VI
“நடு இரவில் (?) விழிக்கும் இவன்! குறைமேகங்களுக்கு மத்தியிலிருந்து இறங்கிய மங்கிய நிலவு பூமி பரப்பின் மீதிருந்த பொருள்களின்; வெளிஉருவத்தை மட்டும் பிரித்துக்காட்டுவதாக இருந்தது… எதிரே ஒரு அரசமரம்… ஓர் அசைவும் காணப்படவில்லை சப்தமே போடாமல் ஃபோட்டோ சிந்தஸிஸ் நடந்துக்கொண்டிருந்தது” (பக்கம் 89-92). போட்டோ சிந்தஸிஸ் என்பது ஒளித்தொகுப்பு என விஞ்ஞானம் கூறுகின்றது. இதற்கு இத்தொகுப்பு நடக்க ஒளி ஓர் முக்கிய அவசியப்பொருள் எனக்கூறப்படுகின்றது.
மறுபுறத்தில், இஸ்லாமிய முரடர்களால், தாக்கப்பட்ட பின் சந்திரசேகரன் சைக்கிளைத்தள்ளிக்கொண்டு அநாதாரவாய் தனித்து நடந்து வருகின்றான். “அந்நேரத்தில் ஒரு மனித பிறவியையும் காண முடியவில்லை. சந்திரசேகரனைத் தடுத்து மூன்ற மாடுகள் குறுக்கே நின்றன”. சந்திரசேகரன் சைக்கிளைப் பிடித்துக்கொண்டே ஒரு மாட்டின் நெற்றியைச் சொறிந்துதர ஆரம்பித்தான். அந்தமாடு அப்படியே முகத்தை நீட்டி அதன் கழுத்தைக் சொறிவதற்கு காண்பித்தது. அந்த மாட்டைப் பார்த்து மற்ற மாடுகளும் சொறிய காத்து நின்றன. சந்திரசேகரனுக்கு விரல்கள் வலித்தன (பக்கம் -69).
இது ஜீவகாருண்யம்தான். ஆனால், இதே காருண்யத்தை வைத்துக்கொண்டுதான், காந்தி, டாடா பிர்லாவின் நெற்றியையும் கழுத்தையும் ஆறுதலாக சொறிந்து கொடுத்தார் என்பது பதிவு. (காந்தியின் பீனிக்ஸ் ஆசிரமத்துக்காக ரூபா 25000 டாடா வால் வழங்கப்பட்டது என்பதும், இந்தியாவில் காந்தி தனது சத்தியhகிரகத்தை நடாத்த ரூபாய் 125000 அந்நாட்களில் டாடா வால், காந்திக்கு வழங்கப்பட்டது என்பதும் பதிவு. இதே போன்று பிர்லாவும், நன்கொடைகள் மாத்திரமின்றி, 1930ல் காந்தியை வட்டமேசை மகாநாட்டில் பங்கேற்கும்படி வற்புறுத்தியதாகவும் (1930) தீவிரவாதிகளான ஸ்வராஜ் கட்சியினருக்குக் காந்தி தரக்கூடியதாய் இருந்த ஆதரவை கேள்விக்கு உட்படுத்தியதாகவும் (1931) இரண்டாம் சட்டமறுப்பு இயக்கத்துக்கு எதிராகக் காந்திக்கு யோசனை கூறியதாகவும் (1932) மாகாண தேர்தலில் காந்தியைப் பங்கேற்கும்படி வற்புறுத்தியதாகவும் (1935) பதிவுகள் உண்டு). 18வது அட்சக்கோட்டில் மிளிரும் காருண்யம் யாரை சொறிவதற்கு உபயோகப்படும் என்பது தெளிவு. “ஒருவேளை இந்தக் காருண்யத்தின், இந்தக் கொடைகளின், இந்த அரசியலின் மறுபக்கமே, ஜெயமோகன்-அசோகமித்திரன்-பாலகுமாரன் ஆகியோரின் எழுத்துக்களின் தாண்டவமாடும் அகோரங்களான, மூத்திரவாடை அல்லது எச்சில் அல்லது அழுகல்கள் அல்லது அடக்குமுறைகள் – என்பதற்கான பின்புலமும் இவற்றாலேயே தோற்றவிக்கப்படுகிறது என்ற எண்ணப்பாடுகளும் இங்கே தோன்றாமல் இல்லை.”
VII
ஆனால், வண்ணதாசன் வகையாறாக்கல், அசோகமித்திரனை, நுணுக்கமாக அடையாளம் கண்டுகொள்வதில் சோடைப்போனதில்லை.
ஜெயமோகன் பின்வரும் பொருள்பட எழுதுவார் : “நம்மில் ஆகசிறந்தப் படைப்பாளி அசோகமித்திரன், அவரது எழுத்துக்கள் மௌனமும் ஆழமும் மிக்கவை”. ‘வாழ்வை கலை சாத்தியங்கள்’ ஆக்கியவை. அசோகமித்திரன், புறக்கணிப்புக்கு உள்ளானதின் முதல் காரணம் க.நா.சுப்ரமணியம், வெங்கட்சாமிநாதன் போன்ற முதற்கட்ட ரசனை விமர்சகர்களே… மன உத்வேகம் மட்டுமே என்று எண்ணிய க.நா.சுப்ரமணியம் (அது கு.பா.ராவின் தார்மீக உத்வேகமாக அல்லது மௌனி போன்ற இச்சைகளை சார்ந்த உத்வேகமாக இருக்கலாம்…) அல்லது வெங்கட்சாமிநாதனின், கலைப்படைப்பு, ஒருவகை பித்து நிலையின் வெளிப்பாடு - கலைவழியாக வருவது சமூகத்தின் ஆழ்மனமே… என்பதை எல்லாம் தாண்டி சாதாரணத்துவத்தை அழகியலாகக் கொண்டது அசோகமித்திரன் கலை… (பார்க்க : நவீனத்துவத்தின் முகங்கள் : பக்கம் 09).
இந்த சாதாரணத்துவத்தை ஜெயமோகன் பின்வரும் பொருள்பட மேலும் விவரிப்பார் : “அசோகமித்திரன் சாதாரண மக்களின், சரியாகச் சொன்னால், - நடுத்தர வர்க்கத்தின் கலைஞன்தான். கிட்டத்தட்ட சாமானியனின் பிரகடனம் அவரது எழுத்துக்கள் எனலாம்… வரலாற்று சக்திகளின் பெரும் விசைச்சக்கரங்களுக்கு இடையே மாட்டி அழியும் இவ் நடுத்ததர வர்க்கத்தின் நசிவு வரலாறு முழுவதும் அவ்வர்க்கத்திடம் கொணர்ந்து சேர்த்திருக்கும் நம்பிக்கைகளை பொய்யாக்குகின்றது அல்லது அபத்தமாக மாற்றுகின்றது…” (பக்கம் 14-15).
“அவரது நடையின் மூலம், ஆங்கிலம்… அவரது மொழியின் அந்நியத்தன்மை ஒரு பிரச்சினைத்தான். கிராம பின்புலம் உடையவர்களுக்கு இத்தனை எளிமையான மொழிநடை படிக்கமுடியாது என கருதப்படுகின்றது. அக்கறை இல்லாதது போன்ற சுருக்கமான விவரண நடை… 18வது அட்சக்கோடும் கவனமாக, உத்வேகங்களை தவறவிடாத நடைதான்… ஒவ்வொரு சொற்களுக்கும் பின்னாலும் மனதின் நுட்பமான ஓட்டங்களை நிரப்பி வைத்துள்ளார்… தமிழில் மிக மிக கவனமாய் படிக்க வேண்டியவர் அசோகமித்திரன். மனதில் அதர்க்கத்தையும் அபத்தத்தையும் மிதக்கவிடுகின்றார்…”
இவற்றைச் சுருக்கினால் :
அசோகமித்திரன் நடுவர்க்கத்தின் பிரதிநிதி. அவரது நடை முக்கியமானது. ஆங்கிலமே அதன் மூலம். அவரது அபத்தம், அதர்க்கம், பொறுமை, அந்நியத்தன்மை யாவும் இதன்வழி வந்து சேர்வதுதான். மேலும் கூறுவார் : “எல்லாக் கருக்களிலும் அவர் பொதுவாக பேசுவது, நடுத்தரவர்க்க மனிதர்களை முன்வைத்து வாழ்வின் இன்றியமையாத இரும்பு விதிகளைப்பற்றி…” (பக்கம் 24).
ஆனால், இதே நடுத்தர வர்க்கம், வரலாற்றில் எவ்வாறு செயற்பட்டுள்ளது என்று கனித்துக்கொள்வது தேவையாகின்றது. நடுத்தர வர்க்கத்தை அல்லது எந்த ஓர் வர்க்கத்தையேனும் எடுத்துக்கொண்டால், அதன் அதன் செயற்பாடுகள் காலத்தால் மாறுதல் அடைவன.
இந்திய விடுதலை இயக்கத்தின் போது, எழுச்சியுற்ற ஓர் மத்தியத்தர வர்க்கத்தின் நகர்வுகள் குறித்து ஆழமான கேள்விகள் உள்ளன. இதனைப்போன்றே, பிரஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சி அல்லது அண்மித்த இலங்கையில் உக்கிரம் கொண்ட தேசிய அலைகளை எடுத்துக்கொண்டாலும் சரி, அவற்றில் ஆகுதியான மத்தியத்தர வர்க்கத்தை சேர்ந்த பலரின் வாழ்வும் முடிவும் கேள்விக்குரியதாகின்றன. இவை அனைத்தும் “வாழ்வின் மாற்ற முடியாத இரும்பு விதிகளை” கேள்விக்கு உட்படுத்தியே தீருகின்றன. (பாலகுமாரன் தனது நூல் ஒன்றுக்கு ‘இரும்பு குதிரைகள்’ என பெயர் சூட்டி மகிழ்ந்திருப்பதும் பீட்டர்ஸ்பக் வியாபாரிகள் தங்களை “இரும்பு மனிதர்கள்”; என அழைத்துக்கொண்டதும் நினைவுப்படுத்திக் கொள்ளத்தக்கதுதான்). ஆனால், பாரதி போன்ற கலைஞர்கள், ‘கலக மானிடப் பூச்சிகளின்’ செயற்பாடுகள் குறித்தும், அவர்கள் தம்வாழ்வில் ஆற்றும் கலகங்கள் குறித்தும் கதைக்காமலில்லை. (திலகர், வ.உ.சி, அரவிந்தர் போன்ற எண்ணற்றோர் தொடுத்திருக்கக்கூடிய “கலகங்களை” ஆள பார்த்திருக்கக்கூடிய பாரதி, ‘மானிடப் பூச்சிகள்’ என வெறுமனே குறிக்காது, ‘கலக மானிடப் பூச்சிகள்’ என குறிப்பது புரிந்துகொள்ளத்தக்கதே). இப்பின்னணியிலேயே அசோகமித்திரனின் எழுத்துக்களும் பரிசீலிக்கப்பட வேண்டிய தேவையை கொண்டுள்ளன எனலாம்.
நடுத்தர வர்க்கத்தை முன்வைத்து, எழக்கூடிய ஓர், அந்நியத்தன்மை பொருத்த ஓர் உடன்பாடு எம்மிடை உன்டெனினும், இவ்அந்நியத் தன்மையானது எதனால் ஏற்படுகின்றது என்பதிலேயே எம்மிடையே முரண்பாடும் உருவாகின்றது. உண்மையில், அசோகமித்திரனே ஓர் அந்நியப்பட்ட மனிதன்தான் என்பதும் அத்தகைய மனிதன் களமிறக்கிவிடப்படப்படும் போது, அவனது அளவுகோள்களை கொண்டே வாழ்வை அளந்து கணிக்க முற்படுவதும், அதன் வழிவந்த முடிவுகளை, அவன்தன் விமர்சகர்களுக்குப் படைத்தளிப்பதும் தவிர்க்க முடியாததாகின்றது.
அந்நியப்பட்ட இவ்வகை சார்ந்த மனிதர், ஒரு சமூகத்தில் உருவாகுவது என்பது ஓர் படிமுறை சார்ந்த (Process) ஒன்றாகும். அதனை ஷேக்ஸ்பியர் முதல் Gothe வரை கவனமாக கையாண்டுள்ளனர். ஒன்றில், ஆன்மாவை சாத்தானிடம் விற்றுவிடுவதாக கதை அமைந்துள்ளது. (காத்தேயின் பவுஸ்டில்) அல்லது ஹெம்லெட்டில், ஆன்மா அற்ற நிலையில், காதல் வயப்படும் பண்பையும் இழந்துபோன ஓர் நிலை (ஷேக்ஸ்பியர் ஹெம்லெட்) ஏற்படுவதாயுள்ளது. ஒருவேளை இதனாலேயே, ஷேக்ஸ்பியரை அசோகமித்திரனுக்குப் பிடிக்காமலும் போயிருந்திருக்கலாம்.
இவ்அந்நியத்தன்மை பொருத்த உணர்திறன் அல்லது வித்தியாசங்கள் ஜெயமோகன், வண்ணதாசன் போன்றோரால் தத்தம் வழியே ஆழமாக உள்வாங்கப்படுகின்றது. ஆனால், தமிழ் இலக்கியம் இதனுடன் நின்றதாயில்லை. அது, தர்க்க ரீதியான தனது அடுத்தப்படியை நோக்கி மெதுவாக முன்னேறுகின்றது. இம்முயற்சியின் போது, தனது அரசியலை, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இச்சமூகத்தைப் (சாதிய சமூகத்தை) பலப்படுத்தும் அரசியலில் அது தன்னை இறக்கிக்கொள்கின்றது. (உதாரணமாக ஜெயமோகனின் எழுத்துக்கள்). ஆனால் இதன் துவக்கப்புள்ளியாக இந்நவீன உலகில் ஒருவர் உண்டெனில் அது அசோகமித்திரன்தான் என்பதில் சந்தேகம் கொள்ளல் ஆகாது. இப்புள்ளியிலேயே, கவிஞர் ‘இன்குலாப்பும்’ முரண்படக்கூடும். எழுத்துக்களை விடுவோம். ஆனால் அவரது, ஆளுமையை பொறுத்தவரை, வெறும் நாடோடி மக்களுடன் சேர்ந்து அவரும் ஆர்பரிக்கின்றார் : ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா…’ என. அதிலே உள்ளடங்கும் வித்தியாசம், இப்பார்வை வித்தியாசங்களுக்கு எம்மையும் அவர்களையும் இட்டு செல்கின்றது எனலாம். அதாவது, அவர்களது எழுத்துக்கள், அடிப்படையில், இவ்வித ஆளுமை வேறுபாடுகளால் கட்டமைக்கப்படுகின்றன.
முற்றும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.