- ஓவியம் - AI -

குளிர்காலம்போய் வெயில் வந்தவுடனே ஒரு சந்தோஷம்.  எனக்குள்ளே இரண்டு மடங்கு உஷார். அவனை நினைக்கும் போதெல்லாம் அவனைக் காணவேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் மனதிற்குள் நெருக்கு நெருக்கு என்றிருக்கும். இருட்டுறதுக்கு முன்னர் போனால்தான் முழுமையான ஒரு சந்திப்பை உருவாக்க முடியும். அவனை ஒருதரமேனும் ஏற இறங்க ஆசைதீர பார்க்க முடியும். அவனை நினைக்க உற்சாகமாக இருந்தது. தினமும் மாலையில் காலாற நடந்து செல்லும் அதேபாதையில் தடம் பதிக்கின்றேன். என்னைத் தினமும் சந்திக்கும் அந்த உயிர் கோடையின் ஆரம்பத்தில் மீண்டும் உயிர் பெற்றிருந்தது. என் வாழ்வில் எத்தனை உறவுகள் வந்தன . இவன் மட்டும் எப்படி என் உறவோடு கலந்தான்? எனக்கும் இவனுக்குமுள்ள உறவுதானென்ன? எந்த உறவில் இவன் உறவைச்சேர்ப்பது? தொப்புள்கொடி உறவிலா? இரத்த உறவிலா? அம்மா வழிச் சொந்தத்திலா? இல்லை  அப்பாவழி பந்தத்திலா? 'யார்இவன்? இத்தனை சொந்தங்களையும் மீறிய அர்த்தமுள்ள, ஆதரவான, ஆச்சரியமான, உணர்வுபூர்வமான சொந்தமானவன்.

இதே உறவு ஊரிலும் எமக்கிருந்தது. இதனால்தான் இவனைப்பார்க்கும்போதெல்லாம் அதே நினைவு. ஊரில் இருந்த அதே உறவின் சாயல் இவனிலும் இருக்கப்போய்த்தான் இவ்வுயிரையும் ஒரு நாளைக்கு ஒருக்காத்தன்னும் காண வேணும் போல மனம் கிடந்து துடிக்கும் .இவனைக்கண்டாலோ பழசுகள் மனசை வந்து ஒரு தட்டுத்தட்டும். இவனை மாதிரித்தான் ஊரில் அவனும் விருட்சமாக வளர்ந்து அடிப்பாகம் அகன்று மூன்று பகுதிகளாக நிலத்துடன் ஆழப் பதிந்திருந்தான். அவன், இவன், நான் அதில் குந்துவோம்.மற்றவன், இன்னொருவன் சைக்கிள் சட்டத்தில் சாய்ந்திருப்பார்கள். மாணிக்கவாசருக்கு குருந்தமரம், புத்தபெருமானுக்கு போதிமரம், எங்களுக்கு இந்த அரசமரம். பசளையிட்டு நீர்ப்பாய்ச்சி அந்தமரம் வளரவில்லை.மழைநீரில் அந்த மரம் வளர்ந்தது. பசளையாய் எம் பேச்சு இருந்தது. எமது முன்னோர் சிலரும் அந்த மரத்தின் அடியில் குந்தியிருந்து கதை பேசியிருக்கலாம். நாமும் கதைப்போம்.

என்னதான் கதைக்கவில்லை? எல்லாக்கதையும் அந்த மரம் சொல்லும். எமது நட்பின் ஆழத்தை அது சொல்லும். எங்கள் வேதனைகளை விரக்திகளை அது சொல்லும். கிண்டல் கேலிப்பேச்சுக்கள் அதையும் சொல்லும். வாழ்வில் ஏதும் சாதிக்கவேண்டும் என்ற விருப்பத்தையும் அது சொல்லும். எங்கள் கேலிப்பேச்சுக்களுக்கு சலசலவென்ற ஒரு சிரிப்புச்சிரிப்பான். இப்படி இருக்கமுடியாதபடி காக்கைக்கூட்டத்திற்கு ஒருநாள் கல்லெறி விழுந்தது. காக்கைகள்நாம்  சிதறினோம். சிதறிப்போன ஒவ்வொருவரையும் நான் நினைத்துப்பார்க்கின்றேன்.அவன், இவன், மற்றவன், இன்னொருவன், பிறகுநான். நினைவழியா நாட்கள். எப்போதும் வானம்போல எப்போதும் சூரியன்போல எப்போதும் கடல்போல ,எப்போதும் எங்களூர் பனைபோல அழிந்தே போயிராத, அழிந்தே போகமுடியாத நாட்கள். நினைவுகள் அழிவதில்லை.

முதன்முறையாக பள்ளிக்கூடம் போகின்றேன்.முதலாம் வகுப்பு. முதலாம் நாள். அம்மாகூட்டிப்போகிறா. அழுகை, அழுகையாக வருது. பயமா இருக்கு. இதனால் அம்மாவின் கையை இன்னமும் அழுத்தமாக பிடித்துக் கொள்கின்றேன். அம்மாவை விட்டிட்டிருக்கவேணும். அதுதான் அழுகை. யாரோடோ இருக்கவேணும். அதுதான் பயம். அழுகையும் வராமல், பயமும் வராமல் "இஞ்சை எனக்குப்பக்கத்தில இருக்கலாம்"என்று ஒருவன் இடம் தந்தான். அவன் என் மனதில் இடமானான். நண்பர்களானவர்கள் இப்படித்தான் ஏதோ ஒரு இக்கட்டில் கைகொடுத்தவர்கள். அருமை நண்பர்கள் ஐவரானோம்.எங்களுடைய அரசமரத்துடன் ஆறுபேராகிவிட்டோம்.மாலையில் அவன் முன்னால் ஒன்று கூடுவோம். அன்றைய கூடலில் முதலில் சபைக்கு எடுக்கப்படுவது எமது அன்றைய நிதி நிலைமை எப்படி என்பதே. ஒவ்வொருவன் பொக்கற்றுக்குள் இருப்பதையும் சேர்த்துப்பார்ப்போம். சரி இன்றைக்கு´மொக்கன்´கடையில் புட்டும் இறைச்சிக்குழம்பும் சாப்பிடலாம்.நல்ல ரசமும் குடிக்கலாம்.காசு போதாதா? பிளவ்ஸில் சுடச்சுடப்பாணும் இறைச்சி ரொஸ்ற்றும்.அதற்கும் போதாதா?இருக்கிறது பத்மா கபே வடையும் பிளேன் ரீயும்.இல்லாவிட்டால் பிளேன்ரீ மாத்திரம். பிறகு.. ஒரு உஷார். கவியரங்கம், பாடல்கள், நகைச்சுவைக்கதைகள் ,பேச்சுக்கள்,ஓவியம்கூட அந்தச் "சமாவில்" சங்கமமாயிருந்தது. யாழ் கோட்டையும், அதனுடன்சேர்ந்து அகழியும், முனியப்பர் கோவில் முன்றலில் கிரிக்கெட்  விளையாட்டும், அந்தக்கடலைக்காரியும் கரம் சுண்டல் காரனும் என்று அந்த வெள்ளியின் மாலைப்பொழுதையும் உணர்வு கலந்த ஓவியமாக்கியிருப்பான் ஒருவன் .வசந்தமாளிகைக்கட் அவுட்டில் சிவாஜியையும் வாணிஸ்ரீயையும் பாவங்களுடன் வரைந்த அவனின் திறமையும் அந்த மரத்தடியில் அரங்கேறியது. இவன்சொல்லுவான் பாரதியின் கண்ணம்மாவிற்கு காற்சட்டை போட்டுப்பார்க்கவேண்டும், மினி போட்டுப்பார்க்க வேண்டுமென்று. அதன் அர்த்தமே பாரதியார் பாடல்களிற்கு புதுமெட்டுக்கட்டிப் பாடுவதுதான். இவனொருபாடகன். சினிமாப்பாடல்களைப் பாடிவிட்டு அதேமெட்டில் திருக்குறளையும் பாடுவான். ஆர்வம் இவனால் எமக்கு வந்தது. திரைப்படம் பார்த்தால் எழுத்தோட்டத்திலிருந்து சுபம் வரைக்கும் ஒரு வரிவிடாமல்கதை இசை பாடலென்று திரையில்லாமல் சொல்லும் கதைஞன் மற்றவன்.மேசை, கதிரை கரண்டி தகரடப்பாக்களில் இசை வழங்கும் இன்னொருவன்.அந்தி நேரக்கூடலில் வெறும் தகரடப்பாவில் நல்ல இசையை வழங்கி அப்பொழுதை களைகட்டச்செய்வான். 'சோகத்திலும் சுகம் இருக்கிறது' என்று சிரித்துக்கொண்டு நகைச்சுவையாகப்பேசுவான். "வாழ்க்கையில் துவண்டு மடிதல் கூடாது" என பலமாகவே நம்பிவந்தான். எவ்வளவகலகலப்பு,சந்தோஷம், சைக்கிள் ஓட்டம்,விளையாட்டு வேடிக்கையென்று களைப்பு அறிந்திராத வயது.

விளையாட்டு,விளையாட்டு. கிரிக்கெட்டென்றால் பைத்தியம்.பைத்தியத்தையும் மிஞ்சிய நிலை.மதியம் ஆகிக்கொண்டிருக்கின்ற காலை.வெயிலும் சுள்ளென குத்தத்தொடங்குகின்ற நேரம். சந்திக்குச்சந்தி மீன்காரனைப்பார்த்துக்கொண்டு அம்மாக்கள்.அம்மா உலையை அடுப்பில் வைத்தபின்புதான் பையையும், காசையும் கையில் திணித்து, "ஓடிப்போய் தேங்காய் வாங்கிக்கொண்டுவா உடைச்ச தேங்காய் பழுதாகிக்கிடக்கு"என்று விரட்டுவா. கடைக்குப்போவதற்கு வேறு பாதையிருந்தாலும் என்னவோ கிறவுண்டடியால் போகிற பாதையில்தான் சைக்கிள் திரும்பும்.பார்க்கக்கூடாது என்றுதான் நினைப்பேன்.ஆனாலும் பார்ப்பேன்.பந்து வீசுகிறான் ஒருவன்.விளாசுகிறான் இன்னொருவன்.அந்தவிளாசலுக்கு சுழித்து ஒரு பந்து எறியவேணும்."ரிப்" வரும்.அல்லது"கச்" வரும்.அல்லதுவிக்கற் பறக்கும்."எல்பி டபிள்யூ" ஆ அந்தக்கதையே கிடையாது. அவன் அழாப்பிவிடுவாங்கள். கை துருதுருக்கிறது.ஒரு பந்து,ஒரேயொரு பந்து.சைக்கிளை மரத்தில் சாத்தி பையையும் சைக்கிளில் கொழுவிவிட்டுவந்து, பந்தைவாங்கிப்போட வெளிக்கிட்டால்  தேங்காய்,அம்மா,கடை அத்தனையும் மறந்துபோகும்.பந்து போட்டால் போட்டபடியே இருக்கலாம்.மட்டையை வாங்கினால் விசுக்கியபடியே இருக்கலாம்.மத்தியான வெயில்?ஆ.. ஒன்றுமே உறைக்காது. திடீரென அம்மா ஞாபகம் வரும்.தேங்காய், கடை அத்தனையும் ஞாபகம் வரும். தேங்காயை வாங்கிக்கொண்டு ஓடிவருவேன்.அம்மா சோத்தை வடித்துப்போட்டு முகத்தில் உலைபொங்க நிற்பா.பக்கத்துவீட்டில் தேங்காய்கடன்வாங்கி சமையலும் முடிந்திருக்கும். வேர்த்துப்போய், சேட்டும் உடம்போடு ஒட்டிப்போய்வாற என்னைப்பார்க்க அம்மாவுக்கு விளங்கும், ராசன் கிரிக்கெட்தான் விளையாடிட்டு வாரான் என்று. "உனக்கு உந்த மட்டையில யார் செய்வினை செய்து வைச்சினமோ?"என்று புறுபுறுப்பா.

இப்படி புறுபுறுக்கிற அம்மாதான் எங்கள் எல்லோரையும் இருத்தி சோறுபோடுவா. எல்லோரையும்என்றால் பிள்ளைகளைமட்டுமல்ல. என் நண்பர்களையும்தான்.எங்கள் வீட்டுக்கூப்பன் மட்டையில் பதியப்படாத என் நண்பர்களைத்தான்.மரக்கறி, தயிர், குழம்பு எல்லாவற்றையும் ஒரு பெரிய சட்டியில் போட்டுக்குழைத்து ஒவ்வொரு திரளை திரளையாகத்திரட்டித்தருவா.பூவரசமிலை ஆய்ந்து கையில் வைத்திருப்போம்.நெய் மணக்க மணக்க அந்த திரண்ட விளாம்பழ உருண்டைபோன்ற சோற்றுத்திரளை ஒவ்வொருவர் கையிலும் வைப்பா. அவரவர் ருசிக்கேற்ப வடகம், மோர்மிளகாய், அப்பளம் என்று கடிக்கப்பொரியலும் தந்தபடியே ஒரு சொல்லுச்சொல்லுவா."ராசாக்கள் இப்படியே எப்பவும் ஒற்றுமையா ஒண்டா இருக்கவேணும்" என்று.அவர்களின் வீட்டில் விளைமீன், சூடைமீன் பொரியல் என்று மீன்வகையிருந்தாலும், அம்மாவின் மரக்கறிச் சாப்பாட்டிற்காகவே, சாப்பாட்டு நேரத்தில வருவார்கள். கூடியிருந்து சாப்பிடுவோம். காக்கைக்கூட்டம்போல் என்றும் கூடியே இருந்தோம்.உண்ண எது கிடைத்தாலும் எல்லோரையும் கூவி அழைத்தே உண்டும் வந்தோம்.மழையில் நனைந்த காகங்கள் நாங்கள்.மழைமேகம்கண்டு சிறகை ஒடுக்கி கூட்டுக்குள் அடையவில்லை நாம். மழைபெய்தால் அது இன்னொரு குதூகலம்.மழைபெய்ய மேகம்கறுத்து இருட்டி வருவதே ஒரு இன்பம். இருட்டி வருகிறபோது வீசுகிற காற்று உடலைச்சிலிர்த்துத்தழுவுகிறது வேறொரு இன்பம்.சிறு தூறல்களாக மழைதொடங்க  வரும் புழுதிமணம் ஆனந்தம்.பேரானந்தம்.சைக்கிளில் வந்துகொண்டிருப்போம். மழைசொட்டுச்சொட்டாகக் கொட்டத்தொடங்கும். மழை பெலக்கமுன் வீடுபோய்ச்சேர எல்லோரும் பரபரப்பாவார்கள். நாங்கள் மழையின் வருகைக்காகக்காத்து நிதானித்து நிற்போம்.வீடு கிட்டினாலும்கூட குறுக்குவழியால் போகாமல் நெடுவழிகண்டு போவோம்.சிலவேளை வீட்டைத்திரும்பித்திரும்பிப்பார்த்து வீட்டைத்தாண்டியும் போவோம்.மழை மண்ணிற்காய் பெய்கின்றபோது எம்மைக்குளிப்பாட்டும். பிறகுதான் மண்ணைக் குளிப்பாட்டும். மழையில் நனைந்த காகங்கள் செட்டையைச்சிலிர்த்துக்கொள்வதுபோல உடல் சிலிர்த்துக்கொள்ளும்.மனதில்  இன்பம்தான் கரைபுரண்டு ஓடும். காக்கைக்கூட்டமாக நாங்கள் வாழ்ந்தோம்.கலகலவென்று சிரித்திரிந்தோம். கவலைகன் மறந்து திரிந்த எங்களுடைய கூட்டம் அது.கல்லெறி ஒருநாள் விழுந்தது.மிகக்கனத்த கல்லெறி.காயங்களுடன் சிதறிப்போகிறமாதிரி கனத்த கல்லெறி.

இளைஞர்கள் ஊர்ஊராக வேட்டையாடப்பட்டுக்கொண்டிருந்தநாட்கள் அவை.இரவிரவாக இளைஞர்கள் இல்லாமல்போன நாட்கள் அவை.கரும்பச்சை வாகனம் கரும்புகைகக்கி வீதியை அதிரவைத்த நாட்கள்.வருகின்ற செய்திகள் அனைத்தும் அச்சம் கொடுத்த நாட்கள்.செய்தியின் தலைப்புக்கள் இரத்தத்தால் எழுதப்பட்டு வந்த நாட்கள்.

அம்மா போகச்சொன்னா "ராசா எங்கையெண்டாலும்..."

"எங்க போறது?எல்லோருக்கும் இருக்கிற கஷ்டந்தானே?" இந்த நாட்களில் ஒருநாள்கூடலில் ஒருவன் தன் வெளிநாட்டுப்பயண அறிவித்தலை எம்முன்னால் வைத்தான். வீட்டில்எல்லாம் முடிவாகி, முடிவை தீர்மானமாக தன்னிடம் எடுத்துக்கூறினார்களாம்."என்னடா செய்ய" என்று கலங்கிப்போய் எம்முடன் கேட்டான். அவ்வளவு விரைவில் விட்டுவிட்டுப்போகக்கூடிய பந்தமாக எமது நட்பு இருந்திருக்கவில்லை. ஒருநாளைக்கு ஒருத்தன் குறைஞ்சாலே என்னமோ, ஏதோ என்று அவன் வீட்டிற்கே சென்று விடுவோம். ஒருத்தனுக்குச் சுகமில்லையென்றால் அவனைத் தனியாகவிட்டுவிட்டு நாங்கள் களித்திருந்ததில்லை. அவனுக்குத் துணையாக எம்முடைய கூடலும் அவனுக்கு அருகில்தான் நடக்கும். இப்படியிருக்க, சங்கிலிப்பிணைப்பிற்குள் ஒரு சங்கிலி அறுந்துபோனால் தொய்ந்துபோறமாதிரி மனமும் தொய்ந்து போயிற்று. அவனைத்தேற்றி, அவனின் பயணத்திற்கும் ஆயத்தங்கள் செய்துகொண்டே அழுதோம், மனத்தால் அழுதோம்.அந்த மரமும் சேர்ந்து எங்களோடு அழுதிருக்கும்.எல்லோரும் பொழிந்த கண்ணீர் அடங்குவதற்குள் அவனும் பிரிந்து எம்மைவிட்டுப்பறந்துபோய்விட்டான். போனவன் போட்ட கடிதத்தை அரசமரத்தின்கீழிருந்து வாசித்தோம்.தன் இலைகளும் சரசரக்காமல், எம்முடன்கூடி அவனின் சுகமறிந்துகொண்டதற்குப்பிறகு  அந்தமரம்" ஓ" வென்று இரைச்சலிட்டது.கண்ணீர் சிந்தமுடியாமல்,  வலைகளைச்சொல்லமுடியாமல் இரைச்சலிட்டே தன் வேதனையை அந்தமரம் மறைத்ததுபோலத்தெரிந்தது. என்றும் சலசலவென்று சிரிக்கும் அவனின் சோகத்தின் வெளிப்பாட்டை எம்மால் உணரமுடிந்தது.எமக்கிடையில் இசைநின்று போயிற்று. சோகத்திற்குள்ளும் சுகம்கண்டவன், சுகத்தையே சோகமாக்கிவிட்டுப்போயிருந்தான். இசைபிரிந்தபின்னால் பாட்டிற்கென்ன மதிப்பென்று எண்ணினானோ இவனும் பறந்தான். மற்றவனும் பறந்தான்.

இவர்களின் பிரிவால் எமக்கிடையில் வெறுமை படரத்தொடங்கியது.எங்களின் குதூகலமிழந்த முகத்தைக்கண்டு ஏனோ அந்தமரம் தன் செழிப்பும் குன்றத்தொடங்கியது. இலைகளை உதிர்த்தது.சலசலப்பைக்குறைத்து மெளனியாக நின்றது.அந்த மரத்தோடு நின்று சோகம் கொண்டாடிய எனக்கும் கடல்கடக்க நேரம் வந்தது.நானும் தயாரானேன். வேதனை மீதூரக்கடல் கடந்தேன்.புலம்பெயர முடியாத ஒரு நண்பனை அங்குவிட்டுவிட்டு நான் நகர்ந்து சென்றேன். அவன் நினைவுடன்  நாம் அனைவரும் பிரிந்து இப்போது வெவ்வேறு தேசங்களில் வாழ்கின்றோம்.பிரிந்தநாங்கள்  கடைசியில் நரைதட்டி,மூப்பெய்திய பின்னாவது,உயிர்பிரிவதற்கு முன்னர் ஒருமுறையாவது அந்த மரத்தடியில் மீண்டும் ஐவரும் ஒன்றுகூடுவோமா?ஊரில் அந்தமரம் இன்னும் உயிருடன் இருக்குமா?'செல்' அடித்து,பொம்மர் குத்தி அந்தமரம் தன்தலையை இழந்தோ,முண்டமாகியோ அல்லது சிதறிப்போயோ இன்னும் குற்றுயிராயாவது இருக்குமா?இல்லையென்றால் இன்னும் நான்கு இளவட்டங்கள் அதனடியில் குந்தியிருந்து கதைபேசுவார்களா? என்றாவது எம்மைக்காண நாள்வரும் என்ற நம்பிக்கையில் முண்டமாகவோ, முடமாகவோ நிச்சயம் அந்த மரம் உயிர்வாழும் என்றால்,நாங்களும் ஓர்நாள் ஊர் போகத்தான் போகின்றோம்.எம்முடைய சோகங்களையும்,சுகங்களையும் ஒரு சொல்லாவது நாங்கள் அந்த மரத்துடன் பகிர்ந்துகொள்வோம். மனிதர்கள் மட்டும்தான் நமது சொந்தங்களா? இல்லை. பூக்களும்,மரங்களும் மழைகளும், மண்ணும், வானமும், கடலும், காற்றும் இவையெல்லாம்கூட எம்முடைய சொந்தங்கள்தான்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்