சொப்பகாவின் மூன்றாவது வருடாந்த பயிற்சிப்பட்டறை
சொப்கா என்று அழைக்கப்படும் பீல் குடிமக்கள் ஒன்றியத்தின் மூன்றாவது வருடாந்தப் பயிற்சிப்பட்டறை சென்ற ஞாயிற்றுக்கிழமை மிசஸாகாவலியில் உள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. எமது சமூகத்திற்குப் பலன் தரும் நல்ல பல விடையங்கள் பற்றிய கருத்தரங்குகள் ஒவ்வொரு வருடமும் இத்தகைய பயிற்சிப்பட்டறையில் இடம் பெறுகின்றன. அந்த வகையில் இவ்வருடமும் அவை நிறைந்த நிகழ்வாக இந்தப் பயிற்சிப்பட்டறை அமைந்திருந்தது. நிழ்ச்சியின் ஆரம்பத்தில் சொப்காவின் உபதலைவர் திரு. குரு அரவிந்தனின் வரவேற்புரை இடம் பெற்றது. சமூக விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், சமூகத்திற்குத் தேவையான பல பலனுள்ள விடையங்கள் இந்த நிகழ்வில் ஆராயப்பட உள்ளதாகவும், இத்தகைய நிகழ்வுகளுக்கு ஒவ்வொரு வருடமும் வருகைதந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஆதரவு தரும் அங்கத்தவர்களையும், பொதுமக்களையும் பாராட்டுவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டு, நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றிய திரு. பொன் பாலராஜன் அவர்களையும், திரு. நடராஜா மூர்த்தி அவர்களையும் பாராட்டி நன்றிகூறி, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சொப்கா நிர்வாகசபை அங்கத்தவர் செல்வி. ராகுலா சிவயோகநாதனுக்கும், பல்கலைக் கழகத்தில் தனது முதலாண்டு அனுபவத்தை ஏனைய மாணவ, மாணவிகளுடன் பகிர்ந்து கொண்ட அங்கத்தவர் செல்வி. றுவிங்கா ஸ்ரீசண்முகதாசன் அவர்களையும் வரவேற்று நன்றி கூறினார்.

கே.சி.தங்கராஜா, கே.சி.சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்களின் உள்ளத்தில் முகிழ்த்த பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனை 1958இல் யாழ்ப்பாணத்தில், கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித்தூன்றப்பட்டு, 1959 பெப்ரவரியில் முளைவிட்டு வாரம் இருமுறையாக “ஈழநாடு” என்ற பெயரில் வெளிவரத் தொடங்கி, நாளும் பொழுதும் உரம்பெற்று வளர்ந்து, ஈற்றில் 1961இல் முதலாவது பிராந்தியத் தமிழ்த் தினசரியாக சிலிர்த்து நிமிர்ந்தது. அன்று தொட்டு இறுதியில் யாழ் மண்ணில் தன் மூச்சை நிறுத்திக்கொள்ளும் வரை அதன் இயங்கலுக்கான போராட்டம் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததாகவே நகர்ந்துவந்துள்ளது. ஜுன் 1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தையும், பூபாலசிங்கம் புத்தகசாலையையும் கொழுத்திய பேரினவாதத்தின் கண்களுக்கு ஈழநாடு காரியாலயமும் தப்பிவிடவில்லை. அதன் பின்னர் ஈழப் போராளிகளின் குண்டுத் தாக்குதலுக்கும் இலக்காகி, 1988 பெப்ரவரியில் தன்னைக் காயப்படுத்திக் கொண்டது. பின்னர் தொடர்ச்சியான பத்திரிகைச் செய்தித் தணிக்கைகள், அச்சுறுத்தல்கள், பொருளாதார நெருக்கடிகள் என்று சுற்றிச் சூழ்ந்த நிலையில் தொன்னூறுகளின் ஆரம்பத்தில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.


நண்பர்களே, பேசாமொழி 9 வது இதழ், லெனின் விருது சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பேசாமொழி இப்போது இணையத்தில் படிக்க கிடைக்கிறது. இந்த இதழில், டிராட்ஸ்கி மருது, வெங்கட் சாமிநாதன், தியடோர் பாஸ்கரன், யமுனா ராஜேந்திரன், ராஜேஷ், தினேஷ், பிச்சைக்காரன், அருண் மோ.ஆகியோரின் கட்டுரைகள் வெளியாகியுள்ளது. முக்கியமாக லெனின் இயக்கிய நாக்-அவுட், ஊருக்கு நூறு பேர் போன்ற படங்கள் பற்றிய கட்டுரைகள் வெளியாகியுள்ளது. ஊருக்கு நூறு பேர் திரைப்படம் பற்றிய தியடோர் பாஸ்கரன் கட்டுரையின் தமிழ் வடிவமும் வெளியாகியுள்ளது. தவிர வெங்கட் சாமிநாதனின் முக்கியமான கட்டுரை ஒன்றும், தமிழ் திரைப்படங்களில் அரசியல் பற்றிய யமுனா ராஜேந்திரனின் கட்டுரையும் மிக முக்கியமான கட்டுரை. நண்பர் பிச்சைக்காரனின் ஒருத்தி திரைப்படம் பற்றிய கட்டுரையும், அம்ஷன் குமாரின் நேர்காணலும், பிச்சைக்காரன் சிலாகித்து எழுதி இருக்கும் ஊருக்கு நூறு பேர், நாக்-அவுட் படங்கள் பற்றிய கட்டுரைகளும் இந்த இதழில் வெளியாகியுள்ளது. தவிர தொடர்களான, மருதுவின் அனிமேசன் கலை பற்றிய கட்டுரையும், நண்பர் ராஜேஷின் ஒளிப்பதிவு பற்றிய கட்டுரையும் வெளியாகியுள்ளது. நண்பர்கள் அவசியம் இந்த மாத பேசாமொழி முழு இதழையும் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிரவும்.
இலண்டன் மாநகரில் நடைபெற்ற நான்காவது 'இலக்கிய மாலை" நிகழ்வில் பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்கள் அறிமுகமாகின. கடந்த சனிக்கிழமை (10 - 08 - 2013) மாலை இலண்டன் 'மனோர் பார்க்" (Manor Park) என்ற இடத்தில் அமைந்துள்ள சைவ முன்னேற்றச் சங்க மண்டபத்தில், சமூகத் தொண்டரும் இலக்கிய அபிமானியுமான திரு செல்லையா வாமானந்தன் தலைமையில் 'இலக்கிய மாலை" நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வி. ரி. இளங்கோவனின் நூல்களான 'இப்படியுமா..?" - சிறுகதைத் தொகுதி, 'அழியாத தடங்கள்" - கட்டுரைத் தொகுதி, 'தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா..?", 'மண் மறவா மனிதர்கள்", 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" - (இளங்கோவன் கதைகள் இந்தி மொழிபெயர்ப்பு) மற்றும் இளங்கோவன் பதிப்பித்த 'இலக்கிய வித்தகர்" த. துரைசிங்கத்தின் 'தமிழ் இலக்கியக் களஞ்சியம்" ஆகிய ஆறு நூல்களே அறிமுகமாகின. இலண்டன் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், எழுத்தாளர் துரை. சிவபாலன் நூல் அறிமுகவுரையாற்றினார். கணினி அறிஞரும் இலக்கிய அபிமானியுமான திரு சிவா பிள்ளை நூல் வெளியீட்டுரை நிகழ்த்தி நூல்களை வழங்கினார். விருதுகள் பெற்ற நாவாலாசிரியர் வவுனியூர் இரா. உதயணன் முதற்பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்.
சென்ற சனிக்கிழமை கனடா மிஸசாகாவில் டிக்ஸி வீதியில் உள்ள நூல்நிலைய பார்வையாளர் மண்டபத்தில் பரதகலாவித்தகர் ஸ்ரீமதி. லலிதாஞ்சனா கதிர்காமனின் ஆக்கத்தில் அமிர்தார்ணவம் என்ற நடனக்கலைக்குரிய பாடல்களும், அதற்குரிய முத்திரைகளும் அடங்கிய நூல் ஒன்று வெளியிடப்பட்டது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் திரு. திருமதி குரு அரவிந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு.எஸ். மதிவாசன், திரு. ஸ்ரீமதி பவானி ஆலாலசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். முதலில் மங்களவிளக்கேற்றி, கனடிய தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து, அமிர்தாலயா நுண்கலைக்கல்லூரிக் கீதம் போன்றன இசைக்கப்பட்டன. தொடர்ந்து வரவேற்புரை நிகழ்ந்தது. அடுத்து திருமதி வாசுகி நகுலராஜா அவர்களால் நூல் ஆய்வு செய்யப்பட்டது. சிறுவர்களுக்கு ஏற்ற பாடல்களை எடுத்து அதற்கு எப்படி அபிநயம் பிடிக்கலாம் என்பதை சிறப்பாகவும் எழிமையாகவும் இந்த நூல் எடுத்துக் காட்டுவதாகவும், வர்ணத்தில் படங்கள் அச்சிடப்பட்டிருப்பதால் பலராலும் வரவேற்கப்படும் என்றும் தனது ஆய்வுரையில் அவர் குறிப்பிட்டார். அடுத்து உரையாற்றிய கலைக்கோயில் அதிபர் குகேந்திரன் கனகேந்திரம் அவர்கள் இந்த நூலில் உள்ள சிறப்பம்சங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கூறி, அமரரான தங்கள் சகோதரியும் இசையாசிரியையுமான திருமதி. அமிர்தாஞ்சனா சுரேஸ்வரன் அவர்களின் நினைவாக தமிழிலும், ஆங்கிலத்திலும் படங்களோடு கூடிய விளக்கங்கள் அடங்கிய இந்த நூலை வெளியிட்ட ஸ்ரீமதி லலிதாஞ்சனாவிற்கு நன்றி தெரிவித்தார்.
நண்பர்களுடன் அல்லது தோழர்களுடன் சேர்ந்து இலண்டனிலிருந்து பாரிஸ் செல்வதற்கான மதுரமான வழி பேருந்துப் பயணம்தான். சென்று திரும்பும் பயணநேரம் 17 மணிநேரங்கள் என்றாலும், வழியில் யூரோ டன்னல் அல்லது பெஃரி என மூன்று மணி நேரங்கள் போய்விடும். இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு எல்லைகளுக்குள் எனப் போகவர பேருந்து நிற்கும் நான்கு அரை மணிநேரங்கள் சேர்த்தால் மொத்தமாகப் பேருந்திற்கு வெளியில் ஐந்து மணி நேரங்கள் கழிந்து விடும். சென்று சேர 6 மணிநேரமும் வந்து சேர 6 மணிநேரமும் என 12 மணிநேரங்களை நீங்கள் நண்பர்களுடன் அந்தரங்கமாகவும் விச்ராந்தியாகவும் பேசியபடி பேருந்தில் இருந்தபடி பயணம் செய்யலாம். தோழர்.பி.ஏ.காதர் அவர்களுடன் பாரிஸ் சென்றுவர இப்படியானதொரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. தோழர். காதர் என்னுடைய ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம், அரபுப் புரட்சி : மக்கள் திரள் அரசியல் மற்றும் எஸ்.என்.நாகராசனின் நேர்காணல் தொகுப்பான ஆயுதப் போராட்டத்தால் இனி உலகைக் காப்பாற்ற முடியாது என மூன்று நூல்களின் இரு வெளியிட்டு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். இலண்டன் கூட்டம் விம்பம் கலை இலக்கிய திரைப்பட அமைப்பின் அனுசரணையில் சூலை மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமையும், பாரிஸ் கூட்டம் அசை கோட்பாட்டிதழ் மற்றும் சர்வதேச சமூகப் பாதுகாப்பு மையம் என இரண்டு அமைப்புகளின் அனுசரணையில் சூலை மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையும் நடைபெற்றது. விம்பம் அமைப்பின் பின் ஓவியர் கிருஷ்ணராஜாவும், பாரிஸ் கூட்டத்தின் பின் அசை தொகுப்பாளர் அசோக் யோகனும் தோழர். வரதனும் இருந்தார்கள்.


எதிர்வரும் 28 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு தமிழ் சங்கத்தில் (வினோதன் மண்டபம்) நமது மலையகம். கொம இணையதள அறிமுக நிகழ்வு நடைப்பெறவுள்ளது. திரு. தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைப்பெறும் இந்நிகழ்வில் தொடக்கவுரையை லெனின் மதிவானம் ஆற்றுவார். தொடர்ந்து ‘‘மலையகம் தகவல் தள இணைய வலைப்பின்னலுக்குள் உள்வாங்குவதன் அவசியம்‘ என்ற தலைப்பில் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களும், ‘ மலையகத்தின் அரசியல் இருப்பில் இணையத்தளம்’’ என்ற தலைப்பில் சரிநிகர் என். சரவணன் அவர்களும் உரையாற்றுவார்கள். நன்றியுரையை எம். ஜெயகுமார் வழங்க தொகுப்புரையை மல்லியப்பு சந்தி திலகர் நிகழ்த்துவார்.

1983ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் திகதி இலங்கையின் சிங்கள பேரினவாத அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் மற்றும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் ஜூலை மாதம் 23ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணியளவில் பிரித்தானிய பிரதம மந்திரியின் உத்தியோகபூர்வ வதிவிடமான 10 Downing Street முன்பாக ஆரம்பமாகி இரவு 7 மணி வரை மிக எழுச்சியோடு நடை பெற்றது. இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் இளவரசர் சாள்ஸ் ஆகியோர் புறக்கணிக்க வேண்டுமென்றும், தமிழர் தாயக பகுதிகளில் நடைபெறும் திட்டமிட்ட இனவழிப்பு, இராணுவமயப்படுத்தல், பௌத்தமயப்படுத்தல் மற்றும் காணி அபகரிப்பு போன்றவற்றை நிறுத்த அழுத்தம் கொடுக்கக் கோரியுமான பதாதைகளை ஏந்திய வண்ணம் இவ் ஆர்பாட்டத்தில் பல நூற்றுக் கணக்கான பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள் பங்கேற்றனர்.

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் மாற்று சினிமா கலைஞர்களை கவுரவப்படுத்த வழங்கி வரும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரிலான விருது இந்த ஆண்டு இயக்குனர் லீனா மணிமேகலைக்கு வழங்கப்படுகிறது. ஆவணப்பட / குறும்படங்களின் வாயிலாக தொடர்ந்து சமூக பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததும், தனி ஒரு படைப்பாளியாக தொடர்ந்து இந்த Main Sream கட்டமைப்பை எதிர்த்து போராடி வருவதும், தொடர்ச்சியாக தன்னுடைய இலக்கு நோக்கி பயணிப்பதும் அவருக்கு இந்த விருது வழங்க காரணமாயிருக்கிறது. லெனின் விருது 10,000 ரூபாய் ரொக்கம், கேடயம், சான்றிதழ்களை உள்ளடக்கியது. இது தவிர, லெனின் விருது பெறுபவரின் படங்களில் சில, தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படும். இந்த ஆண்டு லீனாவின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படவிருக்கிறது. பின்னர் சென்னையில் லீனா இயக்கிய முக்கியமான படங்கள் திரையிடப்பட்டு அதுப் பற்றிய விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் லீனாவும் பங்கேற்பார்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









