- எழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் -
ஒரு ஓவியனின், புதிய சித்திரத்திற்கான தயாரிப்புகளுடன் சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் 'என் முதல் ஆசிரியர்' நாவல் ஆரம்பமாகின்றது. ஓவியன் பின்வரும் பொருள்படக் கூறுவான் :
“பொழுது புலர்கின்றது… ஜன்னல்களை அகலத் திறக்கின்றேன்… கிரகிக்க முடியாத, எதிரொலிகளை உள்ளத்தில் உருவாக்கும், இந்த இளம் கோடையின், உதயம் போன்றதன், முக்கியத்துவத்தை இன்னும் நான் பெறவே இல்லை. எனது சித்திரம் வெறும் எண்ணக்குவியலாய் மாத்திரமே இருக்கின்றது. எத்தனையோ கோட்டுருவங்களை இந்தச் சித்திரத்திற்காய், இதுவரை கீறிவிட்டேன். ஆனால், என் ஆன்மாவிலிருந்து, பிறப்பெடுக்கக்கூடிய அந்த மர்மமான, வஸ்து, அகப்படாமல் கைநழுவிச் செல்லும் அந்தப் பொருள், இன்னமும் என் கைக்கு வந்து சேர்ந்ததாய் இல்லை. வசப்பட்டதாயில்லை”.
“முடிவுப்பெறாத எனது சித்திரம் குறித்த எண்ணப்பாடுகளைப் பொதுவில் நான் எனது நண்பர்கள் மத்தியில்கூட பிரஸ்தாபிப்பதில்லை. ஆனால், இம்முறை ஓர் விதிவிலக்கை பின்பற்ற நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். முழுமையுறா என் சித்திரத்தை, இன்று பகிரங்கமாய் ஏனையோருடன் பகிர்ந்துகொள்ளும் போக்கொன்றைக் கடைப்பிடிக்கப் போகின்றேன். இது வெறும் சபலம் அல்ல. தூரிகையை, இப்போது கையில் எடுக்க எனைத் தூண்டிய இக்கதை மிகப்பெரியது…”
“இக்கதையை பாழ்படுத்தி விடுவேனோ என்று அஞ்சுகிறேன். இப்போதுகூட அந்த நடுக்கத்துடனேயே என் தூரிகையை நான் கையில் ஏந்தவும் செய்கின்றேன்”.
கிட்டத்தட்ட ஒரு நேர்மையான கலைஞனின் உண்மை வாக்குமூலம் என இதனை நாம் கொள்ளலாம். மாபெரும் கலைஞர்கள் இக்கேள்வியைக் கடந்து அடியெடுத்து வைத்ததாகவும் சரிதம் இல்லை. ஏதாவது ஒரு கட்டத்தில் இக்கேள்வியானது அவர்களைத் துன்புறுத்தி வாட்டி வதைக்கவே செய்திருக்கும்.
துன்புறுத்தல்? ஆம், இது, மிகப்பெரிய சொல்தான். ஆனால், இக்கேள்வியை வெறும் ஒரு யதார்த்தமாகக் கொண்ட மகாபுருடர்களும் இவ்வுலகில் ஜீவிக்கத்தான் செய்திருக்கின்றார்கள்.
வான்கோவை எடுத்துக்கொண்டால் விவசாயி அல்லது விவசாயிகளின் வாழ்வு என்பதனைத் தீட்டுவது, குறித்த காலகட்டத்தில், அவனது குறிக்கோள்களில் ஒன்றாகிறது.
ஆனால், அதிலுள்ள சிரமங்களை அவன் ஆழ அறிந்தவனாகவே இருக்கின்றான் - கார்க்கி போன்றே.
வான்கோவுக்கு முன்னதாக Millet (1814-1866), Lhermitte (1844-1925), Meunier (1831-1905) ஆகியோர் விவசாயிகளின் வாழ்வை நாடி பிடித்துப்பார்க்கத் தவறவில்லை. ஆனால், அவர்களது சித்திரம், விவசாயிகளின் வாழ்வை எட்டிப்பார்க்கவே செய்தது எனலாம்.
1866ல் Millet> நாள் முடிவில் களைத்துப்போன விவசாயியையும் அவனது மனைவியையும் தன் சித்திரத்தில் உள்ளடக்கி இருந்தார்.
ஆனால், இதனையே வான்கோ 24 ஆண்டுகள் கழிந்தபின் 1890ல், மீண்டும் தீட்ட முற்பட்டார். இதே காட்சியை அவர் காண்பதும், காட்சிப்படுத்துவதும், அதற்காய் அவரது தூரிகை அசைந்த விதமும் வேறுவிதமாகயிருந்தது.
இதே போன்று 1850ல், Millet ‘விதைப்பவன் (Sower)’ குறித்த ஓவியத்தை வரைந்தார்.
இதனையே சரியாக ஒரு 33வருடங்கள் கழிந்த நிலையில், 1888ல், வான்கோ இதனை வரைய நேரிட்டது.
வான்கோவின் ஓவியத்தில், ஓர் இளம் சூரியன், பிரகாசமாய் முழுமைப்பெற்று உலகின் அனைத்து அவதரிப்புகளுக்கும் அடித்தளமாய் அமைகின்றது எனக் காட்டப்படுகின்றது.
அதாவது, விவசாயின் வாழ்வு, இந்த விதைப்பவனின் வாழ்வு, எப்படி உலகுக்கு அடித்தளமாய் அமைகின்றது என்ற புரிதல் இவ்ஓவியத்தில் ரம்மியமாய் வெளிப்படுவதாக உள்ளது.
கிட்டத்தட்ட, இவ்விதைப்பவன் குறித்த, தலா பத்து ஓவியங்களை வான்கோவும் இதனைப்போன்றே மிலேயும் தீட்டியுள்ளனர்.
வான்கோவின் கூற்று :
“மிலே (Millet), விவசாயியினது சாரத்தைத் தர முயற்சிக்கின்றார்… பின்னர் Lhermitte… Block… மேலும், இன்னும் சிலரும் இருக்கவே செய்கின்றனர்… பின் Meunier…ஆக விடயம் இதுதான் எனில், பொதுவில் விவசாயியை நாம் பார்த்தறிய கற்றுவிட்டோமா என்றால், இல்லை… கிடையவே கிடையாது… இவ்விடயத்தை வெற்றிக்கொள்வது எப்படி என்பது யாருக்குமே பிடிபடாத விடயமாய்த்தான் இருக்கின்றது…”
“Lhermitte… Block… இவர்கள் பொதுவில் எதைத்தான் பார்க்க விழைகின்றார்கள்? சூட்டின் வெம்மையைத் தவிர?...”
“சரி, நான் இப்போது ஓரளவிற்கு விடயங்களைச் சிறிதளவு தெளிவாகப் பார்க்கக் கற்றுக்கொண்டுள்ளேன். என்றாலும் இது நீண்ட நாட்கள் எடுக்கக்கூடிய சங்கதித்தான்”.
“Gauguin இச்சிக்கலை வெற்றிக்கொள்ளவில்லை என்றால், நானாகத்தான் இதனைச் சமாளித்தாக வேண்டும் என்றாகின்றது… நல்லது. விடயம் அதுவாகத்தான் இருக்க வேண்டுமென்றால், அது அப்படியே இருந்தாகட்டும். ஆனால், அதற்காய், நான் இங்கே, விவசாயிகளின் மத்தியில் இருந்தாக வேண்டி உள்ளது.”
இது, இவ் ஓவியங்கள், விவசாயிகள் பொருத்து முன்னெடுக்கப்பட்ட தேடல்களை வகைப்படுத்துவதாக இருக்கின்றது.
இதேபோன்று கார்க்கி பின்வரும் பொருள்பட கூறுவார் :
“ஓர் ஐம்பது ஆண்டுகால இடையறா முயற்சிகள், ரஷ்ய விவசாயின் தூக்கத்தைக் கலைத்து, விழிப்பு நிலையை, எட்டச்செய்துள்ளது. இனி விழித்துள்ள இவனின் ஆன்மாவின் நிலைதான் என்ன?”
ஆன்மாவின் விழிப்புநிலை குறித்து டால்ஸ்டாயின் கூற்று :
“மனநிம்மதி - இது ஆன்மாவின் இழிநிலை. வதைப்படுத்தலும், குழம்ப்பிக் கலங்குதலும், தூக்கி எறிதலும், எந்நேரமும் போராடுதலும், இழப்புக்கு உள்ளாகுதலும் இன்றி அமையாதவை. மனநிம்மதி… அது…”
ஆக, ஆன்ம விழிப்புநிலை என்பது ஒரு விடயமாகிறது. இரண்டாவது விடயம், இம்முதலாவதைப் போன்றே, கார்க்கியையும் வான்கோவையும் கதைக்க விட்டிருக்கின்றது.
“பொதுவில் நாம் விவசாயியைப் பார்த்தறிய கற்றுவிட்டோமா… நினைவே கிடையாது… இவ்விடயத்தை வெற்றிக்கொள்வது எப்படி என்பது யாருக்குமே பிடிபடாத ஓர் விடயமாக இருக்கின்றது. இது நீண்ட நாள் எடுக்கக்கூடிய சங்கதிதான்… ஆனால் அதற்காய் நான் இங்கே, விவசாயிகளின் மத்தியில் வாழ்ந்தாக வேண்டியுள்ளது”.
எனவே, ‘ஆன்ம விழிப்பு நிலை’ என்பது ஒன்று. ‘மத்தியில் வாழ்வது’ என்பது மற்றொன்று. ஆன்ம விழிப்பு நிலை என்பது ன் ஒரு பெருந்துறை சார்ந்ததாய் கொள்ள இடமுண்டு. IGNITED MIND எனக் கலாமும், ‘தன்னை வென்றாளும் போதினிலே’ எனப் பாரதியும் கதைத்துள்ளதும் நினைவில் கொள்ளத்தக்கதே. ஆனால், ஆன்ம விழிப்புநிலை என்பது மாத்திரம் இவர்களுக்குப் போதவில்லை என்பது புலனாகின்றது. சம்பந்தப்பட்ட விடயங்களை உள்வாங்கும் மனிதன், உருவெடுத்ததிலும், அவன் இந்த விவசாயிகளின் மத்தியில் வாழ்ந்தாக வேண்டியுள்ளது என்பதே வான்கோவின் வாதமாகின்றது. அதாவது தூரிகை மாத்திரம் அல்ல. அது போதாதது. அதற்கும் மேலாக இவர்களின் வாழ்வைக் கைப்பற்ற வேண்டியுள்ளது. இவ்விரு காரணிகளும் இணைகையிலேயே, ஒருவேளை அந்த ரத்தமும் சதையும் ஒன்றிணைந்த கலைப்படைப்பு உருவாக்குவதாயும் இருக்கலாம். ஒருவேளை, சில சமயங்களில், ஒன்றை ஒன்று கலந்ததாய், அல்லது ஒன்றை ஒன்று கோருவதாயும் இருக்கலாம்.
சிங்கிஸ் ஐத்மாத்தவ் பின்வருமாறு முடிக்கின்றார் :
“எனது விருப்பு வெறுப்புக்களை எப்படித்தான் என் சித்திரத்தில் உள்ளடக்கப் போகின்றானோ தெரியவில்லை. ஆனால் அதை வீணாக்கி பாழ்படுத்திவிட அஞ்சுகின்றேன்… முதலில் அது ஓர் சித்திரமாக உருப்பெற வேண்டும்… என்னால் ஒன்றுமே வரையமுடியாது என்ற சிந்தனையும் அவ்வப்போது என்னுள் தோன்றாமலில்லை. நினைத்துக் கொள்வேன். விதி என் கரங்களில் ஏன்தான் தூரிகையைத் திணித்தது? சில சமயங்களில் ஒரு மலையை புரட்டும் அளவுக்குச் சக்தி மிக்கவனாய் என்னை நான் உணர்ந்துகொள்வேன். ஆனாலும், ஏனோ, எல்லாமும், எப்போதும் சரிப்பட்டு வருவதில்லை. இருந்தாலும், என் சித்திரத்தை நான் தீட்டத்தான் போகின்றேன். என் உறுதியான தேடலை நான் தொடரத்தான் போகின்றேன்.”
கலையின் உருவாக்கத்தில் உள்ள மர்மங்களை, மேற்படி பகுதி தொட்டு விசாரணை நடத்துவதாய் உள்ளது. அதாவது கலை என்பது வெறும் எண்ணக்குவியல் மாத்திரமல்ல. ஆனால் அதற்கும் மேலாய்… அதற்கும் மேலாய்…!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
[தொடரும்]