- நண்பர்களே, மாற்று திரைப்பட கலைஞர்களையும், சுயாதீன திரைப்பட கலைஞர்களையும் கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ மூலம் வழங்கப்படும் படத்தொகுப்பாளர் பீ. லெனின் பெயரிலான விருது இந்த ஆண்டு, உலகின் தலைசிறந்த ஆவணப்பட இயக்குனரான திரு. ஆனந்த் பட்வர்தன் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. இதற்கான விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், 15 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. நண்பர்கள் தங்களின் காலெண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். -
ஆனந்த் பட்வர்தன்:
1950 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த ஆனந்த் பட்வர்தன், இளங்கலையில் ஆங்கிலப் பாடத்தில் பட்டம் பெற்றார். அரசுக்கு எதிரான கலகக்குரலாகவே தொடர்ந்து தன்னுடைய ஆவணப்படங்களை எடுத்து வருபவர். இவரின் பெரும்பாலான ஆவணப்படங்களுக்கு மத்திய தணிக்கை குழு, சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது. ஆனால் நீதிமன்றத்தில் போராடி தன்னுடைய ஆவணப்படங்களில் ஒரு கட் கூட இல்லாமல், இதுவரை தொடந்து உலகம் முழுவதும் திரையிட்டு வருகிறார். 1995 இல் இவர் இயக்கிய Father Son and the Holy War என்கிற ஆவணப்படம், உலகின் முக்கியமான 50 ஆவணப்படங்களில் ஒன்றாக ஐரோப்பாவின் DOX இதழால் தெரிவு செய்யப்பட்டது. மார்க்சியம், காந்தியம், அம்பேத்கரியம் என முக்கியமான சிந்தனை பார்வைகளை கொண்டவர். தன்னுடைய எல்லா படங்களையும், இந்த சிந்தனை பார்வையின் அடிப்படையில் எடுத்து வருபவர். நான்கு முறை தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.
தான் ஒரு படைப்பாளி, தன்னுடைய வேலை படங்களை எடுப்பது மட்டுமே என்று நினைக்காமல், எடுக்கப்பட்ட தன்னுடைய படங்களுக்கு எதிராக அரசு அமைப்புகள் செய்யும் அத்தனை வேலைகளையும் முறியடித்து, தன்னுடைய படைப்பு நேர்மையானது, அதில் அரசின் தணிக்கை அமைப்பு எவ்விதத்திலும் தணிக்கை செய்யமுடியாது என்று தொடர்ந்து போராடி வருபர். போரும் அமைதியும் என்கிற இவரது ஆவணப்படம், ஓராண்டு காலம் தடை செய்யப்பட்டிருந்த சூழலிலும் நீதிமன்றத்தில் போராடி, மீண்டும் அந்த படத்தை இந்தியா முழுவதும் திரையிடும் அனுமதியை பெற்றார். சில ஆண்டுகளுக்கு இவர் இயக்கத்தில் வெளிவந்த ஜெய் பீம் காம்ரேட் ஆவணப்படம், தலித் அரசியலில் மிக முக்கியமான ஆவணமாகவே இருந்து வருகிறது. ஆவணப்படம் என்றாலும், அதன் வடிவம் குறித்தும், ஆனந்த பட்வர்தன் மிகுந்த தெளிவுடையவர். உலக அளவில், ஆவணப்பட இயக்குனர்களில், சம காலத்தில் ஆனந்த் பட்வர்தனே முதன்மையானவர்.
தன்னுடைய ஆவணப்படங்களின் மூலம் தொடர்ச்சியாக மக்களுக்காக போராடும் ஆனந்த் பட்வர்தனுக்கு இந்த ஆண்டு லெனின் விருதை வழங்கி தமிழ் ஸ்டுடியோ பெருமை கொள்கிறது.
நண்பர்களும் ஆனந்த் பட்வர்தனுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவிக்கலாம். தமிழ்நாட்டில் நல்ல சினிமாவுக்கும், படைப்புகள் மூலம் போராடும் கலைஞனுக்கும் எந்த மாதிரியான வரவேற்பு இருக்கிறது என்பதை நண்பர்கள்தான் உணர்த்த வேண்டும். உங்களின் ஆயிரக்கணக்கான வாழ்த்துகள், இதனை உணர்த்த வேண்டும். உங்கள் ஒவ்வொருவரின் வாழ்த்துகளும் மிக முக்கியமானவை. ஆனந்த் பட்வர்தனின் மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அன்புடன்
தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)
www.thamizhstudio.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.