பயணத்தொடர் - யப்பானில் சில நாட்கள் (6 ) காமகுரா அமிதா புத்தர்! - நடேசன் -
டோக்கியோவிலிருந்து கிழக்கே காமகுரா போகும் வழி கடற்கரைச்சாலை ஒரு பக்கம் கடற்கரை மறுபகுதியில் மலைத்தொடர்களைப் பார்க்க முடிந்தது. இந்த மலைத்தொடரின் மத்தியில் யப்பானின் முக்கிய ஃபூஜி மலை உள்ளது. இந்தியாவில் இமயமலைபோல், யப்பானிய மதச் சடங்குளிலும் இலக்கியத்திலும் ஃபூஜி மலை கருப்பொருளாக உள்ளது. தற்காலத்தில் வெளிநாட்டினரும் இங்கு செல்வதும் மலையேறுவதும் முக்கிய ஒரு விடயமாக உள்ளது.
நாங்கள் சென்ற இலையுதிர்காலத்தில் காலத்தில் பஸ்ஸில் போகும்போது பனிபடர்ந்த சிகரங்கள் மத்தியில் ஃபூஜி மலையை எங்களால் பார்க்க முடிந்தது . எரிமலையானதால் வெள்ளை பனி, மலை முகட்டிற்கு கொடுத்தகம்பிளித் தொப்பி போன்ற வடிவம் கவர்ச்சியானது. மலைச்சிகரம் பெரும்பாலும் மேகங்களால் மறைக்கப்பட்டு இருக்கும்.
அழகானதாக இருந்தபோதிலும் இந்த மலையை வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டும் ஏற முடியும். மற்றைய காலத்தில் பாதுகாப்பிற்காக மற்றவர்களை அனுமதிப்பதில்லை என்றார். ஃபூஜி மலை மற்றைய மலைகள் போன்றது அல்ல. அது ஒரு எரிமலை கடைசியாக 300 வருடத்திற்கு முன்பாக பொங்கியது. நமது நாடுகளில் வானிலை அறிக்கையில், மழை வெயிலைக் காண்பதுபோல் தினமும் ஃபூஜி மலையின் நடத்தைகளை அறிவிப்பார்கள் . டோக்கியோவிற்கு அண்மையில் ஃபூஜி மலை இருப்பதால் மக்கள் உணவுகளை வாங்கி வைப்பதும், எரிமலையின் பொங்கலை எதிர்பார்த்து இருப்பதுமான விடயங்கள் நடப்பதாக ரிச்சாட் சொன்னபோது எரிமலையை மடியில் கட்டியபடியே வாழ்க்கைதான் டோக்கியோ மக்களுக்கென நினைக்கத் தோன்றியது.
எங்களுக்கு மலையேறும் எண்ணம் இல்லாதபோதிலும் ஃபூஜி மலை பற்றிய சுவையான விடயங்கள் அறிய முடிந்தது. பத்து மணி நேரத்தில், தான் மலைக்கு ஏறியதாகச் சொன்னார் ரிச்சாட் என்ற அந்த இளைஞர். மலையின் மேல் குடிசைகள் உள்ளதால் ஏறுபவர்கள் மலையின் பல இடங்களில் தங்கிச் செல்ல முடியும் . யப்பானில் அடிக்கடி சொல்லும் வசனம் உள்ளது: “ஒரு முறையாவது ஃபூஜி மலை ஏறாமல் விட்டால் நீ முட்டாள் ஆனால் , இரண்டாவது தடவை ஏறினால் அதை விட முட்டாள் “.