அறிமுகம்: கவிஞர் தம்பா (விசாகப்பெருமாள் சந்திரகுமார்)
இன்று புகலிட இலக்கிய உலகில் அறியப்பட்ட கவிஞர்களில் ஒருவர் தம்பா (நோர்வே). ஈழநாடு மாணவர் மலர் மூலம் எழுத்துலகினில் காலடி எடுத்து வைத்தவர். மாணவர் மலரில் அவரது நகைச்சுவைத்துணுக்குகள், கதைகள், தொடர்கதை 'கொரில்லா அரக்கன்' வெளியாகியுள்ளன. ஓவியரான அவரது கேலிச்சித்திரங்கள், ஈழநாடு வாரமலர்ச் சிறுகதைகளுக்கான ஓவியங்களும் வெளியாகியுள்ளன. யாழ் மத்திய கல்லூரி மாணவரான தம்பாவின் இயற்பெயர் விசாகப்பெருமாள் சந்திரகுமார்.
சிரித்திரன் சஞ்சிகை அவ்வப்போது சிறுவர் இலக்கியத்துக்கும் பக்கங்கள் ஒதுக்கியிருந்தது. 'அரும்பு' என்னும் பெயரில் சிறுவர் பகுதி வெளியானது. இப்பெயர் நீண்ட காலம் நீடிக்கவில்லை. பின்னர் 'பாலர் மலர்' என்னும் பெயரில் சிறுவர்களுக்கான பக்கம் வெளியானது. பின்னர் சிறிது காலம் சிறுவர் சஞ்சிகையான 'கண்மணி'யை (!975 காலப்பகுதியில்) சிரித்திரன் வெளியிட்டது. கண்மணி ஓரிரு இதழ்களே வெளியானது. அதன் பின்னர் எழுபதுகளின் இறுதியில் சிரித்திரனில் சிறுவர் பகுதியான 'கண்மணி' வெளியானது. அதுவும் ஓரிரு இதழ்களுடன் நின்று விட்டதுபோல் தெரிகிறது. ஆனால் இக்'கண்மணி' பக்கத்தை நடத்தியவர் வி.சந்திரகுமார் (தம்பா).
கவிஞர் தம்பாவை அவர் சிறுவனாகவிருந்த காலகட்டத்திலிருந்து தெரியும். தம்பா என் தம்பி பாலமுரளியின் (எழுத்தாளர் கடல்புத்திரன்) வயதுக்காரர். அவரது நண்பர்களில் ஒருவர்.
சிரித்திரனின் 'பாலர் மல'ரில் கவிஞர் கந்தவனத்தின் கவிதைகளும் வெளிவந்தன. எனது சிறுவர் கவிதையான 'சிட்டு' அக்காலகட்டத்தில் சிரித்திரனில் வெளியானது. அப்போது நான் யாழ் இந்துக்கல்லூரி மாணவன். ஆனால் அக்கவிதை வெளியான சிரித்திரன் என்னிடமில்லை. அதனால் எந்தச் சிறுவர் பக்கத்தில் அது வெளிவந்தது என்பது நினைவிலில்லை. கண்மணி சிறுவர் சஞ்சிகையில் எனது சிறுவர் கதையான 'அரசாளும் உரிமை யாருக்கு?" ஓவியங்களுடன் வெளியானது.
சிரித்திரனின் ஆரம்பக்கட்டத்தில் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 'சங்கீதப் பிசாசு' சிறுவர் நவீனம் வெளிவந்தது. இதுவே சிரித்திரனில் வெளியான முதலாவது தொடர்கதை. இது சிறுவர் நவீனம் என்பதால் சிரித்திரனின் ஆரம்பத்திலும் சிறுவருக்கான பக்கங்கள் வெளிவந்துள்ளன என்பதை அறிய முடிகின்றது.
கவிஞர் தம்பாவின் கவிதைகள் புகலிடச் சஞ்சிகைகள், தாயகம் (இலங்கை) போன்றவற்றில் வெளியாகியுள்ளன. அவரது கவிதைகள் பல 'பதிவுகள்' இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
தம்பா கவிதைகள்! October 21, 2016
1. தீக்குச்சிகளின் நடனம்.
மேற்கில் விதை தூவி
மத்திய கிழக்கில் உரம் போட்டு
வடக்கில் நீருற்றி
தெற்கில் அறுவடை செய்த
கழிவுப் பொருட்களை
பரவி கடை விரிக்க
காணி நிலம் வேண்டும்.
போரை ஒழித்த துண்டு நிலத்தில்
ஒரு பாரிய
சிலுவை யுத்தத்திற்கு காத்திரு.
இரத்தம் ஊறும் கிணறுகள்
இன்னமும் தூர்ந்து போகவில்லை.
கண்ணையும் காதையும் இழந்த பின்
மீதமாக இருப்பது
உனது மூச்சுக்கு காற்று மட்டும் தான்
என்பதையும் மறந்து விடு.
பட்ட மரக்காட்டின் நடுவே
எட்டு திக்கும் தீ முட்டி,
கையிருப்பில்
ஒரு வாளி தண்ணியுடன்
காக்கும் கடவுளை துணைக்கு அழைக்கும்
சாணக்கியன் நீ.
உன் ஆயுள் பலத்தை திரட்டி
சூரியனைப் பிளந்து
உள்ளிருளைத் தேடு.
2. வட புலத்தில் வேனில் காலம்.
தம்பா இறவாத பகலும்
பிறவாத இரவும்
புணரும் தருணங்கள்.
பனித்தேசத்து துச்சாதனனிடம்
பல மாதங்கள் போராடி
சுதந்திரமாக
ஆடை தரிக்கும் பச்சை மரங்கள்.
நடு இரவாகி
அவனும் அவளும்
காதலோடு அணையும் நேரம்
அனுமதி இன்றி
படுக்கையை ஆக்கிரமிக்கும்
சூரியன்.
தூங்கியும் தூங்காமலும்
விழிகளில் தேங்கும் தவம்.
கல்லாய் தேங்கிய நீர்
மலையைப் புரட்டி
வெள்ளமாய் சினத்த கணங்கள்.
திறந்தது திறந்த படி போட்டு
முற்றத்தில் முடங்கிப் படுக்க;
இருபத்து நான்கு மணி நேரமும்
வானில் காவல் காக்கும்
சூரியத்தேவன்.
நீண்ட கால கருத்தரிப்பில்
ஜனனித்து
சொற்ப ஆயுளுக்குள்
முடிந்து போகும்
மழைக் காலத்து
கானல் நீர். இது.
ஆயினும்
வற்றாத சுகம் தருகிறது.
3. அஸ்தமனத்தின் அஸ்திவாரங்கள். 09 டிசம்பர் 2018
முகில்களை முகர்ந்து பார்க்க
மாடிகளாக வளர்த்த பின்
சலித்து கொள்கிறது
சபித்தும் கொள்கிறது.
அஸ்திவாரத்தில் கிடப்பதெல்லாம்
வெறும் கல்லும் மண்ணும் என்று
சலித்து கொள்கிறது
சபித்தும் கொள்கிறது.
அஸ்திவாரங்களை அலட்சியபடுத்தி
ஆகாயத்தில் ஆடித்தவிக்கும்
அரக்குமாளிகைகளை அழகுபடுத்து.
தோளினிலும் முதுகினிலும்
சவாரி செய்து
சவாரியின் தோலை உரித்து
சப்பாத்துகள் செய்துகொள்.
விரியும் பயணத்தின்
பாதங்களை எப்போதும்
பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
உதவியவனை உதைந்து விழுத்த
ஆத்மார்த்தமான ஆயுதம் அதுமட்டுமே.
ஏறியமர்ந்த முதுகுத்தண்டை பிளந்து
ஊன்றுகோலை வடிவமைத்துக்கொள்,
தடுமாற்றமின்றி முதுகிற்கு முதுகு
தாவிக்கொள்வதற்கு உதவிடலாம்.
எல்லைகளை தொட்ட கணம்
தாங்குபவனையும் சுமப்பவனையும்
தாழ்ந்தவன் என பிரகடனப்படுத்த தயங்கிடாதே.
சூழ்ச்சியின் வெற்றியே
'மனுதர்மம்´ என இறுமாப்பும் கொள்.
மதியின் விதி
மதித்தவர்களை மறந்ததில்லை,
மறந்தவர்களை மதித்ததில்லை.
வறண்ட வளியிலும்
குளிர்ந்த குளத்திலும்
வாழ்வை குலைத்து கொள்ளாது
வந்து போனாலும் பறவைகள்
வேடந்தாங்களை மறந்ததில்லை.
தாய் இன்றி பேறில்லை
வேர்களின்றி மரங்களில்லை.
4. விடுதலைக்குள் விடுகதை! 14 மார்ச் 2023
ஆக்கிரமிப்பின் அங்கீகாரமும்
அழிவின் மூர்க்கமும்
முடிசூடிக் கொண்ட யுத்த நுகத்தடியில்,
உறவின் இழப்பும்
இழப்பின் நினைவுகளை அழித்த
இனத்தின் மேலாதிக்கம்
இறுமாப்புக் கொள்ள,
நினைவுகளின் மீதான வன்முறை
உலக நுண்ணுயிருக்குமான
உரிமையை இழந்து விட்ட வேட்கை
உலகின் தெருக்களெங்கும்
கட்டுடைத்த கவனயீர்ப்பு
சுயமானத்தை பிரகடனபடுத்தி கொள்கிறது.
இனப்போருக்கு முன்னும் பின்னும்
இனப்பகைவர்களற்ற தெருக்களில்
மரித்த எம்மினத்தவனுக்கு
தாழ்த்தப்பட்டவனென பகைசூடி
பிணம் செல்ல வீதித் தடையும்
தீண்டத் தகாதோனுக்கு தகன தடை கோரி நிற்கின்ற
விடுதலை மறவர் நாம்.
மாற்றான் அடக்கு முறை
மகா பாவம் என முழங்கி
இனத்துக்குள் அடக்குமுறையை
பண்பாட்டு பாதுகாப்பு என
புறங்கையால் தள்ளிவிட்டு.
`புனித போர்´ எனக் கொக்கரித்து செரித்தனர்.
தாழ்வாரத்தின் கீழ் தேசியம் சேடமிழுக்க
யமனில்லாது செத்து மடிந்த சுடலையை
உயிர்த்தெழ வைத்துவிட
சாதியெனும் கும்பகர்ணப் பெரும்பேயை
உதிர் முடிகட்டி
தெருவெங்கும் இழுத்து வரும்
பாழ்பாடியின் பெருங்குடிகள்.
5. வைத்தியம்!
மூடிய கல்லறையினுள்
மூச்சு முட்டும் மூலவர்கள்.
`கடவுளை காக்க
மதத்தை காக்கவேண்டும்
மதத்தை காக்க
இனத்தை காக்க வேண்டும்
இனத்தை காக்க
நலிந்தவன் நரம்புகள் அறுத்து
வலிந்தவன் வானெழ வேண்டும்´
சிதையின் சிகரம் ஏறி
சீறி சினந்து சூளுரைத்தவன்
வானவில்லை மறைத்து தலைவனானான்.
தூறல் நின்று வானவில் மறைவதற்குள்
மடியில் மறைத்துவைத்த
ஒருபிடி அரிசியும் களவாடப் பட்டிருந்தது.
கடவுளை கூவி அழைத்தனர்
காக்கவில்லை,
மதத்தை தொழுதனர்
பலனில்லை,
இனத்தை வேண்டினர்
எழுந்திருக்கவில்லை,
தலைவனை இறைஞ்சினர்
காணவில்லை.
காக்க இன்னொருவன் வருவானென்று
கடவுள் துகில் கொள்ள சென்றார்
6. கவிதைகள் இரண்டு! 14 மே 2018
6a. இருப்பில் இல்லாத கடன்.
இரண்டு வீடு
மூன்று கார்கள்
இலட்சம் இலட்சமாக பணம்
வங்கி வைப்புகளில் இருந்தும்
நேரத்தை கடன் வேண்டியே
செலவு செய்யும்
மேலத்தேய பிச்சைக்காரர்கள் நாம்.
நேற்றய தினமும்
நேற்றய முன் தினமும்
இன்றய தினத்திலிருந்து
நேரத்தை திருடி தின்று
ஏப்பம் விட்டு விடுகின்றன..
நாளைய தினத்திலோ
நாளைய மறு தினத்திலோ இருந்து
நேரத்தை கடன் வேண்டியே
செலவு செய்ய வேண்டிய நிலை இன்று.
நாளாந்த கடனாளி மீண்டுவிடுவான்.
நாமோ ஆயுள் கடனாளியாக
சபிக்கப்பட்டவர்கள்.
நேரம் பொன்னானது தான்,
இந்த பொன்னை மட்டும் தான்
யாராலும் திருட முடிவதில்லை.
நான் மட்டுமே திருட முடிகிற
பாதுகாப்பான வங்கிக்கணக்கு.
எனக்கு நானே கடனாளியாகும்
காலக் கணிதம் இது.
வெளியே சொல்லி சிரிக்கமுடியாத
சோகமானாலும் வசதியாக போகிறது
இந்தக் கடன் மட்டுமே
யாருக்கும் தெரியவராததால்
மானத்தை காத்தும் வைக்கிறது.
வரவையும் செலவையும்
எந்த கம்ப்யூட்டரினாலும்
விடுவிக்க முடியாதது புதிர்
நேரக்கணக்கு மட்டும் தான்.
அனுமார் வால் போல்
நீண்டு வளர்கிறது நேரக்கடன்.
ஆயினும்
மூன்றாம் உலக நாடுகளை போல்
இதுவும் திரும்பிச் செலுத்தபடாத
அதிசய கடனாகிறது.
நேரக் கடனை வசூலிக்க
எந்தக் கடன் காரர்களும்
என் வீட்டு கதவை தட்டியதில்லை,
எமதர்மராசாவை தவிர..
6b. ஓரடி முன்னே, ஈரடி பின்னே.
முக்காலமும்´ டிஜிற்றல் ` பூச்சில்
சுகந்தம் என
உடல் மகிழ்ந்து
சுமைகளோடு மெல்ல மெல்ல
முன்னேறி தவழ்கிறது.
நெருப்பையும், சில்லையும் கண்டறிய
கற்காலத்திற்கு பறக்கின்ற
தலையின் தீவிர கழிவிரக்கம் இது.
குருகுலம் தொடங்கி
ஆண்டான் அடிமை
சமூகத்தை மீட்டெடுக்கும்
ஆசையில் விக்கி தவிக்கிறது.
குருடர்களுக்கு எல்லாம்
ஒற்றைக் கண்ணன் மட்டுமே
இராஜாவாக முடியும்.
இது விதியன்று
சதியின் மதியுமன்றோ?
7. ஏட்டிக்குப் போட்டி, சிறை ஒன்று அடிமைகள் வேறு. 12 மார்ச் 2018
7a. ஏட்டிக்குப் போட்டி.
பாலைவானத்து குருமணலை
நீர்வற்ற வறுத்து
குளிசைகளாக பிணைந்து
வறண்ட தொண்டைக்கு
தாகசாந்தி செய்யும்
வைத்திய வைரியர் நாம்.
எதிர்த்தவன் வீட்டு
முகடு எரிவதை
ரசித்து குதிக்கிறான்
தன் வீட்டு
அத்திவாரம் தகர்வதை மறந்து.
பற்ற வைத்ததவன்
தொற்றவைத்து பதறவைக்க
தகர்ந்தவன் தடுமாறுகிறான்
தகடு வைத்து தவறிழைக்க.
அநியாயத்தை மற்றோரு
அநியாயம் மூலம்
நியாயம் செய்து விடும்
இருட்டினுள் கருப்பை தேடும்
குருடர்களும் நாம் தான்.
7b. சிறை ஒன்று அடிமைகள் வேறு.
பாலைவானத்து குருமணலை
நீர்வற்ற வறுத்து
குளிசைகளாக பிணைந்து
வறண்ட தொண்டைக்கு
தாகசாந்தி செய்யும்
வைத்திய வைரியர் நாம்.
எதிர்த்தவன் வீட்டு முகடு எரிவதை
ரசித்து குதிக்கிறவன்
தன் வீட்டு அத்திவாரம்
தகர்வதை மறந்து போகிறான்.
பற்ற வைத்ததவன்
தொற்ற வைத்து பதற வைக்க
தகர்ந்தவன் தடுமாறுகிறான்
தகடு வைத்து தவறிழைக்க.
பகலென்று இரவையும்
இரவென்று பகலையும்
கண் திறவாமல் கதை சொல்லும்
கல்லாத காவலர்களின் களமிது.
பற்றி எரியும் நகரங்களை
பெற்றோல் ஊற்றி
அணைக்க வரும் தர்மவான்கள்.
தீயில் பொசுங்கும் குழந்தைகளிடம்
ஓடோடி வந்து மலர் தூவி
ஆசிர்வாதம் செய்கிறார்கள்
அடுத்த பிறப்பில்
தம் இனத்தில் பிறக்க வேண்டி.
அநியாயத்தை இன்னொரு
அநியாயம் மூலம்
நியாயம் செய்து விடும்
இருட்டினுள் கருப்பை தேடும்
குருட்டு விற்பன்னர்களும் நாம் தான்.
பிறக்கும் போது திறவாத கண்கள்
இறக்கும் போது மூடுவதில்லை.
8. கவிதைகள்: மறந்த கதை! ஐ போனில்´சுட்ட வடை!
8a.. மறந்த கதை
தம்பாதலை பெருத்து விழிபிதுங்க
காற்றுப்போன பலூன் போல
உடல் ஒடுங்கி
முதுகெலும்போடு ஒட்டிக்கொள்கிறது,
அரித்துக் கொட்டிய
சுவாசப்பையின் நாளங்கள்
ஆக்சிஜன் காற்றை உள்ளிழுத்து
வைத்துக் கொள்ள முடியாதளவுக்கு
ஆயிரம் ஓட்டைகள்
கணத்தில் விழுந்து விடுகிறது.
ஈக்களும், கொசுக்களும்
புகையடித்து சுருண்டு வீழ்ந்து
துடிக்கும் போது
ரசித்து நகைத்தது போல்
பிஞ்சுகளின் மரண வலியையும்
மூச்சு திணறலையும்
நாசிகளின் பேரன்கள்
தொலைக்காட்சியில் லயித்துக் கொள்கின்றனர்.
மனித குலம் மேம்பட
மறவராய் புறப்பட்ட செம்பட்டை
மாற்றான் தோட்டத்து
மல்லிகைப் பூவை கூட
மலர விடாது தடுத்துவிடுகிறது. கணமும் தினமும்
நாசியத்தை மனச்சட்டியில் வைத்து
எரிக்கும் அயலவன்
முறிந்து விழும் முதுகெலும்புகளை சேகரித்து
சேனை படைக்கு
கவசம் தயாரிக்க தவமிருக்கின்றான்..
மத்திய கிழக்கில்
தொடங்கிய போர்கள்
மூன்றாம் உலக மாகாயுத்தத்திற்கான
அறிகுறியாக இருக்கலாமோ என
யூகிக்க சிரமப்பட்ட போதெல்லாம்
இல்லவே இல்லை
இவை இரண்டாம் உலக மாகா யுத்தத்தின்
நீட்சி தான் என
அறைந்து சொல்கின்றன
இரசாயன குண்டுகள்.
´அவுஸ்விட்ச்´ நாசி வதைமுகாம்
வரலாற்றின் முடிவல்ல,
அது சிரியாவில்
நடமாடும் முகாம்களாக மீளமைக்கப்படுகிறது.
8b. ஐ போனில்´சுட்ட வடை
காற்றை கிழித்து
கிழிந்த சட்டை போட்ட
நெளிந்த சைக்கிள்
சிறுவனின் கடிவாளத்தில் கிடுகிடுக்கிறது.
சைக்கிள் பாருக்குள்ளால்
அந்தப்பக்கம் இந்தப்பக்கமுமாக
மூச்சிரைக்கும் தலையும் உடலும்.
வறண்ட வாய்க்கால் மதகில்
படுத்தபடி
உச்சி வெய்யிலுக்கு புகை போடும்
உயர் தர மாணவனைக் கண்டு
வெறுங்காலை டயரில் தேய்த்து
எட்ட நின்று நிதானித்து சைக்கிள்
உருண்டு வந்து கேட்டது
" பொட்டலமா? போத்திலா?" .
எட்டாத ஸீட்டுக்குள்ளிருந்து
`குடு´ பொட்டலம் வெளிவந்து
பணப்பொட்டலம் உள்ளேறிக் குந்தியது.
கொடுத்தும் வேண்டியும்
உயிர் பரிமாறும் காலம் இது.
கிழிந்த சட்டைக்கோ
ஐ போன் வேண்டக் கனவு,
தெளிந்த சட்டைக்கோ
ஐ போன் விட்டு
வெளி நாடு போகக்கனவு.
வீதியால் நெஞ்சை நிமிர்த்தி வந்த
பெரிய வாத்தியார்
கண் காது மூச்சு எல்லாவற்றையும்
உள்ளிளுத்து மரக்கட்டையாய் மாறி
கரையால் ஒதுங்கிப் போனார்.
சந்தியில் பட்ட நால்வரிடம்
`ஊர் கெட்டுப்போச்சு´ என பல்லவி சொல்ல
`ஊரோட மனச்சாட்சி´ என
சரணம் சொன்னது சாராய நாற்றம்.
ஓயாத தேசியம்
ஒழித்துப்போட்ட வேர்கள் இவை.
வறுமையின் இயலாமை
வெறுமையின் நிழலில் துளிர்க்கிறது,
"கறையான் அரித்த தண்டவாளமும்
காண்பாயோ ?,
கண் கெட்டபின்
சூரிய நமஸ்காரமும் செய்வாயோ?"
9. வீதியின் நீதி
ஆயுதங்கள் நிறைத்து
தெருக்களை ஆட்சி செய்த காலங்களில்
வீதிகளில் கொல்லப்படுவதற்கு
ஆட்கள் இல்லாது போனது
குறையாகவே இருந்தது.
போரை அழித்த
சமாதானப் புறாக்கள்
புதைகுழிகள் மேல் மண்சோறு உண்டு
வீதிகளை புனிதப் படுத்தின.
சாதாரணனுக்கு
இனிப்பும் சல்யூட்டும் வழங்கி
முகஸ்துதி செய்தன.
நம்பி நிறைந்தன வீதிகள்.
தூதர்களை பூட்டி வைத்து
அலுகோசுகளை திறந்து வைத்தனர்.
தன்னியங்கி இயந்திரங்கள்
சாதாரணனனின் இதயத்துக்கு
துப்பாக்கி ரவைகள் பரிசாக வழங்கி
வாழ்ந்ததற்கு
வழக்குகள் பதிய வைக்கின்றன.
எத்தெரு ஆனாலும்
எத்திசை போனாலும்
அவை ஒரு வழிப்பாதையாகிவிடும்
உலக அதிசயம் இங்கு நிகழ்கிறது.
உயிர்ப்போடு போகிறவர்கள்
விறைப்பாக எடுத்து வரப்படுகிறார்கள்.
புறாக்களின் ஒட்டுச் சிறகுகள்
வீதியெங்கும் கொட்டி பரவுகின்றன.
வீதிகளின் விதி என்னவோ?
விதிகளின் வீதி என்னவோ?
10. நிலவுக்கு எம்பிக் குதி.
ஜனநாயகம் என்பது
நாணயத்தின் இரு முகங்கள் போன்றது.
தலையாக அவன் வென்றால்
காலடியில் பூவாக நீ நசிவதும்
பூவாக நீ மணம் கமழ்ந்தால்
அவன் சேற்றில் தலை மூழ்கிப் போவதும்
சக்கர சுழற்சியின்
வலிகள் மானிடா.
ஆயினும்
ஆண்டான் அடிமை என்பது
காலப்பெட்டகத்துள் அடைக்கபட்டதால்
உனது அடிமை விலங்கு
காலக்கிரகத்தில்
கழட்டப்பட்டே தீரும் தோழா.
சுண்டி வீசி
அக்கம் பக்கம் தவறாது
குத்தென நாணயம்
நின்றுபோன சகுனம்
`தலை´ கொய்யப்பட்டு
`பூ´ கசக்கப்பட்டு
சர்வ அதிகாரங்களும்
முண்டங்களினால் ஆளப்படும்.
பொன்
வெள்ளி
செப்பு
என விதம் விதமான கைவிலங்குகளை
தெரிவு செய்யும்
ஜனநாயக உரிமையை
நினைந்து நினைந்து
பூரித்து அடைகாத்து கரைவாய்,
பாலைவனத்தில் திசை தெரியாதவன்
காணல் நீரைக் கண்ட
நம்பிக்கை போல.
"ஜனநாயகம் என்பது
மக்களால்
மக்களைக் கொண்டு நடைபெறும்
மக்கள் அரசாங்கம் !".
என்று முழங்கு.
சக்கரத்தின் மையம் மட்டும்
எப்போதும் மாறாத புள்ளியில்
தரித்து நிற்கும்