- கனடாத் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2017ம் ஆண்டுக் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற Bindis or Barbies: On Finding Ourselves With/Despite Social Media என்னும் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம். - ஆங்கிலத்தில் : சங்கரி விஜேந்திரா | தமிழில்: ஶ்ரீரஞ்சனி -
என்னுடைய முதலாவது மின்னஞ்சல் கணக்கை ஆரம்பித்த நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது, எனக்கு ஐந்து வயது, கூகிளுக்கு ஏழு வயது, என்னுடைய மூத்த அக்கா பல்கலைக்கழகத்துக்காக வீட்டைவிட்டு வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்தா. அதற்கு முதல் வருடம்தான் இந்தப் புதிய மின்னஞ்சல் சேவையை கூகிள் அறிமுகப்படுத்தியிருந்தது. எனக்குப் பிடித்த அக்காவுடன் நான் தொடர்பில் இருப்பதற்கு மின்னஞ்சலொன்றை உருவாக்குவது நல்லதென நாங்கள் நினைத்தோம். இது, என்னுடைய நண்பர்களில் பலர் அவர்களுடைய சொந்த மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்குவதற்குப் பல வருடங்களுக்கு முன்னையதானது, இணைய உலகுக்கான என்னுடைய நுழைவு 2005ஆம் ஆண்டு இலையுதிர்காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது.
நானும் வளர வளர என்னைச் சூழ்ந்து தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்தது. பாடசாலையை நான் ஆரம்பித்தபோது, சமூக ஊடகம் உதயமானது – முதலில் Twitter, Facebook, Youtube என ஆரம்பமாகிப் பின்னர் Google Plus, Instagram, Tumblr, Snapchat எனப் பல்வகையாக விரிவடைந்தது. அதன் பின்னர் iMessage, Facebook Messenger, Whatsapp, Viber எனும் செய்தியனுப்பும் பயன்பாடுகள் தோன்றின. என்னுடைய பதின்மூன்றாவது பிறந்தநாளன்று, தமிழை நன்கு வாசிக்க ஆரம்பித்த ஒரு வருடத்தின் பின்னர், Facebook இல் நான் இணைந்து கொண்டேன். என்னைப் பொறுத்தவரையில், கையடக்கத் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் ஒருமித்த முன்னேற்றம் என்பது, பிரமிப்புடன் நோக்க வேண்டிய மனிதகுலத்தின் ஆக்கச் சிந்தனைக்கு/உருவாக்கும் திறனுக்கு சிறந்ததொரு உதாரணமாகும். முதலில் உலகம் முழுவதும் நாங்கள் பரவினோம். இப்போது சமுத்திரங்கள் எங்களைப் பிரித்திருந்தபோதும், ஒருவருடன் ஒருவர் நாங்கள் தொடர்பில் இருக்க்க்கூடியதாக உள்ளது. கடந்த கோடைகாலத்தில், முதல் முறையாக, தன்னன்தனிய நான் இலங்கைக்குச் சென்றிருந்தபோது, என்னுடைய ஸ்ரீலங்காச் சித்தியை அவரின் Facebook சுயவிவரப் படத்திலிருந்தே நான் அடையாளம் கண்டிருந்தேன். அங்கிருந்தபோது கனடாவிலுள்ள என்னுடைய குடும்பத்தவர்களுடனும் நண்பர்களுடனும் WhatsApp மூலமாகத் தொடர்புகள் வைத்திருந்தேன். இப்போது, அங்கு எனக்குக் கிடைத்திருந்த நட்புகளை Facebook மூலம் பேணுகிறேன். வெள்ளையின மற்றும் கிழக்கு ஆசிய மாணவர்கள் அதிகமாகவிருக்கும் உயர்தரப் பாடசாலை ஒன்றில் நான் கல்விகற்பதால், இங்கு கனடாவில்கூட, பொதுவான பாரம்பரியம் கொண்ட என் வயது ஒத்தவர்களை Facebook அல்லது Snapchat தவிர்ந்த பிறவிடங்களில் சந்திப்பது அபூர்வமானதாக இருக்கிறது. அவற்றில், எங்களுடைய பதிவுகளுக்கு நாங்கள் ஒருவருக்கொருவர் விருப்புக்குறி இடுகிறோம். அத்துடன், எங்களுடைய கலாசாரப் பெருமைகளை எங்களுக்குள் பகிர்ந்து கொள்ளுமுகமாக நாங்கள் கலந்துகொள்கின்ற எங்கள் கலாசார நிகழ்வுகளைப் பற்றி ஆளுக்கு ஆள் செய்திகள் அனுப்புகிறோம். சமூக ஊடகங்கள் இல்லாவிட்டால், என்னுடைய பாரம்பரியத்துடனோ அல்லது என்னுடைய மொழியுடனோ என்னுடைய அம்மாவுக்கு அப்பால் எனக்கு எந்தத் தொடர்பும் இருந்திருக்காது. எனவே, என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய அடையாளத்தை ஒரு தமிழ்-கனேடியராக உறுதிப்படுத்துவதற்குச் சமூக ஊடகங்கள் எனக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன.
துரதிருஷ்டவசமாக, உலகத்தைப் பற்றிய என்னுடைய நம்பிக்கை நிறைந்த பார்வையைப்போல, இணையமோ, மக்களோ மிகவும் எளிமையானதாக இல்லை. நாங்கள் எவருடம் பேசுகின்றோம், எதை நாங்கள் பார்க்கிறோம், எங்களை மற்றவர்கள் எப்படிப் பார்க்கவேண்டுமென நாங்கள் விரும்புறோம் என்பவற்றைப் பொறுத்து நாங்கள் கவசங்களைப் போட்டுக் கொள்கிறோம். “கண்ணாடிகளை” அல்லது “முகமூடிகளை” அணிந்துகொள்கிறோம். குடும்ப நண்பர்களுடன் பேசும் போது சிறியளவான ஒலியசை அழுத்தத்தில் நான் கதைக்கிறேன். ஆங்கிலம் பேசும் என்னுடைய நண்பர்களுடன் இருக்கும்போது நீண்ட உயிரெழுத்துக்களைப் பயன்படுத்துகிறேன். இணையத்தில், வெவ்வேறு மக்களுக்குக்கேற்ப எங்களுடைய வேறுபட்ட முகங்களைக் காட்டுவதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். Facebookஇல் என்னை நன்கு அறியாதவர்கள் என்னைப் பற்றி நல்லதொரு அபிப்பிராயத்தை வைத்திருக்க வேண்டுமென்பதால், என்னுடைய சாதனைகளைப் பற்றி நான் அதில் பதிவுசெய்கிறேன். Snapchatஇல், நெருங்கிய நண்பர்களை மட்டுமே நான் வைத்திருப்பதால், அதில் நகைச்சுவைத் துணுக்குகளையும் நாளாந்த நடவடிக்கைகளையும் பதிவுசெய்கிறேன். கலாசார நிகழ்வுகளைப் பற்றிய அதிகமான இடுகைகளைப் பகிரங்கமாகப் பதிவுசெய்வது பற்றி எனக்குத் தயக்கம் இருப்பதுண்டு; அதிகளவில் “இனக் கலாசாரத்தில் ஊறிய ஒருவர்” என மற்றவர்கள் என்னைப் பற்றி நினைப்பார்களா? அதேநேரத்தில், என்னுடைய சமூகத்துடன் எவ்வகையில் நான் சம்பந்தப்பட்டிருக்கிறேன் என்பதைக் காட்டுவதற்கும் நான் விரும்புகிறேன். NHM Writer வேலைசெய்யாத நேரங்களில், Google மொழிபெயர்ப்புக்கு நான் செல்லும்போது நான் பாசாங்கு செய்கிறேனா? என்னுடைய எந்தப் பகுதிகளை உலகத்துக்கு நான் காட்டுவது, எந்தப் பகுதிகளை நான் எனக்குள்ளே வைத்திருப்பது? புலம்பெயர்ந்தோரின் இரண்டாம் தலைமுறையினரின் அடையாளம் பற்றிய முதல் கேள்வி, நாம் தமிழரா அல்லது கனேடியரா என்பதாகத்தான் இருக்கிறது
எங்களின் பெண்கள் பலவீனமானவர்கள், எங்களுடைய ஆண்கள் வன்முறையாளர்கள், எங்களது குழந்தைகள் அறிவாற்றல் அற்றவர்கள், நாங்கள் சட்டவிரோதமான குடிபெயர்வாளர்கள் மற்றும் பயங்கரவாதிகள், மேலும், எரிவாயு நிலையங்களில் வேலைசெய்வதற்குத்தான் நாங்கள் லாயக்கானவர்கள் என தெற்காசியர்கள் மற்றும் தமிழர்களைப் பற்றி இணையத்தில் இருக்கும் ஏராளமான வகைமாதிரிகளால் மேலும் இது சிக்கலானதாகின்றது. என்னுடைய பாரம்பரியத்தை ஒதுக்கிவைக்காமல், இந்த எதிர்மறையான வகைமாதிரிகளைத் தவிர்ப்பதற்கே நான் விரும்புகிறேன். கல்விக்கு நாங்கள் மதிப்பளிக்கின்றோம், எங்களிடம் வலுவான மரபுகள் உள்ளன, நாங்கள் கடினமாக உழைக்கிறோம், எங்களுடைய உணவு ருசியானது போன்ற கருத்துகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. இவற்றில் எந்தளவு எப்போதும் உண்மையானதாக இருக்கின்றது? தமிழர் அல்லாதவர்களால் எந்தளவுக்கு இவை தவறான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன? சமூக ஊடகங்கள் ஹாஸ்யம் நிறைந்தவை, சிலவேளைகளில் புத்திசாலித்தனமானவை மற்றும் தீங்கற்றவை, ஆனால், சிலவேளைகளில் அவை காயப்படுத்துபவையாகவும் அவமதிப்பவையாகவும் இருக்கின்றன. சமூக ஊடகங்களிலிருந்து பணம் பெறப்படும் விதமும், விளம்பர வருவாயில் அது தங்கியிருக்கும் விதமும், அது பாதுகாப்பற்றதொரு சூழலென எங்களை உணரவைக்கின்றது. உதாரணத்துக்கு, Pakalu Papitoஇன் Twitter account (@pakalupapitio) தன்னைத் தானே ஹாஸ்யமாக விமர்சிக்கும், மற்றும் வினோதமான நகைச்சுவைகளைக் கொண்டிருக்கிறது. இந்தப் பதிவுகள் வேடிக்கையானவையாகவும் எமது வாழ்வுடன் தொடர்புபடுத்தக்கூடியவையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், Pakalu Papito என்ற கதாபாத்திரம் தெற்காசிய ஆண்களின் வகைமாதிரியாக இருக்கிறது. இந்தியாவில் வாழ்வதாகவும், எரிவாயு நிலையமொன்றில் வேலைசெய்வதாகவும் அத்துடன் தனித்திருப்பதாகவும் சொல்லும்; வேண்டுமென்றே தவறாக உச்சரிக்கப்பட்ட பயன்படுத்துனர் பெயரையும், கருமையான நிறமும், மீசையுமுள்ள ஒரு மாதிரித் தமிழ் மாமாவின் புகைப்படத்தைச் சுயவிபரப் படமாகவும் பயன்படுத்தும் அந்த blogஐ வைத்திருக்கும் நபர், உண்மையில், clicksக்காக தெற்காசியரைப் தவறாகப் பயன்படுத்தும் ஓர் இளம் வெள்ளை நிற ஆண் (@lee.gabriel.146 on Facebook) ஆவார். இப்படிப் பார்க்கும்போது, எதிர்மறை மதிப்பீடுகள் அல்லது ஏளனம் இல்லாத எமக்குரிய வெளியை தென்காசியர்கள் ஆகிய நாங்கள் எப்படிக் கட்டியெழுப்ப முடியும்?
ஒன்று மட்டும் நிச்சயம்: சமூக ஊடகங்கள் யாவும் ஒரே பண்புடையவை அல்ல. “சமூக ஊடகங்கள்” என அழைக்கப்படும், பல்வேறு தளங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான இணையச் சமூகங்களுடனான இவற்றில், ஒருவருக்குக் கிடைக்கும் அனுபவம் மற்றொருவருக்குக் கிடைக்காது. கண்டத்துக்குக் கண்டம் வாழும், வெவ்வேறு வகையான வாழ்க்கை முறையுள்ள அனைவருடனும் எங்களின் பகிரப்பட்ட கலாசாரத்தை நாங்கள் முடிந்தளவுக்குக் கொண்டாடுவதற்கு, இணையத்திலுள்ள இனவாதம், அந்நியர் மீதான வெறுப்பு ஆகியவற்றை தமிழர்களாகிய நாங்கள் கடந்துசெல்ல வேண்டியிருக்கிறது. சமூக ஊடகங்கள் என்பவை, முக்கியமாக எங்களைப் பற்றி எங்களிடம் ஏற்கனவே இருக்கும் கருத்துக்களை வலுப்படுத்துவதற்கும், நண்பர்களுக்கும் அந்நியர்களுக்கும் எங்களைக் காண்பிப்பதற்குமாகச் சேவையாற்றும் தனிப்பட்டதொரு நடைமுறையாகவும் நெருக்கமானதொரு தனிப்பட்ட விவகாரமாகவும் உள்ளன. நான் இங்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளேன், இவை எதற்குமே நேரடியான பதில்கள் இல்லை. இவற்றில், உண்மையாக இருக்க வேண்டுமென நாங்கள் விரும்பும் பதில்கள் உள்ளன, உண்மையாக இருக்குமென நாங்கள் நினைக்கும் பதில்கள் உள்ளன, மற்றவர்களுக்கு உண்மையென நினைக்கவேண்டுமென நாங்கள் கருதும் பதில்கள் உள்ளன, அத்துடன் ஒப்புக்கொள்வதற்கு எங்களுக்குச் சங்கடமான பதில்களும் உள்ளன. ஒவ்வொருக்கும் வேறுபடுகின்ற உண்மை, அங்கு எங்கோ ஒரிடத்தில் இருக்கிறது. என்னுடைய பதில்கள் என்னவாக இருக்குமென்பதை நானே கண்டறிவதற்கு இன்னும் நான் முயற்சிக்கிறேன்.
இந்தக் கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிக்கும் விதம், சமூக ஊடகங்களை நாங்கள் பயன்படுத்தும் வழிகளைப் பிரதிபலிக்கின்றது. எங்களுடைய சொந்த அனுபவங்களை இணையத்தில் நாங்கள் உருவாக்குகிறோம். இணையத்திலும் இணையமற்ற சூழல்களிலும் எங்களுடைய எதிர்வினைகளால் எங்களுடைய சமூகங்களை உருவாக்குகிறோம். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களுடைய தலைமுறைகளின் வரலாறுகள், எங்களுடைய கலாசாரம், எங்களுடைய மொழி மற்றும் எங்களுடைய அனுபவங்களே எங்கள் அனைவரையும் தமிழர்களாக ஒன்றிணைப்பதாக அமைகின்றன.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.