- 'சித்திரா' மரியதாஸ் -
எழுத்தாளர் சிவராசா கருணாகரன் யாழ் சித்திரா அச்சக உரிமையாளராக எண்பதுகளில் அறியப்பட்ட 'சித்திரா' மரியதாஸ் அவர்கள் 8.11.2024 மறைந்த செய்தியினைப் பற்றிய குறிப்பினைப் பகிர்ந்திருந்தார். இவர் இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.
'சித்திரா' மரியதாஸ் அவர்களுடனான எனது தொடர்பு மிகவும் குறுகியது, ஆனால் நினைவில் நிலைத்து நிற்பது. 1980/1981 காலகட்டத்துக்குரிய மொறட்டுவைத் தமிழ்ச் சங்கத்தின் இதழான 'நுட்பம்' சஞ்சிகையின் இதழாசிரியர் குழுத்தலைவராக இருந்த சமயம், அதற்கு ஆக்கங்கள் தேடி யாழ் பல்கலைக்கழகத்துக்கும் சென்றிருந்தேன். அங்கு அப்பொழுது பணியாற்றிக்கொண்டிருந்த விரிவுரையாளர் மு.நித்தியானத்தனைச் சந்தித்தேன்.
அப்பொழுது அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மலையகத் தமிழ் மாணவர்களின் அமைப்பொன்று வெளியிட்ட தமிழ்ச் சஞ்சிகையொன்றினைக் காட்டினார். அதன் வடிவமைப்பு, அச்சமைப்பு பிடித்துப்போகவே அதை அச்சடித்த அச்சகம் பற்றிக் கேட்டேன். அப்பொழுதுதான் அவர் சித்திரா அச்சகம் பற்றிக் குறிப்பிட்டார். அங்கே நுட்பம் சன்சிகையினை அச்சடிப்பதற்கு முடிவு செய்தேன்.
அதன் பின்னர் அவருடன் சித்திரா அச்சகம் சென்றேன். அவர் அதன் உரிமையாளர் மரியதாசை அறிமுகப்படுத்தினார். நுட்பம் சஞ்சிகையைச் சிறப்பாகச் சித்திரா அச்சகம் அச்சடித்துத் தந்தது. அதன் பின்னர் நான் மரியதாஸ் அவர்களைச் சந்திக்கவில்லை. ஆனால் இலங்கைத் தமிழ் மக்களின் ஆயுதப்போராட்ட வரலாற்றில் சித்திரா அச்சகம் நிலைத்து நிற்கும்படியான சம்பவமொன்று ஜனவரி 1982இல் நடந்தது. தமிழ்ப்போராளிகள் புலி, புளட் என்று இரண்டாகப் பிளவு பட்ட சமயம் நடைபெற்ற முதலாவது படுகொலை அங்குதான் நடந்தது. புளட் அமைப்பைச்சேர்ந்த 'புதியபாதை' சுந்தரம் படுகொலை செய்யப்பட்டது அங்குதான்.
இந்த சம்பவத்தின் பின்னர் 'சித்திரா' மரியதாஸ் அவர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டதாக அறிந்திருக்கின்றேன். அவ்வப்போது அவரைப்பற்றிய செய்திகளை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கின்றேன். இப்பொழுது அவரது மறைவுச் செய்தியை அறிந்தேன்.