தமிழ் ஸ்டுடியோ - லெனின் விருது 2014: 2014 ஆம் ஆண்டுக்கான லெனின் விருது திரு. ஆனந்த் பட்வர்தன் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.
- நண்பர்களே, மாற்று திரைப்பட கலைஞர்களையும், சுயாதீன திரைப்பட கலைஞர்களையும் கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ மூலம் வழங்கப்படும் படத்தொகுப்பாளர் பீ. லெனின் பெயரிலான விருது இந்த ஆண்டு, உலகின் தலைசிறந்த ஆவணப்பட இயக்குனரான திரு. ஆனந்த் பட்வர்தன் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. இதற்கான விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், 15 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. நண்பர்கள் தங்களின் காலெண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். -
ஆனந்த் பட்வர்தன்:
1950 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த ஆனந்த் பட்வர்தன், இளங்கலையில் ஆங்கிலப் பாடத்தில் பட்டம் பெற்றார். அரசுக்கு எதிரான கலகக்குரலாகவே தொடர்ந்து தன்னுடைய ஆவணப்படங்களை எடுத்து வருபவர். இவரின் பெரும்பாலான ஆவணப்படங்களுக்கு மத்திய தணிக்கை குழு, சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது. ஆனால் நீதிமன்றத்தில் போராடி தன்னுடைய ஆவணப்படங்களில் ஒரு கட் கூட இல்லாமல், இதுவரை தொடந்து உலகம் முழுவதும் திரையிட்டு வருகிறார். 1995 இல் இவர் இயக்கிய Father Son and the Holy War என்கிற ஆவணப்படம், உலகின் முக்கியமான 50 ஆவணப்படங்களில் ஒன்றாக ஐரோப்பாவின் DOX இதழால் தெரிவு செய்யப்பட்டது. மார்க்சியம், காந்தியம், அம்பேத்கரியம் என முக்கியமான சிந்தனை பார்வைகளை கொண்டவர். தன்னுடைய எல்லா படங்களையும், இந்த சிந்தனை பார்வையின் அடிப்படையில் எடுத்து வருபவர். நான்கு முறை தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.



நண்பர்களே மாற்று சினிமாவிற்காக தமிழில் வெளிவரும் இணைய இதழான பேசாமொழியின் 18வது இதழ் இன்று (16-07-2014) வெளியாகியிருக்கிறது. இந்த இதழில் தமிழ் திரைப்பட ஆய்வாளர் தியடோர் பாஸ்கரனின் மிக விரிவான நேர்காணல் ஒன்றை யமுனா ராஜேந்திரன் எடுத்திருக்கிறார். மிக விரிவான இந்த நேர்காணல் இரண்டு பகுதிகளாக வெளியிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரே மூச்சில் படிக்கும்போது கிடைக்கும் தீவிரத் தன்மையை இரண்டு பகுதிகளாக வெளியிட்டால் அது கெடுத்துவிடும் என்று கருதி, ஒரே இதழில் முழு நேர்காணலையும் கொடுத்திருக்கிறேன். தவறவிடாமல் அவசியம் படிக்க வேண்டிய நேர்காணல். தவிர தியடோர் பாஸ்கரன் சில மாதங்களுக்கு எனக்கு படிக்க பரிந்துரைத்த ஜான் பெர்ஜரின் "Ways of Seeing", புத்தகத்தை மொழியாக்கம் செய்து, இந்த இதழில் இருந்து வெளியிடுகிறோம். நண்பர் யுகேந்திரன் இந்த மொழியாக்கத்தை மேற்கொள்கிறார். பிம்பங்களை எப்படி பார்க்க வேண்டும் என்பது தொடங்கி, காட்சி படிமங்களின் வியப்பை இந்த நூல் நமக்குள் விரிவாக பதிவு செய்துக்கொண்டே போகிறது. இப்படியான புத்தகங்கள் தமிழில் வெளியானால்தான், பிம்பங்களை எப்படி பார்க்க வேண்டும் என்கிற தெளிவு நமக்கு ஏற்படும். பிம்பங்களை நேர்த்தியாக அலச தெரிந்தால், தமிழில் நிகழ்ந்திருக்கும் இத்தனை மோசமான திரைப்பட ஆக்கத்தை நாம் கட்டுப்படுத்தி இருக்க முடியும். நண்பர்கள் தவறாமல் இந்த தொடரை வாசிக்க வேண்டும். உங்களுக்குள் பல அதிசயங்கள் நிகழலாம்.














பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









