III
இன முறுகலை நாவல் கையாளும் முறைமை
பாரதி முதல் கார்க்கி வரை இனமுறுகலின் பாதிப்புக்களை ஆழ உணர்ந்திருந்தனர். பாரதி அல்லா அல்லா என்ற பாடலை (1920) எழுத நேர்ந்ததின் பின்னணி அன்றைய இந்தியாவின் யதார்த்தமாக இருக்கலாம்.
ஆங்கில ஆட்சியில், அவர்களது மறைகரத்தின், செயற்பாடுகள் அச்சம்தரும் விளைவுகளை அன்றைய இந்தியாவில் ஏற்படுத்தின.
1915ல் ரஷ்யப் புரட்சி சூழ்கொண்டு இயங்கியப்போது, யூதர்களுக்கு எதிரான இனவாத அலையைக் களமிறக்கி அதற்கூடு புரட்சிகர அலைகளைத் திசைதிருப்பிவிடலாம் என்னும் நப்பாசை ஆதிக்கச் சக்தியினரிடம் காணப்பட்டது. ஆக இனவாதம் என்பது ஆதிக்கச் சக்திகள் கையாளக்கூடிய பிரதானமான ஆயுதங்களில் ஒன்றாகக் காலம் காலமாக இருந்துள்ளது. இது மக்களைத் தூண்டி, வெறியர்களாக மாற்றி, எச்சில் வடிய ஒருவரை ஒருவர் கடித்து குதறித்தள்ளும் நிகழ்ச்சி நிரல்களுக்கு இட்டுச்செல்கின்றது.
கார்க்கியின் இறுதி நாவலான, “கிளிம்மின் வரலாறு” என்ற பிரமாண்டமான படைப்பில் இவ் இனமுரண்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட பக்கங்கள் ஏராளம்.
இதே போன்று இந்தியாவில் இனவாத ஆயுதமானது ஆதிக்கச் சக்திகளால் மிக நன்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உருவாக்கக்கூடிய பாதகங்களைப் பாரதி போன்ற கலைஞர்கள் மிக நுணுக்கமாக உள்வாங்கி இருந்தனர் என்பதனையே அவர்களது படைப்புகள் காட்டுவதாய் உள்ளன.
ஆனால், 1947ல் ஜின்னா-காந்தி தலைமையில் இந்தியா-பாகிஸ்தான் என இந்தியா பிரிப்பட்டபோது பத்து லட்சம் மக்கள் கோரமாய்க் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட பத்து இருபது லட்சம் மக்கள் நிரந்தரமாய் அகதிகளாயினர். இப்பிரளயம் விளைவித்த நன்மைகளை ஆதிக்கச் சக்தியினர் வாய்வுறிஞ்சிட குடித்தப்படி இருக்கின்றனர், இன்றுவரை.
அசோமித்திரன் எழுதுவார் : “நீங்க ஆடற இடத்துலே (கிரிக்கெட்) துலுக்கங்கள்ளாம் அடிக்க வாரன்னு சொன்னியே” – சந்திரசேகரனின் அம்மா மகனிடம் கூறுவது (பக்கம் 19. இத்தகைய அறிமுகத்துடனேயே நாவல் புறப்படுகின்றது).
மேலும் நாவலில் ஆங்காங்கு, முஸ்லீம் வெறுப்பானது, மிக நுணுக்கமாய் ஊசி ஏற்றுவதுப்போல் ஏற்றுப்படுகின்றது, கமலஹசனின் திரைப்படங்கள் போல.
“தூ”
“என்ன தூ”
“உனக்கு வெக்கமாயில்லேடா பாதிக்காரங்களோட சேர்த்து விளையாடுறது…”
“சந்திரசேகரனுக்கு வெகுநாட்களுக்கு எது பாதி என்று சொல்லப்படுகிறது என்று தெரியாமல் இருந்தது” (பக்கம் 55).
இதன் விளைவுகளையும் அசோமித்திரன் பிரமாதமாக எழுதுகின்றார் : “இங்கே ஏதோ நூற்றுக்கணக்கில் குவிந்திருக்கும் முஸ்லீம் அனாதைகள்போல் டில்லியில் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் ஹிந்துக்களும் சீக்கிரயர்களும் குவிந்திருக்கிறார்கள்” (பக்கம் 68).
இவ்வர்ணனை இனங்களுக்கிடையில் பரஸ்பர இனவாதங்களைத் தூண்டிவிடுமா அல்லது இருந்துவரும் இனவாதங்களை இவ்வர்ணனை அழித்துவிட உதவுமா என்பதெல்லாம் தெரிந்த கேள்வியாகின்றன. ஆனால், பாரதியின் எழுத்துக்களில் இது போன்ற வர்ணனைகள் மருந்துக்கும் காணக்கிட்டாதது.
காந்தி இறந்துபோன சமயத்தில் ஐதராபாத்தின் முஸ்லீம்கள் வெஞ்சினம் கொண்டு கிளம்புவதை அசோகமித்திரன் பின்வருமாறு எழுதுகின்றார் “பக்கத்து வீட்டுக்காரன் காசிம் சந்திரசேகரன் வீட்டில் புகுந்து, தண்ணீர் வரலில்லை என் ரகளை செய்கின்றான். இங்கே மனிதர்களுக்கே தண்ணீரில்லாமல் தவிக்க வேண்டியிருக்கிறது, மிருகங்களுக்கு கொட்டியா வீணடிக்கிறாய்? இன்று இரவுக்குள் இந்த மாடு இங்கிருந்து போக வேண்டும்”.
“இங்கே ரயில்வே குவார்டர்ஸில் எப்படி மாடு வைத்துக்கொள்வாய்? இதையே ரிப்போட் பண்ணி… உங்கள் சட்டி பானையெல்லாம் தூக்கியெறியச் செய்வேன்…”
“… … …”
“காஸிம் மீண்டும் உள்ளே வந்து மாட்டை எட்டி உதைத்துவிட்டு வெளியே போனான்…” (பக்கம் 190).
“இது ஆபத்தான ஓர் அரசியல் எனக்கூறலாம். இது இலக்கியமயப்படுத்தப்பட்டு, ஒரு இலக்கிய அந்தஸ்து வேறு வழங்கப்பட்டு நாகரீக மோஸ்தரில் வழங்கப்படுகின்றது. இதே செய்நேர்த்தி ஜெயமோகனிலும் காணக்கிட்டுகின்றது. அதாவது குறிப்பிட்ட அரசியலை முன்நிறுத்தும் போது அது மிகவும் நாசுக்காக அறிமுகப்படுத்தப்படுகின்றது. அதாவது நஞ்சை ரசித்து குடிக்க ஏற்பாடு. இங்கேயே பாரதி வித்தியாசப்பட்டு நிற்கின்றான்.
IV
நாவலின்படி, இந்திய துருப்புகள் ஐதராபாத்துக்குள் நுழைவதற்கு முன், சந்திரசேகரன் இரண்டு முஸ்லீம் காடையர்களால் தாக்கப்படுகின்றான் (பக்கம் 64).
இதன் பிறகே, சந்திரசேகரன் ரத்தத்தில் கையெழுத்திடுவதும், ஊர்வலத்தில் பங்கேற்பதும் நிகழ்கின்றன (பக்கம் 127). அதாவது, அவன் அரசியலில், காந்தியின் அரசியலில், இறங்குகின்றான்.
“சந்திரசேகரன் பீதியுடன் சுற்றிப்பார்த்தான்… முன்வரிசைக்காரர்கள் சிலர் போலீஸ்காரர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்… அந்த முன் மண்டைகளைத்தட்டிவிட்டு சந்திரசேகரனிடம் வர (போலீஸ்காரனுக்கு) ஒரு நிமிசத்துக்கு மேலாகாது…” (பக்கம் 128).
“போலீஸ் அதிகாரியின்… விறைப்பான உடையில் பித்தளைப் பொத்தான்கள் பள பளவென்று மின்னின…”
அவர்கள் கையில் குண்டாந்தடி. குண்டாந்தடிகளை அசோமித்திரன் பின்வருமாறு வர்ணிப்பார் :
சந்திரசேகரன் தெருவில் குந்தியப்படி உட்காந்திருந்தான். முதல் வரிசையை ஒட்டியப்படி இரும்புத்தொப்பி போட்ட போலீஸ்காரர்கள். ஒவ்வொருவர் கையிலும் குண்டாந்தடி நன்றாக பாலிஷ் செய்யப்பட்டு மினு மினுக்கும் குண்டாந்தடி. அக்கருமை நிற குண்டாந்தடியில் இரத்தக்கறை தெரிய முடியாது. அத்தடிகளுக்கு பாலிஷே இரத்தம்தானோ என்னவோ… (பக்கம் 127-128).
இதனைப் போராட்டத்தில் பங்குகொள்ளும் ஓர் பதின்வயது பையனின் மனவோட்டமாய் புரிந்துகொண்டாலும், மறுபுறத்தில் இது போலீஸ்-ராணுவ பிரிவினரைப் புதிய வெளிச்சத்தில் காட்சிபடுத்துவதைக் காணலாம்.
இதே போன்று, வெள்ளை யானையில் ஜெயமோகனும் எழுதுவார் : “அந்தக் கணத்தில் எழுந்தது எந்தப் போர் வீரனுக்குள்ளும் உள்ள இயல்பான தன்னகங்காரம்தான். எதிர்ப்பை சந்திக்கும் போது சீறி எழுவது அவனுள் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவமனம். அது ஓர் ஆயுதம். கைகளில் கிடைக்கும் எல்லா ஆயுதங்களும் அந்த அக ஆயுதத்தின் புறவெளிப்பாடுகள் மட்டுமே. என் மனம் இராணுவப் பயிற்சியால் வடித்துக்கூர்தீட்டப்பட்டு விட்டிருந்தது. நான் ஒரு கச்சிதமான துப்பாக்கி. விசையில் கைப்பட்டதும் வெடித்தேயாக வேண்டியவன். ஆம், நான் அதுதான். அங்கே உலகின் எந்தப் படைவீரன் நின்றிருந்தாலும் அதைத்தான் செய்வான். ஆமாம்” (பக்கம் - 347-348).
இது, அடிஆழத்தில், வீற்றிருக்கும், போராடும் மக்களை நசுக்கி ஒடுக்குவதில் உள்ள ஆனந்தம் எனலாம்.
“கம்பெனி சார்ஜ்…” குதிரைகள் கடிவாளம் இழுபட்டு முன் கால்களைத் தூக்கின… குதிரைக்குளம்புகளுக்கு கீழே மிதிபட்ட சேறுபோல கரியமனித உடல்கள். மிதிப்பட்டவை. மிதிப்படுவதற்காகவே கடவுளால் படைக்கப்பட்டவை. இந்த பூமிமீது குரூரமான ஆபாசமான நாடகமொன்றை நடத்தி வேடிக்கைப்பார்க்கும் அந்த கொடூரனின் கண்முன் அவை குவிந்துக்கிடந்தன. கைகளும் கால்களும் நெளிவுகளுமாக. சதையும் ரத்தமும் மலமும். மூத்திரமுமாக. ‘போதுமா? இதோ உன்முன் கிடக்கிறது. பார்த்துச்சிரி கேடு கெட்டவனே. அள்ளித்தின்னு பழிகாரனே’ (பக்கம் 348-349).
இது வர்ணனை என்பதைவிட, இதனை மனவக்கிரம் எனக்கருதுவது பொருத்தமானது. (யாருக்கூடாக, எப்பாத்திரத்திற்கூடாக இது முன்வைக்கப்படுகிறது என்பது பொருட்டல்ல. நாவலில், இம்மனவக்கிரம் இடம் பெற்றுள்ளதா இல்லையா என்பதே கேள்வி).
இதே போன்று நா.பாலகுமாரனும் எழுதுவார் : “பளிச்சென்று பிடரியில் ஒரு அடி விழுந்தது. கொத்து முடியை உலுக்கி ஒரு கை முகத்ததை;திருப்பிற்று. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு அடிகள் சீராய், திடமாய், வலதுக்கன்னத்தில் விழுந்தன. ‘காதுல பூ வெச்சிக்குனு இருப்பான்… அவங்கிட்ட வச்சுக்கோ, இந்த பேச்செல்லாம். இது சென்றல் ஜெயில். கழண்டு பூடும்…’ இப்போது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு பேர்கள் சேர்ந்துகொண்டார்கள். மெல்லியப் பிரம்புகளை தலைக்கு மேலே விசிறி கீழே இறக்குகிறார்கள்… கோபாலன் தலையைப் பொத்திக்கொண்டப்படி கீழே தரையில் உட்காந்துக்கொண்டான்… முதலில் அறைந்தவன்… அங்குளில் பிரம்பைக் கொடுத்து தூக்கினான்” (மெர்குரிப் பூக்கள் - பாலகுமாரன் - பக்கம் 25).
ராஜராஜ சோழன் காலத்திலிருந்து, அதாவது கழுவேற்றுதல் காலத்தில் இருந்து இவ் இழுபறி தொடரத்தான் செய்கிறது. ஆனால் எதனை வர்ணிப்பது? ஏன்? இன்குலாப்பிலிருந்து பாரதிவரை ஆற்றும் வர்ணனைகள் வித்தியாசம் பூண்டவையாகவே இருக்கின்றன. ஆனால் ஜெயமோகனும் சரி, பாலகுமாரனிலும் சரி அல்லது அசோகமித்திரனும் சரி - இங்கே, ஒருவித பண்பலைகளை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. பயமுறுத்துவது. இதற்கூடு, தற்போதைய சமூக அமைப்பைப் பாதுகாத்துக்கொள்வது. இரண்டாவது நன்றி விசுவாசத்துடன் படையினரை மெச்சிக்கொள்வது. மூன்றாவது படைகளின் குணாம்சங்களை வரலாற்று ரீதியாக திரித்துக்காட்டுவது. மொத்தத்தில் அவர்களை வெல்லமுடியாத சக்திகளாக இரும்புக் குதிரைகளாக, மக்கள் முன்நிறுத்துவது. இது இவர்களின் அரசியல் கடப்பாடுகளில் ஒன்றாகின்றது.
ஆனால் வரலாற்றை நுணுக்கமாக பார்க்குமிடத்து ரஷ்ய புரட்சியானது, ரஷ்ய கடற்படைக் கப்பலான அரோரா தன் முதல் குண்டை வீசியதற்கூடாக தொடங்கியது. இது போலவே இந்திய விடுதலை இயக்கமானது சிப்பாய் கலகத்துடன் ஆரம்பமாயிற்று எனவும் கூறப்படுகின்றது. அதாவது, இப்பயிற்றப்பட்ட படையினர் “ஒரு கச்சிதமான துப்பாக்கி. விசையில் கைப்பட்டதும் வெடித்தே ஆகவேண்டியதும். ஆம்… உலகின் எந்த படைவீரன் நின்றிருந்தாலும் அதைத்தான் செய்வான்” என்பதுவாக வர்ணிக்கப்படுகின்றது (வெள்ளையானை, பக்கம் - 348).
அதாவது இப்பயிற்றப்பட்ட துருப்புகள் வரலாற்றில் மாற்ற முடியாத விதி என வர்ணிப்பதாய் உள்ளது. ஆனால், இதற்கெதிரான கலைஞர்களும் அவ்வப்போது தோன்றாமலில்லை. ஒரு ரஷ்ய ஓவியன் கூட இந்திய சிப்பாய் கலகத்தை, நீதிகோரி, ஓவியமாகத் தீட்டி உள்ளான் (vasily vereshchagin). ஆனால் அசோகமித்திரன் முதல் ஜெயமோகன் வரையிலான கலைஞர்கள் பார்வையில் இக்குண்டாந்தடி அரசியலே பரிணமிப்பதாய் உள்ளது. இதுவே இவ்விரு கலைஞர்களுக்கிடையிலான வேறுபாடும் ஆகின்றது.
V
இப்பின்னணியிலேயே, பின்வரும் இரு கவிதைகளில், கலைஞர்கள் இருவேறு முகாமுக்குள் தள்ளப்பட்டு, வதைப்படுத்தப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. பின்வரும் இரு கவிதைகளும் இலங்கையின் தேசியப்போராட்டம், உக்கிரமுற்று சூள்கொண்டு இயங்கியப்போது இடம்பெற்ற இரு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தீட்டப்பட்டுள்ளன. முதலாவது சம்பவத்தில், ஓர் தமிழ் இயக்க இளைஞனை, படையினர் அடித்து விசாரிக்கும் முறைமையினைக் காட்டி நிற்கின்றது (கவிஞன் : க.ஆதவன்) மற்றது, ஒரு பல்கலைக்கழக மாணவன் பொலீஸாரால் சிறைப்பிடிக்கப்பட்ட போது, இடம்பெற்ற ஊர்வலத்தில பங்கேற்ற கவிஞர் சாருமதியின் கவிதையாகும். இரு கவிதைகளும், ஜெயமோகன் அல்லது பாலகுமாரனின் படைப்புகள் போன்று, ஆதிக்கச் சக்திகளின் பார்வையிலிருந்து எழுதப்பட்டவையல்ல. போராட்டத்தில் நேரடியாய் பங்கேற்ற இளைஞர்களின் பார்வையில் அவை எழுதப்பட்டுள்ளன.
ஒரு தோழனுக்கு…!
- க.ஆதவன் -
சுற்றியுள்ள இருளை
வெறித்தபடி அவன் :
நெற்றிப் பொட்டிலும்
திறந்த மேனியின்
முதுகு. தோள், மார்பு
எங்கும்… எங்கும்…
வழிந்து கசியும்
குருதி… செங்குருதி
குப்புற விழுந்தவனை முத்தமிடும்
பூட்ஸ் கால்கள்
எங்கோ உதிக்கும் சூரியன்,
முகட்டுத் துவாரம் வழியாக
ஒரேயொரு கதிர்…
வெண் பொட்டாக…
அவன் முன்…
தெம்புடன்… தீரத்துடன்
தலைநிமிர்த்தும் அவன்முன்
ஒன்று.. இரண்டு.. மூன்று..
பன்னிரண்டு பூட்ஸ்கள்
அவன் மேனியைச் சிதைக்கும்
உலோக பெல்ற் முனைகள்
கைவிரல்களை இறுகப்
பொத்துகின்றான்.
பூட்ஸ் நசித்த விரல்கள்
முஷ்ட்டியாக மடங்குகின்றன
எனக்கொன்றும் தெரியாது
சூரியக்கதிரின் வெண்பொட்டின்மேல்
தலைகுப்புற சரிந்தது…
“உனக்கு
நிறைய நிறைய
எல்லாமே முழுமையாய்த்
தெரியுமென
எனக்குத் தெரிகிறது தோழ…”
(தீர்த்தக்கரை : மார் 1982).
கோடை இறக்கும்
– சாருமதி) -
ஒரு தரம் அந்த பூமிகள் அதிர்ந்தன
ஒரு தரம் அந்த மரங்கள் உசும்பின
சூழவும் நின்றவர் வாய்கள் முழங்கின
அவனை விடுதலை செய்! அவனை விடுதலை செய்!
… … …
வடலிகள் மோதும காற்றின் ஊளையும்
வானில் சிந்தும் இடியும் மின்னலும்
கோடை இறக்கும் செய்திகள் கூறும்
கோட்டை அரசின் கொடிதடுமாறும்
போரின் வடுக்கள் நிறைந்த மேனியன்
வெள்ளைக் குதிரை மீதேறி வருவான்
ஒவ்வோர் தழும்பிலும் ஓராயிரம் முகங்கள்
ஒவ்வோர் முகங்களிலும் சிவந்த விழிகள்
எல்லாக் குரல்களும் ஒன்றையே முழங்கின
அவனை விடுதலை செய்! அவனை விடுதலை செய்!
(தீர்த்தக்கரை : டிசம்பர் 1982)
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.