மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் அவர்கள் மறைந்த செய்தியினை இணையம் வாயிலாக அறிந்தேன். ஆழ்ந்த இரங்கல். இவர் என் முகநூல் நண்பர்களிலும் ஒருவர்.
இவரது சமூக, கலை, இலக்கியப் பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. ஆரம்பத்தில் இடதுசாரிச் சிந்தனைவாதிகளால் , சமூக, அரசியற் போராளிகளால் கவரப்பட்ட இவர் வட மாகாணத்தில் தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றார்.
இவரது நாவலான 'இடிந்த கோட்டைகள்' இவரது ஊரான கரணவாய் அனுபவங்களின் விளைவாக எழுந்த தீண்டாமைக்கெதிரான, தீண்டாமையின் அவலங்களைச் சுட்டிக்காட்டும் நாவல்.
நன்கறியப்பட்ட இவரது நாவல் 'நீந்திக்கடந்த நெருப்பாறு' இரு பாகங்கள் வெளியாகியுள்ளன. மூன்றாவது பாகம் எழுத உத்தேசித்திருந்ததாக அறியப்படுகின்றது. அதை எழுதுவதற்குள் மறைந்து விட்டார். இந்நாவல் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் அடைந்த இன்னல்களை, அனுபவங்களை வெளிப்படுத்தும் ஆவணமாகவும் கருதப்படுகின்றது.
இவரது வானொலி நாடகங்கள் முக்கியமானவை. 'காட்டு நிலா' பி.எச்.அப்துல் ஹமீட்டின் தயாரிப்பு, இயக்கத்தில் வானொலி நாடகமாக இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவை இரண்டில் ஒலிபரப்பரப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சிறுகதை, நாவல், நாடகம், அரசியல் ஆய்வு எனக் கலை , இலக்கியத்தில் கால் பதித்த , சமூக,அரசியற் செயற்பாட்டாளர் அமரர் நா.யோகேந்திரநாதன். மீண்டுமொரு தடவை என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு , அவரை நினைவு கூரும் வகையில், 'ஜீவநதி' சஞ்சிகை வெளியிட்ட அவர் பற்றிய சிறப்பிதழுக்கான இணைய இணைப்பினையும் பகிர்ந்து கொள்கின்றேன் - https://noolaham.net/project/1058/105797/105797.pdf