1
தமிழ் இலக்கிய வரலாற்றில் வெங்கட்சுவாமிநாதன், கா.நா.சு., அசோகமித்திரன், பாலகுமாரன் போன்ற நீண்ட ஓர் பட்டியல் இருந்திருந்தாலும், தமது அரசியல் பாத்திரத்தை நன்கு பிரக்ஞையுடன் தெளிவுற வகுத்துக்கொண்டவராக ஜெயமோகனைக் குறிப்பிடலாம். முக்கியமாக ஒரு சாதீய இந்தியச் சமூகத்தின் பின்னணியில்.
தனது முதல் நாவலான ரப்பரின் முன்னுரையில் அவர் பின்வருமாறு குறிப்பிடுவார் : “என் இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள இயலாது என்று தோன்றியபோதுதான் நான் எழுத ஆரம்பித்தேன்”
ஆனால், இவரது இருப்புதான் யாது – அது சொல்லவரும் சேதியின் அரசியல் என்ன என்பது ரப்பர் நாவலை நிதானித்துப் படிக்கும்போது விடுவிக்கப்படுகின்றது.
இவரே ஓரிடத்தில் கூறுமாப்போல், “பிற்பாடு இது வளர்ந்து பல முகங்களைப்பெற்று” இருந்தாலும் இம்முதல் நாவலில் காணக்கிட்டும் இவரது அரசியல், அர்த்தப்பூர்வமானது என்றாகின்றது. பிற்காலத்தில், இவர் தனது இந்தியச் சாதீயச் சமூகத்தையும், உழைப்பாளிகள் சார்பான வேறு இலக்கியங்களையும், கூர்மையாக அவதானித்த பின், அவற்றை ஒன்றில் இருந்து வேறாக, வேறுபடுத்தி, தனித்தனியே பிரித்து வைப்பதில் உள்ள முக்கியத்துத்தை, அதாவது தணிந்த சாதிய வகுப்பினரை மேலும் பிளவுப்படுத்திக் கொள்வதில் உள்ள அரசியல் முக்கியத்துவத்தை அல்லது இன்னும் வேறுவகையில், ராணுவத்தினரை அல்லது படையினரை, உழைப்பாளி மக்களுடன் கைகோர்க்க விடாது, அவர்களையும் வேறுபடுத்தி, அந்நியப்படுத்தி விடுவதிலுள்ள ஆழமான நலன்களை அல்லது ஜெயகாந்தன் முதலானோர் முன்வைத்த சாதிய ஒற்றுமைகளை அல்லது முற்போக்குப் பிராமணர்கள் உள்ளிட்ட சக்திகளின் உள்ளீர்ப்பை உழைக்கும் மக்களின் ஒன்றிணைப்பிலிருந்து கத்தரித்து விடுவதிலுள்ள நன்மைகளைத் தெளிவுறப்பார்க்கும் ஆற்றல் கொண்டவராய், இவர் பிற்காலத்தில் பரிணமித்திருக்கக்கூடும்.
ஆனால் தனது கன்னி நாவலான ரப்பரில், இவர் காலடி எடுத்து வைக்கும் போதே, இவர், மேலே குறிப்பிட்ட, தனது அரசியல் அடிப்படைகளின் கடப்பாடுகளை ஒரளவு தெளிவுற அறிந்தவராகவே, இருந்து வந்துள்ளார் எனலாம்.
இவ்வகையில், இதுவரை இச்சமூக அமைப்புக்களை அசைத்தோருக்கு எதிராகவும், இன்று அசைப்பவர்களுக்கு எதிராகவும் தனது மூர்க்கத்தை வெளிப்படுத்திக்கொள்வதில் இவரது ஆர்வம், இவரது இந்த கன்னி முயற்சியின் போதே வெளிப்படுவது குறிப்பிடத்தக்கதாகின்றது. ஆனால், இலக்கியக் கர்த்தாக்களில் காணப்படும் “இவ்வெறித்தனத்தை” மக்சிம் கார்க்கி போன்ற இலக்கிய ஆர்வலர்கள் வரவேற்ற கதையும் உண்டு.
இல்லை இவர்கள், தங்கள் வர்க்கங்களின் தேவைகளை நன்கு உணர்ந்து, உள்வாங்கி, எழுதும் இவர்களின் எழுத்துக்களில், நன்மையான ஒருபக்கமும் உண்டு என அவர்கள் வாதிடுவர். ஒரு குறிப்பிட்ட வர்க்கமானது வளர்ந்து தன், முதிர்ச்சி நிலையினை எட்டிக்கொள்ளும்போது, அது தனது வர்க்க நலன்களுக்கு ஏற்றவகையில் தனக்கான நுண்ணிய இலக்கியங்களை உருவாக்கிக்கொள்வது சகஜமானது என்பது இவர்களது எண்ணம்.
இருக்கலாம். இவ்வகையில் கா.நா.சு. தொடக்கம், சுந்தர ராமசாமி, வெங்கட் சுவாமிநாதன் முதலானோர் உட்பட, தங்கள் தங்கள் வர்க்கங்களின் தேவைப்பாடுகளை வெவ்வேறு அளவில் உள்வாங்கி வெளிப்படுத்திய கலைஞர்களாகவே இருந்துள்ளார்கள்.
இப்பின்னணியில் ரப்பரின் வருகையும், ஒப்பிட்டளவில், அது தெளிவுற முன்வைக்கும் அரசியலும் ஆழ நோக்கத்தக்கதே.
II
சாதி வழக்கறிஞர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த குடிநீர் பானையையும் தணிந்த வகுப்பினருக்கெனப் போடப்பட்டிருந்த, கீழான ஸ்டூளையும், (நாற்காலிகள் அல்ல) காலால் எட்டி உடைத்தெறிந்த, மார்ஷல் நேசமணியை, ஒரு சராசரி விவசாயியை வைத்து அல்லது ஓர் தாழ்குலப் பெண்மணியை வைத்து, இழிவாகத் தாக்கும் இந்நாவலாசிரியரின் மனஉளைச்சல்கள், இந்நாவலின் கட்டமைப்பில் வந்த சேர்வதே, மேற்படி சம்பவத்துக்கான, ஓர் இலக்கிய அந்தஸ்தைக் கொடுத்து விடுகின்றது. இங்கே கவனிக்கவேண்டிய விடயங்கள் இரண்டு : ஒன்று, தனக்குத் தோதான, வாய்ப்பு மையங்களை நாவலாசிரியன், நாவலின் கட்டமைப்பில், உருவாக்கிக்கொள்வது. இரண்டாவது, தனது அரசியல் பழிவாங்களுக்கான நுணுக்கமான சாணக்கியத்தை, இவன், முளையிலேயே வகுத்துக்கொண்டு, அதனை ஆரம்பத்திலிருந்தே கட்டி வளர்ப்பது.
முதலாவது செயற்பாடு, ஓர் இலக்கிய முதிர்ச்சியைக் காட்டிநிற்கும்வேளை மற்றது ஓர் அரசியல் சித்து விளையாட்டின் சாணக்கியத்தைக் காட்டிநிற்கின்றது எனலாம்.
சாதீய நடைமுறைக்கு அப்பால், திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து தமிழர்கள், தமது கன்னியாக்குமரி மாவட்டத்தைப் பிரித்தெடுத்து, தமிழ்நாட்டுடன் இணைத்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக நிற்பதும், அதன் சார்பில், மார்ஷல் நேசமணி போராடியதற்குப் பின்னால் ஓர் நாயர்-நாயுடு முரண் காணக்கிட்டுகின்றது என்பதைக் கண்டறிவதும் ஜெயமோகனின் அரசியலின் ஆழமான பகுதி என்றாகின்றது.
இவ்வம்சமானது, தனித்து வாதிக்க வேண்டிய ஒன்று. ஆனால், முதலில், மார்ஷல் நேசமணி, குமரித்தந்தை என ஏன் பெயர் பெற்றார் என்பதை அறிவது சிறப்பானது. இந்திய விடுதலை இயக்கத்தில் பங்குபற்றிய இவர், கன்னியாக்குமரி மாவட்டத்தின் பிரபல அரசியல்வாதி என்பதும் நாகர்கோவிலின் காங்கிரஸ் பிரதிநிதியாக லோக் சபாவில் இருந்தவர் என்பதும், (1951-1962-1967) தேர்தலில் வெற்றி பெற்றவர் என்பதும் முனிசிபல் மேயராக இருந்த காலத்தில் (1943-1947) நாகர்கோயிலின் தெருக்களுக்கு மின்சார வசதியையும், குடிநீர் வசதியையும் வழங்கினார் என்பதும், பிச்சைக்காரர்களுக்கென ஒரு அநாதை விடுதியையும் இவர் கட்டுவித்தார் என்பதும், நாயர்கள் காலம் காலமாக நாடார்களுக்கு இழைத்த கொடுமைகளைத் தட்டிக்கேட்க புறப்பட்டவர் என்ற விளக்கமும் இவர் பொறுத்து உண்டு.
சுருங்கச் சொன்னால், சாதீய போராட்டம் - சாதீய சமத்துவ நிலை - நாயர்-நாயுடு போராட்டம் - கன்னியாக்குமரி மாவட்டம் கேரள மாநிலத்திலிருந்து பிரிந்து தமிழ் நாட்டில் இணைவது - காங்கிரஸில் லோக் சபா பிரதிநிதியாக இருந்தது - மற்றும் வழக்கறிஞர், மேயர் எனப் பல தளங்களில் செயல்பட்டது – என்பவை இவரது வாழ்நாளில் ஆற்றியவை எனக் குறிப்பிடலாம்.
சுருங்கக் கூறினால், இவரது வரலாற்றுப் பாத்திரம், ஜெயமோகனின் கோபத்தை, ஆகர்சித்துக் கொள்வதில், வியப்பில்லை எனலாம். எனவே, இவர் சிறப்பாகவே குறிவைக்கப்படுகின்றார். ஆனால், எப்படி பழிதீர்க்கப்படுகின்றார் என்பதை நாவலில் காண்பது சுவாரசியமானது. நாவலில், தனது வகுப்பையே சேர்ந்திருக்கக்கூடிய, ஓர் கண்ணியமற்ற தாழ்குலப் பெண்மணிக்கூடாக, ஜெயமோகன் தனது மூர்க்கத்தைக் கொட்டித்தீர்க்கின்றார் எனலாம் : “இதொக்கெ தீரும் திரேஸ்… இஞ்சபாரு, மார்ஷல் நேசமணி… ”
“நேசமணி நொட்டினாரு” சீறும் பார்வையுடன் அவள் சொன்னாள். அவளுக்கு மூச்சிரைத்தது. (பக்கம் 50).
ஓர் தணிந்த வகுப்பைச்சேர்ந்த பெண்ணை (நாடார்) இப்படி தேர்ந்தெடுத்து, அவளை ஓர் கேடுகெட்டவளாய்ச் சித்தரித்து, பின் அவளுக்கூடாக தன் வன்மம் பாய்ந்த அரசியலை “நேசமணி நொட்டினாரு” எனச் சித்திரிப்பது, ஒருவகையில் எளிதுதான். ஆனால், இது போன்ற தாக்குதல்கள் தர்க்கபூர்வமாக நாவலில் இடம்பெற்றாக வேண்டும். அதாவது, இவ்வகை தாக்குதல்கள், நாயர்களால் மட்டுமன்றி, நாயுடுகளாலேயே, மேற்கொள்ளப்படுகின்றது என்பதை நாயுடுகளே ஏற்றுக்கொள்ளப்பட வைக்கும் நிலைமை நாவலில் உருவாக்கப்படல் வேண்டும். இந்த சாமர்த்தியம்தான், ஜெயமோகனில் நிரம்பவே காணக்கிட்டுகிறது எனலாம். அதாவது தான் தாக்க குறிவைப்பதை, அதே மக்களுக்கூடாக செய்துமுடிப்பது என்பது, இருட்டில் நின்று கன்னியரைப் பார்த்து கண்ணடிப்பது போன்றதுதான். அடித்தவருக்கு மட்டுமே தெரியும் தாம் அடித்தோம் என்பது. நாவலின் சுருக்கம் வருமாறு அமைகின்றது:
கதையின்படி, ஒரு தாழ் குடும்பத்து ஏழை மனிதன், அதாவது எச்சில் இலைகளைச் சாப்பிட்டு வளர்ந்தவன், காட்டை எரித்து ரப்பர் தோட்டத்தை உண்டுபண்ணி இறுதியில் ரப்பர் தோட்டங்களுக்கு உரிமையாளனாகி, ரப்பர் வர்த்தக சொசையிட்டியிலும் உயர்ந்த மனிதனாக வளர்ந்து முடிகின்றான். ஜெயமோகன் வார்த்தையில் கூறுவதென்றால் : குடியான் ரகளையின்போது, அகதிகளாக இடம்பெயரும் ஒரு குடும்பத்தை நாயர்கள் தாக்குகின்றார்கள். ஒரு சிறுவன் மாத்திரம் தப்பிப்பிழைக்கின்றான். அவனது பெயர் பொன்னுமணி. பிற்காலத்தில், அவன் காடு வெட்டி, விவசாயம் செய்து ரப்பர் முதலாளியாகி… அதாவது, இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் நடந்த இந்தக் கதை, ஓர் புராணக்கதைப்போன்று இருக்கின்றது. ஜெயமோகனின் வர்ணனையில், இவ்வரலாற்றுப்பக்கம் பின்வருமாறு சித்தரிக்கப்படுகின்றது: அரைவயிற்று கஞ்சிக்குடித்து, அடிமைகளாக வாழ்ந்த வர்க்கம், ஆண்மை கொண்டெழுந்து, கலகத்திற்கு முயலும் என்பதும் ஓர் ஆச்சரியமான விஷயம்தான்… சீட்டாடி, குலப்பெருமைப்பேசி சோம்பி, காலம் கடத்தும் நாயர்கள் ஒரு காலத்தில் கீழ் சாதிப்பெண்களை மானம் காக்க உடை அணியக்கூட அனுமதிக்காதவர்கள்…
“பிரக்ஞை பெற்ற சமூகம், அதை எதிர்த்தபோது… தெருத்தெருவாக நாடார்களை வெட்டிச்சாய்த்தவர்கள்… (இது) பொய்யோ எனச் சந்தேகப்படும் படி… இன்று பெருவட்டர்களின் வயல்களில் நாயர்கள் கூலிவேலை செய்யும் அளவு காலம் மாறிவிட்டது…” (பக்கம் 32-33). “இந்தப் பகுதியின் பெரிய பணக்காரர்கள் முழுக்க, பெரும்பாலும் ஒரே கால கட்டத்தில்தான் பணக்காரர்கள் ஆனார்கள். ரப்பரின் வருகையும் காடுகள் ரப்பர் தோட்டங்களாக மாறியதும் தான் அதற்குக் காரணம். திடீரென்று காட்டுப்பிரபுகள் எல்லாரும் நாட்டு ராஜாக்கள் ஆனார்கள்”. “எவ்வளவு பெரிய சமூக மாற்றமாய் அது இருந்திருக்கும், அதிலும் அவர்கள் அனைவரும் முன்பு வெறுக்கப்பட்ட, ஏளனம் செய்யப்பட்ட கீழ்சாதியினர் எனும்போது”. (பக்கம் : 111)
அதாவது இரு பகைவர்களை, ஜெயமோகன் இனங்கண்டு கொள்கின்றார். ஒன்று நாயுடுகள். மற்றது ரப்பர். இதனாலோ என்னவோ, ரப்பரின் வருகை இவ்விதம்தான் வர்ணிக்கப்படுகின்றது. ஆனால், ரப்பரின் இந்த முகிழ்ப்பு, எந்த அடிப்படையில் இடம்பெறுகிறது என்பது முக்கியமானது. அது, வேறுவகைப்பட்ட கேள்விக்கு எம்மை இட்டுச்செல்லலாம்.
- எழுத்தாளர் ஜெயமோகன் -
III
அவர்களின் வீடு :
“உள்ளே எப்போதும் கும்மிருட்டு. ஓடும், ஓலையும் வேயப்பட்ட தாழ்ந்த கூரை. சாணிவாடை, தூசுவாடை, மட்கும் வாடை… தொழுவும் வயலும் அருகே இருந்தமையினால் கொசுக்களும் பூச்சிகளும் ஓயாமல் படையெடுக்கும்… அப்பா ஒரு நாள் சாய்ந்தரம் கூப்பிட்டனுப்பினார்”.(பக்கம் 112)
“கால் முழுக்க சேறு… அதைக் கழுவாமலேயே திண்ணை மீது (அவர்) அமர்ந்திருந்தார்… இருட்ட ஆரம்பித்திருந்தது…” “ஒரு வீட்டகெட்டிப் போடலாம்…” என்றார் (அவர்). (பக்கம் 112).
காரணம் :
“துரையை விருந்துக்குக் கூப்பிடு அப்பா, துரையையும் பிஷப்பையும் வீட்டுக்கு அழைத்தார்… பிறகுதான் பிரச்சனைகள்… முதலில் வீடு நல்லதல்ல…”
அதன் பிறகு அப்பா தயங்கவில்லை… மறுநாளே திருவனந்தபுரத்திற்கு… போய் எஞ்சினியர்களைப் பார்த்தார்… ஒன்றரை வருடத்தில் பங்களா கட்டுவிக்கப்பட்டது… துரை விருந்துக்கு வந்திருந்தார்… மெல்ல, மெல்ல விவசாயியின் வாழ்வின் எல்லா அம்சங்களும் உதிர்ந்து, செருப்பு அழுக்காகாமல் வாழும் நிலை ஏற்பட்டது…” (பக்கம் 113).
இப்படி செருப்பில் அழுக்குப்படியாமல், ரப்பரின் அனுக்கிரகத்தால், இன்று பரிணமித்ததாய் உள்ள, இந்தப் பெருவட்டப்பரம்பரையின் ஆரம்பநிலை வருமாறு ஜெயமோகனால் வர்ணனைக்கு உள்ளாகின்றது: “பொன்னுமணி வீட்டுக்கு வந்தபோது பேச்சி இல்லை. பகலில் அவள் இருப்பதில்லை. விடிகாலையில் கிளம்பினால் இரவில் தான் திரும்பி வருவாள். குடிசைக்குள்ளும், திண்ணை மேலும், அழுகலில் புழுக்கள் போல குழந்தைகள் நெளிந்து கொண்டிருந்தன. கைகால் சூம்பிப் போன இரண்டு குழந்தைகள் கவிழ்ந்து தவழ்ந்து தiரையிலிருந்து எதையோ பொறுக்கித் தின்று கொண்டிருந்தன. சில குடிசைக்கு வெளியே ஈரப்புழுதியில் அளைந்தன. குடிசைக்குள் சுவரோரமாய் விறகுக்குவியல் போலக் காசநோயாளி தலை மேல் குச்சிக் கைளை வைத்து மடங்கி அமர்ந்திருந்தான். அவன் உடலெங்கும் எச்சில் வழிந்தது. அவனைச் சுற்றி மூத்திர வாடை. அழுதும், பரஸ்பரம் சண்டையிட்டும், ஓயாது ஒலித்துக்கொண்டிருந்த குழந்தைகள் இவனைக் கண்டதும் சட்டென்று அமைதியடைந்தன. முற்றத்தில் உட்கார்ந்திருந்த ஒன்று மூக்கு வழியும் முகத்தைத் தூக்கி, பீளை கட்டிய தன் பெரிய விழிகளால் பார்த்தபடி, எதையோ அவசரமாய் வாய்க்குள் திணித்துக்கொண்டது. வீட்டுக்குப் பின்புறமிருந்து பொன்னுமணியின் அளவேயிருந்த அவனளவு உயரமில்லாத ஒரு சிறு பையன் வந்து குரோதத்துடன் பார்த்தபடி நின்றான். குடிசையின் வாசலில் இருந்தது இரு முகங்கள் எட்டிப் பார்த்தன. ஒரு குழந்தைச் சட்டென்று இரண்டு வெண்பற்கள் மட்டும் தெரியும் வாயைத் திறந்து வீரிடத் தொடங்கியது. அவன் காலருகே மலத்தின் மீது அமர்ந்து தவழ்ந்து அழுது கொண்டிருந்த பெரிய வயிறும் சூம்பிய கைகால்களும் கொண்ட குழந்தைச் சட்டென்று அழுகையை நிறுத்திவிட்டு, மூக்கை உறிஞ்சி, உதட்டைப் பிதுக்கியபடி, அவனைப் பார்த்தது. குரோதம் பீரிட்ட முகத்துடன் கைவீசியபடி “போ.. போ..” என்றது. உடனே திண்ணையில் நின்ற குழந்தைகளும் ‘தூ… தூ’ என்று முற்றம் நோக்கித் துப்பத் தொடங்கின. பையன் தரையிலிருந்து ஒரு கல்லை எடுத்துக் கொண்டான். குடிசையே, தாக்கவரும் ஒரு வனமிருகம் போல முறைத்துப் பார்த்தபடி அவன் முன் நின்றது”. பொன்னுமணியும் தரையிலிருந்து ஒரு கல்லை எடுத்துக் கொண்டான். எச்சரிக்கையுடன் பார்த்தப்படி அப்படியே நின்றான்”.
இந்தக் கேடுகெட்ட வர்ணனையின் போதே, ஜெயமோகனின் பழிதீர்க்கும் மனநிலை வாசகனுக்கு ஓரளவு தெளிவாகின்றது. ஆனால் பழிதீர்ப்பது என்பது இதனுடன் முடிவதாய் இல்லை.
“பொன்னுமணி திரும்பிவிடலாமா என்று யோசித்தான். ஆனால் பசி அவனை இம்சித்துக் கொண்டிருந்தது. காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை ஓயாது உள்ளுக்குள் எரியும் தீ. அது அவனை வேட்டை மிருகமாய் ஆக்கிவிட்டிருந்தது. அங்கு தின்பதற்கு எதுவோ இருக்கிறது என்று அவனுக்குப்பட்டது. பொன்னுமணி சற்று முன்னகர்ந்தான். உடனே இரண்டு குழந்தைகள் வீரிட்டபடி குடிசைக்குள் ஓடின. பையன் கல்லை இறுகப் பற்றியபடி சற்று முன்னால் நகர்ந்தான்” (பக்கம் 58-59-60).
குன்னத்துக்கல்லில் இருந்து கூண்டு வண்டியில் புறப்படும்போது பொன்னுமணிக்கு நாலு வயது… அவன் அப்பா ஒரு நார்பெட்டியைச் சுமந்தப்படி வருவது தெரிந்தது… “நாய்க்குப் பெறந்த பயலே, இஞ்சயா நிக்குதே? ஓடுல… வீட்டுக்குப் போல…” என்று சீறியபடி, குனிந்து சிறு கல் ஒன்றை எடுத்தபடி வந்தார்…” ஓவென்று அழுதபடி அவன் ஓடிப்போய் அவளைக் கவ்விக் கொண்டான். அவள் ஒரு கையால் அவனைப் பிடித்தபடி, “எங்கல கெடந்த சவத்து மூதி?” என்றாள். தரதரவென்று இழுத்து, கும்பலில் நிறுத்தினாள். உடனே அவன் அழுகையை நிறுத்திக் கண்ணீர் வழியும் கன்னத்துடன், உதட்டைத் துருத்தியபடி, சூழலை ஆராயத் தொடங்கினான். என்னவோ வித்தியாசம் இருப்பது சற்றுப் பிந்திதான் உறைத்தது. “அம்மா, எடி அம்மா” என்று சிணுங்க ஆரம்பித்தான், “ஏம்பில…” என்று அவள் அதட்டினாள். “எனக்கும் கோமணம்…” என்றான். சும்மா வருவியா? மூஞ்ச கிளிச்சுப் போடுவேன் பாத்துக்க…” என்றாள் அவள். அவன் கால்களை மாற்றி மாற்றி உதைத்துச் சிணுங்கியபடி நின்றான்” (பக்கம் 24).
வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக முன்வைக்கப்படும், இவ்இலக்கிய வர்ணனை, இன்று பொருளியல் மேம்பாட்டை அடைந்துள்ள பெருவட்ட நாயுடு ஒருவர், ஒரு காலத்தில், சிறுவனாய் இருந்து, ரப்பர் தோட்டத்தை உருவாக்கப் புறப்படும் ஆரம்ப நிலையை குறிக்கின்றது. (இதில் அடங்கும், இவ் ஏளன வர்ணனையின் போதே, ஜெயமோகனின் பழிதீர்க்கும் படலம் வேகம் கொள்ளத் துவங்குகிறது எனலாம்). கதையின்படி, இப்படியாகப் புறப்பட்டவர்கள்தான், நாவலின்படி நாயர்களால் வழிமறித்து தாக்கி அழிக்கப்படுகின்றார்கள். அதாவது, இப்படி இவர்கள் தாக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தர்மம்தான் எனும் வகையில், இவ்விலக்கியம் படைக்கப்படுகின்றது, என்பதை நுணித்து அறிவதே இங்கு நிதான ஓர் வாசிப்புக்கு தேவைப்படும் முறைமையாகின்றது. இவர்களில் ஒருவனான பொன்னுமணி, (அதே சிறுவன்) பின்னாளில், காட்டை எரித்து ரப்பர் தோட்டங்களை உருவாக்குகின்றான். அதே பொன்னுமணியின் பேரன் பொறுத்து பின்னாளில் நாவல் இவ்வாறு கூறுகின்றது : “அவனுக்குள் எப்போதும் நாயர்கள்மீது ஒரு கனிவு உண்டு. இன்றுவரை ஒரு நாயரை ‘அடே’ என்று கூப்பிட அவனால் முடிந்ததில்லை (ஆனால்) அவன் மதிப்பீட்டில் மரியாதைக்குரிய அம்சங்கள் உடைய எந்த நாயரையும் அவன் பார்த்ததில்லை” (பக்கம் 33).
அதாவது நாயுடுகளை இனி இல்லை என கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தி மகிழும் வேளை, நாயர்களை மறைமுகமாக உயர்த்தி, பிடித்து, அதனையும் நாசுக்காக ஏற்றுக்கொள்ள வைக்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்தி தருவதை நோக்காகக் கொண்ட எழுத்தானது இது. ஆனால், இவ்எழுத்தின் பின்னால், இவ்இலக்கிய பரிமளிப்புகளின் பின்னால், ஓர் ஆழ்ந்த மனவக்கரிப்பு உண்டு என்பதே ஒருவர் புரிந்துகொள்ள வேண்டிய விடயமுமாகின்றது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.