நூலகர் என்.செல்வராஜாவின் சேவையினைப் பாராட்டும் வகையில் குமரன் பதிப்பகம் 'நூலகவியலாளர் என்.செல்வராஜா சேவை நயப்பு மலர்' என்னும் தொகுப்பினை வெளியிட்டுள்ளது. நூலகரின் எழுபதாவது அகவைப் பூர்த்தியையொட்டி வெளியாகியுள்ள இந் நூலில் 27 கலை, இலக்கிய ஆளுமைகளின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தொகுத்தவர் க.குமரன். தொகுப்பு மிகவும் சிறப்பாக வெளியாகியுள்ளது. இந்நூலில் இடம் பெற்றுள்ள எனது கட்டுரையினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். நூலகருக்கும் என் வாழ்த்துகள்.
நூல் தேட்டத் தொகுப்புகள் : நூலகர் என்.செல்வராஜா அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஆரோக்கியப் பங்களிப்பு! - வ.ந.கிரிதரன், எழுத்தாளர், 'பதிவுகள்' இணைய இதழ் ஆசிரியர் -
நூல்களை ஆவணப்படுத்தலென்பது முக்கியமானதொரு தேவை மட்டுமல்ல சேவையும் கூட. அது மானுட சமூகமொன்றின் அறிவு, பாரம்பரிய நம்பிக்கைகள் ஆகியவற்றை மட்டும் பாதுகாக்கவில்லை. மானுட வரலாற்றையும் , மானுட வரலாற்றின் தொழில் நுட்ப வளர்ச்சியையும், மானுட ஆளுமைகளைப் பற்றிய விபரங்கள், அவ்வாளுமைகள் மானுட சமுதாயத்தின் மீது ஏற்படுத்திய நேர்மறையான, எதிர்மறையான தாக்கங்கள் ஆகியவற்றையும் எடுத்துக்காட்டும் சான்றுகள், ஆவணங்களையும் பாதுகாக்கும் செயற்பாடு அது.
இவை மட்டுமல்ல இன்னும் பல ஆரோக்கியமான பங்களிப்புகளையும் சுட்டிக் காட்டலாம். அறிவியல் நூல்கள் அறிவியல் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதுடன், தொடர்ச்சியான அத்துறைகளில் நடைபெறும் ஆய்வுகளுக்கும் உற்ற துணையாக விளங்கின்றன. மொழியின் வளர்ச்சியை, அதன் இலக்கணத்தை முறையாகப் பேணுவதற்கும், மொழியின் அழிவைத்தடுப்பதற்கும் நூல்களும், அவற்றின் சேகரிப்புகளும் உதவுகின்றன. உதாரணத்துக்குத் தமிழரின் பழம் பெரும் நூலான 'தொல்காப்பி'யத்தைக் கூறலாம். சமூக நீதி, அநீதி பற்றிய வரலாற்று ஆவணங்களாக இருக்கும் அதே சமயம் தொடர்ந்தும் சமூக நீதியைப் பேணுதற்கு உதவியாகவுமிருக்கின்றன.
இத்தகையதொரு சூழலிலேதான் நூலகர் என்.செல்வராஜாவின் 'நூல் தேட்டம்' என்னும் ஆவணத்தொகுப்புகள் முக்கிய பங்கினை ஆற்றுகின்றன. ஒவ்வொரு தொகுப்பும் ஆயிரம் நூல்களைப் பற்றிய விபரங்களை உள்ளடக்கியுள்ளன. வெறும் தகவல்களை மட்டும் கொண்ட தொகுப்புகள் மட்டும் அவை அல்ல. பல நூல்களைப்பற்றிய, நூலாசிரியர்கள் பற்றிய சுருக்கமான விமர்சனக் குறிப்புகளையும் அவை உள்ளடக்கியுள்ளன. இவ்விதம் நூல்களைப் பற்றிய விபரங்களைச் சேகரிப்பதும் , விமர்சனக் குறிப்புகளைத் தொகுப்புகளில் உள்ளடக்குவதும் சாதாரணமான விடயமல்ல. மிகுந்த அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பையும், நேரத்தையும் மற்றும் செலவையும் வேண்டி நிற்பவை. இத்தொகுப்புகள் ஒவ்வொன்றின் பின்னாலும் நூலகர் செல்வராஜா அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும், சமூகப் பிரக்ஞையும் இருக்கின்றன.
'நூல் தேட்டம்' தொகுப்புகளுடன் மட்டும் அவர் நின்று விடவில்லை. நூலகராகப் பணி புரிந்த அவரது நீண்ட கால அனுபவங்கள் நூலகத் துறையில் மேலும் பல நூல்களை எழுத வைத்துள்ளன. உதாரணத்துக்கு கிராம நூலகப் பொறுப்பாளர்களுக்கான வழிகாட்டி (1989), கிராம நூலகங்களும் அபிவிருத்தியும் (1989), நூலகப் பயிற்சியாளர் கைநூல் (1989), நூலகர்களுக்கான வழிகாட்டி (1990), சனசமூக நிலையங்களுக்கான கைநூல் (1990), ஆரம்ப நூலகர் கைநூல் (1991) போன்ற நூல்களைக் குறிப்பிடலாம். அவரது 'யாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு (2001)' முக்கியமானதொரு தொகுப்பு நூல்.
அத்துடன் அயோத்தி நூலக சேவைகள் 1985 முதல் 1991 வரை வெளியிட்ட 'நூலகவியல்' காலாண்டிதழின் பிரதம ஆசிரியராகவும் நூலகர் என்.செல்வராஜா இருந்திருக்கின்றார். அதுவும் முக்கியமானதொரு பங்களிப்பு.
நூலகர் என். செல்வராஜா அவர்களின் நூல் ஆவணத்துறை, நூலகத்துறை ஆகியவற்றுக்கான ஆக்கபூர்வமான பங்களிப்புகள் நன்றியுடன் விதந்தோடப்பட வேண்டிய பங்களிப்புகள். இன்னும் நீண்ட காலம் தேக ஆரோக்கியத்துடனும், இன்றுள்ள இதே துடிப்புடனும், ஆர்வத்துடனும் அவரது வாழ்வு அமைந்திட மனப்பூர்வமான வாழ்த்துகள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.