- ஓவியம் - AI -
"இந்தமுறையும் இந்த கிரிக்கெட் மச்சில போனமுறைமாதிரித்தோற்கக் கூடாது,இந்தமுறை நாங்கள்தான் வெல்றம்.சரியா?எல்லாரும் வடிவாக்கேளுங்கோ. இந்தமுறையும் தோற்றால் இனி நான் கப்டனா இருக்கமாட்டன்"என்று அந்த சனிக்கிழமையன்று முனியப்பர் கோயிலுக்கு முன்னால இருக்கின்ற முற்றவெளியில நின்றபடி ஆனந்தன் அவனின்ர ரீமுக்கு சொல்லிப்போட்டான்.
அவன் சொன்னது எங்களுக்கும் கேட்டது.போனமுறை அந்தமாதிரி நாங்கள் சாத்திப்போட்டம். அதுதான் எங்களுடன் அவர்களுக்கு சரியான கோபம். ஆனந்தன் நல்லவன். ஆனால் விளையாட்டு என்று வந்துவிட்டால் சரியான ரோசக்காரன்.
காற்று அள்ளிக்கொண்டு வந்த புழுதி எழும்பி முகத்தில ஊசி குத்தின மாதிரி வந்துபோய்ச்சு. அதைப்பார்த்து எங்கட கப்ரன் ராஜாஜி "எந்தத்திசையில இருந்து எனக்கு போலிங் கொடுக்கலாம்"என்று உடனே தீர்மானித்துவிடுவான். நான்தான் எங்கட ரீமின்ர ஓபினிங் ஸ்பீட் போலர்.அதனால், கப்ரன் ராஜாஜி எப்போது, எந்தத்திசையில இருந்து, எத்தனை ஓவர் லிங்கேசுக்குக்கொடுப்பது என்று தீர்மானித்துவிடுவான்.
கிரவுன்ட்டுக்குள்ள இறங்கிவிட்டால் காணும், என்ர வலதுகை எகிறிக்கொண்டேயிருக்கும். என்ர போலிங் என்றால் எல்லோர்க்கும் வயிற்றால போகாத குறை.அவ்வளவு பயம். சிலவேளை போலை குத்திப்போட்டால் முகத்துக்கும் பந்து எழும்பி காயப்படுத்திப்போடும். அதனால புளுத்தபயம் சிலருக்கு. இதனால அடிபிடிகளும் வந்திருக்கு.நானாக அப்படிப்பந்தைப்போடமாட்டன்.ஆரும் எங்கடபெடியளுக்குப்போட்டால் நான்விடமாட்டன். கிரிக்கெட் என்றால் பைத்தியம் எனக்கு.
அந்தக்கோட்டில நின்று,நல்லா நீண்ட ஸ்ரெப்ஸ் எடுத்து வீச்சா ஓடிவந்து எறிந்தால் கூடுதலா மிடில் விக்கற்தான் பறக்கும்.ரிப்பும் வரும்.இல்லாட்டி எல்பிடபிள்யூ. போனமுறையும் ஆனந்தன்ர ரீமின்ர 6 பேரை நான்தான் அவுட் ஆக்கினனான். என்னை தன்ர ரீமுக்கு விளையாடும்படி ஆனந்தன் எங்கட கொலிஜ்ஜில வைச்சு பலதடவை கேட்டவன். நான் சம்மதிக்கவில்லை.ஏனென்றால்,எங்கட ரீமுக்குள்ள ஒற்றுமைகூட.அதுதான் எங்கட பலம்.
சனிக்கிழமையென்றால் எங்கட கிரவுண்ட்டில இடம்பிடிக்கிறது கஷ்டம்.அதனால் நாங்கள் வெள்ளி, சனியென்றால் முற்றவெளிக்குவந்துவிடுவம். முற்றவெளியில, முனியப்பர் கோயிலுக்கு முன்னால விளையாட வெளிக்கிட்டால் என்னமோ தெரியேல்ல நான் போடுற பந்தின்ர வேகம் இன்னும் பிச்சுக்கொண்டு போகும்.முனியப்பரின்ர அருள்தான் என்று நினைச்சுக்கொண்டு எறிவன்.விக்கற் பறக்கும்.
விக்கற் பறக்க, எங்கட ரீம் ஓடிவந்து ஒன்றாய்ச்சேர்ந்து கட்டிப்பிடித்துக் கைகுலுக்க ஓடிவர, சென்ரல் கொலிஜ் போய்ஸ் கொஞ்சப்பேர் பார்த்துக் கைதட்ட, எனக்கென்றால் இனியில்லையென்ற சந்தோஷம். நான் அந்த முற்றவெளிக்காற்றில பறப்பன்.முனியப்பர அப்பவும் நினைப்பன். இந்தமுறை ரொஸ்ட் போடேக்க நாங்கள்தான் பீல்டிங்.ஆனந்தன் ரீம் பற்றிங். வாய்ச்சுப்போய்ச்சு.எனக்கும் முதலில் பீல்டிங்தான் விருப்பம்.உசாரா பீல்டில இறங்கிவிடலாம். அதோட இந்த மண்டைகளும் பிசகாமல் நல்ல துடிப்பா இயங்கும். பற்றிங் எண்டால் வெஸ்ற்டவுண்,செக்கன்ற் டவுண் என்று ஸ்பீட்டா அவுட்டாப்போக,நெஞ்சுக்குள்ள ஏதோசெய்யும்.வயிற்றுக்குள்ளேயும் வேறொருசத்தம் ஊளையிட்டுக்கொண்டே இருக்கும்.இதுகளால எனக்கு இது ஒத்துவராது.
புழுதி இன்னும் முகத்தில உரசினதுதான்.ஆனால்,முந்தினமாதிரியில்ல. அன்பாய் முகத்தைத்தடவிக்கொண்டு போனது.எனக்கு ஏனோ அது ஆசீர்வதிப்பது போலயிருந்தது. என்ர கையில இன்னும் உரம் ஏறிச்சு. எங்கட கப்டன் ராஜாஜி புதுடெனிஸ்போலை கொண்டுவந்து என்ர கையில தந்தான். புதுபோல் கையிலபட ஒரு சுகமான உணர்வுவரும். அதுவும் அந்தக்காலத்தில் அதை வாங்குவதே கஷ்டம்.கஷ்டப்பட்டுவாங்கி,முதலில் அதைத்தொட்டு,மணந்து,அந்தக்கலரை ரசித்து, பிறகு விளையாடத் தொடங்கி, விக்கற்றுக்களை விழுத்தி,அதேபோலுடன் 2 சிக்சரும் அடித்தால் அதைவிடப்பேரானந்தம் வேறேது!
வெஸ்ற் ஓவர்.ஓப்பினிங் போலர் .அம்பயர்ஸ், பட்ஸ்மன் நேம்ஸ் என்றும், ஸ்கோர் புக்கென்றும் ஒருகொப்பியில சிறீரங்கன் எங்கட ரீமுக்காக
பதியத்தொடங்கி, அம்பயர்சுக்கும் ஓகேயென்று கைகளைக்காட்ட,ஆட்டம் ஆரம்பிச்சுது.
பாட்டில்லை, மேளதாளங்கள் இல்லை, பைலாக்களும் அப்போது இல்லை. ஆனால், பக்தர் சிலர் முனியப்பரின் அருள்வேண்டிக் கொளுத்தின கம்பூரவாசம் மட்டும் காற்றில கரைஞ்சு, நெஞ்சில ஊறிச்சு.
வெஸ்ட் ஓவரிலேயே ஒரு விக்கட்டெண்டாலும் எடுக்காவிட்டால் எனக்கு அன்றைக்கு நித்திரையே வராது.அதோட ஓப்பினிங் போலர் என்ற கெளரவப் பிரச்சனை வேற மனசைச் சங்கடப்படுத்திப்போடும். அப்படிப்பட்ட வயசு.
றயல் போலைப் போட்டு பிச்சையும், நோ போல் கிரீஸையும் ஒருக்கா செக் பண்ணினன். ஸ்ரெப்ஸையும் அளந்து பார்த்து ஒரு கூர்க்கல்லால கீறினன் .பவுன்ரி லைன் பிளேயர்சுக்கு கைகாட்டி அவர்களை இன்னும்கொஞ்சம் முன்னுக்கு வரும்படி சொன்னன். கப்ரன் கச்சுக்கு ஏற்றாற்போல் மற்றவர்களை செற் பண்ணிவிட்டு வந்து, போலை என்னிடம் தந்து ஒன்று சொன்னான்.
"லிங்கேஸ்,உன்னை நம்பித்தான் எங்கட ரீம் இருக்கு.கண்டபடி யோசிக்காத.நானும்இருக்கிறன்.இந்தமுறையும் நாங்கள்தான்..விழுத்து விக்கற்றுக்கள."என்றான்.
விளையாட வெளிக்கிட்டால் வெறுங்கால்கள்தான்.முள்ளுக்குத்தும், கால்பெருவிரலை கல்லுக்குத்தி, இரத்தம் சிந்தும்.ஓடிப்போய் பப்ளிக் லைபிரரியில காலைக்கழுவுவம். நல்லா ஒருக்கா எரியும். பிறகென்ன? தொடர்ந்தும் விளையாட்டுத்தான்.தாகத்துக்குத்தண்ணி குடிக்கவும் யாழ்.பொதுசனநூலகத்துப்பைப்தான் எமக்கு. விளையாட்டுக்கென்று மாங்காய்புடுங்கி, மரத்தில குத்திப்பிளந்து,உப்பும்,தூளும் போட்டுப்பிரட்டி,நியூஸ்பேப்பரில சுத்திக்கொண்டு கப்ரன் ராஜாஜி வருவான். அவனின்ர வீட்டில நல்ல பாண்டியும், அம்பலவி மாமரங்களும் நிற்குது. ஓடிஓடி களைச்ச உடம்புக்கு அதுபோதும் .உமிழ்நீர் சுரந்த வாய்க்கு மாங்காய் வாயிலபட பல்லெல்லாம் கூசும்.அந்தநேரத்தில அது சுப்பராயிருக்கும்.இல்லாவிட்டால், அரிநெல்லிக்காய் யாராவது கொண்டுவருவாங்கள். அதையும் கடிச்சு, அதுக்குப் பிறகு பைப்பில தண்ணியும் குடிக்க Fridgeஇல இருந்து தண்ணிஎடுத்துக்குடித்தமாதிரி தொண்டைக்குள்ளால் குளிர்தண்ணி இறங்கி அது அமிர்தமாயிருக்கும்.வெஸ்ட் இனிங்ஸ் பற்றிங் முடிந்தால்தான் பிறேக்.அதுவரைக்கும் தண்ணிகூடக்கண்டபடி குடிக்க மாட்டம்.
வெஸ்ட்ஓவர். முதல் பந்தைப் போட்டன். அந்த'போல்'எப்பவும் ரிப்வாற மாதிரித்தான் நான் போடுவது வழக்கம்.அப்படியே போட்டன். துடுப்பெடுத்தாடியவன் வலு அவதானமா அந்தபோலை மறிச்சு மட்டையின்ர நடுவில படும்படியாச்செய்தான்.அவனில பயம் தெரிஞ்சுது.அதோட இந்தமுறை வலு கவனமா விளையாடி பற்றிங்கில நல்ல ஸ்கோர் எடுக்கவேண்டுமென்று வந்திருக்கீனம் என்று புரிஞ்சிது. அப்படியே போட்டுப்போட்டு கடைசிபோலில ஒரு எல்பிடபிள்யூ வந்திச்சுது. உரத்துக் கத்திக் கேட்டால் அம்பாயர் அவுட் கொடுக்கேல்ல.எனக்கும்,ராஜாஜிக்கும் சரியான கோபம்.அப்படியே மற்றப்பக்கத்தில லோகன் போட்டான்.அவன்இடதுகை போலர். அவன்ரஒவருக்கும் ஒரு விக்கட்டும் விழேல்ல. 2 ஓவரில நோடவுண்,ஸ்கோர் 12.ஸ்கோர் நினைச்ச அளவுக்கு ஏறேல்ல.
பந்து என்ர கைக்கு மாறிவர,3ஆவது ஓவரில எப்படியாவது ஒரு விக்கற் எடுத்தாற்தான் பிறகு படபடவென்று விழுத்தலாம் என்று யோசித்தபடியே போட்டன்.சொன்னபடி மிடில் விக்கற் பறந்திச்சு."அப்பாடா"என்றபடி ஓடிப்போய் விக்கற்ற திரும்ப மட்டையின்ர கைப்பிடியால இடிச்சு மண்ணில நட்டன்.கீப்பர் ஸ்கந்தாவும் உதவி செய்தான்.
இப்படியே விளையாடி நான் இந்தமுறை ஃபெஸ்ற் இனிங்ஸ் இல் 5விக்கற் எடுக்க, லோகன் 3,ராஜாஜி 2 விக்கற் எடுத்து எல்லாரும் அவுட்டாப்போக அவங்களுக்கு 163 றன்ஸ் கிடைத்துது. நல்ல ஸ்கோர். இனியென்ன, எங்கட பற்றிங். இந்தமுறை 1 இனிங்ஸ்தான் என்று முதலே சொல்லியாச்சு. 2 இனிங்ஸ் எல்லாம் இப்ப விளையாடேலாது. அது முழு நாளையும் விழுங்கிவிடும்.
ஃபெஸ்ட் டவுனா லோகனும்,ஸ்கந்தாவும்தான் எப்பவும்போல போய் 6 ஓவருக்கு நின்றுபிடிச்சான் ஸ்கந்தா.7ஆவது ஓவரில கச்சில அவன் அவுட்டாப் போக,ராதா போனான். இப்ப எங்கட ஸ்கோர் 37. ராதாவும் போய் லோகனும் சேர்ந்து 60 வரேக்க, லோகன் பவுன்றி லைனுக்குக்கிட்ட அடிச்சு ஓடிக் கொண்டிருக்க, லோகன், "வாவா,ஓடிவா ஓடிவா" என்று ராதாவைக்கூப்பிட, ராதா வராமல் இடையில நிற்க, இரண்டு பேரும் தடுமாறினதில லோகன் றன் அவுட்டாப்போனான். லோகன் ராதாவைப்பேச, அவன் 'sorry மச்சான்' என்று சொல்லிக்கொண்டே வழியனுப்ப, ராஜாஜி கப்ரன் உள்ளே இறங்க பிளேயர்ஸ் கைதட்டி வரவேற்க, நீலவானம் மெல்லச் சிவக்கத் தொடங்கீற்றுது.
எனக்கும் கொஞ்சம் சங்கடமாப்போச்சு."லோகனும்,ராஜாஜியும்தான் நல்ல பாட்னர்ஸ்.இரண்டுபேரும் சேர்ந்து எப்படியும் அவரேஜ்ஜா 100இற்குக்கிட்ட கொண்டு வந்துதான் அவுட்டாகிறவங்கள். சரிபார்ப்பம்"என்று நினைத்துக்கொண்டு எங்கட பந்தையெடுத்து மற்றமற்ஸ்மனுக்கு ட்ரயல் கொடுத்தன். கொடுத்துக்கொண்டிருக்க ராதாவும் அவுட். எனக்கு யோசனை தொட்டிட்டுது. ஏனென்றால்,இப்ப ஸ்கோர் 72. மூன்று விக்கட்டுக்டுக்கள் போய் 72. பார்க்க ok. ஆனால், இனி இறங்கிற ஆட்களை நம்பேலாது. பொறுமையாப்பார்த்து விளையாடமாட்டாங்கள் .விசுக்கி அடிக்க முயற்சி பண்ணி விக்கற், இல்லாட்டிக் கச்சில அவுட்டாப் போய் விடுவாங்கள்.
இப்படியே ஒவ்வொன்றாய் விழுந்து, இப்ப 7விக்கட்டுக்களின் இழப்பில் எங்கட ஸ்கோர் 130.இப்ப என்ர ரேண். என்ர போலிங்போல பற்றிங் அந்தமாதிரி வராது. ஆனால் சொட்டிச்சொட்டி, நல்லா நின்று பிடிப்பன். நல்ல ஜோக்கர் பற்றிங்கில. அதனால் ராஜாஜி என்னைப் பிந்தித்தான் இறக்குவான்.
எனக்குப்பிடிச்ச மட்டையை எடுத்தன். ராஜாஜி சொன்னது இதுதான். 'எனக்கு நீண்டநாளாய் ஒரு ஆசை லிங்கேஸ். நீயும் எங்கட ரீமுக்கு கப்ரினா வர வேண்டுமென்று, இப்ப சொல்றன். இன்னும் 34 அடிச்சா எங்களுக்கு வெற்றி.34 அடிக்கோணும். 3 விக்கட்தான் இருக்கு. மற்றவங்கள் இப்பவே சிலர் நடுங்கிறாங்கள். எனக்கு வடிவாத் தெரியுது. நீதான் எப்பவும் பயப்படமாட்டாய். ப்ளீஸ் வடிவாப் பார்த்து விளையாடு. இந்த முறையும் எப்பவும்போல நாங்கள்தான் வெல்றம். சென்ரல் கொலிஜ்ஜூம் பார்த்துக்கொண்டுநிற்குது. அவங்களுக்கும், நாங்கள் யாரென்று ஒருக்காக் காட்டவேணுமடா' என்றான் எங்கட கப்ரன்.
ராஜாஜி அடிச்ச சிக்சர்மாதிரி அடிக்கவேண்டு நானும் இறங்கினன்.இறங்கி ஒரு ஓவரை சமாளித்துவிட்டன். 4 றன்சும் எடுத்திட்டன். இப்பஸ்கோர் 134. அடுத்த ஓவர். ஸ்பினிங் போல்.அதில கச்சில மகேந்தியும் டவுன். 8விக்கற்றில 134 ரன்ஸ். இன்னும் 2 விக்கற்றுக்கள்தான் இருக்கு. 29 ரன்ஸ் அடிக்கவேணும். ஆளுக்கு 15 அடிக்கோணும் .பொறுத்தகட்டம்.ஒருஆள் போனால், கடைசியா வாறவனுக்கு பற்றிங் துண்டா வராது. அவனை நம்பேலாது.
இப்ப என்ர பாட்னரோட கதைச்சன். நான் விசுக்கமாட்டன். ஆனால் றைட்ரேணில என்ற அடி இருக்கும் ,நீ போலரோட சேர்ந்து ஓடவெளிக்கிடு. சரியா. அப்படித்தான் நாங்கள் நின்று பிடிச்சு வெல்லவேண்டும். பயப்படாமல் ஓடிவாok? அவனும் சம்மதிக்க, அந்த ஒவரிலயும் 6ரன்ஸ் எடுத்தாச்சு. இனி அவனின்ர பக்கம் பற்றிங் .23 ரன்ஸ் இருக்கு.2 விக்கட் இன்னும் இருக்கு. ஆனால்,திரும்ப ஸ்பீட் போலிங். வலு கவனமாத்தடுக்கவேணும். அவன் நல்ல சாத்துச் சாத்தினான்.என்னால நம்பவேமுடியேல்ல .2 பெளன்றி.அதோட புறம்பா 2 ரன்னும் வந்திச்சு.
இப்பவும் அவன்ரபக்கம்.எனக்கு நல்ல துணிச்சல் வந்திட்டுது.அட,இன்னும் ஆக 13 எடுத்தால் வெற்றி.முனியப்பரை ஒருக்காப்பார்த்தன். நெஞ்சில பலத்தை வரவழைச்சன்.வெஸ்ற் போல் வர நேர அடிச்சு ஒரு ரன் அவன் எடுத்தான். அவன்ர பக்கத்திற்கு ஓடி நான் வந்திட்டன். இன்னும் 5 போல் ஸ்பீற்றா வரும் .சமாளிப்பம் என்று நினைச்சாலும், நான் நின்ற திசையிலயிருந்து முனியப்பரப்பார்க்க, ஏதோ மனம் சொல்லிச்சுது. "யோசிக்காம விசுக்கு.நீதான் அடுத்த கப்ரன் என்று. ஓங்கி விசுக்கினன் .சிக்சர். அடுத்த போலுக்கும் சாத்தினன் .இன்னுமொரு சிக்சர். என்னாலேயே நம்ப முடியவில்லை. பலத்த கைதட்டுக்களுடன் ஓடிவந்து எங்கட ரீம் என்னைத்தூக்கிக் கொண்டாடினார்கள்..
அப்போதும் நான் அந்த முனியப்பரையே அண்ணாந்துபார்த்துக்கொண்டிருந்தன்.