பு நகரை ஒரு காலகட்டத்தில் உருவாக்கிக்கொண்ட போது கூட இவர்களது உள்நோக்கங்கள் சரியாக விளங்கிக்கொள்ளப்பட்டதாக இல்லை எனலாம்.
ஆனால், இவ்ஆங்கிலேயர் தெளிவாக பார்த்திருக்க முடியாத, இக்கிழக்கிந்திய கம்பனியினரின் பிற்காலத்தைய நோக்கங்களை, அந்த தாடிக்கார கிழவன் தெளிவாக பார்த்திருக்;க கூடியதாகவே தெரிகின்றது.
அவனது கூற்று : இரண்டு வரலாற்று கடமைகள் இங்கே காணப்படுகின்றன. ஓன்று ஆக்குவது, மற்றது அழிப்பது. கருப்பு நகரை திறந்து வைத்த அதே கைதான், ஒரு கட்டத்தில் அந்தமான் சிறையையும் திறந்து வைக்கின்றது.
ராஜா ரவிவர்மா மாத்திரமல்ல. ஆனால் பாரதி என்ற மகாகவிஞனும் இந்த மகா சுழலின் போது எழுவது தர்மமாகின்றது. இந்த மாற்றத்துக்கான மூலைக்கல், Saint George Fort ல் நிர்மாணிக்கப்படுகின்றது என்பதிலேயே அதன் முக்கியத்துவமும் அடங்குவதாக உள்ளது. அம்பேத்காரின் கூற்று :
“காந்தியை நான் உள்ளும் புறமுமாக அறிந்தவன்தான். உண்மையில், அதற்குரிய சூழல் எனக்கு வாய்த்ததே காரணம் என்பேன் நான். முதலாவது வட்டமேசையில் காந்தி கலந்துக்கொள்ளவில்லை. ஆனால் இரண்டாவது வட்டமேசையின் போது பல மாதங்கள் தங்கியிருக்க நேரிட்டது. அவரது வேண்டுகோளின் பிரகாரம் அவரை ஜெயிலிலும் சந்தித்துள்ளேன். பண்டை மரபுசார் இந்து அவர். சாதிய வருணாச்சலம் முறைமையின் பாதுகாவலன். குறைந்தது இரண்டு பத்திரிகைகளை அவர் ஒரே காலத்தில் நடத்தி வந்தார். ஒன்று ‘ஹரிஜன்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில். மற்றது குஜராத் மொழியில் ‘தீனபந்து’ என்ற பெயரில் நடத்திவரப்பட்டது. ஆங்கிலத்தில் அவர் நடத்திய பத்திரிகை வாசிப்பவர்கள் அவரை ஒரு முற்போக்கு ஜனநாயக வாதியாக கணிப்பர். ஆனால் குஜராத் மொழியில் அவர் நடத்தி வந்த பத்திரிகையானது சாதிய கட்டுமான தர்மங்களை மக்களுக்கு புகட்டுவது. சனாதானங்களை வழியுறுத்துவது. இவ்விருவகை மனிதர்கள்தான் இந்திய மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வந்தனர். பேச்சுவார்த்தைகளின் போது அவர் தனது நச்சு வேட்டைப்பற்களை என்னிடம் வெளிக்காட்டியதை நான் பார்த்தேன். வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு அவரது தூய்மை உடை மாத்திரமே கண்களில் படக்கூடும், எளிமையானவர்-தூய்மையானவர் என்ற தோற்றத்தை அவர் ஏற்படுத்திவிடுவார். ஆனால் அவரிடமிருந்த வேட்டைப்பல் சங்கதி என்னைப் போன்றவருக்கே தெரியும். அதை நான் தனிப்பட்ட முறையில் தரிசித்துள்ளேன்”.
இனி, இந்த மர்மங்களை எல்லாம் சிக்கெடுத்துக்கொள்வதில் இந்த அருங்காட்சியகம் மாத்திரமல்ல ஆனால் பாரதியையும் புரிந்துக்கொள்ளப்பட வேண்டியே உள்ளது. உழைக்கும் மக்கள், அந்த தாடிக்காரன் கூறியவற்றுடன் மாத்திரம் நில்லாது காளி கடைக்கண் வைத்த ரஷ்ய அனுபவங்களையும் சீனத்து வரலாறுகளையும் ஆழகற்பது தவிர்க்க முடியாததாகின்றது.
இல்லை எனில் Saint George Fort எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்ற எண்ணப்பாடு தெரியாத குருடர்களாய் ஏதோ ஒன்றுக்காக நிலத்தையும் வாரிவழங்கும் நாயக்கர்களாகவே இன்றும் இருப்போம் என்பதை Saint George Fort அருங்காட்சியகம் நிலைநாட்டுகின்றது. இவ் யதார்த்தத்தை மீட்டு எண்ணிப்பார்க்க வைக்கும், ஒரு வரலாற்று குறிப்பாகவே இக்கோட்டை இன்றும் திகழ்கிறது எனலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.