அண்மையில் ஓரு அலைபேசி அழைப்பு வந்திருந்தது. என் அலைபேசி இலக்கத்தை கலை, இலக்கிய ஆர்வலரும், அறிவியல் எழுத்தாளருமான நா.பத்மநாப ஐயரிடமிருந்து பெற்றதாகவும் , அண்மையில் நான் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் சிரித்திரனில் வெளியான 'சங்கீதப் பிசாசு' சிறுவர் நாவலின் அத்தியாயங்களுடன், ஆரம்பக் காலத்துச் சிரித்திரன் இதழின் அட்டைப்படங்களையும் உள்ளடக்கி முகநூலில் பகிர்ந்திருந்த பதிவினை அவர் தன்னுடன் பகிர்ந்திருந்ததாகவும், தான் மருத்துவர் கனக சுகுமார் என்றும் தெரிவித்தார்.
எனக்கு அவரது பெயர் உடனடியாக நினைவில் வரவில்லை. நான் முன்னர் அறிந்திருந்ததாகவும் நினைவிலில்லை. அப்பொழுதுதான் அவர் கூறினார் சிரித்திரனில் வெளியான நேர்காணல்கள் பலவற்றைத் தானும் சட்டத்தரணி பொன் பூலோகசிங்கமுமே கண்டு எழுதிவந்ததாகக் கூறினார். உடனடியாக நினைவுக்கு வந்தார்.
சிரித்திரனில் வெளியான நேர்காணல்கள் பலவற்றை நான் விரும்பி வாசித்தவன். இசை (நாதஸ்வர, தவில், வயலின், மிருதங்கம்), ஓவியம், எழுத்து (கவிதை, புனைகதை),நாட்டியம் , நாடகம் எனப் பல்துறைகளில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் பலருடன் கண்ட நேர்காணல்கள் அவை. மிகவும் முக்கியமான ஆவணங்கள் அவை. எம்.ஏ.நுஃமான், பாலேந்திரா, ஆனந்தராணி பாலேந்திரா, அ.மாற்கு, சிரித்திரன் ஆசிரியர் சுந்தர், என்.கே.பத்மநாதன் , சி.மெளனகுரு, தனதேவி சுப்பையா, குழந்தை சண்முகலிங்கம், நந்தி, மாத்தளை வடிவேலன், சி.வி.வேலுப்பிள்ளை எனப் பலருடன் நடத்திய நேர்காணால்கள் அவை. கலைஞர்கள் இவர்களைப்பற்றி அறிவதற்கு மட்டுமல்ல ஆய்வுகள் மேற்கொள்வதற்கும் உறுதுணையானவை.
இந்நேர்காணல்களையெல்லாம் தொகுத்து 'தேன்பொழுது' என்னும் தலைப்பில் நூலாக்கியுமுள்ளார்கள். நான் இதுவரை அறியாத விடயம். உள்ளடக்குத்து நன்கு பொருத்தமான் பெயர். கலைஞர்களுடன், அவர்கள்தம் கலைகளுடன் நாம் கழிக்கும் பொழுதுகள் தேன்பொழுதுகள் அல்லவா. கவித்துவம் மிக்க படிமத்தைத் தலைப்பாக்கியிருக்கின்றார்கள்.
இத்தொகுப்பின் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் (ஓவியர் சுந்தர்) அவர்களுடனான நேர்காணல். சுந்தர் போன்ற பல்வேறு புனைபெயர்களில் சிரித்திரன் ஆசிரியர் சிரித்திரனில் கேலிச் சித்திரங்கள் வரைவதை அறிந்திருக்கின்றேன். ஆனால் தேனுகா என்னும் பெயரில் கதைத்தேன் என்னும் குறுங்கட்டுரைகளை எழுதியவரும் அவரே என்பதை இந்நூலிலுள்ள நேர்காணலின் மூலமே அறிந்துகொண்டேன்.
இந்நூல் எண்ணிம நூலகமான நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான இணைய இணைப்பு
அங்கு சென்று உங்கள் பொழுதையும் தேன்பொழுது ஆக்குங்கள்.